Serial Stories பெண்ணின் மனதை தொட்டு

பெண்ணின் மனதை தொட்டு-10

10

கழுத்தில் தாலி செயினை அணிவித்து விட்டு குணாளன் கையை இறக்கியதும் நிம்மதி பெருமூச்சு விட்டாள் மகதி. “திருப்தியா?கடைசியில் நினைத்ததை முடித்து விட்டாய்” முணுமுணுத்தான் குணாளன்.மகதியின் முகம் ஒரு நிறைவுடன் மலர்ந்தது.

 பாலும் பழமும் சாப்பிடும் போது “இன்றும் காய்ச்சல் வருமா?” என்று அவன் கேட்க புரையேறியது அவளுக்கு.

” இன்ஜெக்ஷன் ரெடியா வச்சுக்கணுமானு கேட்டேன்” அக்கறையாக அவள் தலையில் தட்டியபடி  அவன் தெளிவாக விளக்க கொஞ்சம் ரோஷத்துடன் “ஒன்றும் தேவையில்லை ” என்றாள்.

” எனக்கு நம்பிக்கை இல்லை.எதற்கும் மெடிக்கல் பாக்ஸோடு தயாராக இருக்கிறேன்” 

பாலும் பழமும் கொடுக்கும் நேரத்தில் கணவன் மனைவியின் அன்னியோன்யத்தை சுற்றி இருந்தவர்கள் சந்தோஷமாக ரசித்தனர். “எதற்கு இப்படி மூஞ்சியை வைத்துக் கொண்டிருக்கிறாய்?” தமிழ்ச்செல்வன் ரூபாவதியை அதட்ட அவள் கோபமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

 சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்து இருக்கும்போது புறங்கையை திருப்பி அவள் கன்னத்தில் வைத்து பார்த்தான். “இன்னமுமா காய்ச்சல் வரவில்லை?” அவன் கேட்கவே மகதிக்கு காய்ச்சல் வரும் போல் இருந்தது.

“ஆனாலும் அன்று அத்தனை அடி வாங்கிய பிறகும் நீ தைரியமாக என்னையே திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை”

” இப்பவும் அடிப்பீர்களா?” திரும்பி கண்களை அகல விரித்து அவனைப் பார்த்து கேட்க அந்த மை விழிகளுடன் தன் கண்களை கலந்தவன் “எனக்கு பிடிக்காததை செய்தால் நிச்சயம் அடிப்பேன்” என்றான்.

 “டாக்டரா? வாத்தியாரான்னு தெரியலையே…” அவள் முணுமுணுக்க அதை கவனித்து கேட்டவன் “மிலிட்டரி டாக்டர்” பெருமிதமாய் அறிவித்து மீசையை முறுக்கிக் கொண்டான்.

 காதல் தோல்வியில் ஊரை விட்டு ஓடிப் போய் மிலிட்டரியில் சேர்ந்து விட்டு பெரிய பந்தா எதற்கு இவனுக்கு! மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், உடனேயே இவனுக்கு பிடிக்காதது என்னவாக இருக்கும் குழப்பத்துடன் யோசிக்க ஆரம்பித்தாள்.




 முன்பொரு நாள் அவனிடம் அடி வாங்கிய தினம் நினைவில் வந்தது. அன்று எஸ்.எஸ்.எல்.சி கடைசி பரீட்சை. வேகமாக பரிட்சை எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாள் மகதி. காரணம் அவர்கள் பக்கத்து வீட்டு டாக்டருக்கு அன்று திருமணம்.மதிய உணவிற்கு கல்யாண வீட்டிற்கு வந்து விடும்படி சௌபாக்கியம் சொல்லி அனுப்பியிருக்க சைக்கிளில் வேகமாக வந்தாள். அவர்கள் தெருவே ஒரு மாதிரி கலவரமாக தெரிய நான்கைந்து பேர்களாக ஆங்காங்கே சிறு சிறு கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

“என்னாயிற்று?” ஒருவரிடம் அவள் விசாரிக்க “நம்ம குணாளன் டாக்டரோட கல்யாணம் நின்னு போயிடுச்சு” என்க அதிர்ந்தாள். அவளுக்கு சிறுவயதிலிருந்தே பக்கத்தில் பார்த்து வளர்ந்த குணாளன் மேல் ஒருவித ஈர்ப்பு. அவன் சைக்கிள் ஓட்டுவது பிறகு பைக் ஓட்டுவது, பேசுவது, நடப்பது தலைமுடியை கோதிக் கொள்வது என எல்லாவற்றையும் காரணமே தெரியாமல் பார்த்துக் கொண்டே இருப்பாள்.

 அண்ணனிடம் பேசுவதற்காக அவன் வீட்டிற்கு வரும்போது ஒளிந்து நின்று கொண்டு அவன் பேசி முடிக்கும் வரை பார்த்தபடி இருப்பாள். அவனுக்கு திருமணம் என்றதும் ஒருவித சந்தோசம்தான். அவனுக்கு பார்த்திருந்த பெண் மிக அழகாக இருந்தாள். அவளும் டாக்டர்தானாம்.

” ஏன்டி டாக்டர்கள் எல்லாம் டாக்டரைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்வார்களா?” தனதிந்த  பெரிய சந்தேகத்தை தன் தோழிகளிடம் அப்போதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

” ஆமாண்டி டாக்டர் டாக்டரை, வக்கீல் வக்கீலை ,இன்ஜினியர் இன்ஜினியரை இப்படித்தான் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள்” தோழிகள் பதில் சொல்ல ஏனென்று தெரியாமல் நான் பத்தாவதுதானே படிக்கிறேன் என்ற கவலை வந்தது அவளுக்கு. 

ஆனாலும் எங்கள் டாக்டருக்கு கல்யாணம் என்று எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தாள்.இப்போது அந்த திருமணம் நின்று போய்விட்டதாமே! அநியாயம் அவளுக்கே நடந்து விட்டது போல் தோன்ற தயக்கமான கால்களோடு அவன் வீட்டிற்கு போனாள்.

 மீனாட்சி கவலையுடன் தரையில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருக்க அவளைச் சுற்றி உறவுக்கார பெண்கள் ஆறுதல் சொல்லியபடி இருந்தனர். அதில் சௌபாக்கியமும் இருந்தாள். சுற்றும் மற்றும் குணாளனை தேடியபடி அந்த பெரிய வீட்டையும் தோப்பையும் சுற்றிப் பார்த்தவள் எங்கும் இல்லாமல் போக, ஒரு வேலை கிளினிக்கில் இருப்பானோ என்று சைக்கிள் மிதித்து கிளினிக்கிற்கு வந்துவிட்டாள்.

 இப்போது போல் அன்று பெரிய மருத்துவமனை இல்லை.சொந்த இடம்தான் என்றாலும் இரண்டே அறைகள் கொண்ட சிறிய கிளினிக்தான். அங்கும் ஆள் அரவமின்றி அமைதியாக இருக்க, மெல்ல உள்ளே நுழைந்தவள் பின் வாசல் படியில் எதிரே வெறித்தபடி அமர்ந்திருந்த குணாளனை கண்டாள்.

 கம்பீரமாய் நிமிர்ந்த நடையுடன் ஊருக்குள் வலம் வருபவன்,இன்று தொய்ந்து குறுகி அமர்ந்திருப்பதை கண்டதும் அவள் மனம் பாகாய் உருகியது. மெல்ல அவன் அருகில் சென்று “டாக்டர் சார்” என்று அழைக்க திரும்பி பார்த்தான்.

 அவன் முகம் கறுத்து கண்கள் சிவந்து நீர்கட்டி நின்றது. மகதிக்கு ஐயோ என்று இருந்தது. ஆண் பிள்ளை அழலாமா? அதுவும் அவளுடைய டாக்டர் அழலாமா? திருமணம் நின்று விட்டதால் அழுகிறான் என்ற எண்ணம் மட்டுமே அந்நேரத்திற்கு மனதில் பட “கவலைப்படாதீங்க டாக்டர் சார். உங்களை நான் கல்யாணம் செய்து கொள்கிறேன்” என்றாள்.

 குணாளனின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. “ஏய்…” அதட்டியபடி எழுந்தான்.




” நிஜம்தான் டாக்டர் சார்.அந்த சரண்யா என்ன பெரிய அழகி! நான் புடவை கட்டினால் அவளை விட அழகாக இருப்பேன்.அதோ அங்கே தெரிகிறதே பிள்ளையார் கோவில், அங்கே போய் இப்போதே கல்யாணம் செய்து கொள்ளலாம் வாங்க” சொன்னதோடு அவன் கைப்பற்றியும் இழுத்தாள்.

 ‘பளார்’ என்று கன்னத்தில் அறைந்தான் குணாளன். “அறிவில்லையா உனக்கு? என்ன பேச்சு பேசுகிறாய்?”கையை உதறினான்.

சுளீரென்று கன்னத்தில் வாங்கிய அறை மகதியின் பேதமையை தூண்டி விட, “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் டாக்டர் சார்.நீங்க அடித்தாலும் பரவாயில்லை.வாங்க கல்யாணம் பண்ணிக்கலாம். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு தைரியமா அந்த தெருவுக்குள்ள தலை நிமிர்ந்து நடந்து போகலாம்” மீண்டும் கை பிடித்து இழுத்தாள். திரும்பவும் அடி வாங்கினாள்.

” கொன்னுடுவேன். வயதுக்கு ஏற்ற  பேச்சா பேசுகிறாய்? பள்ளிக்கூடம் முடிந்ததுதானே, போய் பால் சோறு சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கு. நாளைக்கு டெஸ்ட் இருக்குல்ல?” 

அவன் சொல்ல கோபாவேசத்துடன் நிமிர்ந்தாள். “எனக்கு எல்லாம் பரீட்சையும் முடிஞ்சிடுச்சு. நான் பத்தாவது முடிச்சுட்டேன். உங்களுக்கு டாக்டர்தான் வேணும்னா சீக்கிரமே நானும் டாக்டருக்கு படிச்சிடறேன். ஆனா அதுக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். ஏன்னா நான் உங்களை ரொம்ப நாளாவே காதலிச்சிட்டு இருக்கிறேன். ஐ லவ் யூ டாக்டர் “என்றவள் அவன் அருகில் வந்து மார்பில் மோதி இடையை கட்டிக்கொண்டாள்.

தீச்சுட்டது போல் அவளை விலக்கித் தள்ளிய குணாளன் மீண்டும் இரு கன்னங்களிலும் அறைந்தான். “பைத்தியமா உனக்கு? யாரும் பார்ப்பதற்கு முன்னால் இங்கிருந்து போய் விடு. போ…” பிடித்து தள்ளினான்.

 அப்போது வாசலில் வந்து நின்ற சியாமளாவை பார்த்தான்.கையில் உணவு பொட்டலமும் தண்ணீர் பாட்டிலுமாக இருந்த அவள் அதிர்ச்சியுடன் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள். “சியாமளா சிஸ்டர் இந்த லூசு பொண்ணு ஏதேதோ உளறுது. புத்தி சொல்லி இவளை அவங்க வீட்டில கொண்டு போய் விட்டுட்டு வாங்க” 

 சியாமளா ” நீங்க இதை சாப்பிடுங்க சார்” வாங்கி வந்ததை டேபிளில் வைத்து விட்டு மகதி கைப்பற்றி இழுத்துக் கொண்டு போய் அவள் வீட்டிற்குள் விட்டாள்.

” இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் ரொம்ப அட்வான்ஸா இருக்கீங்கடி. எப்படித்தான் இப்படியெல்லாம் பேச தோணுதோ? இன்றோடு இந்த பேச்சை மறந்துடு” பெரியவளாக தன்னால் முடிந்த அறிவுரைகளைச் சொல்லி விட்டுப் போனாள் சியாமளா. அன்று இரவு மகதிக்கு காய்ச்சல் வந்துவிட்டது.




What’s your Reaction?
+1
44
+1
19
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!