Serial Stories பெண்ணின் மனதை தொட்டு

பெண்ணின் மனதை தொட்டு-20

20

ஆக கடைசியில் அந்த டாக்டர் சரண்யாவிடம்  நான் தோற்று விட்டேன்.எனது பத்து வருட காதல் தோற்றுவிட்டது.மகதிக்கு ஓவென்று கதறி அழ வேண்டும் போலிருந்தது.ஆனால் அதற்கு இது இடமில்லை. சோர்ந்த அவளது நடை தாய் வீட்டின் முன் கொண்டு வந்து அவளை நிறுத்தியது.

 அழைப்பு மணி ஓசைக்கு கதவை திறந்த ரூபாவதி இவளைக் கண்டதும் மிரண்டாள். நிறைய பயந்தாள். “இந்நேரத்திற்கு இங்கே என்ன மகதி?”

” சொன்னால் தான் உள்ளே விடுவீர்களா அண்ணி?” வறண்ட குரலில் மகதி கேட்ட அவசரமாக பின்னடைந்து வழிவிட்டாள்.

” உள்ளே வாம்மா, உன் அண்ணன் கடையிலிருந்து வருகிற நேரம்.நீ இப்படி கலங்கிய முகத்தோடு இருந்தாயானால் என்னைத்தான் திட்டுவார்.நான்தான் ஏதோ செய்துவிட்டதாக நினைப்பார்”

 அண்ணனிடம் அண்ணிக்கு வந்து விட்டிருந்த பயம் மகதியை ஆச்சரியப்படுத்தியது. அவளை கேள்வியாக பார்க்க ரூபாவதி தலை குனிந்தாள்.”உன் அண்ணன் என்னை அம்மா வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்.தங்கையின் வாழ்க்கை,அத்தோடு அவரது காட்பாதர்…கைடான டாக்டரின் வாழ்க்கையோடு என்னை விளையாட அனுமதிக்க மாட்டாராம்.அம்மா வீட்டிலேயே இருந்து கொள்.உனக்கும் ,ராகுலுக்கும் தேவையான பணத்தை தந்து விடுகிறேனென்றார்.என் அம்மா வீட்டில் எனக்கு பிறகு இன்னமும் இரண்டு தங்கைகள் திருமணத்திற்கு நிற்கிறார்கள்.எனக்கு உன் அண்ணன் கிடைத்ததே ஏதோ பூர்வ ஜென்ம புண்ணியம்.அம்மா வீட்டிலெல்லாம் என்னால் அதிகப்படி ஒரு நாள்  கூட தங்க முடியாது.பறி போய் விடும் என்ற பயம் வந்த பிறகுதான் எனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையின் அருமை புரிகிறது.கையில் கிடைத்த வாழ்வை நழுவ விடப் பார்த்தேனே…நான் ஒரு முட்டாள்”

“இனி கடைக்கெல்லாம் வர வேண்டாம் வீட்டிலிருந்து குழந்தையை பார்த்துக் கொள் என்றுவிட்டார்.நானும் சம்மதித்து விட்டேன்”

 “இதென்ன அநியாயம் அண்ணி? அவ்வளவு படித்துவிட்டு வீட்டிற்குள் சோறாக்கி போட்டுக் கொண்டு இருப்பீர்களா? அண்ணன் வரட்டும் நான் அண்ணனிடம் பேசுகிறேன்” உடனே தவித்து பேசிய நாத்தனாரை பாசத்துடன் பார்த்தாள் ரூபாவதி.

” இதுதான் மகி உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். திரும்பத் திரும்ப எனக்கு பாடம் உச்சந்தலையில் ஓங்கி அடித்தார் போல் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஒருவகையில் இதனை என் கெட்ட புத்திக்கான தண்டனையாக ஏற்றுக் கொள்கிறேன். கொஞ்ச நாட்கள் இப்படியே வீட்டு மனைவியாக வாழ்ந்துதான் பார்க்கிறேனே” புன்னகையுடன் பேசிய ரூபாவதியின் முகத்தில் துயரத்தின் சாயல் சிறிதும் தெரியாமல் இருக்கவே மகதியும் திருப்தி பட்டுக் கொண்டாள். 

“சரிதான் அண்ணி, அம்மாவும் அப்பாவும் எங்கே?”

“அத்தை மாமாவும் தான் ஆன்மீக டூர் போயிருக்கிறார்களே,மறந்து விட்டாயா?

நீ நான்கு நாட்களாக கிளாஸ் எடுக்கவில்லைதானே! அதனால் இங்கே எங்களுக்குள் நடந்த விசயங்களெல்லாம் உனக்கு தெரியவில்லை ,அவர்களுக்கும் ஒன்றும் தெரியாது. அடுத்த வாரம் வரும்போது ஒரு புது மருமகளை அத்தை பார்க்கப் போகிறார்கள்” உற்சாகத்தோடு ஒலித்த அண்ணியின் குரல் மகதிக்கு பெரும் நிம்மதியை தந்தது.




” ரொம்ப நன்றி அண்ணி”

” சரிதான் உன் மேல் பொறாமை பட்டு பொங்கி நின்றவளுக்கே நன்றி சொல்வாயா? அப்பாவி மகி நீ!

இதற்கெல்லாம் நன்றி சொல்வதானால் உன் டாக்டருக்குத்தான் சொல்ல வேண்டும்.அதிரடியாய் அன்று அவர் செய்த செயல்தான் உன் அண்ணனை தூண்டி என் வாழ்க்கையை எனக்கு உணர்த்தியது. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்று ஒரு பழமொழி உண்டு.அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ எனக்கு மிக நன்றாகவே பொருந்தும்” சிரித்தபடி தன் கன்னத்தை ரூபாவதி பற்றிக்கொள்ள, மகதியின் கையும் அனிச்சையாக கன்னம் பொத்தியது.

” மனைவியை கைநீட்டி அடிக்கும் ஆண்களை மன்னிக்கவே கூடாது அண்ணி” காட்டமாக உரைத்தவள் தன் அறைக்குள் போய் கதவை பூட்டிக் கொண்டாள். ரூபாவதி யோசனையுடன் பார்த்து நின்றாள்.

 இரவு வீடு வந்த கணவனுக்கு உணவு பரிமாறியபடி ரூபாவதி சொன்ன தகவல்களில் உணவை எடுத்த தமிழ்செல்வனின் கை அப்படியே நின்றது.”அடித்தாரா?” நம்ப முடியாமல் கேட்டான்.

“அப்படித்தான் நினைக்கிறேன். இருவருக்குள்ளும் ஏதோ சண்டை போல் தெரிகிறது”

 தமிழ்ச்செல்வனின் முகத்தில் வேதனை கோடுகள். அதே நேரத்தில் கதவு தட்டப்பட போய் திறந்தவன் வந்த குணாளனை எதிர்பார்த்தே இருந்தான். “உள்ளே வாங்க டாக்டர் சார்”

” உங்கள் தங்கையை எங்கே? அதென்ன ஒரு வார்த்தை சொல்லாமல் இங்கே வந்து இருந்து கொள்வது?”

” உங்கள் மனைவி உள்ளேதான் இருக்கிறாள்.போய் பாருங்கள் சார்” குணாளன் மகதியின் அறைக் கதவை தள்ளி திறந்தான்.படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்தவள் குணாளனே பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 பீறிட்டெழுந்த கோபத்தை அடக்கி கொண்டவன் “வா மகதி நம் வீட்டிற்கு போகலாம்” அழைத்தான்.

” நான் வரவில்லை” திரும்பிய முகத்துடனே பதில் அளித்தாள்.

” ஏன்?”  

“நீங்க கண்டவளுடன் ஊர் சுற்றுவதற்கு நான் ஒருத்தி எதற்கு வீட்டில்?”

” ஏய்..” சிறு கூச்சலுடன் அவள் இரு தோள்களையும் பற்றியவன் கட்டிலை விட்டு ஓரடி உயர்த்தியிருந்தான்.

கலங்கினாலும் தைரியமாக அவன் பார்வையை சந்தித்தாள் மகதி. மீண்டும் அவளை கட்டிலில் போட்டவன் கோபத்துடன் வெளியேற அறை வாசலில் நின்றிருந்த தமிழ்ச்செல்வன் அவனை தொடர்ந்தான்.

” இரண்டு நாட்கள் முன்பு கோயம்புத்தூரில் ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்ப அவர்களுக்கு வாகன வசதி இல்லை என்றதால் நானே ஸ்கூட்டரில் போய் எடுத்து வந்திருக்கிறேன் சார். இங்கே வீட்டில் தான் இருக்கிறது. நாளை ஸ்டோருக்கு கொண்டு வந்து விடுகிறேன்”




 ” ம்…”ஒரு உறுமலுடன் குணாளன் வீட்டிற்கு வெளியே வந்திருக்க, “டாக்டர் சார் என் தங்கையை திருமணம் முடித்துக் கொடுத்து நாம் உறவினரான பிறகும் உங்களை இன்னமும் நான் டாக்டர் சார் என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது. தங்கையின் கணவர் என்பதை தாண்டி நம் இருவருக்குமிடையே இந்த மரியாதை கலந்த நட்புதான் எனக்கு பெரிதாக தெரிந்தது. அதனால்தான் அப்படியே அழைக்கிறேன். சிறுவயதில் இருந்தே நான் பிரமித்து பார்த்து வளர்ந்த ஆளுமை நீங்கள்.எப்போதும் அந்த உயர்ந்த இடத்திலேயே உங்களை வைத்துக் கொள்ள மிகவும் விரும்புகிறேன். தயவு செய்து அதற்கு ஒத்துழையுங்கள்”

 கை கூப்பி வேண்டிக் கொண்டவனை வியப்பாகப் பார்த்தான் குணாளன். கீற்றாய் ஆரம்பித்த அவன் புன்னகை வினாடியில் மலராய் முகம் முழுவதும் நிறைந்தது. ஆதரவு போல் தமிழ்ச்செல்வனின் தோளை தட்டி விட்டு கிளம்பினான். 

அதே நேரத்தில் மகதி தன் அறையிலிருந்து வெளியே வந்து ஹாலில் அண்ணன் வைத்திருந்த மருந்து அட்டை பெட்டிகளை பிரித்து பார்த்து தேடி தனக்கு தேவையானதை சேலை முந்தானைக்குள் மறைத்து எடுத்துக்கொண்டு அறைக்குள் போய் பூட்டிக் கொண்டாள்.

 உள்ளிருந்து இதனை கவனித்தபடி இருந்த ரூபாவதி மகதி சென்றதும் மருந்து பெட்டிகளின் அருகே வந்து ஆராய்ந்தாள். ஒரு தீர்மானத்துடன் நிமிர்ந்தாள்.




What’s your Reaction?
+1
48
+1
21
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!