Serial Stories பெண்ணின் மனதை தொட்டு

பெண்ணின் மனதை தொட்டு-19

19

“மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகையை போட்டுக்கொண்டு இரண்டு ஓட்டை கம்ப்யூட்டர்களை வாங்கி வைத்துக்கொண்டு பாடம் எடுக்கிறேன் என்று பெயர் பண்ணிக் கொண்டிருக்கிறாள். முறையாக அரசு அங்கீகாரம் வாங்கி கொடுத்து மெயின் பஜாரில் இடமும் கொடுத்து முறைப்படி தொழிலை பார் என்றால் முடியாது என்கிறாள் அம்மா” தாயிடம் புகாரை வைத்தான் குணாளன்.

” மகி என்னமா இது?” மீனாட்சி கேட்க, “இவர் சொல்வதை நான் செய்வதாக இருந்தால் எங்கள் வீட்டு மொட்டை மாடியை விட்டு வெளியேற வேண்டும் அத்தை. அது எனக்கு பிடிக்கவில்லை”

” ஏனோ இன்னமும் அங்கேயே உட்கார்ந்து கொண்டு உன் அண்ணியிடம் வார்த்தையால் குத்துப்பட்டு கொண்டே இருக்கப் போகிறாயா?” 

” அது என் பிரச்சனை. அதனை உங்கள் காதுக்கு கொண்டு வந்தால் மட்டும் ஏன் என்று கேளுங்கள். அதுவரை அதில் தலையிடாமல் இருங்கள்”

“பார்த்தீர்களா அம்மா, ஆள் வளர்ந்த அளவிற்கு இவளுக்கு அறிவு வளரவில்லை. இவள் அண்ணி தினமும் புதுப்புது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து போட்டு அவள் சொத்தை பறிக்க வந்தவள் என்று மறைமுகமாக குத்திக் கொண்டே இருக்கிறாள். இவளோ சூடு சொரணை இல்லாமல் அங்கேயே இன்னமும் இருக்கப் போகிறேன் என்கிறாள்”

” இவ்வளவு பேசுகிறீர்களே, நீங்கள் உங்கள் மருத்துவமனையில் மேலே எனக்காக ஒதுக்கி கொடுத்து இருக்கும் இடத்தை ரத்தப் பரிசோதனை மையத்திற்காக முன்பே அண்ணி கேட்டுக் கொண்டிருந்தார்கள்தானே? இப்போது அதனை எனக்காக கொடுத்தால் இன்னமும் எங்களுக்குள் பகைதானே வளரும்?”

” இங்கே பார் மகதி அது என்னுடைய இடம் .அதனை உன் அண்ணிக்கு கொடுப்பதில் எனக்கு என்றுமே விருப்பம் இருந்தது கிடையாது. இவ்வளவு நாட்களாக சும்மா இருந்த இடத்தை இப்போது என் மனைவிக்கு கொடுக்கப் போகிறேன். இதனை மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்கு கவலை கிடையாது”

” உங்களுக்கு வேண்டுமானால் அவர்கள் மற்றவர்களாக இருக்கலாம். ஆனால் என் பிறந்த வீட்டு சொந்தங்களை நான் எப்போதும் விட்டுத்தர மாட்டேன்”

” கொஞ்ச நேரம் முன்னால்தான் உன்னுடைய அறிவை வியந்து பேசினேன்.இப்போது சொல்கிறேன் கேட்டுக்கோ  நீ ஒரு முழு முட்டாள்” குணாளன் விறுவிறுவென்று வெளியே போய் விட்டான்.

” என்னம்மா இது?” மீனாட்சி கேட்க மகதிக்கு கண்கள் கலங்கிவிட்டன. “அண்ணிக்கும் எனக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான் அத்தை. இதில் இவர் வேறு ஒரு வருடமாக அவர்கள் கேட்டுக் கொண்டிருந்த இடத்தை எனக்கென்று ஒதுக்கி தருகிறேன் என்கிறார். இதனை எப்படி அவருக்கு புரிய வைக்க?”

” உன் அம்மா வீட்டு மாடியை அண்ணிக்கே முழுதாக விட்டுக் கொடுத்து விட்டாயானால் இந்த இடத்தில் தலையிடமாட்டாள் தானே மகிம்மா?”




 “இதைத்தான் அத்தை அண்ணியும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் கேட்பது அந்த வீட்டை மட்டும் அல்ல.அந்த வீட்டுப் பெண் நான் என்ற உரிமையையும் விட்டுக் கொடுக்க சொல்கிறார்கள். எனக்கு சொத்து தேவையில்லை அத்தை. நான் சுகவனம் சௌபாக்கியத்தின் மகள் என்ற உரிமையை என்னுடைய அடையாளத்தையே அந்த வீட்டிலிருந்து அழிக்க நினைக்கும் அண்ணியின் எண்ணத்தை நிறைவேற நான் நிச்சயம் விடமாட்டேன்” 

மகதியின் வாதத்தில் மீனாட்சி வாயடைத்து போனாள். 

மனைவி மேல் கோபம் எரிச்சலுடனும் மருத்துவமனை சென்ற குணாளன் தமிழ்ச்செல்வனை உடனே வரவழைத்தான்.”மருத்துவமனையின் மாடியில் இருக்கும் அந்த பெரிய ஹாலை வாடகைக்கு விடலாம் என்று இருக்கிறேன் தமிழ்”

 தமிழ்செல்வனின் முகம் ஒளியிழந்தது. “அப்படியா டாக்டர்… வந்து…ம் சரிங்க சார்” 

” எதற்காக முகம் வாடுகிறது தமிழ்? யாருக்கு என்று கேட்டால் சந்தோஷம்தான் படுவீர்கள்.வெளியாட்கள் யாரும் இல்லை.உங்கள் தங்கை மகதிதான் அங்கே கம்ப்யூட்டர் எஜுகேஷன் ஸ்கூல் ஆரம்பிக்கப் போகிறாள்”

 கொஞ்சம் தயங்கினாலும் தமிழ்ச்செல்வனின் முகம் மலர்ந்தது. “ரொம்ப சந்தோசங்க சார்…” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே புயல் போல உள்ளே நுழைந்தாள் ரூபாவதி. வெளியில் நின்று இவ்வளவு நேரமாக இவர்கள் பேச்சை ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.

” முடியாது இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் .ஒரு வருடமாக அந்த இடத்தை எங்களுக்கு தருவது போல் பேசி ஆசை காட்டி  மோசம் செய்து விட்டீர்கள் டாக்டர்”

” ரூபா சும்மா இரு “தமிழ்ச்செல்வன் அவளை அடக்க முயல ,அவள் திமிறி பேசினாள். “இதெல்லாம் பெரிய அநியாயம். இதற்கெல்லாம் நீங்கள் அனுபவிப்பீர்கள்” இரு கைகளை நொடித்து அவள் சாபமிட ,தமிழ்ச்செல்வன் பட்டென அவள் கன்னத்தில் அறைந்தான்.

 “என்ன வார்த்தை பேசுகிறாய் ?அவர் என் தங்கையின் கணவர். வாயை மூடிக்கொண்டு நடடி” கழுத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.குணாளன் ஊப் என்று உதடு குவித்து மூச்சை வெளியேற்றினான். 

அன்று இரவு பாதுஷாவும் மல்லிகையுமாக அறைக்குள் வந்த கணவனை முறைத்தாள் மகதி. “நான் அவ்வளவு தூரம் சொன்ன பிறகும் அண்ணியிடம் அதையே பேசி எங்கள் உறவை பிரித்து விட்டீர்களே நியாயமா?” குணாளனிடம் பெரும் சலிப்பு தெரிந்தது.

” இப்படி நடக்கும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை மகதி.விடு அதையெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம். இந்தா பூ வைத்துக் கொள்”

” இந்த பூவிற்கும் இனிப்பிற்கும் மயங்கி உங்கள் காலடியை சுற்றி வருவேன் என்று நினைத்தீர்களா?”

“பைத்தியமாடி உனக்கு? உன் அண்ணிக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நான்கு சுவருக்குள்ளேயே இருந்து கொள்வாயா நீ?”

” எப்படி அண்ணியை சமாளித்து தொழிலை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டுதான் இருந்தேன். அதற்குள் அவசரப்பட்டு எல்லாவற்றையும் கொட்டி கவிழ்த்து விட்டீர்களே”

” இவ்வளவு சுயநலம் வாய்ந்த ஒரு அண்ணி அப்படி என்ன உனக்கு தேவை?”




” ஏனென்றால் இந்த ஆண் பிள்ளைகளை நம்ப முடியாது பாருங்கள். அவர்களுக்கு மனது சரியில்லை என்றால் எதையோ நினைத்து எதையோ இடிப்பது போல அம்மாவையோ பெண்டாட்டியையோ தனியாக தவிக்க விட்டு நிம்மதியைத் தேடி எங்காவது ஓடிப் போய் விடுவார்களே! ஒரு பெண்ணிற்கு புகுந்த வீடு மட்டுமல்ல பிறந்த வீட்டு ஆதரவும் சாகும்வரை அவசியம்தான்”

 மகதி மன ஆதங்கங்களை படபடவென்று கொட்டி விட ,குணாளனின் முகம் சிவந்தது. அவள் தோள்களை இரு கைகளாலும் பற்றி உலுக்கினான். “யாரையடி சொல்கிறாய்?”

” சந்தேகமே வேண்டாம்.உங்களைத்தான் சொல்கிறேன். கண்ட கண்றாவியையும் மனதில் நினைத்துக் கொண்டு பெற்ற தாயையே தவிக்க விட்டு ஐந்து வருடங்கள் ஆள் அரவமே தெரியாமல் ஒளிந்து கிடந்தவர்தானே நீங்கள்? நாளை எனக்கும் இதே நிலைமை வராது என்று என்ன நிச்சயம்?” 

சுளீரென்று கன்னம் எரிந்த பிறகுதான் குணாளன் அடித்துவிட்டதை உணர்ந்தாள். காந்திய கன்னத்தை அழுத்தி பற்றியவள் அதற்கு மேலும் அறைக்குள் நிற்க பிடிக்காமல் பால்கனி ஊஞ்சலை தஞ்சமடைந்தாள்.

எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை கைநீட்டி அடிப்பான்? கொதித்த உள்ளத்துடன் உறக்கமின்றி இரவை நகர்த்தினாள். அன்றே சொன்னானே இப்போதும் அடிப்பேன் என்று, மனதிற்குள் ஊமையாய் அழுதாள். எந்நேரமும் கணவன் வந்து தன்னை சமாதானப்படுத்தி அழைத்துப் போகும் நேரத்திற்காக அவள் காத்திருக்க அப்படி ஒரு நேரம் வராமலேயே அவளது அந்த இரவு கழிந்தது.

 அந்த நாள் மட்டுமின்றி அடுத்து வந்த நாட்களும் குணாளனின் பாரா முகத்துடனே கழிய, மகதியினுள்ளும் வீம்பு வளர்ந்தது.ஆனாலும் தினமும் இனிப்பும் பூவும் வாங்கி வருவதை குணாளன் நிறுத்தவில்லை. அவளுக்காக டேபிளின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அவைகளை கண்டுகொள்ளாமல் கடந்து பால்கனிக்குள் நுழைந்து கொள்வாள் மகதி.

 ஆக இவன் ஊருக்கு காட்டிக் கொள்ளத்தான் தினமும் இவைகளை வாங்கி வந்திருக்கிறான், வெறுப்புடன் நினைத்துக் கொள்வாள். இப்படியே ஒரு வாரம் கடந்து விட்டிருக்க மகதி ஒருவகை விரக்திக்கு ஆளானாள். கணவனுடன் சுகித்திருந்த அந்த ஊஞ்சல் வேறு அவள் உணர்வுகளை சோதித்தது. 

அடித்தது அவன்… சிறு சமாதான வார்த்தை கூட பேச மாட்டானா? அந்த அளவு வெறுத்து விட்டேனா ?ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது சரிதானோ? கணவனின் பாராமுகம் தாங்க முடியாமல் தனக்குள் 

ஏதேதோ புலம்பிக் கிடந்தாள் மகதி. 

குணாளனின் செயல்களுக்கான விடை மறுநாள் அவளுக்கு தெரிய வந்தது. கடைத்தெருவில் சில வீட்டு சாமான்கள் வாங்கி விட்டு ஆட்டோவை கைகாட்டி அழைத்தபடி நின்றிருந்தவள் எதிர்ப்புற சாலைக்கு பார்வை போக அதிர்ந்தாள்.

அங்கே குணாளனுடன் பேசியபடி நடந்து போய் கொண்டிருந்தவள் டாக்டர் சரண்யா.முன்பொரு நாள் குணாளனுடன் திருமணம் வரை வந்து மறைந்து போனவள்.அவனது ஐந்து வருட அஞ்ஞாத வாசத்திற்கு காரணமானவள்.




What’s your Reaction?
+1
43
+1
24
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!