Serial Stories பெண்ணின் மனதை தொட்டு

பெண்ணின் மனதை தொட்டு-14

14

அடர் பச்சையில் பெரிது பெரிதான சிகப்பு நிற ரோஜாக்கள் பூத்திருந்தன மகதியின் சேலையில். பார்டராக விரல் பருமனில் வெள்ளி சரிகை ஓடியது. முந்தானையின் கடைசி மடிப்பை பெரிதாக வைத்து இடுப்பு சேலையை மேலே உயர்த்தி விட்டு என உடலின் சிறு பகுதி கூட வெளியே தெரியாதவாறு கண்ணாடியில் திரும்பி பார்த்து சேலையை சரி செய்தாள். 

“உன் வயது பெண்கள் லெக்கின்ஸ், ஷார்ட்டாப்ஸ், ஜீன்ஸ் அட்லீஸ்ட் சுடிதார் என்று மாறிவிட்ட பிறகு நீ மட்டும் ஏன் இந்த சேலையிலேயே இருக்கிறாய்?” பின்னால் குணாளனின் குரல் கேட்டது.

 குளித்துவிட்டு வந்துவிட்டான் போலும். கண்ணாடியில் பார்க்க அவன் பாத்ரூம் வாசலில் நின்றிருந்தது தெரிந்தது. இந்த சேலையை விரும்பி அணிய ஆரம்பித்ததன் காரணம் மனதுக்குள் தோன்ற மகதியின் மனம் வாடியது. யாருக்காக சேலை அணிய ஆரம்பித்தாளோ அவன் முன்பே இப்போது சேலையுடன் இருக்க தயங்கினாள்.

” எனக்கு சேலை ரொம்ப பிடிக்கும். அதனால் தான்…” அவனுக்கு பதில் சொன்னபடி வேறெங்கும் விலகி இருக்கிறதா என கவனத்துடன் கண்ணாடியில் ஆராய்ந்து கொண்டிருந்தபோது அவன் அருகில் வந்து பின்னால் நிற்பது கண்ணாடியில் தெரிந்தது.

 “சேலையை அழகாக கட்டிக் கொள்கிறாய். உன் உடலுக்கு நன்றாக பொருந்தி போகிறது” குணாளனின் கண்கள் சேலையில் வடிவாகத் தெரிந்த அவள் உடலின் வளைவுகளை வருடியது.

 மகதிக்கு தொண்டை வறண்டு போனது. எச்சில் விழுங்கி வறட்சியை போக்க முயற்சித்து முடியாமல் பக்கத்தில் இருந்த வாட்டர் பாட்டில் எடுத்து தொண்டைக்குள் கவிழ்த்தாள். தொண்டை அசைய அவள் நீர் அருந்துவதை பார்த்திருந்த குணாளன் ஆட்காட்டி விரலால் அசையும் அவள் தொண்டையை வருடினான். “உள்ளிருக்கும் நரம்போடும் ரத்தமும் கூட கண்ணாடியாக தெரிகிறதே..”

 தண்ணீர் குடித்தாலும் மகதிக்கு விக்கத் துவங்கியது. “மெல்ல… மெல்ல” நான்கு விரல்களால் தொண்டையை வருடியவன் புறங்கையை திருப்பி அவள் கழுத்தில் பதித்தான்.

“இரண்டு நாட்களாக என் பக்கத்திலேயே இருக்கிறாய். காய்ச்சல் வரவில்லையே… என்ன அதிசயம்?”

” அதிர்ச்சிகள் பழகி விட்டது போலும்” வெற்றுக் குரலில் சொன்னவள் தன் கழுத்தில் பதிந்திருந்த அவன் கையை விலக்கி அறையை விட்டு வெளியேறினாள். 

“சமையல் வேலை எதுவும் இருக்கிறதா அத்தை?” கேட்டபடி வந்து நின்ற மருமகளை ஆவலுடன் பார்த்தாள் மீனாட்சி.அழகான சேலையில் ஒயிலாய் வடிவாய் நின்றவளை கண்டதும் அவள் முகத்தை வருடி திருஷ்டி கழித்தாள்.




” அழகாய் இருக்கிறாய் புள்ள” என்றவளின் கண்கள் கேட்ட கேள்வியை உணர மறுத்தாள் மகதி. 

“காலையில் என்ன டிபன் அத்தை? நான் ஹெல்ப் பண்ணவா?” 

“வேண்டாம்மா இதோ காவேரி இருக்கிறாள். குணா ராணுவத்திலிருந்து திரும்பி வந்ததும் இவளை சமையலுக்கு என்று அமர்த்தி விட்டான். காவேரி நம் தூரத்து சொந்தக்கார பெண்தான். ருசியாக சமைப்பாள்” 

அவித்த இட்லிகளை தட்டில் தட்டி மேலிருந்த இட்லி துணியை எடுத்த காவேரி சினேகம் கலந்த மரியாதையுடன் இவளை பார்த்து புன்னகைத்தாள் “புருஷன் சரியில்லம்மா எனக்கு. எப்போ பார்த்தாலும் குடி சூதாட்டம். மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டுட்டு இருந்தேன். நம்ம டாக்டர் தம்பி தற்செயலா பாத்துட்டு எனக்கு இந்த வேலை போட்டு கொடுத்தாரு. இப்பதான் மூணு வேளை சாப்பாடு திருப்தியா சாப்பிடுறோம். என் புள்ளைங்க படிப்பு செலவு கூட டாக்டரே பார்த்துக்கிடுறாரு” கைகள் பரபரப்பாக வேலையை பார்க்க வாய் தன் போக்குக்கு அவளது அவல நிலையை சொன்னது.

” ஓ…சரி” மகதி கிச்சனை விட்டு வெளியேற மீனாட்சியும் பின்னே வந்தாள். “சமையல் முடியும் வரை இங்கே உட்காரலாமா?” வீட்டின் பின் பக்க வாசல் வழியாக தோப்பிற்குள் அழைத்துப் போனாள்.  

சதுரமாய் நீளமாய் இருந்த பெரிய பட்டியக்கல்லை உட்காருவதற்காக ஒரு ஓரமாக போட்டு வைத்திருந்தனர். அதில் அமர்ந்த மீனாட்சி மகதியையும் கைப்பற்றி அருகில் அமர்த்திக் கொண்டு “குணா என்ன சொன்னான்மா?” ஆவலும் எதிர்பார்ப்பும் மின்னும் மாமியாரின் முகத்தை கூர்ந்து பார்த்த மகதி “என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் அத்தை?” என்றாள்.

” வந்து… அவன் உன்னிடம்…” மகதி சொல்லி முடி என்பது போல் அழுத்தமாக அவளை பார்த்தபடி இருக்க மீனாட்சி தடுமாறினாள். ” கொ…கொஞ்ச நாள்தான்மா பிறகு அவன் மாறிடுவான் பாரேன்”

” நான் மாற வைக்க வேண்டும். இல்லையா அத்தை?” 

மீனாட்சி தவித்துப் போனாள். “என்னை தவறாக நினைக்காத புள்ள. எனக்கு வேறு வழி தெரியவில்லை. வாழ்வை வெறுத்திருக்கும் என் மகனை மீட்க ஒரு காதலால் மட்டுமே முடியும் என்று தோன்றியது. நீ முன்பே என் மகனை காதலிப்பதாக சொன்னதால் நான்…” மேலே பேச வார்த்தைகள் வராமல் மீனாட்சி தோப்புக்குள் இருந்த தென்னை மரங்களின் மேல் பார்வையை தட்டி தட்டி அமர வைத்தாள்.

 மகதி அவர்கள் அருகில் இருந்த தென்னை மரத்தை அண்ணாந்து பார்த்து மேலிருந்த தேங்காய்களை எண்ணிக் கொண்டிருந்தாள். “எங்க காலத்துல பொதுவா புதிசா கல்யாணமான பொண்ணுக்கு புருஷனை கைக்குள்ள போட்டுக்கோன்னு தான் பெரியவுக ஐடியா சொல்லிக் கொடுத்து அனுப்புவாக ,அதையேதான் நானும்…” இப்போதும் மீனாட்சியின் பார்வை தென்னை மரங்களில் இருந்து மருமகளின் மேல் பதிய துணியவில்லை.

” அதாவது புருசனிடம் கொஞ்சி பேசி… சிரித்து… அலங்காரம் பண்ணிக்கொண்டு அவன் முன்னால் நின்று… இப்படித்தான் இல்லையா அத்தை…?”

 மீனாட்சி சரக்கென்று பார்வையை திருப்பி மகதி முகத்தில் குத்துவது போல் நிறுத்தினாள். 

“எனக்கென்னமோ இதற்கெல்லாம் பெயர் வேறு என்னவோ போல் தோன்றுகிறது”




” மகதி…” அதட்டினாள் மீனாட்சி. “முன்பின் தெரியாத ஆணையும் பெண்ணையும் திருமணம் என்ற பெயரில் சேர்த்து வைக்கிறோம். பார்த்ததுமே அவர்களுக்குள் காதல் கரைபுரண்டு ஓடணும்னா எப்படி ? ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் முதல்ல கண்ல படுறது உருவ அமைப்புதான். அந்த கவர்ச்சிதான் முதல்ல ஆண் பெண்ணை சேர்த்து வைக்கும். இதுதான் இயற்கையும் கூட. இந்த இயற்கை வழி இல்லை என்றால் மனித இனம் பெருகுவதற்கு வாய்ப்புகளே இல்லாம போகும். ஆண் பெண்ணின் ஆரம்ப கவர்ச்சி தாண்டி பின்னால் வருவது தான் அன்பும் பாசமும் காதலும். இந்த இயற்கை நியதியைத்தான் அந்த கால பெரியவர்கள் சடங்குகள் சம்பிரதாயங்களாக நடைமுறைகளில் பின்பற்றி வந்தாங்க. இப்போ நீங்கெல்லாம் நிறைய படிச்சு தெளிவா இருக்கோம்கிற  பேர்ல ஏதேதோ நினைச்சு உங்களை நீங்களே குழப்பிக்கிறீங்க. கணவன் மனைவிக்குள் பார்வைக்கும் சீண்டலுக்கும் அணைப்பிற்கும் நீயா நானாங்கிற வாதம் எதற்கு? இங்கே ஆண் பெண்ணுங்கிற பேதங்கள் தேவையில்லை.அவரவர் தேவையை தன் இணையிடம் நிறைவேற்றிக் கொள்ளும் உரிமை இருவருக்குமே உண்டு. இப்படி புரிந்து கொண்டு வாழும் இல்லறம்தான் ஜெயிக்குது. தாம்பத்தியமும் பரமபதம் போன்றதுதான். கணவன் கொத்தினால் மனைவி ஏறுவாள். மனைவி கொத்தினால் கணவன் ஏறுவான். கொத்துப்பட்டு கொத்துப்பட்டு ஏணியில் ஏறுவதுதான் இன்பத்தின் எல்லை. நீ படித்த விவரமான பெண். இதற்கு மேலும் உனக்கு நான் சொல்லுவதற்கு எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்” மீனாட்சி பேசி முடிக்க மகதி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

 உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு அவள் உச்சந்தலையை கவ்வ துடிக்கும் பாம்பாக குணாளனை உணர்ந்தவளின்  மேனியில் பயமும் சிலிர்ப்புமாக ஓர் வித்தியாச உணர்வு பரவியது. கணவன் மனைவி இல்லறத்தை அருமையாக விளக்கிய மாமியாரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

 மீனாட்சி மென்மையாக அவள் கையை தன் கைக்குள் எடுத்துக் கொண்டாள். “மகிம்மா இதெல்லாம் என் மகன் என்பதற்காக நான் சொல்லல புள்ள, புதிதாக திருமணமான எல்லா தம்பதிகளுக்கு நான் சொல்வதுதான். எல்லாமே. நீ…”

“அட இவ்வளவு நேரமாக என்னதான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” குணாளனின் சத்தம் கேட்டு பெண்கள் இருவரும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தனர். அவர்களுக்கு அருகே இடுப்பில் கைகளை வைத்தபடி நின்றிருந்தான் குணாளன்.

” மாடியில் இருந்து பார்த்தேன். எவ்வளவு நேரம்தான்  பேசுவீர்கள்? அப்படி என்னதான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” கேட்டபடி அந்தப் பெரிய பட்டியக்கல்லின் மறுபுறம் இருவருக்கும் நடுவே அமர்ந்து கொண்டான்.

“ம்… பேசுங்க” கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இருவரையும் பார்த்தான். எதிர்பார்ப்பு மின்னிய அவன் முகத்தைப் பார்த்ததும் மகதிக்கு சிரிப்பு வந்தது.மீனாட்சி மகனின் காதை பற்றி திருகினாள்.




” பொம்பளைங்க தனியா பேசுற இடத்துல ஆம்பளைக்கு என்னடா வேலை?”

” அப்படி என்னதான் பேசுறீங்கன்னு தெரிஞ்சுக்கற ஆவல்தான். விடுங்கம்மா வலிக்குது” தாயின் பிடியிலிருந்து விடுபட அவன் சரிந்த இடம் மனைவியின் தோளாக இருந்தது.திடுமென்ற அவன் ஸ்பரிசத்தில் மகதி மனம் படபடக்க உதடுகள் வறள சட்டென எழுந்து நின்று விட்டாள்.

 என்னவென்று புரியாமல் அம்மாவும் மகனும் அவளை ஏறிட்டுப் பார்க்க “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. நாளை என் ஸ்டூடன்ட்டை வரச் சொல்ல வேண்டும்” ஏதோ உளறிவிட்டு நடந்தாள்.

” நாளையிலருந்து படிக்கிற பிள்ளைங்கள நம்ம வீட்டுக்கே வர சொல்லிடும்மா” மீனாட்சி சொல்ல, “இல்லத்தை அவர்கள் எப்போதும் வரும் இடத்திற்கு.. அம்மா வீட்டிற்கே வரட்டும். நான் போய் பாடம் எடுத்துவிட்டு வந்து விடுகிறேன்” அழுத்தமாக சொல்லிவிட்டு நடந்தாள்.

 கவலையுடன் தன் முகம் பார்த்த தாயின் தோளை சமாதானமாக தட்டிய குணாளன் “இருக்கட்டும்மா இரண்டு வருட பழக்கத்தை உடனே மாற்ற முடியாதில்லையா?” என்றான்.

” குணா மகதி நல்ல பொண்ணுப்பா நீ அவளை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து…”

” அம்மா எதையாவது நினைத்து மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள். எனக்கு பசிக்கிறது. வாங்க சாப்பிட போகலாம்” தாயின் கையை பற்றி இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நடந்தான்.




What’s your Reaction?
+1
46
+1
19
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!