Serial Stories

கோகுலம் காலனி-18

18

” திருட்டுத்தனமாக ஓடி வருபவர்கள் லாட்ஜில் சரியான பெயரும் , அட்ரஸும் கொடுத்திருப்பார்களென்று நினைக்கிறீர்களா நந்தா …? ” காலை நேர குளிர் காற்று காது நுனியை சில்லிட வைக்க , எதிர்காற்றின் அலைத்தலை சமாளிக்க முன்னால் பைக்கில்  அமர்ந்திருந்தவனின் முதுகை ஒட்டி , காதில் கேட்டாள் .

” இப்போதெல்லாம் ஐ.டி ப்ரூப் இல்லாமல் லாட்ஜ்களில் ரூம் போட முடியாது ராகவி .கிரிமினல்கள் மட்டும்தான் அந்த மாதிரி ஐடி இல்லாமலோ , போலி ஐடியிலோ தங்க முனைவார்கள் .உன் அண்ணன் கிரிமினல் இல்லை என நம்புவோம் ” 

மூன்றாவது ஹோட்டலின் வரவேற்பறையில் விசாரித்த போது அங்கே மிஸ்டர் அன்ட் மிஸஸ் ரேகா  தங்கியிருப்பது உறுதியானது . 

” மிஸஸ் ரேகா …அப்போ கல்யாணம் ஆயிடுச்சா …? ” ராகவி கண் கலங்க , அவள் கை பற்றி ஆதரவாக அழுத்தினான் நந்தகுமார் .

” இருக்காது ராகா .இங்கே சும்மா கொடுத்திருப்பார்கள் …” 

” எப்படி சொல்கிறீர்கள் …? ” 

” கல்யாணம் முடிந்த பின் அவர்கள் இங்கே இருக்க மாட்டார்கள் .பறந்திருப்பார்கள் .கல்யாணத்திற்காகத்தான் இந்த தாமதம் என நினைக்கிறேன் .வா நேரடியாக கேட்டே விடலாம் …” 

பின்னலிட்ட ராகவியின் நடையை தோளணைத்து நிதானப்படுத்தியபடி உடன் நடந்தான் . ” இது காலை நேரம் .இன்னமும் தூக்கம் சரியாக தெளிந்திராத இந்த அதிகாலை நேரத்தில் , அவர்கள் எதிர்பாராத நாம் திடுமென முன்னால் போய் நின்றால் மனரீதியாக அவர்கள் திடுக்கிடுவார்கள் . குழம்புவார்கள் .அந்தக் தடுமாற்றத்தை அவர்களுக்கு கொடுக்கவே இந்த காலை விசிட் …” விவரித்தபடி ரூம் வாசலை அடைந்ததும் கொஞ்சம் நிதானித்து யோசனையோடு அவளை பார்த்தான் .

” நீ இங்கேயே இரு ராகவி .தேவையான பொழுது உள்ளே வந்தால் போதும் …ஆனால் கவனி …” கட்டைவிரலால் அறையை காட்டி விட்டு , அவளின் தோள் பற்றி வாசலை விட்டு நகர்த்தி சற்று மறைவாக அவளை நிறுத்தினான் .பிறகு கதவை தட்டினான்.

” காபியாக இருக்கும் …” இம்மலாக திறந்த அறைக் கதவின் பின் பெண் குரல் கேட்க , கனத்த குரலை குறைத்து பணிவு சேர்த்து ” ரூம் சர்வீஸ் சார் ” என்றான் நந்தகுமார் .

கதவு லேசாக திறக்கும் போதே டக்கென தன் காலை உள்ளே விட்டவன் , ஒரே உந்தலில் அறைக்குள் நுழைந்து விட்டான் .




” ஏ…ஏய் ….” அதிர்ந்து கத்தியபடி அறையினுள் நின்றிருந்தவன் முரளியே .

” ஹாய் ப்ரெண்ட் ஹவ் ஆர் யு …? ” நட்பு குழைந்த குரலுடன் சாதாரணமாக கை குலுக்க நீட்டியபடி நின்ற நந்தகுமாரை கண்டதும் முரளியின் முகம் சவக்களை காட்டியது .

” ஏய் யார் நீ …? ” கத்தலுடன் பாத்ரூம் திறந்து உள்ளிருந்து வந்தாள் ரேகா .நந்தகுமார் அவளுக்கு முதுகை திருப்பி முகத்தை காட்ட அவள் முகமும் செத்தது.

” உட்கார்ந்து நிதானமாக பேசலாமா …? ” நந்தகுமார் கட்டிலை காட்டினான் .

முரளி இன்னமும் அசையாமல் நிற்க சுதாரித்தவள் ரேகாவே ….

” என்ன பேச வேண்டும் …? அப்படி ஒன்றும் இல்லையே .நீங்க என்ன கொஞ்சம் கூட டீசன்சி இல்லாமல் உள்ளே வந்து நின்று கொண்டு …வெளியே போங்க …” 

” அட என்ன ரேகா …யாரோ அறிமுகம் இல்லாதவரிடம் பேசுவதை போல் பேசிக் கொண்டு …நாம் எல்லோரும் ஒரே காலனி …ஒன்றாக வளர்ந்தோம் , பழகினோம் .இதோ இப்போதும் என் ப்ரெண்ட்ஸை பார்க்கத்தான் நான் வந்தேன் …” 

ப்ளாஸ்டிக் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான் .இருவருக்கும் கட்டிலை காட்டினான் .” உட்காருங்க ” 

” நாங்கள் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் …? ” ரேகா சமாளித்துக் கொண்டாள்  கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள் .

” தெரியும் …என் ப்ரெண்டை எனக்கு தெரியாதா என்ன …? அப்புறம் சொல்லுடா மச்சான் .லைப் எப்படி போகுது …? ” உற்சாகமாக முரளியின் தோளை தட்டினான் .

முரளி வாயே திறக்கவில்லை .இடுக்கில் மாட்டிக் கொண்ட எலியின் வாதனையை முகத்தில் காட்டியபடி அமர்ந்திருந்தான் .

“‘எங்கள் வாழ்க்கை நன்றாகத்தான் போய் கொண்டிருக்கிறது .உங்களை மாதிரி யாராவது நாரதர் உள்ளே புகுந்து கெடுக்காமல் இருந்தால் சரிதான் …” 

” நாரதர் …? நான் …? அப்படியாடா முரளி …? ” 

” டேய் நந்தா எங்களை விட்டுடா …? நாங்கள் இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொண்டு வாழப் போகிறோம் …” 

” ஓ…இன்னமும் கல்யாணம் பண்ணிக்கலை இல்லை …? ” 

” இல்லையில்லை .நேற்றே ரிஜிஸ்டர் மேரேஜ்  பண்ணிட்டோம் ” .ரேகா பதறி இடை புகுந்தாள் .

” வெயிட் ரேகா .நான் முரளியிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் .

ம் …சொல்லுடா எப்போது கல்யாணம் செய்து கொள்ள போகிறீர்கள் …? ” 

ரேகா முரளியை எரிப்பது போல் பார்க்க , அவன் இன்னமும் தடுமாறினான் .

” டேய் நந்தா எங்களை இங்கே பார்த்ததை எங்கள் வீட்டில் சொல்லிடாதேடா .அம்மாவும் , அப்பாவும் ரொம்ப வருத்தப்படுவார்கள் ” 

” நீ பிக்னிக் போயிருப்பதாகத்தானேடா அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .பிக்னிக் முடிந்த்தும் என்ன செய்வாய் …? ” 

” அது கொஞ்ச நாட்கள் கழித்து திரும்ப வரனும்னு எங்க ப்ளான் “

” எத்தனை நாட்கள் …? ” 

” அதெல்லாம் சொல்ல முடியாது .முரளி உங்க ப்ரெண்டை வெளியே அனுப்புங்க ” ரேகா கிறீச்சிட நந்தகுமார் எழுந்து நின்று கத்தினான் .




” ஏய் …வாயை மூடு .இனி ஒரு வார்த்தை உன் வாயில் இருந்து வந்தால் இவன் கழுத்தை அறுத்துடுவேன் …” நந்தகுமார் எங்கே வைத்திருந்து எப்படி எடுத்தான் என தெரியவில்லை .கூர்மையான கத்தி ஒன்றை நந்தகுமாரின் கழுத்தில் பதித்திருந்தான் .

முதலில் திகைத்த ரேகா பிறகு புன்னகை பூத்தாள் .” நீ அவ்வளவு பெரிய வில்லன் கிடையாது நந்தகுமார் .நம்ம காலபி ஹீரோ நீ . கொலையெல்லாம் செய்ய மாட்டாயென எனக்கு தெரியும. …” 

” உனக்கு கோகுலம் நந்தகுமாரைத்தான் தெரியும் ரேகா .மலேசிய நந்தகுமாரை தெரியாது .அயல் நாட்டில் போய் சாதாரணமாக வேலை பார்த்து மூன்றே வருடங்களில்   இவ்வளவு சம்பாதிக்க முடியாது .அங்கே என் உருவே வேறு  உனக்கே தெரியும் இவன் குடும்பத்திற்கும் என் குடும்பத்திற்கும் இடையே முன்பகை இருக்கிறது .இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எங்களுக்குள் பயங்கர சண்டை .விசயம் உன் காதிற்கும் வந்திருக்குமே … .நம்பவில்லை என்று ஒரு வார்த்தை சொல்லு .இப்போதே உன் கண் முன்னாலேயே இவன் கழுத்தறுத்துக் காட்டுகிறேன் .”

” வேண்டாம் …வேண்டாம் .அவரை விட்டு விடு …” ரேகா வீறிட சிறு அலட்சியதுடன் இருந்த முரளியின் விழிகளிலும் இப்போது பயம் வந்தது . நாய் கக்கா போன பிரச்சனைக்காக ஒருத்தன் கழுத்தறுக்க வருவானா …?எனும் சந்தேகம் அவனுக்கு இருந்தாலும் ரிஸ்க் எடுக்க அவன் தயாரில்லாத்தால் ” சொல்லிடலாம் ரேகா ” முனங்கினான் .

” நாங்க இரண்டு பேரும் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் டார்ஜிலிங் போய் செட்டிலாகி விட நினைத்தோம் …” 

” ஏன் …டார்ஜிலிங் …? ” 

” அங்கே ஒரு பெரிய காலேஜில் எனக்கு மியூசிக் டீச்சர் வேலை கிடைத்திருக்கிறது .இவருக்கும் அங்கேயே ஒரு வேலையை தேடிக் கொண்டு அங்கேயே செட்டிலாகி விட நினைத்தோம் ” 

” ம் …பிறகு …? ” 

” அடுத்த  வாரம் அங்கே என்னை வேலையில் சேர  வரச் சொல்லியிருந்தனர் .நாங்களும் அந்த தேதியை கணக்கு பண்ணி இங்கே எங்கள் கல்யாணத்திற்கு ரிஜிஸ்டர் ஆபிசில் ரிஜிஸ்டர் பண்ணி வைத்து விட்டு காத்திருந்தோம் .அந்த தேதி நாளைதான் .நாளை காலை திருமணம் முடித்துக் கொண்டு இரவு டிரெயின் ஏறி விட திட்டம் வைத்திருந்தோம் …” 

” நாளை திருமணத்திற்கு எதற்காக இரண்டு நாட்கள் முன்பே வீட்டை விட்டு கிளம்பினீர்கள் ..? ” 

” எங்கள் திருமண ஏற்பாடுகளுக்காக …சேலை , நகைகள் வாங்க …என்று , அங்கே நம்ம காலனியில் எப்போதும் யாருடைய கண்காணிப்பாவது இருக்கும் .ஷாப்பிங்கெல்லாம் இருவரும் சேர்ந்து போக முடியாது .அதனால்தான் …” நந்தகுமாருக்கு புரிந்த்து.

இருவருமாக முடிந்தளவு நாட்கள் இணைந்து சுற்ற அவசரப்பட்டிருக்கின்றனர் .அந்த அவசரம் இன்று அவர்களது திருட்டுத்தனத்தை காட்டிக் கொடுத்திருக்கிறது .

” அவரவர் வீட்டிற்கு எந்த தகவலும் சொல்லாமல் திடீரென காணாமல் போய் விட்டால் இரண்டு வீடுகளிலும் தேடிக் கொண்டே இருப்பார்கள் .ஒரு வருடம் கழித்து திடீரென வருவோம் .அப்போது வந்த்தே போதுமென்று எங்கள் திருமணத்தை பெரிதாக நினைக்காமல் ஏற்றுக் கொள்வார்களென நினைத்தோம் …” 

நந்தகுமார் முரளியை புருவம் சுருக்கி பார்க்க , அவன் பார்வை எதர்ப்புற சுவற்றை பார்த்தபடி இருந்தது .அவனுக்கு இருவரையும் கன்னம் பழுக்க அறைய வேண்டும் போல் இருந்த்து .சை …எவ்வளவு மோசமான சுயநல  மனிதர்கள் …

முரளியின் கழுத்து கத்தியை விலக்கினான் .” சரி நடந்த்தை மறந்து விடுங்கள் .கிளம்பி என்னுடன் வாருங்கள் .உங்கள் இருவர் வீட்டிலும் பேசி நானே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் …” 

” இல்லை ” ” வேண்டாம் ” இருவருமே கத்தினர் .

” வேண்டாம் நந்தா .அது நடக்காது .எங்கள் காதல் இரண்டு வீட்டினருக்கும் தெரிந்து விட்டால் எங்களை எப்படியாவது பிரித்து விடுவார்கள் ” 

” அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன . கிளம்புங்கள் ” 

” ப்ளீஸ் நந்தகுமார் எங்களை பிரித்து விடாதீர்கள் ” ரேகா கை கூப்பினாள் .

” உங்களை பெற்றெடுத்து வளர்த்த தாய் , தகப்பன் , பாட்டி .அவர்களுக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு இதுதானா …? ” 

நந்தகுமாரின் உருக்கல் பேச்சு காதலர்களின் காதில் ஏறவில்லை .

” எனக்கு என் அம்மா , பாட்டியை விட முரளிதான் முக்கியம் .” ரேகா நகர்ந்து அமர்ந்து முரளியின் கையை தன் கைகளால்  சேர்த்து  அதில் தலை சாய்த்துக் கொண்டாள் .

” எனக்கும் என் அம்மா , அப்பாவை விட ரேகாதான் முக்கியம் ” தன் கை சேர்ந்திருந்த ரேகாவின் தலை மேல் தன் தலை சரித்துக் கொண்டான் முரளி .

நந்தகுமார் எழுந்தான் .” உன்னுடைய இந்த தெளிவான முடிவை நீ இங்கே சொல்லி விடு முரளி …” வாசலுக்கு நேராக தான் போட்டு அமர்ந்திருந்த சேரை நகர்த்தினான் .

கலங்கிய கண்களுடன் உள்ளே நுழைந்தாள்  ராகவி .

” உனக்கு நான் முக்கியமில்லையா அண்ணா …? ” 




What’s your Reaction?
+1
26
+1
13
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!