பெண்ணின் மனதை தொட்டு

பெண்ணின் மனதை தொட்டு-1

1

“அவுங்க கேட்கத்தான் செய்வாங்க, திருப்பதியில் லட்டு மாதிரி கை நிறையல்ல அவங்களுக்கு திகட்ட திகட்ட கிடைக்கும். வேற எதையும் பத்தி எதற்கு யோசிக்க போறாங்க,ஆனா நாம அப்படி இல்லையே,நாலு பக்கமும் நல்லா யோசிச்சுத்தானே சொல்ல முடியும்!”

அம்மா சௌபாக்கியத்தின் குரல் காதுகளை நிரப்பி விழிப்பை தூண்ட சோம்பலாக கண் திறந்தாள் மகதி. 

“ஏய் பாக்கியம் இங்க பாரு, கேக்குறதுக்கு அவங்க இஷ்டம். நமக்கு பிடித்தால் சரிம்போம், இல்லைன்னா எங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டு போவோம்” அப்பா சுகவனத்தின் குரல் அம்மாவிற்கு பதிலாக உரக்கவே ஒலித்தது.

 அடடா காலையிலேயே இவர்கள் ஆரம்பித்து விட்டார்களா! சலித்தபடி எழுந்தமர்ந்தாள் மகதி. திறந்து வைத்திருந்த மேல் ஜன்னல் கதவுகளின் வழியாக சூரிய ஒளி நேராக அவள் கட்டிலில் கோடுகள் வரைந்திருந்தது. என்ன வெயில் இங்கே வரை வந்துவிட்டது? டைம் என்ன? சுவர் கடிகாரத்தை ஏறிட்டு பார்த்தவள் ‘ஆ’ என்று சத்தமாகவே அலறினாள்.

 எட்டு மணி வரை என்னை தூங்க விட்டதற்கு இந்த அம்மாவிற்கு இன்று இருக்கு… புலம்பியபடி மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்தாள். ஒரு மணி நேரத்தில் தயாராகி வெளியே வந்தவள் நேரடியாக அடுப்படியில் தாயிடம் போய் நின்றாள்.

“ம்மா ஒரு அரை மணி நேரம் முன்பு எனக்கு ஒரு குரல் கொடுத்தால் குறைந்து போய் விடுவீர்களா?” இடுப்பில் கைதாங்கி அதிகாரமாக கேட்ட மகளை கோபமாக பார்த்தாள் சௌபாக்கியம்.

” ஏன்டி இந்த வீட்டில் எல்லாரும் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஆளாளுக்கு ஒரு அதிகாரம். உங்கள் எல்லோருக்கும் சேவை செய்ய என்றே பிறந்தவளா நான்?”

 அய்யய்யோ பாக்கிக்கு இன்று மூட் சரியில்லை போலவே, நான் வேறு வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டேன். ஷணத்தில் புத்தரின் சிஷ்யையாக மாறிய மகதி, உதடுகளுக்கு ஜிப் போட்டுக் கொண்டு சாப்பாட்டு மேஜையில் போய் அமர்ந்து கொண்டாள். அம்மாவின் கோபத்தின் காரணம் அவளுக்கு தெரியும்.அதோ கசங்கிய நைட்டியுடன் கொட்டாவி விட்டபடி மாடியிலிருந்து இறங்கி வருகிறாளே ரூபாவதி, அவள்தான். 

“ராகுல் சாப்பிட்டாயாடா? ஐந்து நிமிடத்தில் ஸ்கூல் பஸ் வந்து விடும். அத்தை இவனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டீர்களா?” 




மருமகளின் இந்த கேள்விக்கு உள்ளே மாமியார் கொதித்துக் கொண்டிருப்பாள் என்று மகதிக்கு தெரியும். ஆனாலும் சற்று முன்பு மகளை பேசியது போல் மருமகளை பேச முடியாது. எனவே அடர்ந்த மௌனத்தையே கையில் எடுத்துக் கொண்ட சௌபாக்கியம் தட் தட் என்று சமையலறை பாத்திரங்களில் தன் கோபத்தை காட்டினாள். 

“ஒரு வார்த்தை பதில் சொல்வதற்கு என்ன” முணுமுணுத்தபடி ரூபாவதி “டேய் சாப்பிட்டாயா இல்லையா?” மகனை கத்தினாள். 

“இவ்வளவு சாப்பிட்டேன்மா.பாட்டி ஊட்டி விட்டாங்க” கையை பெரிதாக அளவு காட்டினான் ராகுல்.

” சரி சரி கிளம்பு” ஸ்கூல் பேக்கை அவன் முதுகில் மாட்டிவிட்டு லஞ்ச் பேக்கை தன் கையில் எடுத்துக்கொண்டு ராகுலின் கையை இழுத்தபடி வாசலுக்கு போனாள் ரூபாவதி.

” ஏண்டி இப்படியேவா ரோட்டில் போய் நிற்கப் போகிறாய்? டிரஸ்சை மாற்றி விட்டு போடி ?”அவளது நைட்டியை பார்த்து முகம் சுளித்து சொன்னான் மாடியிலிருந்து இறங்கி வந்த தமிழ்ச்செல்வன்.

” எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கண்ணை முதுகில் வைத்துக் கொள்ளுங்கள்” கணவனிடம் காய்ந்து விட்டு மகனைப் பிடித்து இழுத்தபடி போனாள்.

” திமிர் பிடித்தவள்” மனைவி தள்ளி ஓரமாக போய்விட்ட தைரியத்தில் கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்தான் தமிழ்ச்செல்வன்.

” ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான் அண்ணா” சீண்டிய தங்கையின் தலையில் விளையாட்டாக கொட்டியவன் சாப்பிட அமர்ந்தான்.

 உணவு பாத்திரத்தை திறந்த மகதிக்கு மீண்டும் அம்மாவை வைய வேண்டும் போல் இருந்தது. காலங் கார்த்தாலே இத்தனை நெய்யும் முந்திரியையும் போட்டு பொங்கலை கிண்டி வைத்தால் அவளுடைய டயட் என்னாவது? சும்மாவே இரண்டு கிலோ குறைக்க வேண்டும் என்று வெகு பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள். இந்த அம்மாவிடம் எவ்வளவு சொன்னாலும் தெரியாது.

 தட்டு நிறைய பொங்கலை வைத்து சாம்பார் சட்னியால் குளிப்பாட்டி வடையோடு உள்ளே தள்ளிக் கொண்டிருந்த அண்ணனை வெறுப்பாக பார்த்தாள். இவனுக்கெல்லாம் டயட்டே கிடையாதா… கரண்டியில் ஒரு ஓரமாக கிள்ளி எடுத்து பொங்கலை வைத்துக் கொண்டு வேகமாக சாப்பிட்டு முடித்து எழுந்தாள்.

பத்து மணிக்கு பாடத்திற்கு பிள்ளைகள் வந்து விடுவார்கள். எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்திருந்த மகதியை வெளியே வேலைக்கு அனுப்புவதில் அப்பா சுகவனத்திற்கு விருப்பம் கிடையாது.அவர் அரசுப் பள்ளியில் ஹெட் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர் .தனது ரிட்டயர்மென்ட்டின் போது வந்த பணத்தை வைத்து இரண்டு கம்ப்யூட்டர்களை மகளுக்கு வாங்கித் தந்திருந்தார்.

 அவர்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே சிறுவர்கள் பெரியவர்கள் என எல்லா வயதினருக்கும் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தாள் மகதி.

வீட்டின் பக்கவாட்டில் இருந்த மாடிப்படியேற வந்த போது வராண்டாவில் அமர்ந்து ஹிண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்த சுகவனம் “குட்மார்னிங்மா,க்ளாஸ்கு கிளம்பியாச்சா?” சம்பிரதாயமாக விசாரித்தார்.

“ம்பா நீங்க சாப்பிட்டீங்களா?” அப்பாவிடம் கேட்ட கேள்விக்கு பதிலை வாங்காமலேயே அவசரமாக மாடியேறினாள்.கிளாஸ்கு ஆட்கள் வரும் முன் அவள் வகுப்பறையை சுத்தம் செய்துவைக்க வேண்டும்.

மொட்டைமாடியின் பாதி இடத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்த அறையை தமிழ்செல்வனும்,ரூபாவதியும் உபயோகித்துக் கொண்டிருக்க,மீதி இடத்தில் மகளுக்கு ஓலை வேய்ந்து கொடுத்திருந்தார் சுகவனம்.பரபரவென தனது வேலை இடத்தை கூட்டி சுத்தம் செய்த மகதி,கம்யூட்டர்களை துடைத்து பளபளப்பாக்கினாள்.ஓரமாக உயர்ந்து நின்றிருந்த கரும்பலகையை டஸ்டரால் மீண்டுமொரு முறை அழுத்தி துடைத்து வைத்தாள்.

மாணவர்கள் உட்கார போட்டிருந்த மர பெஞ்சுகளை தூசு தட்டினாள்.மொட்டைமாடி என்பதால் தூசு மிக அதிகமாகவே சே்ந்து விடும்.வாசல் கால்மிதியை உதறி போட்டவள்,கையை திருப்பி மணி பார்த்துக் கொண்டாள்.இதோ பத்து மணியாக போகிறது.வேகமாக மொட்டைமாடி கைபிடிச் சுவரருகே போய் எட்டிப் பார்த்தாள்.

பொள்ளாச்சி அருகேயுள்ள வளமான விவசாய ஊர் அவர்களிருப்பது.எனவே இடம் இருக்கும் ஒவ்வொருவர் வீட்டை சுற்றிலும் சிறு தோட்டம் உண்டு.இவர்கள் வீட்டை சுற்றி பத்து பதினைந்து வாழை,தென்னை,மா மரங்களென சிறு தோப்பு போன்ற தோற்றத்துடன் மரங்கள் இருக்கும்.

இவர்கள் பக்கத்து வீடோ தென்னை,வாழை,மா,எலுமிச்சை,

மாதுளை என உண்மையிலேயே

பெரிய தோப்பையே சுற்றி கொண்டிருந்தது. பக்கத்து வீடுதான் என்றாலும் இங்கிருந்து பார்க்க மரங்களை கடந்து தூரமாகவே தெரிந்தது.மகதி மீண்டும் மணி பார்த்தாள்.பத்துக்கு இரண்டு நிமிடங்கள் இருந்தன.நிமிட முள் பன்னிரெண்டை தொடுவதை பார்த்தபடி நின்றாள்.

மிகச் சரியாக பத்து மணிக்கு அவன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.ஒயிட் அன்ட் ஒயிட்டில் இருந்தான்.தலைமுடியை ஒட்ட வெட்டி,அடர்ந்த மீசையை அளவாய் நறுக்கி நுனி முறுக்கியிருந்தான்.பைக்கின் ஸ்டாண்டை விடுத்து கால்களை வீசிப் போட்டு ஏறினான்.அவ்வளவு நேரமாக மகாப் பெரியதான தோற்றத்துடன் ஷெட்டில் நின்று கொண்டிருந்த பைக் அவன் ஏறி அமர்ந்த்தும் மிகச் சிறியதாகி போனது.




ஆனாலும் ராட்ச்சன் போல் இருக்கிறாயடா…கண்ணகற்றாமல் அவனை பார்த்து நின்றிருந்தாள் மகதி.தென்னை மரங்களுக்கு ஊடே தெரிந்த அவன் பைக் பயணத்தை அவள் கண்கள் தொடர்ந்தன.வாட்ச்மேன் கதவை திறந்து விட தோப்பை தாண்டி சாலையில் நுழைந்தான். அவர்கள் வீட்டின் அருகே வந்தபோது மகதி தன்னை மரத்தூணின் பின்னால் லேசாக மறைத்துக் கொண்டாள்.

 இந்த ஒளிதல் தேவையில்லைதான். அவன் இவள் பக்கம் துளி கூட திரும்ப போவதில்லை. ஆனாலும் ஒரு எச்சரிக்கை. அண்டை வீட்டுக்காரனான இவனை சிறுவயதில் இருந்தே அவள் நன்கு அறிவாள். பருவ வயது வந்த பிறகு இவன் மேல் ஒரு விதமான ஈடுபாடு வந்தது. இதோ இப்போது வரை அவளுடைய க்ரெஷ்ஷாக இவனே இருக்கிறான்.வீட்டை கடந்து சாலை முனை வரை போய் அவன் திரும்பி மறையும் வரை பார்த்தபடி நின்றிருந்தாள். 

“யாரைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அக்கா?” மிக அருகே குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பினாள். அவளுடைய மாணவி சைலஜா நின்றிருந்தாள். அவள் கண்களில் சுவாரஸ்யம் இருந்தது.

” ரொம்ப தேவை பார் கிளாசுக்கு 10 நிமிடங்கள் லேட்டாக வந்திருக்கிறாய். போய் உட்கார். ஒழுங்காக படி” தன் பலவீனத்தை மறைக்க அவளை விரட்டினாள் மகதி. வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தபடி போனாள் சைலஜா.

 தொடர்ந்து பாடத்திற்காக ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க இருவரை சிஸ்டம் முன்னால் அமர்த்தி பயிற்சியை விளக்கி விட்டு மற்றவர்களுக்கு கரும்பலகையில் பாடங்களை எழுதத் தொடங்கினாள். ஓரக்கண்ணால் இவளை அளந்தபடி தங்கள் அறைக்குள் போனாள் ரூபாவதி.

 அடுத்த அரைமணியில் பச்சை நிற சுடிதாரும் உயர்த்தி போட்ட போனி டெய்லுமாக அறையை விட்டு வெளியே வந்தவள் தோளில் ஹேண்ட் பேக்கை சரி செய்தபடி இவர்களை கடக்கும்போது அதே கீழ்க்கண் பார்வை. நேரடியாகவே பார்த்து தொலைய வேண்டியது தானே, எதற்கு திருட்டுத்தனம்? எரிச்சல் பட்டப்படி பாடத்தை தொடர்ந்தாள் மகதி.

மதியம் 2 மணி வரை பகுதி பகுதியாக அவளுடைய பாடம் தொடர்ந்தது. கிளாசை முடித்துவிட்டு உணவுக்காக கீழே இறங்கினாள். இனி ஐந்து மணி வரை ஓய்வு தான். பிறகு இரவு 9:00 மணி வரை மீண்டும் மாணவர்கள் வரத் துவங்குவார்கள்.

” ஹாய் மம்மு குட்டி இன்று என்ன சாப்பாடு?” அடுப்படியில் பாத்திரங்களை ஒதுக்கி போட்டுக் கொண்டிருந்த சௌபாக்கியத்தை பின்னிருந்து கட்டிக் கொண்டு கொஞ்சினாள்.

” சும்மாவே வியர்த்து கசகசன்னு இருக்குது. இதில் நீ வேறு… தள்ளி போடி”

” வர வர நீ சரியில்ல பாக்கி, உனக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்லாமல் போய்விட்டது”முகத்தை சுருக்கியபடி சாதத்தை தட்டில் போட்டுக்கொண்டு அமர்ந்தவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது.

” காலையில் நீயும் உன் புருஷனும் கத்தி கத்தி சண்டை போட்டீர்களே,என்ன காரணம்?”

 முந்தானையால் கழுத்தடியை துடைத்தபடி அவளைப் பார்த்த சௌபாக்கியம் “உன் அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை சொன்னார்” என்றாள்.

 போச்சுடா திரும்பவும் ஆரம்பித்து விட்டார்களா? சலிப்பு வந்தது மகதிக்கு.




What’s your Reaction?
+1
44
+1
20
+1
3
+1
3
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!