Serial Stories பெண்ணின் மனதை தொட்டு

பெண்ணின் மனதை தொட்டு-2

2

தமிழ்ச்செல்வனும் ரூபாவதியும் வீட்டிற்கு வரும் பொழுது நேரம் இரவு 9 மணியை கடந்து விட்டது. தோளில் மாட்டியிருந்த ஹேண்ட் பேக்கை கழட்டி சோபாவில் போட்டவள் கால்களை டீப்பாயில் நீட்டி அப்பாடா என்ற சலிப்புடன் சோபாவில் சரிந்து கொண்டு “அத்தை கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்” என்றாள்.

 டிவி சீரியலில் மூழ்கி இருந்த சௌபாக்கியம் காதில் வாங்காதது போல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். தன் லேப்டாப்பில் மறு நாளைக்கான பாடங்களை பார்த்துக் கொண்டிருந்த மகதியும் கண்டு கொள்ளாமல் இருக்க “தண்ணீர் கேட்டேன்” என்றாள் உரக்க.

 பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வந்த தமிழ்செல்வன் அடுப்படிக்கு போய் சொம்பில் நீர் கொண்டு வந்து மனைவியிடம் நீட்டினான். கோபத்துடன் மாமியாரையும் நாத்தனாரையும் முறைத்தபடி தண்ணீரை குடித்தவள் “நைட் என்ன டிபன் அத்தை?” மீண்டும் குரல் கொடுத்தாள்.

” தோசை. சட்னி அரைத்து வைத்து விட்டேன். ரெண்டு பேரும் ஊற்றி சாப்பிடுங்கள்” சௌபாக்கியம் டிவியை விட்டு அகலுவதாக இல்லை.

 வெரி குட் அம்மா, மனதிற்குள் தாய்க்கு கை குலுக்கி விட்டு தன் வேலையை தொடர்ந்தாள் மகதி. ரூபாவதிக்கு கோபம் பொங்கி கொண்டு வந்தது. காலை 10 மணிக்கு வேலைக்கு செல்பவள் இரவு 9:00 மணிக்கு வருகிறேன். இவ்வளவு கடுமையாக உழைப்பவளுக்கு தட்டில் சாப்பாடு வைத்து நீட்ட வேண்டாமா?

 பி பார்ம் படித்திருந்த தமிழ்செல்வனுக்கு லோன் வாங்கி பொள்ளாச்சி கடைத்தெருவில் முக்கிய இடத்தில் இருந்த மீனாட்சி மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒரு மெடிக்கல் ஸ்டோர் வைத்து கொடுத்திருந்தார் சுகவனம். cplt படித்த லேப் டெக்னீசியனான ரூபாவதியின் வரன் வர மகனின் தொழிலுக்கு உதவுவாளென மணம் முடித்து வைத்தார்.

திருமணம் முடிந்த மறுநாளே தோளில் பேக் மாட்டிக் கொண்டு கணவனுடன் மருந்துக் கடைக்கு போன ரூபாவதிக்கு அந்த வாழ்வு மிகவுமே பிடித்து போய்விட்டது.அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வரை பிரச்சனையில்லாமல் போய் கொண்டிருந்தது.குழந்தையையும் சேர்த்து பார்த்துக் கொள்ள வேண்டி வந்த போது சௌபாக்கியத்தின் உடல்நிலை ஒத்துழைக்காது போகவே அவள் சிடுசிடுப்பை காட்ட,வீட்டிற்குள் சிறு சலசலப்பு உண்டாக ஆரம்பித்தது.

“நான் தோசை ஊற்றவா ரூபா?” கேட்ட கணவனுக்கு சரியென தலையசைத்து விட்டு மாமியாரின் கையிலிருந்த டிவி ரிமோட்டை கை பற்றுவதெப்படி என்ற யோசனையில் இறங்கினாள் ரூபாவதி. 

மகன் அடுப்படிக்குள் போகவே எரிச்சலுடன் எழுந்த சௌபாக்கியம் ரிமோட்டை போட்டுவிட்டு வீட்டின்  பின் வாசல்படியில் சென்று அமர்ந்து கொண்டாள். லேப்டாப்புடன் தானும் தாயை தொடர்ந்து சென்ற மகதி “என்னம்மா?” என்று ஆறுதலாக அம்மாவின் தோளை பற்றினாள்.

” பார்த்தியாடி என் கண் முன்னாடி புருசனை தோசை சுட்டு வர சொல்கிறாள். இவனும் ஓடுகிறான். ஒரு நாளாவது இப்படி எனக்கு தோசை சுட்டு கொடுத்திருப்பானா?”

 மகதி  சிரித்தாள். “நீங்கள் ஒரு நாளாவது உங்கள் மகனிடம் தோசை சுட்டு தரச் சொல்லி கேட்டிருக்கிறீர்களாம்மா?”




” அதெபடி ஆம்பளை பையனை அடுப்புக்குள் விடுவேன்?”

” இது உங்கள் நியாயம்.அண்ணியிடமும் அதே நியாயத்தை எதிர்பார்ப்பது தவறு.  அவர்கள் கணவன் மனைவிக்குள் அலுவலக வேலையானாலும் வீட்டு வேலையானாலும் அவர்கள் வசதிக்கேற்ப பிரித்துக் கொள்வது நியாயம்தான். இதில் நாம் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்ளத்தான் வேண்டும். என்னால் முடியாது என்று சொல்லுங்கள், அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. நீயும் செய்யாதே என்று உங்கள் மகனை தடுக்கும் உரிமை உங்களுக்கு நிச்சயம் கிடையாது.அண்ணன் உங்களுக்கு மகன் மட்டுமல்ல. ரூபாவதியின் கணவனும் கூட”

 மகள் சொன்ன நியாயங்கள் தாய்க்கு புரிந்தாலும் இத்தனை வருடங்கள் பழகிய முறைமைகள் சௌபாக்கியத்தை இந்த நவீனத்தை ஒப்புக்கொள்ள விடவில்லை. “எனக்கு பசி என்கிறாளே, புருசனும் அவளோடு சேர்ந்து வேலை பார்த்து விட்டுத்தானே வந்திருக்கிறான்! அவனை வேலை ஏவுகிறாளே, இது என்ன நியாயம்?” புலம்பினாள்.

 “அம்மா நாளையே இடம் மாறி அண்ணி அண்ணனுக்கு தோசை சுட்டு தரலாம். திரும்பவும் சொல்கிறேன் இது கணவன் மனைவி விஷயம். நாம் தலையிடக்கூடாது. நீங்கள் போய் படுங்கள்” அம்மாவை எழுப்பி அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டு தானும் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் மகதி.

அம்மா சொன்ன விசயம் அவள் மனதையும் உறுத்திக் கொண்டுதான் இருந்தது.மருந்துக் கடையில் வாங்குபவர்களுக்கு பில் போட்டு பணம் வாங்குவதை தவிர வேறெந்த வேலையும் அண்ணி செய்வதில்லை என அறிவாள்.ரோலிங் சேரில் சுழன்றபடி கம்யூட்டரில் பில் போடுபவளுக்கு என்ன பெரிய அலுப்பு என்ற எண்ணம்தான. அவளுக்கும்.ஆனாலும் அதனை வெளிப்படையாக பேசினால் அவள் நாத்தனாராகி விடுவாளே.சிரம பட்டு் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அம்மாவையும் சமாதானப் படுத்த முயன்றாள்.

“என்ன மகதி லேப்டாப்பில் என்ன பார்க்கிறாய்?சீரிஸா?” கேட்டபடி அறைக்குள் வந்த அண்ணன் மனைவியை முறைக்க துடித்த கண்களை தாழ்த்தியபடி லேப்டாப்பை திருப்பி காட்டினாள்.

“ஓ..நோட்ஸ் எடுக்கிறாயா? என்னவோப்பா எப்படித்தான் இந்த கோடிங்கெல்லாம் படிக்கிறாயோ, பார்த்தாலே தலைவலி வருகிறது”

மகதியினுள் ஏதோ அபாயமணி அடித்தது.இப்படி நட்பாக பேசுவதில்லையே இவள்? என்ன காரியத்திற்காக வந்திருக்கிறாள்? 

“மகதி அத்தை உன்னிடம் ஏதாவது சொன்னார்களா?”

” எதைப் பற்றி அண்ணி?”

” அதுதான் உன் கல்யாண விஷயம்”

 மகதியின் மனது படபடவென்று அடித்துக் கொண்டது. மதியம் அம்மா சொன்னதில் எரிச்சலடைந்து, குட்டையாக சப்பை மூக்கோடு எத்துபல்லோடு முன் சொட்டையோடு என்று திரும்பத் திரும்ப எவனையாவது கொண்டு வந்து நிறுத்தாதீர்கள் அம்மா எனக்கு கோபம் வரும் கத்தினாள்.

 ஏய் என்னடி சொல்வதை முழுவதும் கேட்காமலேயே சௌபாக்கியம் பேசிக் கொண்டிருக்கும் போதே மாடி ஏறி போய் உட்கார்ந்து கொண்டாள். இதுவரை அவளுக்கு பார்த்த மாப்பிள்ளைகள் எல்லாரிடமும் இதுபோல் ஏதாவது ஒரு குறை அவளுக்கு தெரிந்து கொண்டே இருந்தது. அது போகவே சுகவனம் சௌபாக்கியத்திற்கும் ஏதோ சில காரணங்களால் அவர்களை பிடிக்காமல் போனது.

சௌபாக்கியம் ஜாதகத்தில் அதிக நம்பிக்கை உடையவள். அவர்கள் விருப்பத்திற்கு ஓரளவு பொருந்தி வரும் வரன்கள் ஜாதகத்தில் அமையாமல் போனது. அதனால்

கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாகவே மகதியின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதில் சௌபாக்கியத்திற்கு மிகுந்த மனக்குறை.

இப்போது எவனைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லையே! மகதி வருத்தத்துடன் ரூபாவதியின் முகத்தை கூர்ந்து பார்த்தாள். இவள் முகம் ஏன் இப்படி ஒளிர்கிறது?




” நீங்கள் படுக்கப் போகவில்லையா அண்ணி?”

” இதோ கிளம்பி விட்டேன். நாளை காலை எழுந்து ஓட வேண்டுமே, அதற்கு முன் உனக்கு பார்த்த வரனை பற்றி…ம் பாவம்தான் நீ .எனக்கெல்லாம் மாப்பிள்ளை பார்க்க  ஆரம்பிக்கவும் உங்கள் அண்ணன் வரன் வந்து உடனே அமைந்து விட்டது. ஆனால் உனக்குத்தான் தள்ளி தள்ளி போகிறது. பாவம் நீ எப்படித்தான் கரைசேரப் போகிறாயோ?” வருத்தம்போல் உச்சு கொட்டினாள்.

 நான் என்ன வெள்ளத்திற்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களிடம் சொன்னேனா? கத்த துடித்த இதழ்களை அடக்கியபடி “வரன் வரும்போது வரட்டும் அண்ணி. எனக்கு அவசரம் இல்லை” என்றாள் பொறுமையாக.

” பிறகு அவசரம் என்றா சொல்லுவாய்? ஆனாலும் எனக்கு மனது கேட்கவில்லை. எனக்கும் உன் அண்ணனுக்கும் இரண்டே 

வருடங்கள்தான் வித்தியாசம் தெரியுமா? இப்போதெல்லாம் பெண்கள் கிட்டத்தட்ட ஒரே வயது உடைய ஆண்களை தான் விரும்புகிறார்களாம். எனக்கெல்லாம் அப்படி தானே அமைந்து விட்டது பார்த்தாயா?” என்றபடி எழுந்தாள் ரூபாவதி.

 அடக்கடவுளே! இவள் என்ன இப்படி சொல்கிறாள்? எந்தக் கிழவனை மாப்பிள்ளையாக பார்த்து வைத்திருக்கிறார்கள்? கவலை எழுந்தது மகதியினுள்.

 ரூபாவதி அறை வாசலில் நின்று “இரண்டாம் தாரமாக போவதை பற்றி என்ன நினைக்கிறாய் மகதி? கேட்டுவிட்டு போய்விட்டாள்.

 

அன்று காலை தாயும் தந்தையும் பேசிக் கொண்டிருந்த பேச்சுக்கள் நினைவு வர இரண்டாம் தாரமாகவா? அப்படி எதில் குறைந்து போய்விட்டேன் நான்?

மகதி அதிர்ந்து அமர்ந்து விட்டாள்.




What’s your Reaction?
+1
39
+1
26
+1
1
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!