Serial Stories

பெண்ணின் மனதை தொட்டு-6

6

அந்த ஊதா நிற மாருதி காரை செட்டில் இருந்து வெளியே எடுத்து தூசு போக துடைத்துக்கொண்டிருந்தார் சுகவனம்.

வயலட் நிற உடலில் அடர் பிங்க் நிற கெட்டி ஜரிகை போட்ட பார்டர் ஓடிய பட்டுச்சேலையை நேர்த்தியாக கட்டி தோளில் பின் குத்திக் கொண்டாள் சௌபாக்கியம்.

 வழக்கமாக வீட்டிற்குள் அள்ளி முடிந்த கொண்டையுடன் இருப்பவள் இன்று கூந்தலை வாரி நீளமாக பின்னிக் கொண்டாள்.முதல் நாள் உதிரியாக வாங்கி கெட்டியாக கட்டி வைத்து இருந்த மல்லிகை பூவை எடுத்து அடி முடி எடுத்து தலையில் சூடிக்கொண்டாள். உள்ளங்கையில் பாண்ட்ஸ் பவுடரை கொட்டி இரு கைகளிலும் தேய்த்து முகம் கழுத்தில் போட்டுக் கொண்டாள். நெற்றிலும் வகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டு கண்ணாடியில் பார்த்து திருப்தி பட்டு கொண்டாள்.

” ஆஹா அம்மா 10 வயது குறைந்து விட்டீர்கள்.எனக்கு அக்கா போல் தெரிகிறீர்கள்” உற்சாகத்தோடு தாயை பாராட்டியபடி வந்தாள் மகதி.

” சும்மா இருடி எதையாவது சொல்லிக் கொண்டு …”லேசான வெட்கத்துடன் சிணுங்கிய தாயை பின்னிருந்து கட்டிக் கொண்டவள் “ரொம்ப அழகா இருக்கிறாய் மம்மு குட்டி” என கொஞ்சினாள்.

” ஏய் என்னடி இது… சின்ன பிள்ளை போல்… விடு, இட்லி அவித்து வைத்திருக்கிறேன். போய் சாப்பிட்டுவிட்டு உன்னுடைய கிளாசுக்கு கிளம்பு “சௌபாக்கியம் மகளை விரட்ட “அத்தை…” என்ற அதிர்ச்சியான குரலுடன் வந்தாள் ரூபாவதி.

” என்ன செய்கிறீர்கள்?” பாசத்துடன் கொஞ்சி நின்ற தாய் மகளை குரோதத்துடன் பார்த்தாள்.

” தெரியவில்லையா அண்ணி, நானும் அம்மாவும் கொஞ்சிக் கொண்டிருக்கிறோம்” மகதி கடுப்பேற்ற, “ராகுலை குளிப்பாட்டி விட்டீர்களா?” கடித்த பற்களுக்கிடையே கேட்டாள் ரூபாவதி.

” அவன் இன்னமும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறான்மா. நீ எழுப்பி குளிப்பாட்டி சாப்பிட வைத்து பள்ளிக்கு அனுப்பு” சௌபாக்கியம் நிதானமாக சொல்ல ரூபாவதி காளி அவதாரம் எடுத்தாள்.

” என்ன அத்தை இது? இன்னும் அரைமணியில் நான் கடைக்கு கிளம்ப வேண்டும். இத்தனை வேலையை எப்படி என்னால் பார்க்க முடியும்?”

” இன்று எங்களுக்கு கல்யாண வீடு இருக்கிறது, காலையில் சீக்கிரம் எழுந்து வந்து விடு என்றுநேற்று இரவே சொல்லத்தானே செய்தேன். நீ லேட்டாக எழுந்து வந்தால் நான் என்ன செய்யட்டும்?” நிதானமாக மருமகளிடம் பேசிவிட்டு மகள் பக்கம் திரும்பினாள் சௌபாக்கியம்.




” மகி காலை சமையல் வேலை முடித்து விட்டேன். மதியம் உனக்கு ஏதாவது சிம்பிளாக செய்து சாப்பிட்டுக்கொள். அண்ணனையும் ராகுலையும் ரூபா பார்த்துக் கொள்வாள். நாங்கள் கிளம்புகிறோம்” அலங்கரித்துக் கொண்டு கிளம்பும் மாமியாரும் வாசலில் நின்ற காரும் வரிசை கட்டி நின்ற வேலைகளும் ரூபாவதியை கொதி நிலைக்கு கொண்டு சென்றன.

“ம்க்கும் ராஜாவும் ராணியும் உலா போகிறார்கள்” சத்தமாகவே முணுமுணுத்தாள்.

 சௌபாக்கியம் திரும்பி மருமகளிடம் வந்தாள். “என் அப்பா அம்மாவிற்கு நானும் என் கணவரும் ராஜா ராணிதான் ரூபா. அப்படி நினைத்து தான் இந்த காரை எங்கள் கல்யாணத்தின்போதே சீராக எனக்கு கொடுத்தனர்” புன்னகை ததும்ப பேசிவிட்டு “காரை எடுங்க” என்றபடி சௌபாக்கியம் காருக்குள் அமர்ந்து கொண்டாள்.

” பார்த்து பத்திரமாக போய் விட்டு வாருங்கள்” அப்போதுதான் மாடியிறங்கி வந்த தமிழ்ச்செல்வன் அவர்களை வழியனுப்ப ரூபாவதியின் கோபத்தின் அளவு கூடியது. 

“இங்கே பாருங்கள் ராகுலை கூட கிளப்பாமல் உங்கள் அம்மா சர்ரென்று காரில் ஏறி போய்விட்டார்கள்”

” அம்மா தான் நேற்று இரவே சொன்னார்களே ரூபா, நீ கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருந்திருக்கலாமே, இன்று வேண்டுமானால் கடைக்கு வராமல் இங்கிருந்து ராகுலை, வீட்டு வேலைகளை பார்க்கிறாயா?”

” இல்லையில்லை,நான் எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்வேன்.இன்று ஒரு நாள் தானே நாளை தான் அத்தை வந்து விடுவார்களே”பதறினாள் ரூபாவதி. ஒரு நாள் இருந்துவிட்டாலும் வீட்டு வேலைகள் அவளுக்கே நிரந்தரம் என்று ஆகிவிடுமே என்ற பயம் அவளுக்கு.

“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா அண்ணி? ராகுலை கிளப்பட்டுமா?” மகதி உதவ முன்வந்தாள்.

” வேண்டாம் அழுத்தமாக மறுத்தாள் ரூபாவதி. ராகுல் எப்போதும் மகதியிடம் கொஞ்சம் ஒட்டுதலாகவே பழகுவான். அம்மா வேண்டாம் அத்தை தான் பிடிக்கும் என்று ஒருநாள் அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த ரூபாவதி மெல்ல மெல்ல மகதிடம் இருந்து மகனை பிரிக்க தொடங்கினாள். பிறகொருநாள் அத்தை ரொம்ப அழகா இருக்கீங்க என்று ராகுல் மகதியின் கன்னத்தில் முத்தமிட்டதை பார்த்தவள் காரணமில்லாமல் அவன் முதுகில் நான்கு அறை கொடுத்து இழுத்துப் போனாள்.

 அதன் பிறகு மகதியின் பக்கமே மகனை விடுவதில்லை. தன்மேல் உள்ள வெறுப்பு மகன் மேல் கோபமாக திரும்புவதை கண்ட மகதியும் ராகுலின் அருகே செல்வதைக் கூட மிகவும் குறைத்துக் கொண்டாள்.




 பர பரவென எல்லா வேலைகளையும் முடித்து மகனையும் கிளப்பி தானும் கிளம்பி விட்டாள் ரூபாவதி. அனைவரும் கிளம்பி சென்ற பிறகு வீடு வெறிச்சோடி கிடக்க காலை உணவை முடித்துவிட்டு மொட்டை மாடி ஏறி தனது வகுப்புகளை ஆரம்பித்தாள் மகதி.

 மதிய இடைவேளையில் எல்லோரும் கிளம்பியதும் வீட்டில் யாரும் இல்லாததால் வாசல் கேட்டை பூட்டி விட எண்ணி சாவியுடன் வந்தவள் அந்த பைக் சத்தத்தில் திடுக்கிட்டாள். எட்டி சாலையைப் பார்க்க அவள் கணிப்பு சரிதான் குணாளன் வந்து கொண்டிருந்தான்.

 இவன் எதற்கு இப்போது வருகிறான்! பொதுவாக குணாளன் மதிய உணவிற்கு வீட்டிற்கு வருவதில்லை. இரண்டு மணி நேரங்கள் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் நோயாளிகளை பார்க்க ஆரம்பித்து விடுவான். தலையை வேகமாக உள்ளே இழுத்துக் கொண்ட மகதி கேட்டை கூட பூட்டாமல் அவசரமாக வீட்டிற்குள் செல்ல வாசல் படி ஏறினாள்.

” ஏய் நில்லு” பின்னால் கேட்ட குரலில் விதிர்த்து அப்படியே நின்றாள்.

” குணாளன் வாசல் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.அந்த சத்தம் கேட்டதும் பதைத்து வீட்டிற்குள் ஓடிவிட முயன்றவளை “நில்லுன்னு சொல்றேன்” குரல் உயர்த்தினான்.

 இதோ இப்போது தன் இதயம் வெடித்து வெளியே வந்து விடப் போகிறது என்றே மிக நிச்சயமாக நம்பினாள் மகதி. மேல்படியில் அவள் நிற்க கீழ்ப்படியில் நின்ற குணாளன் “இந்த பக்கம் திரும்பு “என்றான்.

 உடல் முழுவதும் வியர்த்து வழிந்து உள்ளங்கால்களில் வியர்வை துளிகள் சேர்ந்து மகதியின் பாதங்களை தரையோடு ஒட்ட வைத்துக் கொண்டிருந்தது. கால்களை நகர்த்தி திரும்ப முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. “ஏய்…” குணாளன் மீண்டும் குரல் உயர்த்த அவசரமாக பாதங்களை பெயர்த்து எடுத்து திரும்பினாள்.

 தடுமாறி கீழே விழப்போனவள் சமாளித்து நின்ற போது மயக்கம் வருவதற்கான அறிகுறிகள் அவளுள் உண்டாகத் தொடங்கியது. தன் இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு அவளை ஏற இறங்க பார்த்தவன் “உனக்கும் எனக்கும் கல்யாணம் பேசுகிறார்களாமே உண்மையா?” என்றான்.

 மகதி நிலை குத்தி போன விழிகளுடன் அவனை வெறித்தாள். இவனுக்கு இந்த விஷயம் தெரியுமா?

” உண்மையா? இல்லையா?” மீண்டும் அவன் குரலை அழுத்த பதட்டத்தில் தலையை மேலும் கீழும் பக்கவாட்டில் என்று எல்லா பக்கமும் ஆட்டி வைத்தாள்.

” சம்மதம் சொல்லி விட்டாயா?”

 அடக்கடவுளே! இவன் ஒரு கேள்வி கூட எளிதாக கேட்க மாட்டானா? ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்வதற்குள் உயிர் போய் வருகிறதே! மகதிக்கு லேசாக மூச்சு வாங்க துவங்கியது.

” சொல்லி விட்டாயா? இல்லையா? வாயை திறந்து பேசு” குணாளன் ஒரு படி ஏற பதட்டத்தில் வாய் திறந்த மகதி “வ்வா… வ்வா… ப்போ.. ப்போ” என வாயில் தந்தி அடிக்க துவங்கினாள்.

 அடுத்த படி ஏறாமல் அப்படியே நின்று விட்டவன் “என்ன ஜன்னி வந்துருச்சா? கை காலெல்லாம் உதறுது…” எகத்தாளமாக கேட்டான்.




“இ… இல்லை சொல்லவில்லை” ஏகப்பட்ட நடுக்கங்களுக்கு இடையே ஒவ்வொரு எழுத்தாக பேசினாள்.

“ம்…சரி சீக்கிரமே சொல்லிவிடு” குணாளன் திரும்பி வாசலில் இருந்த பைக்கை எடுத்துக்கொண்டு போய் விட்டான். மகதி அப்படியே பிரமை பிடித்தாற் போல் வாசல் படியிலேயே அமர்ந்து விட்டாள்.

 அன்று இரவு திரும்பி வந்த அம்மாவும் அப்பாவும் காய்ச்சலில் உடல் கொதித்து கிடந்த மகளை கவலையுடன் பார்த்தனர். “தமிழ் ஏதாவது மாத்திரை இருந்தால் கொடு” சௌபாக்கியம் கேட்க, டெம்பரேச்சர் பார்த்த தமிழ்செல்வன் “அம்மா ஃபீவர் ரொம்ப இருக்குது. நம்ம டாக்டர் சார்கிட்ட கூட்டிட்டு போய் ஒரு இன்ஜெக்ஷன் போட்டு விடலாம்” என்றான்.

 என்னது, வியாதியை கொடுத்தவனிடமே வைத்தியத்தியத்திற்கும் போவீர்களா! மகதிக்கு காய்ச்சலோடு சேர்ந்து மயக்கமும் வரத் துவங்கியது.




What’s your Reaction?
+1
41
+1
18
+1
1
+1
5
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!