Serial Stories

பெண்ணின் மனதை தொட்டு-5

5

“ரூபா மேடம் உங்களை பார்க்க வந்திருக்கிறார்கள் டாக்டர்” நர்ஸ் சியாமளா வந்து சொல்ல “யார் அந்த மேடம்?”என்றான் குணாளன்.

” அவர்கள்தான் சார், நம்ம மெடிக்கல் ஸ்டோர் தமிழ் சாரோட வைஃப் ரூபாவதி”

” என்ன விஷயமாம்?”

“தெரியவில்லை சார், உங்களிடம் தான் பேச வேண்டுமாம்”

” பேஷன்ட்ஸ் போனதும் வரச்சொல்லுங்க”

” நான் சொல்லிப் பார்த்தேன் சார். அவர்கள் அப்போ என்னையும் பேஷன்டாக்கி டோக்கன் கொடுத்துடு. நான் வரிசையில் வந்து  பார்க்கிறேன்னு சொல்றாங்க சார்”

 குணாளனின் முகத்தில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது. வரச்சொல் என்பதாக கையசைத்தவன் தன் முன்னால் இருந்த நோயாளியை பரிசோதிக்க துவங்கினான். முகம் முழுவதும் உற்சாகத்துடன் உள்ளே நுழைந்த ரூபாவதி குணாளன் முன் அமர்ந்திருந்த பேஷன்டை கண்டதும் முகம் மாறினாள்.

” அண்ணா நான் உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும்”

“பேசுங்கள் அதற்காகத்தான் வரச் சொன்னேன்” குணாளன் தன் வேலையில் கவனமாக இருந்தான்.

“நான் கொஞ்சம் பிரைவசியாக…”ரூபாவதி இழுக்க

” அப்போது இரண்டு மணிக்கு மேலே வாருங்கள் அல்லது இரவு 9 மணிக்கு மேலே வாருங்கள். நீங்கள் அந்த பெஞ்சில் ஏறி படுங்க சார்.ஒரு இன்செக்சன் போட வேண்டும்” சியாமளா கொடுத்த இன்செக்சனை வாங்கிக் கொண்டு திரைக்குப் பின்னால் மறைந்தான் குணாளன்.

சியாமளா தன்னை பார்த்து சிரிப்பது போல் தோன்ற ரூபாவதியின் முகம் சிவந்து போனது.அந்த நோயாளி வெளியேறுவதற்காக காத்திருந்தவள் வேகமாக குணாளன் முன் அமர்ந்து கொண்டாள். “அண்ணா நான்…”

 சட்டென்று இடது கையால் டேபிளை ஒரு தட்டு தட்டினான் குணாளன். “இது ஹாஸ்பிடல். இங்கே நான் டாக்டர்”

 ரூபாவதியின் முகம் சுருங்கியது. “சாரி சார்” முணுமுணுத்தாள்.

” இரண்டே நிமிடங்கள்தான் டைம். சீக்கிரம் சொல்லிவிட்டு கிளம்புங்கள்”

“அந்த இடத்தை பற்றி நான் அன்று சொன்னதை யோசித்துப் பார்த்தீர்களா டாக்டர் சார்?”

“இப்போதைக்கு ஐடியா இல்லை என்று அன்றே சொன்னேனே. பிறகு பார்க்கலாம். வேறென்ன…?” இவள் இடத்தைப் பற்றி மட்டும் பேச வரவில்லை என்று குணாளனுக்கு தோன்றியது.

“வேறு… வந்து… எங்கள் வீட்டில் இருந்து உங்களுக்கு ஏதாவது தகவல் வந்ததா?”

” என்ன தகவல்?”குணாளனின் பொறுமை போய் கொண்டிருந்தது.

“கல்யாண தகவல்”  ரூபாவதி சொன்ன பின்தான் மகதியின் நினைவு வந்தது. 

குணாளனுக்கு இப்போது அதைப்பற்றி பேசும் விருப்பம்… அதுவும் இவளிடம் பேசும் விருப்பம் இல்லாததால், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் கிளம்புங்கள், உள்ளே வாங்க சார்” என்றான் அடுத்து வந்த நோயாளியை பார்த்து.

 ரூபாவதியும் எழுந்து விட்டாள். அவளுக்குத் தேவையான தகவல்தான் கிடைத்து விட்டதே. ஆக இன்னமும் குணாளனுக்கு விஷயம் தெரியாது.அடுத்து இதை எப்படி கொண்டு செல்வது யோசித்தபடி தங்கள் கடைக்கு திரும்பினாள்.




“இன்னமும் அவர்கள் மகனிடம் சொல்லவில்லையாம்,முதலில் நம்முடைய பெண்ணின் சம்மதத்தை கேட்கிறார்கள்” அப்பா அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தது காதில் விழ மாடிப்படிகளில் ஒரு நிமிடம் தயங்கிய மகதியின் கால்கள் பின் மெல்ல இறங்கி வந்தது.

 அவள் உள்ளே வரவும் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்ட தாயும் தந்தையும் அவளை பார்த்தபடி இருந்தனர். மௌனமாக டேபிளில் அமர்ந்து உணவை பரிமாறிக் கொண்டு சாப்பிட துவங்கினாள்.ஒருவருக்கொருவர் கண் ஜாடை பரிமாறிக் கொண்ட பெற்றோரை உணர்ந்தும் கவனிக்காதது போல் டிவியை போட்டு ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டாள்.

 மகள் சாப்பிட்னு முடிக்கும் வரை காத்திருந்தவர்கள் மெல்ல பேச்சை ஆரம்பித்தனர். “மகிம்மா வந்து நம்ம டாக்டர் சார் வீட்ல அவங்க அம்மா உன்னுடைய சம்மதத்தை கேட்க சொன்னாங்க”

” எந்த டாக்டர்? என்ன சம்மதம்?” அறியாதவளாக கண்களை சிமிட்டினாள்.

 சுகவனம் முகம் ஒளியிழந்து போக, சௌபாக்கியம் கொஞ்சம் கோபத்துடன் மகளிடம் வந்தாள். “நேற்று சொன்னோமே நினைவில் இல்லையா? நம்ம பக்கத்து வீட்டு டாக்டரை உனக்கு திருமணம் பேச கேட்டிருக்கிறார்கள் என்று சொன்னோமே”

” ஓ அந்த டாக்டரா? நானும் அவரிடம் முதலில் சம்மதம் கேட்கச் சொன்னேனே” தாயைப் போலவே இழுத்தாள் மகதி.

” இதென்னடி முதலில் உனக்கு பிடித்திருக்கிறதா சொல்லு… அப்படின்னு பொண்ணு வீட்டுக்காரங்க முந்திகிட்டு நின்னா நல்லாவா இருக்கும்?” சௌபாக்கியம் ஆட்சேபித்தாள்.

” எல்லாம் நல்லாத்தான் இருக்கும்.

ஒரு மாறுதலுக்கு கேட்டுத்தான் பாருங்களேன்” பிடிவாதமான குரலில் சொல்லிவிட்டு,மாடியேறினாள்.




“என்னங்க இது?” சௌபாக்கியம் கவலையாக கேட்க, “ம் அவள் எதிர்பார்ப்பதிலும் தவறில்லை பாக்யா,மாப்பிள்ளை வீட்டினர் பக்கம் கொஞ்சம் மைனஸ் இருக்கும் போது அவர்களும் இறங்கி் வருவதில் தவறில்லையே”

“அப்படி மைனஸ் இருக்கும் பையனை நம் பெண்ணுக்கு ஏன் பார்க்க வேண்டும்?” சௌபாக்கியம் தொடங்க..

“ஐய்யய்ய்யோ பாக்கி நீ திரும்ப முதலிலிருந்து ஆரம்பிக்காதே…ஒரு வாரத்திற்கு பேச்சை தள்ளிப் போடலாம்” என்று முடித்தார் சுகவனம்.

“சுப்பக்காவுக்கு நான்தான் பதில் சொல்லனும்” முணங்கினாள் சௌபாக்யம்.

இரு வீட்டினரும் பக்கம் பக்கமாக இருந்தாலும்,திருமண விசயமென்று வரும் போது நேரடியாக பேசத் தயங்கி,மீனாட்சியின் தூரத்து சொந்தமான சுப்புலட்சுமி மூலமாகத்தான் பேசிக் கொண்டிருந்தனர். “பாக்கியம்” சத்தமாக அழைத்தபடி வீட்டிற்குள் நுழைந்த சுப்புலட்சுமியை தயக்கத்தோடு வரவேற்றாள் சௌபாக்கியம்.

” என்ன உன் பொண்ணு என்ன சொல்லுறா?” வெற்றிலை காம்பை கிள்ளி சுண்ணாம்பு தடவி வாயில் அடைத்துக் கொண்டாள் சுப்புலட்சுமி.

” அது…வந்துக்கா இவருக்கு தெரிஞ்ச சோசியக்காரங்க கிணத்துக்கடவு பக்கம் இருக்குறாங்க/ அவங்க கிட்டயும் ஒரு தடவை ஜாதகத்தை காட்டிடலாம்னு நினைக்கிறோம்”

” ஆஹாம்…” வெற்றிலையை மென்றபடி தனது சிறிய கண்களால் சௌபாக்கியத்தை அளந்தாள் சுப்புலட்சுமி. 

“காப்பி போடுறேன் குடிக்கிறீர்களா அக்கா?”

” இப்பதான வெத்தலைய வாயில போட்டேன். சரி வாரேன், நீங்களே பேசிட்டு சொல்லி விடுங்க” கிளம்பிய சுப்புலட்சுமி நேராக போன இடம் குணாளனின் வீடு.

” மதியம் சாப்பிட்டுட்டு அம்மா கொஞ்ச நேரம் கண்ணசர்வார்களே, இப்போ அவுக கிட்ட பேச முடியாதே” வீட்டு வேலை பார்க்கும் முத்தாச்சி சொல்ல,

” ஏட்டி எனக்கு தெரியும்ல,நான் இந்த திண்ணையில் செத்த நேரம் உட்கார்ந்திருந்து அக்காவை பார்த்துட்டு போயிடுறேன்” சுப்புலட்சுமி திண்ணையில் அமர்ந்து கொண்டாள்.

 சிறிது நேரத்திலேயே தடதடவென்று சத்தத்துடன் குணாளன் பைக்கில் வந்து நின்றான்.”என்ன சின்னம்மா இந்த நேரத்தில்? அம்மா தூங்குற நேரமாச்சே?” என்றபடி உள்ளே நடந்தவனின் பின்னால் போன சுப்புலட்சுமி குரலை வெகுவாக குறைத்தாள்.

“பக்கத்து வூட்டிலிருந்து வந்தேன் ராசா.அங்கன எதுவும் சரியில்ல, உடனே அம்மா கிட்ட சொல்லணும்னு தோணுச்சு. யோசிக்காம வந்துட்டேன். இப்பவும் அம்மாகிட்ட சொல்ல வாய் வரல,நீ கேட்டுக்கோ ராசா. அந்த பொண்ணு இருக்குல்ல… அதுதான் அந்த மகதி பொண்ணு, மொதல்ல பொண்ணு வீட்லதான் சம்மதம் சொல்லனுமா ஏன் மாப்பிள்ளை சொல்ல மாட்டாங்களா? அவுகளையே சொல்ல சொல்லுங்கன்னு பேசிட்டு இருந்தது என் காதுல விழுந்துச்சு. நான் போய் கேட்டா சாதகம் பார்க்கணும் அது இதுன்னு தள்ளி விடுறா அவ அம்மாக்காரி. மீனாட்சியக்கா இந்த சம்பந்தத்தை ரொம்ப எதிர்பார்த்துட்டு இருக்காங்க. இதெல்லாம் தெரிஞ்சா மனசொடஞ்சிடுவாக,என்ன செய்யன்னு தெரியாம இங்கன உட்கார்ந்து ஓசிச்சிக்கிட்டு கிடந்தேன். நல்ல வேளை ராசா நீங்களே வந்துட்டீக. பார்த்து பக்குவமா இந்த விஷயத்த அம்மாட்ட பேசுங்க. நான் வாரேன்”

 சுப்புலட்சுமி போய்விட, கூடத்து சோபாவில் யோசித்தபடி அமர்ந்து விட்டான் குணாளன்.




What’s your Reaction?
+1
35
+1
21
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!