Serial Stories

வா எந்தன் வண்ண நிலவே-8

      8

அவளுடைய அறைதான் .விவரம் தெரிந்தது முதல் அவளுக்கே அவளுக்கென அவள் பயன்படுத்திய அறைதான் .இன்று முற்றிலும் புதிதாக தெரிந்தது . மல்லியும் முல்லையும் ரோஜாவும் கூட்டி அள்ளினால் ஒரு லாரியை நிரப்பலாம் .

அவள் தந்தை செய்த வேலை இது .அவ்வளவு பூக்களுக்கு ஆர்டர் கொடுத்து அறையை அலங்கரிக்க ஆட்களும் ஏற்பாடு செய்து மனம் நெகிழ்ந்தது எழில்நிலாவுக்கு .

மகள் வாழ்வாங்கு வாழ போகிறாள் என்றல்லவா இத்தனை ஏற்பாடுகள் . மகளின் வாழ்வு காற்றில் படபடக்கும் கற்பூரமென துடித்து கொண்டிருப்பது தெரிந்தால் தாங்குவாரா ?மனதிற்குள்ளாக எண்ணி மருகி கொண்டிருந்தாள் எழில்நிலா.

திருமணத்திற்கு மறுதினம் சம்பந்தி சாப்பாடு எனும் கறிச்சாப்பாடு அவர்களில் வழமை .அதற்காக அவர்கள் திருமணம் நடந்த மண்டபத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

 இரவுக்காக எழில்நிலாவை அலங்கரித்த உறவினப்பெண்கள் , கேலி கிண்டல்களை அறை முழுவதும் சிதற விட்டு விடை பெற்றனர். அனைவரும் இரவு தங்க திருமண  மண்டபம் சென்று விட எழில்நிலா வீட்டில் யாருமற்ற தனிமை வாய்த்தது புது மண தம்பதிகளுக்கு . 

கூடத்து சோபா நுனியில் அமர்ந்தபடி நகம் கடித்துக்கொண்டிருந்தாள் எழில்நிலா .பட்டு வேட்டி சட்டையில் வாசல் நிலையில் சாய்ந்து நின்று அவளை உறுத்துக்கொண்டிருந்தான் நித்யவாணன். 

நீ வருகிறாயா? நான் வரவா? என்ற அவன் பார்வை கேள்வியை தலை நிமிர்ந்தால் அல்லவோ அவள் அறிவாள்? ஏதோ தவறாக நடக்கப்போவதாக எண்ணி தரையின் கார்பெட்டை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.லேசாக தொண்டையை செருமியவன், “நிலா…”என அழைத்தபடி அவள் அருகில் சோபாவில் அமர்ந்தான் .

அவன் வாச மூச்சை அருகில் உணர்ந்ததும் சட்டென்று எழுந்தவள் “எனக்கு தூக்கம் வருது ….தூங்க போகிறேன் “என்று விட்டு அவன் எதுவும் சொல்லும் முன்பே படுக்கையறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள்.

” நிலா…” வெளியே அவன் அழைக்கும் குரலுக்கு காதுகளை மூடிக் கொண்டாள்.ஏற்கெனவே இனிப்புக்குள் உருகும் வெண்ணெயாய் அவனுள் கரைய துடித்து கொண்டிருந்த எழில்நிலாவின் உணர்வுகளை சர்வ அலங்காரத்துடன் இருந்த அந்த சாந்தி முகூர்த்த அறை மிகவும் சோதித்தது .

மனதுக்குள்ளேயே குமுறியபடி இரவு முழுவதும் தூங்காமல் விசித்தபடியே இருந்தாள் .ஏதோ பேச வந்தானே ,என்னவென்று கேட்டிருக்கலாமோ என ஒரே ஒரு நிமிடம் நினைத்தவள் மனதில் அன்று அவன் பேசிய வார்த்தைகள் ஓடியது ஒளி ஒலியுடன் .

 “சீச்சீ …இந்த கறுத்த குட்டி இங்க இருக்கிற வரை பொழுதை போக்க மட்டும்தான்டா .என் ஊரில் எனக்காக என் வெள்ளை தேவதை காத்துக்கொண்டிருக்கிறாள் ” மறக்க முடிந்த வார்த்தைகளா அவை? காதில் கேட்ட கணம் முதல் அவள் உடலின் ரத்தத்தில் பதட்டங்களை பரப்பியபடி தானும் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கிற வார்த்தைகள் . 

பொதுவாகவே எழில்நிலாவுக்கு தான் கறுப்பு என்ற தாழ்வு மனப்பான்மை அதிகம் உண்டு .நிறத்தில் அவள் தந்தையை கொண்டிருந்தாள் .என் பொண்ணு என்னை மாதிரி என அடிக்கடி கூறுவதில் எழில்நிலாவின் தந்தைக்கு மிக பெருமை . 

அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எழில் கொஞ்சம் கறுப்பு ,எழில் நிறத்துக்கு இந்த கலர் சூட் ஆகாது ,என்பது போன்ற உறவினர்களின் பேச்சுக்கள் எழில்நிலா காதை எட்டினாலும் கருத்துக்குள் புகும் முன்பே அவற்றின் கூர் உடைக்க பட்டுவிடும் அவள் பெற்றோரால் 

தனது நிறத்தை எழில்நிலா உணராமலேயே வளர்த்து வந்தனர் அவள் பெற்றோர் . பள்ளியில் பத்தாவது படிக்கும்போது உடன் பயின்ற மாணவிகளுள் நடந்த சிறு உரசலில் அவள் நிறம் பழிக்கப்பட்டது . 




கருவாச்சி.. ,காக்கா.. ,என அவள் செல்வ நிலை கண்டு பொறாமை கொண்ட கூட்டம் ஒன்று மறைமுகம் போல் அவள் காது பட விமர்சித்தது .

 எழில்நிலா மிகவும் மதிக்கும் மியூசிக் டீச்சர் ஒரு போட்டியில் அவள் பாடி பரிசு வாங்கியதும் ,சந்தோச மிகுதியில் அவளை அணைத்தபடி “அப்படியே நீ குயில்தான் எழில் ,நிறத்திலும் குரலிலும்…” என தன்போக்கில் தீ மூட்டி சென்றார் . 

“இவளுக்கெல்லாம் யாருடி எழில்நிலான்னு பேர் வச்சது .எழிலும் இல்லை நிலவும் இல்லை இவகிட்ட” என எழில்நிலா நெஞ்சில் எரிந்து கொண்டிருந்த நெருப்புக்கு சுள்ளிகளை பொறுக்கி போட்டது வம்பர் சபை. 

பள்ளி முடிந்து கல்லூரியில் வேறு தோழிகள் அமைந்து விட ,பழைய கசப்புகளை ஒருவாறு ஒதுக்க முனைந்து கொண்டிருந்தாள் எழில்நிலா . அதற்கும் வினை வந்தது ஒரு காதல் கடிதம் மூலம். 




இளமை கோளாறில் உடன் பயிலும் மாணவன் ஒருவன் எழில்நிலாவுக்கு எழுதிய காதல் கடிதத்தில் “என் கறுப்பு வானவில்லே! “என எழுதிவிட்டான் . இக்கடிதம் அவள் தோழி ஒருத்தி கையில் சிக்கிவிட சிறு வயது போல் நக்கல்கள் இல்லை .

ஆனால் அவள் நிறத்திற்கான வேர்கள் அடிக்கடி அவள் மனதில் ஊன்றப்பட்டது . அந்த ‘கறுப்பு வானவில்’ ஒரு முறை முறைத்ததும் வேறு வண்ணம் தேடி பறந்துவிட்டான் . இவற்றைவிட எழில்நிலா மனதை கறுப்பாக்கிய சம்பவம் ஒன்று அவள் வீட்டிலேயே நடந்தது .அதில்தான் அவள் மிகவும் மனம் நைந்து போனாள்.

ஏதேதோ யோசித்தபடியே தூங்கிப் போனாள் எழில்நிலா.

 குதிரை மீது வந்த வெள்ளை ராஜகுமாரனொருவன் சாலையில் நடந்து  கொண்டிருந்த அவளை இடை பற்றி தூக்கி தன் அருகாமையில் வைத்து கொண்டான் . “என் வானை ஒளிர்விக்க வந்த வண்ணநிலவு நீ” என கொஞ்சியபடி எழில்நிலாவை அணைத்தான் நித்யவாணன் . 

எப்போது அந்த அரசகுமரன் நித்யவாணன் ஆனான் என குழம்பியபடி , “வண்ணமா நான் ..?”கிளி மொழியில் மிழற்றிபடி அவன் தோள்களில் மாலையானாள் எழில்நிலா . “ஆம் வெளிறிப்போன என் வாழ்க்கையின் புத்துணர்வு வண்ணம் நீ” என பதிலளித்தபடி அவளுக்குள் புதைய தொடங்கினான் நித்யவாணன் . 

எங்கிருந்தோ ஒரு இனிய கானமொன்று ஒலிக்க தொடங்கியது . நேரம் செல்ல செல்ல கானத்தின் ஓசை கூட சட்டென விழிப்பு வந்தது  எழில்நிலாவுக்கு .

கனவா எல்லாம்? சொல்லொணா ஏக்கத்தில் நிறைந்தது உள்ளம் . அவள் போன்தான் ஒலித்துக் கொண்டிருந்தது . மஞ்சுளா இருவரும் கிளம்பி சீக்கிரம் மண்டபத்துக்கு வரும்படி பேசினாள் . 

குளித்து முடித்து அறைக்கதவை திறந்த எழில்நிலா திகைத்தாள் . ஹாலின் சோபாவிலேயே படுத்து எட்டாத கால்களை தொங்கவிட்டபடி தூங்கியிருந்தான் நித்யவாணன் .அவனது நிலை சங்கடத்தை தர அருகிலிருந்த டீப்பாயை இழுத்து அவன் கால்களுக்கடியில் வைக்க மெல்ல  கால்களை தொட்டு தூக்கினாள்.

 “உங்கள் வீட்டில் முதலிரவுக்கு மறுநாள்தான் காலில் விழுவீர்களோ…?” திடுமென கேட்ட அவன் குரலில் திடுக்கிட்டு நிமிர சிவந்த விழிகளுடன் அவளை பார்த்திருந்தான். சுறுசுறுவென்று கோபம் வந்தது எழில்நிலாவுக்கு . 

“உங்கள் வீட்டு பெண்கள் ஆண்களின் கால்களில் விழுந்து கொண்டே இருப்பார்களோ …?” என்றாள் வெடுக்கென்று. அவன் கால்களை பொத்தென டீப்பாயில் போட்டாள்.சை… இவன் காலை பிடித்து விட்டேனே…

“பெண்களை காலில் விழ வைக்கும் பத்தாம்பசலி குடும்பம் இல்லை என்னுடையது”  

“நாங்கள் மட்டும் காலைப்பிடிக்கும் பத்தாம்பசலிகளோ ?” 

 “ம்…காலருகே வரும் கைகள்  பிடிக்கிறதா? வாருகிறதா? என கடைசி விநாடி வரை தெரிவதில்லை”  

கண்கள் சிவந்தது எழில்நிலாவுக்கு ,”யாரை காலை வாருபவர்கள் என்கிறீர்கள் ?என் வீட்டாரையா ?”ஆத்திரத்தில் ஆரம்பித்தாலும் கேள்வியை முடிக்கும்போது குரல் கம்ம தொடங்கி விட்டது எழில்நிலாவுக்கு. 




ஒரு நொடி இதழ்களை அழுந்த மூடி தன்னை கட்டுப்படுத்தினான் நித்யவாணன் ,”நான் உன்னை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன்.உன் குடும்பத்தார்… ம் , அவர்கள் நல்லவர்களே “

அதென்ன அப்படி யோசித்து நல்லவர்கள் பட்டம்…துறுதுறுத்த வாயை எழில்நிலா திறக்க கையுயர்த்தி தடுத்தவன் “நீ சொல்லி உன் குடும்பத்தினரை உணர வேண்டிய நிலையில் நானில்லை “எனக்கூறி விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைத்தான் . 

 மீண்டும் மஞ்சுளாவிடமிருந்து போன்,கிளம்பிவிட்டார்களா எனக்கேட்டு.வந்துவிடுவதாக அன்னையிடம் கூறிவிட்டு ,”கட்டிலில் வசதியாக படுத்திருக்கலாமே “என்றாள் எழில்நிலா .

 “எந்த கட்டிலில் ?”என்றபடி அவளை கூர்ந்தான் நித்யவாணன் . திணறினாள்.

இது அவளுடைய வீடு .அவர்களுக்காக இரவில் ஒதுக்கிய அறைக்குள் அவள் சென்று கதவடைத்து கொண்டாள் .அவள் காட்டாமல் வேறொரு அறைக்கோ இல்லை கட்டிலுக்கோ எப்படி செல்வான் ?  

தன் தலையில் தானே கொட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது எழில்நிலாவுக்கு . “செய்த தப்புக்கு, தானே தண்டனை கொடுத்து கொள்ளலாம் .அதிலொன்றும் தவறில்லை “என்றவனின் முகத்தில் உற்சாகம் மீண்டிருந்தது.

“சாரி” என முணுமுணுத்து அவனை ஏறிட்டாள். விரிந்த அவ்விழிகளை பார்த்ததும் நித்யவாணனின் பார்வை மாறியது . ஆட்காட்டி விரலால் அவள் தாடையை தொட்டு முகத்தை உயர்த்தியவன்   “எப்படி மன்னிக்க …ம் ..”என  குரல் குழைய கேட்க , அளவற்ற மின்சக்தி வாங்கி எரியத்தொடங்கினாள் எழில்நிலா. 

சொக்கி விட்ட அவள் கண்களை பார்த்தபடி கன்னங்கள்  பற்றி அவள் முகம் நோக்கி நித்யவாணன் குனிய, புல்லாங்குழலின் நாதம் ஒன்று இருவரிடையே நுழைந்தது . இப்போது நித்யவாணனின் போன் .

 சந்திராவதி விரைவில் கிளம்பி வரும்படி கூற ,தாக்குண்ட மின்சாரத்தால் சிலை போல் நின்ற எழில்நிலா தோள்களை மென்மையாக பற்றி உலுக்கிய நித்யவாணன் “நாம் விரைவில் கிளம்ப வேண்டும்”என்றான் .

 சுயநினைவிற்கு வந்த எழில்நிலா அவனுக்கு குளியலறையையும் மற்ற விபரங்களையும் தெரிவித்து விட்டு ஒரு காபி கலக்கலாமென அடுப்படிக்குள் நுழைந்தாள் . காபி மேக்கருக்குள் போட்ட தூளை சுடுநீர் கரைப்பது போல் அவள் கரைந்து கொண்டிருந்தாள் நித்யவாணனால் . அன்று அவ்வளவு அலட்சியமாக பேசியவன் இன்று எப்படி …இப்படி …ஆசையாக ….புரிந்து கொள்ள முடியவில்லை அவளால் . 

நித்யவாணனுக்கு காபியும் தனக்கு டீயும் கலந்து கொண்டு திரும்பிய போது ,குளித்து முடித்து அவள் பாதையை மறித்தபடி வந்து நின்றான் நித்யவாணன் .அவளை நோக்கி கையை நீட்டினான்.வாயேன் என்ற ஏக்கத்துடனோ…அணைத்துக் கொள்வோம் என்ற தாபத்துடனோ இருந்தது அந்தக் கரம் நீட்டல்.

நீண்ட கையில் காபி கப்பை வைத்தவள் , தனது டீயை எடுத்து கொண்டாள் . “இதையா கேட்டேன் ?” சிறு அதிருப்தியுடன் காபியை வாங்கினான் . ம்ம்…சாக்லேட் வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைமையை அவன் மூக்கு சுருங்கலில் உணர்ந்தவளுள் புன்னகை. 

“பின்னே ..?”கேலிக் கேள்வியுடன் நித்யவாணனை நிமிர்ந்து பார்த்தாள். பதில் சொல்லாது மேலும் அவளை நெருங்கி நின்று காபியை பருகத்தொடங்கினான் .இந்த நெருக்கத்தில் கையிலிருக்கும் டீயை விழுங்க முடியாமல் தவித்து போனாள் எழில்நிலா .

பின்னால் நகரவும் மனமின்றி ,கன்னம் சுடும் மூச்சுக்காற்றை தள்ளவும் மனமின்றி சில நிமிடங்கள் தவித்தவள் இறுதியில் அவன் நாசி காற்றின் சுடுமூச்சையே தானும் சுவாசிக்க தொடங்கினாள் .

 காபியை முழுவதும் குடித்து முடித்தவன்  பாதி கப் டீயை கையிலேயே வைத்துக்கொண்டு விழித்துக்கொண்டிருக்கும் அவளை பார்த்து புன்னகைத்தபடி தனது காலி கப்பையும் அவள் கை டீயையும் வாங்கி மெல்ல அவள் மேல் சரிந்தபடி பின்னாலிருந்த மேடையில் வைத்தான் .

கப்பை வைத்த வலது கையால் அவளை மென்மையாக அணைத்தவன் இடது கையால் அவள் முகம் நிமிர்த்தி குனிந்தான் . மீண்டும் எழில்நிலாவை நித்யவாணன் விடுவித்த போது அவள் வாயில் பில்டர் காபி மணத்தது . சிவந்த கன்னங்களும் ,கனவு மிதக்கும் கண்களுமாக வெளியே கிளம்பியது அந்த இளம்ஜோடி .




What’s your Reaction?
+1
36
+1
18
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!