Serial Stories வா எந்தன் வண்ணநிலவே…

வா எந்தன் வண்ணநிலவே-14

14

எழில்நிலாவிற்கு அழுகை வரவில்லை. கண்கள் கூட கலங்கவில்லை. ஒரு மாதிரி வெறித்த பார்வையுடன் தன்னை பார்த்தவளை கண்டதும் நித்யவாணனின் வேகம் குறைந்தது. உலுக்கலை நிறுத்தி அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன் மென்மையாய் தலை வருடினான்”என்னடா ஏன் இந்த குழப்பம்?” என்றான் சமாதானமாக.

 அவன் மார்பில் சாய்ந்து இருந்தாலும் எழில்நிலாவின் வாய் தன்னிச்சையாக புலம்பியது. “எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்.என்னால் இப்படி வாழ முடியாது” 

மீண்டும் மீண்டும் அவள் இதையே சொல்லிக் கொண்டிருக்க, தன்னிடமிருந்து அவளை விலக்கியவன் கட்டிலில் படுக்க வைத்தான்.”நீ தூங்கு. நான் கொஞ்ச நேரம் காற்றாட வெளியே நின்று விட்டு வருகிறேன்” அறையை விட்டு வெளியேறினான்.

நித்யவாணனை சந்தித்த நாளிலிருந்து கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மேலாக மனதில் ஒருவித தவிப்புடனேயே தூக்கமின்றி இருந்தவள், இன்றென்னவோ நிம்மதியாக உறங்கத் துவங்கினாள்.

 மறுநாள் காலை கண் விழித்த போது ஏதோ ஒரு வகை நிம்மதி எழில்நிலாவிற்கு வந்திருந்தது. நித்யவாணன் அவள் உணர்வுகளை மதித்து விலகிச் சென்றதில் திருப்தியாக உணர்ந்தாள். அவனுடன் அமர்ந்து பேசி தெளிவுபடுத்திக் கொண்டு படிப்படியாக தன் வாழ்வை சீரமைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவளுள் வந்திருந்தது.எனவே உற்சாகத்துடன் எழுந்து குளித்து முடித்து கீழே வந்தாள். 

“அப்படி என்ன வேலை? ஒரு வாரத்திற்காவது அவனை நீங்கள் ஃப்ரீயாக விட்டிருக்கலாமே?” சந்திராவதி தெய்வசிகாமணியிடம் குறைபட்டுக் கொண்டிருந்தாள்.

 யாரைப் பற்றி, என்ன பேசுகிறார்கள், யோசித்தபடியே “என்ன விஷயம் அத்தை?” இயல்பாக கேட்டபடி சோபாவில் அமர்ந்தாள்.

 சந்திராவதி அவளை கொஞ்சம் கோபமாக பார்த்தாள் “இரவோடு இரவாக உன் புருஷன் வேலை என்று கிளம்பி சென்னை போயிருக்கிறான். அது கூட தெரியாதா உனக்கு? அப்படி என்ன தூக்கம்? உன்னிடம் ஒன்றும் சொல்லவில்லையா?”.

 எழில்நிலா திடுக்கிட்டாள்.”எனக்கு தெரியாது அத்தை”அவள் குரல் கம்மியது.

 “பிரமாதம் போ,நீங்களெல்லாம் குடும்பம் நடத்தி… என்ன பிள்ளைகளோ!  இங்கே பாருங்க நாளைக்கு அவன் இங்கே வரவேண்டும், உங்கள் வேலைகளை எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளுங்கள்” மாமியார் பேசப் பேச எதுவும் மூளையில் பதியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

ஆனால் இந்த அதிர்ச்சியெல்லாம் சிறிது  நேரத்திற்குத்தான்.இங்கிருந்து போகச் சொல்லி நான்தானே கேட்டுக் கொண்டேன்.அவன் போயிருக்கிறான்.திரும்ப வரச் சொன்னால் வந்து விட்டு போகிறான்.எழில்நிலா இப்படித்தான் நினைத்தாள்.

உடனே நித்யவாணனுக்கு போனும் செய்தாள். அம்மா மிகவும் தேடுவதாகவும் வர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாள்.நித்யவாணன் பதிலின்றி அமைதியாக இருக்க அவளை மெலிதான பதட்டம் பற்றிக் கொண்டது. 

“நீ போ என்றால் போவதற்கும் வா என்றால் வருவதற்கும் உன் கை பொம்மையாடி நான்?” அவன் குரலின் ரௌத்திரத்தில் வாயடைத்துப் போனாள்.

” எனக்கு அங்கே வர பிடிக்கவில்லை. உன் மூஞ்சியை பார்க்க பிடிக்கவில்லை .வைடி போனை” கட் செய்து விட்டான்.

 எழில்நிலா அதிர்ந்து அமர்ந்து விட்டாள். எவ்வளவு கோபம்… வேகம்… என்னை பார்க்கவே பிடிக்கவில்லையாமே! இப்போதுதான் மனதில் இருப்பதை பேசுகிறான் போலும். முன்பொரு முறை அவன் பேச்சை கேட்டபோது அடைந்த அதே அளவு வேதனையை மீண்டும் அடைந்தாள்.

சந்திராவதி அவள் தோள் தொட்டு அசைக்கவுமே நிகழ்வுக்கு வந்தவள் மலங்க  விழித்தாள். “என்ன இப்படி உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்?” என்றவள் எழில்நிலாவின் கையில் இருந்த போனை பார்த்துவிட்டு “அம்மாவிடம் பேசினாயா? அவர்கள் நினைப்பாக இருக்கிறதா?” கொஞ்சம் கனிவாக கேட்டாள்.




 சட்டென ஆமாம் என தலையாட்டியவள் “நான் கொஞ்ச நேரம் மாடியில் இருக்கிறேன் அத்தை” என்று விட்டு தங்கள் அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்தாள். மனம் வலிக்க வலிக்க நித்யவாணனை சந்தித்த முதல் நாளிலிருந்து முந்தைய நாள் இரவு வரை மனதிற்குள் ஒட்டிப் பார்த்து கண் கலங்கினாள்.

” ரொம்பவும் செல்லமாக கண்ணுக்குள் வைத்து வளர்த்திருப்பார்கள் போலும். எழில் அவர்கள் அம்மா அப்பாவை பிரிந்ததில் ரொம்பவே சோர்வடைந்து தெரிகிறாள்” கணவரிடம் சந்திராவதி சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட பின்பே எழில்நிலாவிற்கு அவளுடைய தாய் தந்தை ஞாபகமே வந்தது.

 உள்ளத்தில் ஒருவித சோர்வுடன் அம்மாவிடமாவது பேசலாம் என்று போனை எடுத்தாள். அப்பொழுது போனில் மெசேஜாக இன்ஸ்டாகிராம் வீடியோ வந்தது. மானசிதான் அதனை அவளுக்கு பார்வர்ட் செய்திருந்தாள்.

 அதில் நித்யவாணன் இருந்தான். சுற்றிலும் நான்கைந்து பெண்கள் இருக்க அவர்களுடன் சிரிக்க சிரிக்க பேசியபடி இருந்தான் வீடியோ முதல் நாள்தான் எடுக்கப்பட்டிருந்தது. அந்த வீடியோவை வெறுப்புடன் பார்த்திருந்தாள் எழில்நிலா.

 இப்படி எல்லாம் அங்கே மனம் போனபடி இருப்பதற்காக தானே என்னை இங்கே தள்ளிவிட்டு போயிருக்கிறான்! அவள் கண்கள் பனித்தது. பெண்களை ஏறெடுத்து பார்க்காத உத்தமன் என்ற அவளுடைய அன்றைய எண்ணத்திற்கு அப்போதே மானசி வெடி வைத்து தகர்த்திருந்தாள். அவனுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்து காட்டினாள். அதில் நித்யவாணன் அவனுடைய விதம் விதமான போட்டோக்களை அப்லோட் செய்திருந்தான்.நிறைய போட்டோக்களில் யார் யாரோ பெண்களுடன் இருந்தான்.

” அவன் அப்படி ஒன்றும் நல்லவன் கிடையாது. அவனுடைய கொள்கை பெண்களைத் தேடி அவன் போக மாட்டான். இதோ இப்படி பெண்களை தன் பக்கம் இழுக்க நிறைய வேலைகள் செய்வான். அவனுடைய பாலோயர்ஸில் 90% பெண்கள் தான். கீழே கமெண்ட் செக்ஷனை பார்” மானசி சுட்டிக்காட்ட ஒரு நடிகனுக்கு இணையாக கமெண்ட்ஸில் அவன் அழகை புகழ்ந்து தள்ளிய புலம்பல்கள்.

 அநேகமாக எல்லாமே பெண்கள்தான். மனம் தடுமாற நின்ற எழில்நிலாவின் தோள் தட்டிய மானசி “நீ கூட இவனை ஃபாலோ பண்ணிக்கிறியா அக்கா?” என்றாள். மனதில் பாரத்தோடு மறுத்திருந்தாள் எழில்நிலா.

 பிறகு அவனுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு செல்வதையே தவிர்த்திருந்தாள்.இதைப் பற்றியெல்லாம் அப்போதே அவனிடம் கேட்க நினைப்பாள்.ஆனால் புன்னகை சிந்தும் முகத்துடன் அவளை சந்திக்க அவன் நெருங்கி வருவதை பார்க்கும் போதே எல்லாமே மறந்து விடும். இந்த உலகில் இப்போது நாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்ற உணர்வுடன் கனிவு வழியும் கண்களோடு அவனை பார்ப்பாள்.அவனும் ஈடான பதில் பார்வை பார்க்க,இருவரும் சுற்றுப்புறம் மறந்து தங்களிலேயே மூழ்கிப் போவார்கள்.

இப்போது மானசி வம்படியாக அவனை நினைவறுத்தியது போல் தோன்றியது. வீடியோவை அவள் பார்த்த அடுத்த நிமிடமே மானசியிடமிருந்து ஒரு மெசேஜ்.”என்னக்கா கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்குள் உன் ஹீரோ உன்னுடன் இல்லை போலவே?”

 எழில்நிலா இதற்கு பதில் சொல்லாமல் விட அடுத்த நிமிடமே மானசியிடமிருந்து போன்.இதயம் படபடக்க எடுக்காமல் விட்டாள். “எப்போதும் உண்மையை எதிர்கொள்ள பயந்து போய் இருக்காதே அக்கா” என்று மற்றொரு மெசேஜ் அனுப்பினாள்.

 எரிச்சலுடன் போனை தூக்கி பெட்டில் எறிந்து விட்டு சுருண்டு படுத்துக்கொண்டாள். அவள் மனதில் நிறைய போராட்டங்கள்.




“எப்போதும் போனை கையில் வைத்துக் கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது, அல்லது வீட்டை விட்டு வெளியே போய் சுற்றிக் கொண்டிருப்பது. என்னதான் பழக்கங்களோ?” சந்திராவதியின் புலம்பல் காதில் கேட்டாலும் அதனை கண்டு கொள்ளாமல் வீட்டைச் சுற்றி இருந்த தோட்டத்திற்கு நடந்தாள் எழில்நிலா.

 தெய்வசிகாமணி சந்திராவதியை ஏதோ சொல்லி சமாதானப்படுத்துவது அரைகுறையாக காதில் விழுந்தது. எழில்நிலாவின் பெரும்பான்மையான பொழுதுகள் வீட்டைச் சுற்றி இருந்த தோட்டத்திலேயே கழிந்தது. ஒருவகையில் அந்த இயற்கை அவள் மனப்புழக்கத்தை கொஞ்சம் குறைக்கவே செய்தது. 

இதில் சந்திராவதிக்கு மிகுந்த மனக்குறைதான். வீட்டிற்கு வந்த மருமகள் வீட்டு வேலைகள் பொறுப்புகள் என்று எதையும் ஏற்றுக் கொள்ளாமல் இப்படி விட்டேதியாக இருந்தால் எப்படி என கணவரிடம் குறைபட்டுக் கொண்டாள். சின்னப் பெண் தானே போக போக சரியாகி விடுவாள் என்று சமாதானம் சொன்னார் தெய்வசிகாமணி.

” சீக்கிரமாக நித்யாவை இங்கே வரச் சொல்லுங்கள்” மாமியார் சொல்வதை கேட்டபடி வேகமாக தோட்டத்திற்குள் புகுந்து கொண்டாள் எழில்நிலா.

 நீங்கள் எவ்வளவுதான் கத்தினாலும் உங்கள் மகன் இந்தப் பக்கம் வரப்போவதில்லை, என்னை திருமணம் செய்து கொண்டதுமே அவனுடைய லட்சியம் நிறைவேறிவிட்டது. இனி இங்கே அவனுக்கு வேலை இல்லை. மனதிற்குள் புலம்பியபடி வீட்டைச் சுற்றி நடக்கலானாள்.

 அவளுக்கென ஒரு காரோடு டிரைவரையும் இங்கே நிறுத்தி இருந்தார் பரமேஸ்வரன். நினைத்தால் கொடைக்கானல் முழுதும் அவளுடைய காரிலேயே சுற்றலாம்தான். ஆனால் முன்பு நித்யவாணனுடன் சென்ற இடங்களுக்கு இப்போது தனியாக செல்வதில் அவளுக்கு விருப்பமில்லை.

 கால் ஓயும் மட்டும் வெளியிலேயே சுற்றியவள் இருள் தொடங்கும் நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தாள். ஹாலில் இருந்த லேண்ட்லைன் ஃபோன் ஒலித்துக் கொண்டிருந்தது. போனை எடுத்து “ஹலோ யார் பேசுவது?” என்றாள்.

 “நித்யன். நீங்க யார் பேசுவது ?”எதிர்முனையில் அதட்டினான் நித்யவாணன். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு அவனது குரலை கேட்டதும் மனம் நெகிழ்ந்தது. அவனை பற்றிய குறைபாடுகளை நினைத்து வெறுப்பை வளர்த்துக் கொண்டிருந்தவள் அவனுடைய குரலிலேயே எல்லாவற்றையும் மறந்தாள்.

” ஹலோ காது கேட்கவில்லையா? இல்லை வாய் ஊமையா? யார் அது?” நித்யவாணன் குத்தலாய் தொடர,எழில்நிலாவின் தொண்டை வறண்டது. என் குரலைக் கூட இவனால் அடையாளம் தெரிந்து கொள்ள முடியவில்லையே…




What’s your Reaction?
+1
33
+1
17
+1
1
+1
1
+1
1
+1
0
+1
6
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!