Serial Stories வா எந்தன் வண்ணநிலவே…

வா எந்தன் வண்ணநிலவே-15

15

“ஹலோ யார் பேசுவது? புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறீர்களா? போய் அப்பாவை கூப்பிடுங்கள்” நித்யவாணன் அதட்ட நைந்த மனதுடன் ரிசீவரை கீழே வைத்தவள், மாமனாரிடம் விசயத்தை சொல்லி விட்டு கரகரத்த தொண்டையுடன் மாடியறைக்குள் நுழைந்து கொண்டாள்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு வாரம் பார்த்து பேசி பழகினீர்கள், பிறகு திருமணம் முடிந்த நான்கு தினங்கள் ஓரிரு வார்த்தைகள் பேசி இருக்கிறீர்கள் அவ்வளவுதானே! இதற்குள் போனிலேயே உன்னுடைய குரலை எப்படி இனம் காண முடியும்? எழில்நிலாவின் மனம் அவளை சமாதானப்படுத்த முயன்றது.ஆனால் எனக்கு அவனது குரல் ரத்த நாளங்களில் ஓடும் குருதி போல்  உள்ளோடுகிறதே தவித்தது எழில்நிலாவின் மனது. 

“வேண்டா வெறுப்புக்கு பிள்ளை பெற்றால் காண்டாமிருகம் தான் கிடைக்கும். அதற்கு சும்மாவே இருந்து விட்டு போய்விடலாமே” சந்திராவதி ஃபோனில் தன்னுடைய யாரோ தோழியிடம் எதற்காகவோ பேசி சிரித்துக்கொண்டிருக்க, எழில்நிலாவிற்கு முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது.

 இப்படி நினைத்து தானே நித்யவாணன் தன் பக்கமே வராமல் இருக்கிறான், ஆனால் எதற்காக திருமணம் செய்தான்? இதோ இந்த பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக… பேருக்கு சும்மா ஒரு மனைவி. இது என்ன வாழ்க்கை எனக்கு! அவனே விரும்பி வந்தாலும் திடமாக நின்று நானல்லவோ இந்த திருமணத்தை நிறுத்தி இருக்க வேண்டும்? ஏன் அவ்வளவு பலவீனமாக இருந்து விட்டேன்? தன்னையே நொந்தாள். 

எழில்நிலாவின் நாட்கள் தன்னிரக்கத்திலும் தவிப்பிலுமாக ஆமையின் நடையாக நகர்ந்தது. 

அன்று லேண்ட்லைன் போனில் மீண்டும் நித்யவாணன். “ஹலோ யார் பேசுவது?” என்ற அவனது அதட்டல் குரல் வெகுவாக அவளை சீண்ட, தலைநிமிர்த்தி தெளிவாக பதில் அளித்தாள்.” மிஸஸ் நித்யவாணன் பேசுகிறேன்” 

எதிர்முனை ஒரு நிமிடம் சலனம் இன்றி இருந்தது. பிறகு “நீயா? அப்பாவிடம் போனை கொடு” மிக அலட்சியமாக குரல் கொடுத்தவன், “அப்பாவுடைய போன் சிம்மை மாற்ற வேண்டும் சிக்னலே கிடைக்க மாட்டேன் என்கிறது, யார் யாருடனோ பேச வேண்டியதிருக்கிறது” என முணுமுணுத்தான்.அவளுக்கு கேட்க வேண்டுமென்றே தெளிவாக பேசப்பட்ட முணுமுணுப்பு.

எழில்நிலா ” போடா…டேய்” ஆத்திரத்துடன் கத்தி விட்டு ரிசீவரை தாங்கியில் வைத்து போனை கட் செய்தாள். உடனடியாக சென்னைக்கு போய் அவன் சட்டையை பிடித்து நான்கு அறை கன்னத்தில் வைக்க வேண்டும் போல் வேகம் வந்தது.

 போடா நீயெல்லாம் ஒரு ஆள் இல்லை எனக்கு தலையை நிமிர்த்தி கொண்டாள். அவள் மனதிற்குள் ஒரு உறுதி தோன்றியது.அவன் எப்படியோ எனது காதல் உண்மையானது.அதனால்தான் கடவுள் எங்கள் இருவரையும் திருமணத்தில்  சேர்த்து வைத்திருக்கிறார்.இனி இந்த வாழ்வை எனக்கேற்றாற் போல் மாற்றிக் கொள்வது என் புத்திசாலித்தனம்.

இந்த முடிவெடுத்த பிறகு எழில்நிலாவின் மனபாரம் வெகுவாக குறைந்தது. அன்று இரவு இன்ஸ்டாக்ராமில் நித்யவாணனை பாலோ செய்தாள்.அடுத்த பத்தாவது நிமிடம் காபி ஷாப்பில் காபி குடிக்கும் போட்டோ ஒன்றை அப்லோட் செய்தான் நித்யவாணன்.உடன் லைக்குகளுக் கமெண்டுகளும் குவியத் தொடங்கின.

வாழ்த்துக்கள், பிரமிப்புகள்,உண்மையான ரசனையோடான கமெண்டுகள், சில மனதின் வக்கிரத்தை வெளிப்படுத்துபவை என எல்லா வகைகளும் பேசியது அவனது அழகான கவர்ச்சியான தோற்றத்தை மட்டுமே.ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்ட எழில்நிலா தானும் ஒரு கமெண்டை பதிந்தாள்.

‘புற அழகுகள் கண்களைத்தான் நிரப்பும்.மனதை அல்ல’

ஐந்து நிமிடங்கள் கழித்து அவளது கமெண்டுக்கு நான்கு லைக்குகள் விழுந்தன.ஆச்சரியப்படும் விதமாக அதில் ஒன்று நித்யவாணனுடையது.வந்திருந்த ஆயிரத்தி சொச்ச கமெண்டுகளில் ஒற்றைக் கூட அவன் விரும்பியிருக்கவில்லை.ஏனோ ஒரு திருப்தி வர அன்று இரவு நிம்மதியாக தூங்கினாள் எழில்நிலா. 

மறுநாள் அவனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய அவனது தொழில் சம்பந்தமான நிறைய வீடியோக்கள் அதில் இருந்தன. பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை அவன் இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கி இருந்தது  தெரிய வந்தது.பெண் பார்க்க வந்தபோது அஞ்சனாவிற்கு அவன் அழகு குறிப்புகள் சொன்னது நினைவு வந்தது.

 அதற்கு ஒரு வருடம் முன்பு ஆண்களுக்கான அலங்கார சாதன கம்பெனி தொடங்கியிருந்தான். அந்த கம்பெனி இன்ட்ரோவிற்கான விளம்பரப் பொருள் ஒன்றுடன் அவன் போட்டோவில் தோன்றிய போதுதான் அவனுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் புகழடைய தொடங்கி இருந்தது.

 தொடர்ந்து பெண்களுக்கான தொழில் தொடங்கிய போது மிக அதிக பெண் பாலோயர்ஸ் வர ஆரம்பித்திருந்தனர். இவனது இந்த தொழில் விவரங்கள் எல்லாம் எழில்நிலாவின் தாய் தந்தைக்கு தெரிந்திருக்கும். திருமண மாப்பிள்ளை பற்றிய விபரங்களை காதில் வாங்க கூடாது என்ற உறுதியுடன் இருந்தவளுக்கு இந்த விபரங்கள் தெரியாமல் போயிருக்கின்றன. 

கணவனாகி விட்டவனின் தொழில் விபரங்களை யாரோ போல் இப்போதுதான் சமூக வலைத்தளம் மூலம் தெரிந்து கொண்டிருந்த எழில்நிலாவிற்கு திடீரென்று அந்த பரபரப்பு தோன்றியது. அவசரமாக எல்லா பதிவுகளையும் ஸ்க்ரோல் செய்து பார்த்த பிறகும் எங்கேயும் இல்லை, தனது திருமண விபரத்தை அங்கே குறிப்பிடவே இல்லை. அதாவது அவனது பாலோயர்ஸ்களை பொறுத்த வரை இன்னமும் அவன் திருமணம் ஆகாத சிங்கிள்தான்.




 எழில்நிலாவின் மனது பிசைய தொடங்கியது.அவன் வாழ்வில் தனக்கு கொடுத்திருக்கும் இடத்தை நன்றாகவே புரிந்து கொண்டாள். அப்படி ஒரு சுதந்திர வாழ்வு உனக்கு கிடைக்க விடமாட்டேன்டா மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டாள். தொடர்ந்து அவனுடைய பதிவுகள் எல்லாவற்றிற்கும் எதிர்மறையான கமெண்ட்களை பதிய தொடங்கினாள். 

போனை கையில் வைத்துக் கொண்டு மாடி பால்கனியில் நடந்தபடியே இருந்தவள் தற்செயலாக வெளியே பார்த்த போது புருவம் சுருக்கினாள். காம்பவுண்ட் வாசலுக்கு வெளியே நின்றிருந்த காரை கவனித்தாள். அது சித்தப்பா சாருகேசிநின் காரேதான். சித்தி சித்தப்பா வந்திருக்கிறார்களா… ஒரு உற்சாகத்துடன் கீழே செல்ல போனவள் நின்று மீண்டும் காரைப் பார்க்க, காருக்குள் மானசி அமர்ந்திருப்பது தெரிந்தது.

 யோசனையுடன் கீழே இறங்கி வந்தவள் சோபாவில் அமர்ந்திருந்த சித்தி சித்தப்பாவை வரவேற்றாள்.மானசிக்கு அமெரிக்காவின் பெரிய பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்கு இடம் கிடைத்திருப்பதை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டனர் அவர்கள்.

“பரவாயில்லையே பள்ளி படிப்பை முடித்த உங்கள் பெண்ணை தைரியமாக அவ்வளவு தூரம் படிக்க அனுப்புகிறீர்களே!” சந்திராவதி பாராட்டுதலாக ஆச்சரியப்பட,

“அவள் ஆசைப்பட்டாள்.அனுப்பி வைக்கிறோம்.எதிர்காலத்திற்கு நல்லதுதானே!” பெருமையாக சொன்னாள் மைனாவதி.

“சித்தி,சித்தப்பா எப்போதும் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுத்து விடுவார்கள் அத்தை.என் அம்மாதான் கொஞ்சம்…இல்லை நிறையவே கண்டிப்பு” எழில்நிலா சிரித்தாள்.

“உன் வீட்டு ஆட்களை பார்த்த பிறகுதான் சிரிப்பே வருகிறது” மருமகளின் சிரித்த முகத்தை பார்த்தபடி குறைபாடு போல் சொன்னாலும் சந்திராவதியின் கை பாசமாக அவள் கன்னத்தை வருடியது.கண்டிப்பிற்கு பின்னாலுள்ள மாமியாரின் பாசத்தை உணர்ந்து கொண்டாள் எழில்நிலா.

 வீட்டுப் பெண்ணாக பொறுப்பாக சித்தி சித்தப்பாவை உபசரித்தாள். அவர்களை வழியனுப்பும் பொருட்டு உடன் நடந்து கார் வரை வந்தவளை மானசி எதிர்பார்க்கவில்லை.

“தலைவலி என்று காருக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டாள்மா” மைனாவதி சொல்ல “என்னடி தலைவலி?”கூர் பார்வையுடன் விசாரித்தாள்.

 மானசி காரை விட்டு இறங்கி சாலையோரம் பூத்திருந்த பூக்களை ரசிப்பது போல் சற்று ஒதுக்கமாக அவளை அழைத்துப் போனாள். மெலிதாய் விசும்பினாள். “உன்னுடைய கணவர்தான் அக்கா, என் வீட்டிற்குள் கால் எடுத்து வைத்தாயானால் காலை ஒடித்து விடுவேன் என்று என்னை மிரட்டி வைத்திருக்கிறார்”

 எழில்நிலாவிற்கு திகைப்புதான். ஆனாலும் “அந்த அளவு மிரட்ட என்ன காரணம் ?” துருவினாள்.

” உன்னிடம் அவரைப் பற்றி தப்பு தப்பாக சொல்லி விடுவேனாம். பிறகு அவருடைய திட்டங்கள் எல்லாம் பாழாகி விடுமாம்.ம்…என்னால் முடிந்த அளவு உன்னை எச்சரிக்க முயன்றேன். ஆனால் உன் விதி வேறாக இருக்கிறது.பாவம் நீ…” 

பெரிய பாறாங்கல் ஒன்றை எழில்நிலாவின் தலையில் தூக்கி வைத்து விட்டு மானசி போய்விட்டாள்.




What’s your Reaction?
+1
29
+1
25
+1
1
+1
1
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!