Serial Stories வா எந்தன் வண்ணநிலவே…

வா எந்தன் வண்ணநிலவே-16

16

                                      

அன்று இரவு நித்யவாணனிடம் இருந்து எழில்நிலாவிற்கு இன்ஸ்டாகிராமில் பிரைவேட் மெசேஜ் வந்திருந்தது. அவள் மறைமுகமாக அவனை தாக்கி கமண்டுகள் போட்டாள்தான். ஆனால் அதற்காக யார் என்று தெரியாத பெண்ணிற்கு தனி செய்தி அனுப்புவானா? இவன் இவ்வளவு தானா?

எழில்நிலா அவளது instagram அக்கவுண்டுக்கு நித்யநிலா என்ற பெயரை வைத்திருந்தாள். NN  என்ற ஆங்கில எழுத்துக்களையே முகப்பு படமாக வைத்திருந்தாள். நித்யவாணனை சந்தித்ததும் மாற்றிய பெயரும், படமும் இது. பிள்ளைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை மஞ்சுளா ஆதரிப்பதில்லை. எனவே தனது உண்மை பெயரையோ போட்டோவையோ எழில்நிலா எங்கும் பயன்படுத்துவதில்லை.

 இவன் இப்படித்தான் இங்கு எல்லா பெண்களிடமும் தனியாக பேசுவானா? எரிச்சலுடன் நித்யவாணன் அனுப்பிய செய்தியை திறந்தாள். திகைத்தாள். “என்ன மிஸஸ் நித்யவாணன் ஒரே தாக்குதலாக இருக்கிறது?’ என செய்தி அனுப்பியிருந்தான்.

 எப்படி என்னை தெரிந்து கொண்டான்? “என்னை தெரியுமா உங்களுக்கு?” இவளது கேள்விக்கு ” கொஞ்சம்..ஆனால் அந்த நித்யவாணனை நன்றாகவே தெரியும்”என பதில் அனுப்பினான்.

” யாரோ புதிதாக வேலைக்கு சேர்ந்தவள் என்றல்லவா நினைப்பீர்கள்?”

பதிலாக சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பினான். 

“எப்படி தெரிந்து கொண்டீர்கள்?”.

” உங்கள் பெயர் நித்ய நிலா, ப்ரோபைல் பிக்சர் NN, நேற்று அப்லோட் செய்த போட்டோ  நம்முடைய வீட்டு பக்கவாசல் ஓரம் பூத்திருக்கும் அடுக்கு செம்பருத்தி,கமெண்டுகளுக்கு  உபயோகித்திருக்கும் வார்த்தையாடல்கள், டைப் செய்யும் பாணி.இது போதாதா…?

எழில்நிலா அயர்ந்தாள்.இருவரும் வாட்ஸ்அப் மெசேஜில் நிறைய செய்திகளை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்தான்.ஆனாலும் அதனை வைத்தே அவளை இனம் கண்டுகொள்வதென்றால்…கற்பூரத்தின் நறுமணமாக ஓர் வாசம் அவள் மனம் முழுக்க பரவியது. 

இந்த அளவு அவளை புரிந்து வைத்திருப்பவன் போனில் அவளது குரலை தெரிந்து கொள்ளவில்லையென்றால்…ம்கூம் நம்ப முடியவில்லை.எப்போதும் போல் அவள் மனம் இப்போதும் கணவனை நாடி ஓடியது.அவனது உள்ளங்கைக்குள் சுருண்டு கொள்ள துடித்தது.

ஆனால் நீ வேண்டாமென ஒதுங்கியிருப்பவனிடம் எப்படி செல்வது?இந்த தன்மானம் ஒன்றுதான் இப்போது வரை என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.இதனையும் விட்டு விட்டால்…வந்து விட்டாய்தானே,இப்படி ஓரமாக இருந்து கொள் என்று சொல்லிவிட்டானானால்…தன்னில் திருப்தியற்ற எழில்நிலாவின் மனம் தடுமாறியது.

“என்ன மிஸஸ் நித்யவாணன் பதிலை காணோம்? பயந்து விட்டீர்கள் போல?”  சீண்டினான் அவன்.

“எனக்கென்ன பயம்?”

“அதுதானே தைரியமாக கமெண்ட்ஸ்லாம் போட ஆரம்பித்து விட்டீர்களே!தொடர்ந்து எல்லாவற்றையும் கவனியுங்கள்.குட்நைட்” 

நித்யவாணன் பேச்சை முடித்து விட,யோசனையுடன் அவன் இன்ஸ்டாக்ராம் பக்கத்தை ஆராய தொடங்கினாள்.  

மறுநாள் சென்னையிலிருந்து சித்ரா வந்திருந்தாள்.முறையாய் நாத்தனாரை வரவேற்ற எழில்நிலாவின் கையை பற்றிக் கொண்டவள் படபடவென மடை திறந்த வெள்ளமாக பேசிக் கொண்டிருந்தாள்.”அப்புறம் அண்ணனோட அந்த கிப்டை போட்டு பார்த்தீர்களா அண்ணி? எப்படி இருந்தது? ” கண் சிமிட்டி கிண்டலாக விசாரித்தாள்.

வெட்கத்தில் முகம் சிவக்க “ம்” என்று பதிலளித்தவளின் மனதிற்குள் கணவனின் முதல் பரிசை உபயோகிக்க முடியாத ஏக்கம் பரவியது.

 “என் வரன் உங்களுக்கு எப்படி வந்தது அண்ணி ?” மெல்ல விசாரித்தாள்.சித்ராவின் கணவர் மூலமாகத்தான் இந்த வரன் வந்ததாக பேச்சிருந்ததால் அவளிடமே விசாரித்தாள்.

சித்ரா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளிடம் குனிந்து” ஒரு ரகசியம் சொல்லட்டுமா அண்ணி? உங்களை என் கணவருக்கு காட்டியதே உங்கள் கணவர்தான்” என்றாள்.

“என்ன சொல்கிறீர்கள்?”




” ஆமாம்,ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்த அண்ணா,மேட்ரிமோனியல் சைட்டில் இருந்த உங்கள் ப்ரொபைலை என் கணவரிடம் காட்டினார்.எனக்கு இந்தப் பொண்ணு வேண்டும்,பேசி முடித்து வையுங்கள் மச்சான் என்றார்.எனக்கு ஒரே ஆச்சரியம். எப்போதும் மன உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் கெத்தாகவே இருப்பவர்.இப்போது உங்களை கேட்கும் போது சாக்லேட்டிற்கு அடம் பிடிக்கும் சிறுவன் போல் தோன்றினார்.நான் பயங்கரமாக கிண்டல் செய்த போதும் அதனை அவர் கண்டுகொள்ளவில்லை”. 

“இவள் அப்பாவிற்கு சமீபத்தில் கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதனால் சீக்கிரமே திருமணம் முடிக்க நினைக்கிறார்கள். நீங்கள் நாளையே அவர்களை தொடர்பு கொண்டு மற்ற விவரங்களை பேசுங்கள், என்று உறுதியாக நின்றார். இவரும் தொழில் ரீதியாக உங்கள் குடும்பத்துடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து அவர்கள் மூலமாக பேசி இதோ திருமணத்தை முடித்து விட்டோம்” சித்ரா சொன்ன விஷயங்களை மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டாள் எழில்நிலா. உற்சாக நீரூற்று ஒன்று அவள் பாதங்களில் இருந்து உச்சந்தலைவரை பாய்ந்தது.

 திடுமென பாய்ந்து தன்னை கட்டிக்கொண்ட அண்ணன் மனைவியின் பாசத்தில் திணறினாள் சித்ரா. “அண்ணி இது நான்,மிஸ்டர் நித்யவாணன் இல்லை”கிண்டல் செய்தாள்.

” உங்களுக்குத்தான் இது, உங்கள் அண்ணனுக்கு என்றால் வேறு..” எழில்நிலா சொல்ல ஆச்சரியத்துடன் முகவாயில் கை வைத்தாள் சித்ரா.

” ஆத்தாடி கட்டிப்பிடிப்பதை விட வேறு பெரிதாக என்ன?” சித்ரா ஆச்சரியப்பட “கணவன் மனைவி பிரைவசிக்குள் தலையிடாதீர்கள் அண்ணி” என்றாள் கெத்தாக.

” சரிதான் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை போலவே” என்றவள் அவள் கைப்பற்றி “பிறகு ஏன் அண்ணி இப்படி பிரிந்து இருக்கிறீர்கள்? எப்படி உங்களால் முடிகிறது?” கரிசனமாக கேட்டாள்.

” சிறிய தவறு,அதை விரைவிலேயே சரி செய்து விடுவேன் அண்ணி” நம்பிக்கையாக பதில் சொன்னாள் எழில்நிலா.

” அடுத்த மாதம் உங்கள் திருமண ரிசப்ஷன் சென்னையில் நடக்கப் போகிறது.அதற்குள் எல்லாவற்றையும் சரி செய்து விடுவீர்கள் தானே?”




” ஓ அடுத்த மாதம் தான் ரிசப்ஷனா? அப்படியென்றால் சென்னையில் இருப்பவர்களுக்கு இப்போது வரை எங்கள் திருமண விபரங்கள் தெரியாதுதானே?”

” அப்படியெல்லாம் இல்லை அண்ணி. எல்லோருக்கும் தெரிந்திருக்கத்தான் செய்யும். ஆனாலும் நாமே அறிவிப்பது என்பது வேறல்லவா! ஆபிசில் சில முக்கியமான வேலைகள் இருப்பதால் இந்த ரிசப்ஷனை அடுத்த மாதம் வரை தள்ளி வைத்திருக்கிறார் அண்ணன்”

ஆக நித்யவாணன் தனது திருமணத்தை சென்னையில் மறைக்க முயலவில்லை. எழில்நிலாவின் மனது லேசாகி பட்டாம்பூச்சியின் சிறகுகளை பூட்டி கொண்டது.

 மறுநாள் சென்னை சென்ற சித்ரா அண்ணியிடம் சேகரித்த தகவல்களை அண்ணனிடம் ஒப்படைக்க அடுத்த மூன்று மணி நேரங்களில் கொடைக்கானலில் இருந்தான் நித்யவாணன்.

மகனை ஆச்சரியமாக பார்த்தாள் சந்திராவதி “என்னடா சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறாய்?” 

” என் பொண்டாட்டியை பார்க்க வந்திருக்கிறேன்மா. இதில் நீங்கள் தலையிடாதீர்கள்” என்றவனை கோபமாக இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் படபடவென மாடி ஏறினான்.

 சுவர் பந்தாக இரண்டாம் நிமிடம் திரும்பி வந்தவன் “நிலாவை எங்கேம்மா? மாடியில் இல்லையே?” எனக் கேட்க அதிர்ந்தாள் சந்திராவதி. 

தொடர்ந்து வீடு முழுவதும் தேடப்பட்டு அடுத்த ஐந்தாம் நிமிடம் எழில்நிலா வீட்டில் இல்லை என்பது தெரிய வந்தது.




What’s your Reaction?
+1
36
+1
19
+1
1
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!