Serial Stories வா எந்தன் வண்ணநிலவே…

வா எந்தன் வண்ணநிலவே-12

12

“கொஞ்சம் மேக மூட்டமாக இருக்கிறது.மழை வந்து விட்டால் மலையேறுவது சிரமம். எல்லோரும் சீக்கிரம் கிளம்புங்க” பரமேஸ்வரன் எல்லோரையும் விரட்டிக் கொண்டிருக்க,எழில்நிலா திகைத்தாள்.

அவர்கள் மறுவீட்டிற்காக மாப்பிள்ளை வீடு கிளம்பிக் கொண்டிருந்தனர்.நித்யவாணனின் பூர்வீகம் சென்னைதான் .அவன் தந்தை கொடைக்கானலில் எஸ்டேட் வாங்கினார்.தொழில் வீடு என எல்லாம் கொடைக்கானலில் இருந்தாலும் சென்னையில் அமோகமாக நடக்கும் தொழிலை விட்டு வர முடியாமல் கொடைக்கானல் தொழிலை ஆள் வைத்து அவ்வப்போது வந்து பார்த்து கொண்டிருந்தனர் நித்யவாணனும் அவன் தந்தையும் . 

இப்போது மறுவீட்டுக்காக தூரமான சென்னை வரை போகாமல் பக்கத்திலிருந்த கொடைக்கானலிலேயே ஏற்பாடாகி இருந்தது .மறுவீடு சென்னையில்தான் இருக்குமென அவள் எண்ணியிருந்தாள் . கொடைக்கானலை நினைக்கவே அவளுக்கு பிடிக்கவில்லை.

அதுவும் அந்த வீட்டிற்கு …ம்ஹூம் அங்கே கால் வைக்க முடியுமென்று அவளுக்கு தோன்றவில்லை . 

“என்ன.. அவ்வளவு ஆழ்ந்த யோசனை..?” மீசை முடி காதை உரசும் அருகாமையில் வந்தபடி கேட்டான் நித்யவாணன் .கார் கொடைக்கானல் மலையேறிக்கொண்டிருந்தது . காரிலிருந்த பெரியவர்கள் சிறிது கண் அசந்திருந்தனர் .”ஒன்றுமில்லை” எனக்கூறியபடி அவனிடமிருந்து சிறிது நகர்ந்து அமர முனைந்தாள் எழில்நிலா . 

ஒரு இஞ்ச் அவள் நகர மேலும் இரண்டு இஞ்ச் தான் நகர்ந்து அவள் மேல் ஒட்டிக்கொண்டான் நித்யவாணன் .கையை  தோள்களை சுற்றி கார் சீட்டின் மீது வைத்துகொண்டவன் ,மிக தீவிரமாக அவள் புற சன்னல் பக்கம் குனிந்து வெளியே வேடிக்கை பார்க்கலானான் .

திணறிப்போனாள் எழில்நிலா .சிறிது முகம் உயர்த்தினாலும் அவள் இதழ்கள் பதியும் இடம் அவன் கன்னமாகத்தான் இருக்கும் . “யாராவது பார்த்து விட்டால் …ப்ளீஸ் கொஞ்சம் தள்ளுங்க”

 “பார்த்தா பார்க்கட்டுமே…நாம் புருசன் பொண்டாட்டிதானே!இதோ நம்ம எஸ்டேட் எல்லை ஆரம்பமாக போகுது .அதைத்தான் பார்த்துக்கிட்டு வர்றேன்” என்றான் கூலாக . கணவன் புறமாக உருகத்தொடங்கி விட்ட மனதை ,மீண்டும் இறுக்கமாக்கினாள் . 

இதோ இந்த இடம்தான் இந்த படியில்தான் நின்றபடி அவள் நித்யன் உமிழ்ந்த நெருப்பு துண்டங்களை விழுங்க முடியாமல் தவித்திருந்தாள் .அன்றைய வேதனையை சற்றும் குறையாமல் தேகமும் ,மனமும் இப்போதும் உணர படியேற மனமின்றி வெறித்தபடி நின்றிருந்தாள் எழில்நிலா .

பின்னாலேயே வந்த நித்யவாணன் “என்ன ஓடிடலாம்னு பாக்குறியா …விட மாட்டேன் வா …”என்று அவள் தோள்களை சுற்றி கையை அழுத்தமாக போட்டு இழுத்தான் .

பொம்மையாய் உள்ளே நுழைந்தாள் எழில்நிலா.ஆரத்தி எடுத்த தங்கைக்கு வைர நெக்லஸ் பரிசளித்தான் நித்யவாணன்.உற்சாகத்தோடு உடனே அதனை கழுத்தில் போட்டு அழகு பார்த்த சித்ரா,” அண்ணியுடைய கிப்டை கொடுத்துட்டீங்களா அண்ணா?”என்றாள்.

நித்யவாணன் முகம் கொஞ்சம் வாடியது.யோசனையுடன் எழில்நிலாவை பார்த்தபடி “இனிமேல்தான் கொடுக்கனும்” என்றான்.

“என்ன அண்ணா நேற்று இரவு கொடுக்கவில்லையா?” சத்தமாக கேட்டு விட்டு,பிறகு கூச்சத்தோடு நாக்கை கடித்தபடி நகர்ந்தாள் சித்ரா.

எழில்நிலாவின் தேகம் முழுவதும் பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்புகள்.என்ன வாங்கியிருப்பான்?

புடவை எடுக்க போன அன்றே தாலி செயினிற்காக நகை கடைக்கும் சென்றனர்.சித்ரா ஆசைப்பட்ட நெக்லசை வாங்கி தந்தவன்,”நிலா ஒரு நிமிடம் வாயேன்” என இவளை கடையின் அடுத்த ப்ளோருக்கு அழைக்க,அழைப்பு காதில் விழாதது போல் இருந்து கொண்டாள்.

ஐந்து நிமிடங்கள் அவளை எதிர்பார்த்து காத்திருந்தவன்,தானே மாடியேறிப் போனான்.அன்று வாங்கிய பரிசு போலும்.அதாவது முதல்ராத்திரியில் மனைவிக்கு பரிசளிக்க எண்ணியிருக்கிறான்.ஆனால் அவர்கள் முதல் இரவுதான் தனி தனி அறையில் கழிந்ததே…இனி இந்த இரவு… எழில்நிலாவினுள் படபடப்பு. 

சாப்பிட்டு முடித்து கிளம்பினர் எழில்நிலா வீட்டினர் .மகளை உச்சி முகர்ந்த மஞ்சுளா “கண்ணம்மா மாப்பிள்ளை வீட்டாளுங்க எல்லோரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்கடா.நீ உன் துடுக்குத்தனத்தை குறைத்துக் கொண்டு அவுங்களை அட்ஜஸ் பண்ணிக்கிட்டு போகனும் ..”என ஆரம்பித்தாள் .

அம்மா பெரியதொரு அறிவுரைக்கு தயாராகிறாள் என உணர்ந்த எழில்நிலா ,இப்போதைக்கு எந்த அறிவுரையும் கேட்கும் மன நிலையில் இல்லாததால் “சரிம்மா சரி” என வேகமாக தலையை ஆட்டினாள் .

“ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே தலையாட்டுவதை பாரு” செல்லமாக மகள் தலையில் கொட்டியவள் “அடுத்த மாதம் நம்ம சண்முகம் மாமா பொண்ணு கல்யாணம் இங்கே இருக்கில்ல .அதுக்கு வரும்போது இங்கே உன்னை வந்து பார்க்கிறோம்.நீதான் இனிமே இங்கேதானே இருக்கப் போகிறாய்” என சத்தமில்லாமல் பெரிய குண்டை தூக்கி மகள் தலையில் போட்டாள் .




“எ…என்னம்மா சொல்றீங்க..?”குரல் நடுங்க கேட்டாள் .

“அதாம்மா மாப்பிள்ளையோட அம்மாவும் அப்பாவும் இனி இங்கேதான் தங்க போறாங்களாமே .நீயும் அவுங்க கூட இங்கேதான் இருக்க போகிறாய் .மாப்பிள்ளை மட்டும்தான் சென்னைக்கு தொழிலை பார்க்க, போய் வந்து இருக்கப் போகிறாரு . இது உனக்கு தெரியாதா ? மாப்பிள்ளை சொல்லலியா..?” மஞ்சுளா சிறு யோசனையுடன் கேட்டாள்.

பிறகு தானே தெளிந்து “அது சரி நேத்து உங்களுக்கு இதையெல்லாம் பேச நேரம் இருந்திருக்காது “என ரகசிய சிரிப்புடன் சொல்லிக்கொண்டாள். 

புரியாத பல குழப்பங்கள் இப்போது நேர்கோட்டுக்கு வந்து விட்டது  எழில்நிலாவுக்கு .இந்த திருமணத்தில் நித்யவாணன் இவ்வளவு ஆர்வம் காட்டிய காரணம் மிகத் தெளிவாக அவளுக்கு புரிந்து போனது.

நித்யவாணனுக்கு தேவை அவனிடம் பிரமித்து போய்,அவன் சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்டும் ஒரு பொம்மை.அதன் கழுத்தில் தாலி கட்டி மனைவி என சொல்லிக் கொள்வான்.மற்றபடி தனது தொழில் உலகில் என்றுமே தீராத விளையாட்டு பிள்ளையாக சுதந்திரமாக வலம் வருவான்.

இதற்காகவே பெற்றோர் கை காட்டிய என்னை திருமணம் செய்து கொண்டான்.இனி என்னை இவன் அம்மாவிடம் பிணைக் கைதியாக்கி விட்டு இவன் தனது பழைய பேச்சுலர் வாழ்க்கைக்குள் புகுந்து கொள்வான்.

நித்யவாணனின் சாயம் வெளுத்ததில் எழில்நிலா மிகுந்த வேதனை அடைந்தாள்.எப்படி இந்த திருமண வாழ்வை வாழப் போகிறேன்…துயருற்றாள்.




What’s your Reaction?
+1
29
+1
20
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!