Serial Stories மயங்கினேன்_மன்னன்_இங்கே

மயங்கினேன் மன்னன் இங்கே-7

7

 

” என்ன பார்க்கிறாய் மலர் …? ” அறைக்குள் நுழைந்த சஷ்டியின் அலைபாய்தல் பார்வையை கவனித்துக் கேட்டான் திருமலைராயன்.

 

” இ …இல்லை .யாரையும் காணோமேன்னு பார்த்தேன் “

 

” யாரை எதிர்பார்க்கிறாய் …? தாண்டவராயரையா …? சந்திராம்பிகையையா …? “

 

” ஆ …ஆமாம் …இ…இல்லை..அவர்கள் ஏன் இங்கே …இல்லையே அவர்களை எதிர்பார்க்கவில்லையே …” சஷ்டி மலருக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்து விட்டது. ஏதோ தவறுதலென அவள் மனம் எச்சரித்தது .

 

” உனக்கு ஏன் இப்படி வியர்க்கிறது மலர் …? எதுவும் பிரச்சனையா உனக்கு …ம் ..? ” மென் குரலில் கேட்டபடி அவளருகே வந்த திருமலைராயன் அவள் தோள்களை சுற்றி தன் கைகளை போட்டு அணைத்தான் .

 

சஷ்டியின் உடல் இந்த செயலால் தூக்கி வாரிப் போட்டது .தீப்பட்டது போல் துடித்து அவனிடமிருந்து விலக முயன்றவளை அவன் விடாமல் தன்னோடு சேர்த்து அழுத்தினான் .

 

” ஏன் மலர் …ஏன் விலக நினைக்கிறாய் …? கொஞ்ச நேரம் முன்பு தோட்டத்தில் இப்படித்தானே என் கைகளுக்குள் தொய்ந்து கிடந்தாய் …இப்போது என்ன …? ” திருமலைராயனின் கை அவள் புஜத்தை அழுத்தியது. அதில் வலிகள் தோரணம் பிடித்து சஷ்டியின் உடல் முழுவதும் பரவியது .

 

” இங்கே …இந்த நமது  நெருக்கத்தை பார்க்க ஆளில்லையென்பதால் விலக நினைக்கிறாயா மலர் …? அப்போது சந்திராம்பிகை பால்கனியில் நின்று பார்த்தது போல், இப்போது பார்க்க ஆளில்லையென வருத்தப்படுகிறாயோ …? “

 

தனது நாசி வேலை செய்வது போல் சஷ்டிக்கு தெரியவில்லை. மூச்சு திணறியது அவளுக்கு. பதட்டமான விழிகளை சுழற்றி அங்கே நின்றிருந்த சொப்னாவை பார்த்தாள் .

 

” சொப்னா என்னடி இதெல்லாம் …? உன் அண்ணன் ஏன் இப்படி இன்டீசன்டாக நடந்து கொள்கிறார் …? ” அவள் பேசப் பேச அவளது தோள்பட்டையின் அழுத்தம் அதிகமாகி வலியும் அதிகமானது .

 

” யாருடி இன்டீசன்டாக நடந்து கொண்டது …? என் அண்ணனா ….. நீயா …? நட்புக்கு துரோகம் செய்கிறாயே …நீயெல்லாம் என்ன பிறவியடி …? ” சொப்னா சீற , சஷ்டிக்கு தெளிவாக புரிந்து போனது .




இவர்கள் இருவருக்கும்  தன்னை தெரிந்துவிட்டது .இனி ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க கூடாதென்ற முடிவை அவள் உடனடியாக எடுத்தாள் . அந்த ஊரின் ராயர் வீட்டிற்கு ஒரு துரோகம் செய்துவிட்டு இந்த ஊருக்குள் முழு உருவமாக நடமாட முடியாதென்பது அவளுக்கு தெரியும். இவள் இப்படி என இந்த ராயர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும் , ஊர் மக்கள் எல்லோருமாக சேர்ந்து அவளை கை கால்களை தனித் தனியாக பிரித்து எடுத்துவிடுவார்கள் .

 

சஷ்டியின் கண்கள் அறை வாசலை பார்க்க ” ஓடி விடலாம்னு நினைக்கிறாயோ …? ” திருமலைராயன் அவள் தோளை அழுத்தியிருந்த கையால் அவளை ஒரு சுற்று சுற்றி திருப்பினான் .சுரீரென்ற வலி மூளை வரை தாக்க ” அம்மா ” என்ற மெல்லிய முனங்கலுடன் கண்கள் கலங்க நிமிர்ந்து அவனை பார்த்தாள் .

 

அவளது வலி பார்வை அவனை சிறிதும் பாதிக்கவில்லை .உணர்ச்சிகள் துடைத்த பார்வையோடு அவளை பார்த்தபடி நின்றிருந்தான் .

 

” ஏன் …? ” ஒரே ஒரு வார்த்தைதான் .அந்த வார்த்தை உடல் வலியை விட அதிக மன வலியை அவளுக்கு தந்தது. இயலாமை கலந்த ஓர் அடைக்கல பார்வையோடு அவனை பார்த்தாள் .

 

” நம்பிக்கை துரோகம் …” கற்பாறையாய் இறுகி நின்றான் அவன் .கூசி தலை குனிந்தாள் அவள் .

 

” என்னடி உன் நோக்கம் …? ” சொப்னா தன் பங்குக்கு தோழியின் தோளை பற்றி தன் பக்கம் திருப்பினாள். சஷ்டி இதழ்களை இறுக்கி வார்த்தைகளை நாவினுள் மடக்க…

 

” சொல்லு …” கர்ஜனையாய் கேட்டது திருமலைராயனின் குரல் . சஷ்டியின் தேகம் நடுங்கியது .

 

” இ…இந்த கல்யாணத்தை நிறுத்துவது ….” குரலும் நடுங்கி
து .

 

” அடிப்பாவி …” சொப்னா குமுற ,

 

” சந்திராம்பிகை போன்ற பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணம் நிற்பது எவ்வளவு பெரிய துயர் தெரியுமா …?” திருமலைராயனின் குரலில் இப்போது சஷ்டியின் மனம் குமுறியது. அவளுக்கு அன்று அவர்கள் இருவரும் இருந்த நெருக்கமான நிலை நினைவு வந்தது. அந்தக் காதலை பிரிக்க நினைத்தது தவறுதானே …?

 

ஆனால் இப்போதுதான் இவர்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்து விட்டார்களே …இனி இந்த திருமணத்தையும் நடத்தி விடுவார்கள். அவளது நோக்கமும் நிறைவேறப் போவதில்லை …பிறகும் இவர்களிடம் ஏன் தலைகுனிய வேண்டும் …சஷ்டியின் தலை தானாக நிமிர்ந்தது .

 

” யார் நீ …? ஏன் இப்படி செய்தாய் …? ” ஒருவரை கொலை செய்யும் உரிமையை இப்போது .  திருமலைராயனுக்கு கொடுத்தால்  , அவன் கொல்லும் ஆள் நிச்சயம் சஷ்டியாகத்தான் இருப்பாள். இரையை குதற காத்திருக்கும் பசித்த சிங்கமாய் நின்று கொண்டிருந்தான் அவன் .

 

” தவறுதான். ஆனால் அதற்கென எனக்கோர் நியாயம் உண்டு. அதனால் நான் மன்னிப்பு கேட்க போவதுமில்லை . வருந்தப் போவதுமில்லை. உங்கள் விருப்பப்படி இந்த திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள். நான் வருகிறேன் …” நிமிர்வாகவே சொல்லிவிட்டு அறை வாசலுக்கு நடந்த சஷ்டியின் நடை பாதியில் நின்றது .

 

அறைக்கதவை திறந்து கொண்டு பாட்டியம்மா உள்ளே வந்து கொண்டிருந்தார். ஆயிரம் காளிகளின் ஆவேசங்கள் ஒன்றாக அப்போது அந்த ஆயிரம் காளியிடம் இருந்தது .

 

உள்ளே வந்த பாட்டியம்மா எதையும் யோசிக்கவில்லை. யாரையும் பார்க்கவில்லை. நேராக சஷ்டியின் அருகே வந்து பளாரென அவள் கன்னத்தில் அறைந்தார் .

 

” யாருடி நீ …? “

 

சஷ்டி அதிர்ச்சியுடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள். பின் இதழ்களை இறுக மூடிக்கொண்டு சொல்ல முடியாது என்ன செய்வீர்களென்ற பார்வை பார்த்தாள் .

 

” உன் பெயர் என்னடி …? ” பாட்டியின் அடுத்த கை விளையாடியது .

 

இரு கன்னங்களையும் அழுத்திப் பற்றிக் கொண்டு பின் நகர்ந்து போனவளின் பார்வை திருமலைராயனின் மேல் பதிந்தது. இது நியாயமா …? எனக் கேட்டது. திருமலைராயனின் பார்வையில் மாற்றங்களேதும் இல்லை .

 

” அவளது முழுப்பெயர் சஷ்டி மலர் பாட்டி ” தகவல் தந்தாள் சொப்னா . அவள் குரலில் லேசான கவலை இருந்தது. அது தனக்கானதாய் இருக்கலாமென்பதில் சஷ்டிக்கு சந்தேகம் இருந்தது .

 

” உன் அம்மா பெயர் என்ன …? ” பாட்டியின் அடுத்த கேள்விக்கும் சஷ்டியிடமிருந்து பதிலில்லை .

 

” உன் அப்பா பெயர் என்ன …? ” நக்கலாக வந்த இந்த கேள்வியில் சஷ்டியின் மனம் துடித்தது .அவள் இத்தனை நேரமாக கொண்டிருந்த வீம்பு கரைந்தது .முகம் கலங்கியது .

 

” ஏன்டி …உனக்கு உன் அப்பன் பெயர் தெரியாதா …? ” பாட்டியின் நக்கல் கேள்வியில் ….

 

” பாட்டீ ….” தன்னை  மறந்து கத்தினாள் சஷ்டி .

 

“ஏன்டி கத்துகிறாய் …? அப்பா …அம்மான்னு தைரியமாக தலை நிமிர்ந்து அறிமுகப் படுத்திக் கொள்ள முடியாத கழுதையை என்ன பெயர் சொல்லி கூப்பிடவார்கள் தெரியுமா …? “

 

” வேண்டாம் பாட்டி. நீங்கள் வயதில் பெரியவர்கள். இப்படி தரம் தாழ்ந்து பேசினால் நானும் பதிலுக்கு பேச வேண்டியது வரும் …” விரலாட்டி எச்சரித்தவளின் விரல் பலமாக பற்றப்பட்டது திருமலைராயனால். பிறகு வளைக்கப்பட்டது .




” என்ன பெரியவர்களென்ற மரியாதையில்லாமல் …? ” அவன் தன் உடலில் ஏற்படுத்திய வலியை நம்ப முடியாமல் அவனை பார்த்தாள் சஷ்டி. அந்தப் பார்வையில் என்ன கண்டானோ …அவள் விரலை விடுவித்தான். அவள் முகம் விட்டு திரும்பினான் .

 

” சொப்னா …வெளியே அந்த தூணுக்கு பின்னால் மறைவாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களே. அவர்களை கூட்டி வா .நமக்கு எல்லா விபரங்களும் தெரிந்து விடும் …”

 

” ஐயோ …வேண்டாம் …அவர்களிடம் போகாதீர்கள் ” சஷ்டி பதறினாள் .

 

” சரி வேண்டம் .அவர்களை இங்கே அழைத்து வர வேண்டாம் .இவர்கள் …இந்த மாதிரி …என் திருமணத்தை நிறுத்த திட்டமிட்டிருக்கிறார்களென எல்லோருக்கும் …அதாவது இப்போது வெளியே கல்யாணத்திற்காக வந்திருக்கும் உறவினர்கள் , ஊர் ஆட்கள்  எல்லோருக்கும் தெரியப்படுத்தி விட்டு நீ உள்ளே வந்து விடு சொப்னா …” இயல்பாக அவன் தங்கைக்கு கொடுத்த வேலைக்கு சஷ்டியின் உடல் பதறியது .முகம் வெளுத்தது .

 

அவர்களது ராயரின் திருமணத்தை நிறுத்த முயன்றவர்களை இந்த ஊர் சனங்கள் சும்மா விட்டு விடுவார்களா என்ன …? அதிலும் பழைய வஞ்சத்தை மனதில் வைத்து வந்தவர்களென்றால் சொல்லவே வேண்டாம் .கொன்று குழியில் இறக்கி விட்டுத்தான் மறு வேலையே பார்ப்பார்கள் .

 

சஷ்டியின் கைகள் தாமாக குவிந்தன . ” வேண்டாம் அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் .விட்டு விடுங்கள் …”

 

” ம் .இது சரி .தவறு செய்தவளுக்கு இந்த பணிவு அவசியம் .இப்போது சொல். அவர்கள் யார்….? ” திருமலைராயன் வசதியாக ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமரந்து கொண்டான் .பாட்டியையும் சோபாவில் அமர வைத்தான் .

 

” அங்கே இருப்பது என் அம்மாவும் , சித்தியும் …” சஷ்டி தலைகுனிந்தபடி சொன்னாள் .

 

” அம்மா …உன்னை பெற்றவர்கள் …ம் …? ” அவன் கூர் பார்வையை சந்திக்காமல் தலையை மட்டும் அசைத்தாள் .

 

” கோமதிதானே …? ” பாட்டியின் கேள்வியில் அதிர்வு சஷ்டிக்கு .

 

” என்னடி பார்க்கிறாய் …? எப்படி தெரிந்து கொண்டேனென்றா …? எனக்கு அவளையும் தெரியும் …உன்னையும் தெரியும் .அதுதான் உன் மூஞ்சியில் அவள் மூஞ்சி அப்படியே ஒட்டியிருக்குதே …? “

 

அப்படியா ஒன்று போல் இருக்கிறோம் …என்ற சஷ்டியின் யோசனைக்கு ” இருபது வருடம் முன்பு உன் அம்மாவும் இப்படித்தான் இருந்தாள் . உன்னை முதல் நாள் பார்த்த உடனேயே எனக்கு பொறி தட்டுச்சு . அன்னைக்கிருந்து உன்னை கண்காணிச்சுட்டேதான் இருக்கிறேன் ….”

 

இது சஷ்டி எதிர்பாராத்து …வந்த நாளிலிருந்தே அவள் கண்காணிக்கபடுகிறாளா…?

 

” உன் சித்திதான் சந்திராம்பிகை வீட்டில் வேலை பார்க்கும் சங்கரி ….உனக்கு அங்கிருந்து தகவல்களை அள்ளி வழங்கியவர் …ம் …? “

 

இவனுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது. சஷ்டியின் இதழ்கள் நடுங்கியது. அவளை பற்றிய கவலை அவளுக்கில்லை .அவள் அம்மாவும் , சித்தியும் காப்பாற்றப்பட வேண்டும். யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் கை கூப்பினாள் .

 

” தப்பு செய்து விட்டோம். மன்னித்து விடுங்கள். எங்களை விட்டு விடுங்கள். நாங்கள் போய் விடுகிறோம் “

 

” அவ்வளவு சுலபமாகவா …?” இந்தக் கேள்வியை திருமலைராயன் அவள் முகத்தின் அருகே வந்து கேட்டான். ஏனோ சஷ்டியினுள் பயக்குளிர் பரவியது .

 

” செய்த தப்பிற்கு தண்டனை அளிக்காமல் விடும் பழக்கம் ராயரின் ராஜ்ஜியத்தில் இல்லை …” மீசை முறுக்கிக் கொண்டு சொன்னபோது அவனது குரலில் அதிகார கம்பீரம் தெரிந்தது .

 

சஷ்டி பதட்டமாக அவனை பார்த்தாள் .” தண்டனையை எனக்கு மட்டும் கொடுங்கள். அம்மா , சித்தியை விட்டு விடுங்கள் “

 

திருமலைராயன் பதிலில்லாமல் மீசை நுனி முறுக்கியபடி அவள் முகத்தை பார்த்தபடியே நின்றான். பிறகு ” சரி போ ..” என்றான் .

 

” ராயா …” அதட்டலுடன் வந்த பாட்டியை கையுயர்த்தி நிறுத்தியவன் …” போ என்றால் இந்த அறையை விட்டு போ என்றேன். வெளியே போய்வழக்கம் போல் கல்யாண வேலைகளை கவனி “

 

” அண்ணா …” குழப்பத்தோடு அழைத்த தங்கைக்கும் கை காட்டியவன் …” கல்யாண வேலையை மட்டும் கவனி. இங்கே நடந்த எதையும் உன் அம்மாவிற்கோ , சித்திக்கோ சொல்ல கூடாது. நீங்கள் திட்டமிட்டது போலவே எல்லாம் நடப்பதாக காட்டிக் கொள்ள வேண்டும் .போ…”

 

சஷ்டி குழப்பத்துடன் அவர்களை திரும்பி திரும்பி பார்த்தபடி அறையை விட்டு வெளியேறினாள் . அவள் மனதில் பூகம்பம் தாக்கிய நிலமாய் துவண்டு கிடந்தது .

 




 

What’s your Reaction?
+1
18
+1
15
+1
1
+1
0
+1
2
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!