Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று – 5

5

“அப்பா, அம்மாவிற்கு தெரியாமல் திருமணம் என்ற பேச்சே வேண்டாம் சித்தி.. அதற்கு நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன்..”

“என்ன கவிதா இப்படி சொல்கிறாய்..? இங்கேயே இருந்தால் உன்னை அந்த அய்யனார் சாமிக்கு உன் அப்பா கல்யாணம் முடித்துக் கொடுத்துவிடுவார்.. அது பரவாயில்லையா உனக்கு..?”

கவிதா கால்களை மடித்து குத்திட்டு அதில் முகம் சாய்த்துக் கொண்டாள்.. கால் கட்டை விரல் நகத்தை வெறித்தபடி “என் தலையெழுத்து அதுதானென்றால் நடந்து விட்டு போகட்டும்..” என்றாள்..

“அது சரி கல்யாணத்தை முடித்துக் கொண்டு அவன் பின்னால் ஜாலியாக நீ போய்விடுவாய்.. இங்கே என் தம்பியின் நிலை.. காதலிப்பதாக சொல்லி அவனுக்கு ஆசை காட்டி வைத்திருக்கிறாயே.. அவனை என்ன செய்ய சொல்கிறாய்..?”




“சித்தி.. உங்க தம்பியை நான் காதலிப்பதாக ஒரு நாளும் சொன்னதில்லை.. அவராகத்தான் சொன்னார்.. நான் மறுக்க வில்லை.. அவ்வளவுதான்..”

“காதலிப்பதற்கும் காதலை மறுக்காததிற்கும் என்னடி பெரிய வித்தியாசம்..?”

“சித்தி அவரை மறுப்பதற்கு பெரிதான காணரம் எதுவும் இல்லையென தோன்றியதால் அவரது காதலுக்கு மௌனமாக இருந்தேன்.. காதல் எங்கள் இருவர் சம்பந்தப்பட்டது.. அதில் என் முடிவை நான் எடுத்துவிட்டேன்.. ஆனால் கல்யாணம் அப்படி இல்லை.. அது என் குடும்பம் சம்பந்தப்பட்டது.. என் குடும்பத்தார் சம்மதமில்லாமல் நான் கல்யாணத்திற்கு நிச்சயம் சம்மதிக்க மாட்டேன்..”

“உன் குடும்பத்தார் சம்மதிக்க மாட்டார்கள் என்றுதான் தெரியுமே.. பிறகு ஏன் காதல் சொன்ன போது பேசாமல் இருந்தாய்..?”

“உங்கள் தம்பி பெரிய வக்கீல்.. அப்பாவின் சம்மதத்தை வாங்கி விடுவார் என நினைத்தேன்.. இப்போதும் அப்பாவின் சம்மதத்தை உங்கள் தம்பி வாங்கட்டும்.. நான் அவரை முழு மனதோடு கல்யாணம் செய்ய சம்மதிக்கிறேன்..”

“இல்லையென்றால் உன் அப்பா பார்த்த மாப்பிள்ளைக்கே கழுத்தை நீட்டி விடுவாய் அப்படித்தானே..?”

இதற்கு கவிதா பதில் சொல்லவில்லை.. ஆனால் அவளது பதில் சரளாவிற்கு புரிந்தது..

“எவ்வளவு           புத்திகாரிடி நீ..?” வெளிப்படையாக புலம்பினாலும் உள்ளூற விதாவின் ஜாக்கிரதைத்தனத்தை சரளாவால் வியக்காமல் இருக்க முடியவில்லை..

இவளை போல் தெளிவாக ஒரு பிரச்சனையின் போது தன்னால் இருக்க முடியவில்லையே.. என்ற ஆதங்கம் அவளுக்கு வந்தது..

“எப்படி உன்னால் இவ்வளவு நேக்காக யோசிக்க முடிகிறது..?”

“நேக்கோ.. வேறு நோக்கோ இதில் ஏதுமில்லை சித்தி.. என் மனது தெளிவான கண்ணாடியாக இருக்கிறது.. அதில் விழுந்து பதியும் உருவத்திற்காக காத்திருக்கிறது அவ்வளவுதான் விசயம்..”

கவிதா பேசி விட்டு எழுந்து சென்ற பிறகுதான் அவள் எவ்வளவு பெரிய விசயத்தை மிக இலகுவாக சொல்லி சென்றிருக்கிறாள் என சரளாவிற்கு புரிந்தது.. மிக ஆழ்ந்து அவளது வார்த்தைகளை ஆராய்ந்து பின் சரளாவிற்கு தெரிய வந்த உண்மை.. அவள் முகம் விரும்பா சூழலில் கருத்தது.. தனது போனை எடுத்து தன் தம்பியின் நம்பரை அழுத்தினாள்..




தன் புகுந்த வீட்டின் செல்ல பெண்ணை தனது பிறந்த வீட்டில் திருமணம் முடித்து கொடுப்பதின் மூலம், புகுந்த வீட்டில் தனது நிலையை உயர்த்திக் கொள்ள முடியுமென சரளா நம்பினாள்.. தன்னை கொஞ்சமும் மதிக்காத புகுந்த வீட்டு ஆட்களிடையே தன்னை முக்கியமானவளாக்கிக் கொள்ள, அவர்கள் வீட்டு பெண்ணின் நலனுக்காக தன் முகம் பார்த்து நிற்கிற நிலையை அவர்களுக்கு கொடுக்க, போக அன்னாசிலிங்கமும், முருகலட்சுமியும் தங்கள் ஒரே செல்ல மகளுக்கென சேர்த்து வைத்திருக்கும் நகைகளும், சீர்வரிசைகளும்.. போன்ற இன்ன பிற காரணங்கள் நிறைய இருந்தன, சரளா தனது ஒரே தம்பிக்கு இந்த வீட்டின் ஒரே செல்ல மகளை மணமுடித்து வைக்க ஆசைப்படுவதன் காரணங்கள்..

அன்னாசிலிங்கம், தங்கபாண்டியனின் தந்தை தனது சொத்துக்களை வீடு, நிலபுலன்களை தனது மறைவிற்கு முன்பே சரி பாதியாக பிரித்து இருவரின் பெயரிலும் எழுதி வைத்துவிட்டே மரணமடைந்தார்.. அப்போது தங்கபாண்டியன் தனது சட்டப் படிப்பின் இறுதியில் இருந்தான்.. அவனது பெயரில் இருந்த பெரும் பங்கு சொத்தை பார்த்தே சரளாவின் தந்தை அவளை அவனுக்கு மணம் முடித்து வைத்தார்.. அவர் மதுரை ஹைகோர்ட்டில் க்ளார்க்காக பணிபுரிந்தார்.. திருமணத்திற்கு பின் தங்கபாண்டியனின் வக்கீல் தொழில் சோபிக்காமல் போக, அவன் தன் மாமனாரின் யோசனைப்படி மதுரையில் ஆரம்பித்த ஹைபர் மார்கெட் தங்கபாண்டியனின் பங்கு சொத்துக்களில் எழுபது சதவிகிதத்தை விழுங்கி விட்டு நஷ்டம் தாங்காமல் இறுதியில் அன்னாசிலிங்கத்தின் ஆலோசனை படி இழுத்து மூடப்பட்டு விட்டது..

இப்போது அவர்கள் இருக்கும் பரம்பரை வீடு அண்ணன் தம்பி இருவருக்கும் பங்குள்ளது.. அது போக சில விவசாய நிலங்கள், ஒரு கொய்யா தோப்பு இவைகள் மட்டுமே தங்கபாண்டியனின் சொத்துக்கள்.. ஆனால் அன்னாசிலிங்கம் தம்பியை வேறுபாடு பார்க்காமல் தனது சொத்துக்கள் அனைத்திலும் புழங்க விடுவதால், ஊர் முழுவதும் அன்னாசிங்கத்தின் சொத்துக்கள் அனைத்தும் தங்களுக்கும் உரியது போல் தங்கபாண்டியனும், சரளாவும் அவர்களது பிள்ளைகளும் காட்டி வந்தனர்..

இதனால் அவர்களது ஆதி குடும்ப பெருமையை அப்படியே தக்க வைத்தபடி ஊருக்குள் வலம் வர அவரகளால் முடிந்தது.. இது போல் வெளிப்பார்வைக்கு மட்டும் கௌரவமாய் தெரியும் தனது குடும்ப நிலையை.. அதாவது அன்னாசிலிங்கத்தின் திரண்ட சொத்துக்களை நிரந்தரமாக தனக்குரியதாக்க அவள் யோசித்த வழிதான் தனது தம்பியுடன் கவிதாவின் திருமணம்..




அதற்கேற்றாற் போல் அமைவது போலிருந்த சூழல்களை சாமர்த்தியமாக தன் பக்கம் திருப்பிக் கொண்டாள் சரளா.. தன் தம்பிக்கும், கவிதாவிற்குமான காதலை மறைமுகமாக ஊக்குவித்து வந்தாள்.. இந்த விசயம் வெளியே தெரிந்தால் தங்கபாண்டியன் அவளை உடனடியாக வீட்டை விட்டு விரட்டி விட்டுத்தான் மறு வேலை பார்ப்பான்.. அதனை தெரிந்து வைத்திருந்தவள் தனது தூது வேலைகளை யாரும் அறியாமல் ரகசியமாக செய்து வந்தாள்..

ஒரு வருடமாக அவள் செய்து வந்த ரகசிய வேலைகளை இப்போது வீணாகி விடும் போலவே.. போனின் எதிர்முனை எடுக்கப்படாமல் போக ஆத்திரமடைந்தாள்.. இவனுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பை உண்டாக்கி தந்திருக்கிறேன்.. இவன் என்னவென்றால் பற்களை நறநறத்தபடி மீண்டும் முயன்றாள் இப்போது போனை எடுத்த நாராயணசாமி..

“அக்கா ஒரு முக்கியமான வேலை பிறகு பேசுகிறேன்..” போனை கட் செய்தான்..

“அடேய் இங்கே உன் வாழ்க்கையே போய் கொண்டிருக்கிறது. அரைமணி நேரத்தில் வந்தால் கவிதா உனக்கு.. இல்லையென்றால் அந்த அய்யனாருக்கு.. அப்புறம் உன் இஷ்டம்…” மீண்டும் போன் செய்து குரைத்தாள்..

ஒரு மணி நேரத்தில் வந்து நின்ற தம்பிக்கு கவிதாவை வீட்டை விட்டு கடத்தி போய் திருமணம் செய்யும் யோசனையை தெரிவித்தாள்..

“அறிவிருக்கிறதா உனக்கு..? நான் ஒரு வக்கீல் நானே ஒரு பெண்ணை கடத்தி போவதா..?”

“காதலித்த பெண்ணை வக்கீலாக இருந்தாலும் கடத்தி போகலாம்..”




“உன் புருசன் ஒரு ஆள் போதும் என் பல்லை உடைக்க.. அந்த ஆள் ஏற்கெனவே என் மூக்கை உடைக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.. இப்போது அண்ணன் மகளை சாக்காக வைத்து என் பல்லையும் சேர்த்து உடைப்பார்..”

“உடைத்தால் வாங்கிக் கொள்.. உடைபட்ட மூக்கு, பல்லோடு கவிதா கழுத்தில் தாலிகட்டு அப்போதுதான் அவளுக்கு உன் மீது காதல் வரும்..”

“அதற்காக என் பல்லு போகனுமா..?” வேகமாக கேட்டவன் நிதானித்து அந்த சந்தேகம் கேட்டான்..

“காதல் வருமா.. அப்போ இப்போது இல்லையா..?”

“ஒரு பர்சென்ட் கூட உன் மேல் அவளுக்கு காதல் இல்லை.. இந்த உண்மையை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.. பெரிய வக்கீல் என்று கூடுதலாக ஒரு அபிமானம் மட்டும்தான் உன் மேல் இருக்கிறது.. அதனை இனித்தான் நீ காதலாக மாற்ற வேண்டும்..”

நாராயணசாமி மிரண்டான்..

“இந்த அபிமானமெல்லாம் காதலாக மாறுங்குற..?”

“மாறனும்.. இல்லைன்னா நீ மாத்தனும்..”

இத்தனை சொத்துக்களோடு ஜொலிக்கும் அழகோடு ஒரு பெண் தனக்கு மனைவியாக.. என்ற கற்பனையை இரண்டு ஆண்டுகளாக தன் மனதிற்குள் வைத்திருப்பவன் நாராயணசாமி.. அந்த நினைவிற்கு பசும் உரம் போட்டு வளர்த்தவள் சரளா… திடுமென அந்த ஆசை மரம் முறிவதை அவனாலுமே ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

அவனுக்கு அன்று கோர்டில் இவனை.. இவனது வாதத்தை கண்சிமிட்டாமல் வட்டமாய் விழி விரிய ஸ்படிக தேவதையாய் பார்த்தபடி பிரமித்து நின்ற கவிதா வேண்டும்… தன் மீது பிரமித்திருக்கும் இவள் மட்டும் தனக்கென வாய்த்தால்.. தன் சுண்டு விரல் அசைத்தலுக்கும் இவளை ஆட வைத்தால்.. ஆஹா, நினைவே அவனுக்கு இனித்தது..

“ம்.. சரிதான்கா நீ ப்ளானை சொல்லு.. நான் அவளை கூட்டிட்டு போய் தாலி கட்டிட்டு வந்திடுறேன்..” கனவு மின்ன முதலில் பேசியவன் திடுமென அலறினான்..




“எக்கா.. அவள்தான் என்னைக் காதலிக்கவே இல்லையே.. எப்படி என் கூட வருவா..?”

“ஆமாம்.. வரமாட்டாள்..” சரளா சாதாரணமாக சொல்ல, நாராயணசாமிக்கு தன் உடன்பிறந்தாளை மண்டை உடைக்கும் வேகம் வந்தது..

“ஏய் கிறுக்கு புடிச்சவளே அப்புறம் எப்படி நான் அவளை கல்யாணம் பண்ண..?”

“கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணு..”

பேய் படத்தின் இறுதி திகில் காட்சியை பய்ந்து பார்க்கும் சிறுவனை போல் நாராயணசாமி தன் சகோதரியை பார்த்தான்.. சரளா அச்சமயம் அவன் கண்களுக்கு அந்த பேய் படத்தில் வரும் ரத்த காட்டேரி போன்றே காட்சியளித்தாள்..

நாராயணசாமியின் நாட்டாமைத்தனமெல்லாம் மதுரை ஹை கோர்ட் வளாகத்திற்குள் மட்டும்தான்.. வளாகச் சுவர் தாண்டி காலெடுத்து வைத்து விட்டானென்றால் அவன் ஒரு சாதாரண மதுரைவாசி.. அதுவும் அன்னாசிலிங்கத்தின் முன்னால் வெகு சாதாரணமான ஓர் இந்திய பிரஜை மட்டுமே..

நேற்று கூட தங்கப்பாண்டி என் ஒரு கத்தல் போட்டாரே.. சர்வாங்கமும் நடுங்கி விட்டது அவனுக்கு.. ஆனாலும் கவிதா மேலிருந்த ஒரு வகை கவர்ச்சி உந்தவே அவன் ஓடாமல் நின்றிருந்தான்.. தங்கபாண்டியன் கத்திய கத்தலை.. சட்டை உலுக்கலை அன்னாசிலிங்கம் மட்டும் செய்திருந்தாரேயானால் அவன் இதோ இப்போது இந்த ஊர்ப் பக்கமே வந்திருக்க மாட்டான்.. அவ்வளவு பயம் அவனுக்கு அன்னாசிலிங்கத்தின் மீது..

அப்படிப்பட்ட சிம்மக்குரலோனின் மகளை.. (அவனுக்கு அன்னாசிலிங்கம் எப்போதும் சிம்மக்குரலோனாகத்தான் தெரிவார், குரலிலும் தோற்றத்திலும்) அவன் கடத்துவதா.. இந்த ஐடியாவை அவனுக்கு வழங்குவது அவனை நன்கு அறிந்த அவனது அக்காவா..?

அவன் தனது அக்காவிற்கு பேய் பிடித்திருப்பதாகவும் அதனால் அவள் நிலையில்லாமல் உளறுவதாகவும் முடிவெடுத்தான்..

“அக்கா நாளைக்கு பொழுது சாயுறப்ப போயி, நம்ம மாடசாமி கோவில்ல தண்ணியடிச்சிட்டு வந்துடுவோமா..?” அக்கறையாக கேட்டான்..

சரளா ஏதோ நினைவில்.. “மாடசாமி கோவில் இல்லைடா, செண்பக மாரியம்மன் கோவில்..”  என்று விட்டு யோசித்து நிறுத்தினாள்..

“மாடசாமி கோவிலுக்கு எதுக்கு..?”

“உன்னை பிடிச்சு ஆட்டிட்டு இருக்கற முனியை விரட்டத்தான்.. மாடசாமி கோவில் தீர்த்தத்தை மந்திரிச்சு மூஞ்சியில் தெளிச்சா நீ சொஸ்தமாயிடுவ..” விளக்கி விட்டு தலையில் இரண்டு இடி வாங்கினான்..

“மூதேவி.. நீயெல்லாம் எப்படித்தான் கோர்ட்ல அந்த பேச்சு பேசுறியோ..? நம்ம ஊரு கணம்ாய் கரையில இருக்கிற செண்பக மாரியம்மன் கோவிலுக்கு நான் எதையாவது சொல்லி கவிதாவை அனுப்பி வைக்கறேன்.. நீ அங்கே கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணி விட்டு காத்திரு.. அவள் வந்ததும்.. எதையாவது சொல்லி அவளை சமாளித்து அவள் கழுத்தில் தாலி கட்டிடு..”




நாராயணசாமிக்கு இந்த யோசனை கொஞ்சம் பரவாயில்லாமல் தெரிந்தது.. தானாக வீட்டை விட்டு வெளியே வரும் கவிதாவை ஏய்த்து பேசி கோவிலில் தாலி கட்டுவது அவனுக்கு இலகுவெனவே தோன்றியது..

அவன்தான் வக்கீலாயிற்றே.. பேச்சில் வல்லவன் ஆயிற்றே.. அதைவிட முக்கியம் அவனது பேச்சிற்கு கவிதா அடிமையாயிற்றே.. அவனது பேச்சில் மயங்கி அவள் நிற்கும் போதே அவன் அவள் கழுத்தில் தாலியை கட்டிவிட மாட்டானா..?

மனம் மயக்கும் காதல் வசனங்களுடன் உயிர் உருக்கும் கவிதை ஒன்றையும் மனதிற்குள் தயாரித்தபடி தனது சகோதரியின் சதித் திட்டத்திற்கு உற்சாகமாக தலையாட்டினான் நாராயணசாமி..

What’s your Reaction?
+1
11
+1
15
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!