வா எந்தன் வண்ணநிலவே…

வா எந்தன் வண்ணநிலவே-1

1

அவன்தானா …அவனேதானா கண்களை மீண்டும் மீண்டும் சிமிட்டி பார்த்தாள் .பிறர் கவனம் கவராமல் விழிகளை நாசூக்காய் கசக்கி கொண்டாள் .அவன்தான் …அவனேதான்.

எப்படி…? எப்படி இது நடந்தது ?எழில் நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இங்கே என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? அவளது பெண் பார்க்கும் படலம் தானே? அதோ எதிரில் அமர்ந்திருப்பவன் தான் மாப்பிள்ளையா? இது எப்படி சாத்தியம்?

மறுப்பை பூரணமாக வெளிக்காட்ட முடியாமல் இந்த பெண் பார்க்கும் ஏற்பாட்டை செய்தது தந்தையாக இருக்க, எதிர் பேச்சு பேசாமல் தலையசைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள் அவள்.

மனம் நிறைய வெறுப்பும் விரக்தியும் நிறைந்திருக்க அந்த நேரத்தில் தனது பிறப்பையே வெறுத்தபடி தலை குனிந்தபடியே வந்து அமர்ந்தவளின் முதல் பார்வையில் விழுந்தது அந்த நீளமான கால்கள்தாம். .வெண்மையான பச்சை நரம்போடிய இளஞ்சிவப்பு  நக கிரீடம் தாங்கிய அகன்ற ராஜ பாதங்கள் .

அந்த பாதங்களை பார்த்த நொடியே  குவியலான பனிக்கட்டிகளை தலை மீது உணர்ந்தாள்.இனிப்பா…,புளிப்பா…துவர்ப்பா  ஏதோ ஓர் சுவை நாக்கில்.  பார்வையை மெல்ல உயர்த்தினாள் .உறுதியான உடம்பையும் ,நீளமான கைகளையும் ,பரந்த தோள்களையும் தாண்டி முகத்தை சந்தித்தபோது மெல்ல ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தாள். விழுந்து விடுவோமோ என்ற பயத்துடன் சோபாவின் கைப்பிடியை பற்றிக் கொண்டாள்.

அவன்… நித்யவாணன்… அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னவென்று விளங்கிக் கொள்ள முடியாதோர் பார்வை.

அட…நீயா என்ற ஆச்சரியமா?

சே…நீதானா என்ற அலட்சியமா!

ஏய் …என்ன செய்து விட்டாய் என்ற கோபமா …?

ம்…என்ன செய்ய முடியும் என்ற திமிரா?




அவன் பார்வையின் செய்திகளை படிக்க முடியாமல் தவித்தன அவள் விழிகள். அவன் இதழ்கள் மெல்ல அசைந்தன. என்ன பேசுகிறான்? எழில் நிலா அவன் உதடுகளை உறுத்தாள்.

“முதல்ல அவளை கேளுங்க ” 

எ…என்ன கேட்க சொல்கிறான் ? மலங்க மலங்க விழித்தாள் . அய்யய்யோ எதற்கோ பதறியது அவள் உள்ளம்.

“எங்க வீட்டு பொண்ணுங்களை நாங்க அப்படி வளர்க்கலை .கழுத்தை நீட்டுன்னா நீட்டிடுங்க புள்ளைங்க”குடும்ப பெருமை பேசினாள் அத்தை கற்பகவல்லி …அப்பாவின் தங்கை .

அந்த இக்கட்டான நிலைமையிலும் நான் என்ன ஆடா? மாடா ? எரி பார்வையை அத்தை பக்கம் வீசிவிட்டு திரும்பியவள், பிறகே யோசித்தாள். என்ன கேட்டான் இவன்… திருமண சம்மதமா?

பெண் பார்க்க வந்திருக்கும் இடத்தில் திருமண சம்மதம்தான் கேட்பார்கள் என்று அவள் மூளைக்கு உரைத்தாலும்… ஆனால் எப்படி, என்னிடம் சம்மதம் கேட்கிறான்? அப்படி என்றால் இவனுக்கு சம்மதமா ? அ…அப்படி சம்மதிப்பானா என்ன ?

ம்ஹூம் ,சம்மதிக்க மாட்டான் .அன்று அவ்வளவு தூரம் பேசி விட்டு ,..இல்லையில்லை சான்சே இல்லை. ஆனாலும் இப்படி குடும்பத்தோடு பெண் பார்க்க வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறானே,அதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும்?

தனக்குள்ளாகவே பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தவள் “நாங்கெல்லாம் வாசப்படி தாண்ட விட மாட்டோம் எங்க வீட்டு பொண்ணுங்களை ,இப்பவும் வாசலை விட்டு இறங்கும்போது எங்க கையை பிடிச்சிக்கிடும் எங்க வீட்டு பொண்ணுங்க “என்ற அத்தையின் தொடர் கதாகாலட்சேபத்தில் நொந்து போய் ஓரக் கண்ணால் அவனை ஏறிட்டாள் .

அவன் இன்னமும் அவளையேதான் பார்த்தபடி இருந்தான் .குப்பென வியர்த்தது இவளுக்கு .

இவன் பார்வை அப்போதிலிருந்து இடம் மாறவே இல்லையா? இத்தனை பேரை சுற்றி வைத்துக் கொண்டு என்ன கர்மத்திற்கு இப்படி பார்த்து தொலைகிறான் ?இவர்களெல்லோரும் என்ன நினைப்பார்கள்? என்னை… பார்க்க வந்த பெண்ணை அவ்வளவு தூரம் பிடித்திருக்கிறது என்று நினைப்பார்கள் தானே?

டேய், நீ இப்படி பிடுங்குவது போல் பார்த்து வைத்தாயானால்,நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க பாத்துக்கோ…எச்சரிக்கை செய்தி ஒன்றை அவன் விழிகளுக்கு தன் கண்களால் அனுப்பினாள்.அதனை உணர்ந்தானோ என்னவோ,ஒரு மாதிரி தலையசைத்துக் கொண்டான்.சரிங்கிறானா…?வேண்டாங்கிறானா? எழில்நிலா அவனை கூறு போட்டு ஆராய்ந்து கொண்டிருக்கையில்…ஆன்ட்டி என யாரையோ அழைத்தான் அவன்.




என் வீட்டில் உனக்கு என்ன ஆன்ட்டி உறவுமுறை? கோபமாக உறுத்தவள்,அந்த ஆன்ட்டி தன் அத்தை என உணர்ந்து பக்கென்றானாள்.ஐய்யய்யோ இந்த அத்தை வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்களே! இவன் தோண்டி துருவுவானே! அவள் பயந்தபடிதான் ஆனது.

” ஓ..அப்ப அன்னைக்கு கொடைக்கானல்ல நீங்கெல்லாம் எங்க இருந்தீங்க ஆன்ட்டி ?உங்க வீட்டு பொண்ணோட கையில் உங்க விரல் இல்லையே ?”

ஒருநிமிடம் தலை சுற்றிவிட்டது அவளுக்கு .என்ன இவன் இப்படி போட்டு உடைக்கிறான்?

அத்தையின் முகம் மாறியது.இப்போதுதான் அவர்கள் குடும்ப பெண்களின் அடக்க ஒடுக்கங்களை பேச ஆரம்பித்திருக்கிறாள்.இந்த நேரத்தில் இதென்ன இடையூறு… அத்தையின் கோபம் அப்பாவின் மேல் பார்வை கேள்வியாய் பாய்ந்தது.

“எழில் செமஸ்டர் லீவுக்கு கொடைக்கானலுக்கு போயிருந்தாளக்கா,தம்பி அதை சொல்றாருன்னு நினைக்கிறேன்…” அப்பா தயக்கமாக நித்யவாணனை பார்த்தபடி சொல்ல,இப்போது அத்தையின் கோப பார்வை அம்மா மஞ்சுளா பக்கம் பாய்ந்தது.

இதெல்லாம் உன் வேலைதானா…பற்களை நறநறக்க, அம்மா அத்தையின் உருண்ட விழிகளிலிருந்து அவசரமாக பார்வையை திருப்பிக் கொண்டு” கொடைக்கானலில் எனது தங்கை இருக்கிறாள்.கல்லூரி விடுமுறையின் போது எழில் அங்கே கொஞ்ச நாட்கள் போயிருந்தாள்.அப்போது…” மேலே தொடர வார்த்தைகள் கிடைக்காமல் தயங்கி நித்யவாணனை பார்த்து நிறுத்தினாள். 

” கொடைக்கானல்ல நீ எழில்நிலாவை பார்த்தாயா நித்யா ?” மகனிடம் கேட்டாள் அவன் அன்னை சந்திராவதி .

“ம் ..”என ஓரெழுத்தில் விடை கொடுக்கிறான் தனயன் .பார்வை மட்டும் அவள் முகத்தை விட்டு அகல்வதாயில்லை .

“எழில் நீ எப்போ அவரைப் பார்த்தாய்?”அடக்கப்பட்ட குரலில் அவளிடம் கேட்டாள் அவள் அன்னை.  புயலுக்கு முன்னான அமைதியை தாயின் குரலில் இனங்கண்டு வயிற்றை கலக்க எப்படி சொல்லலாம்… நகத்தை கடித்தபடி, வினை விதைத்தவன் அறுக்க வருவானா… நப்பாசையுடன் அவனையே ஏறிட்டாள் .

அவனோ அலட்சிய பாவத்துடன் உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ?யார் நீ ? என்ற ரீதியில் பார்த்து விட்டு வெகு நேரமாக அவள் முகத்தில் ஒட்டியிருந்த பார்வையை பிய்த்தெடுத்து விட்டத்தில் ஓடும் பல்லியை ஆராய தொடங்கினான் .

வெளியே தெரியாமல் பல்லை கடித்து கொண்டாள் அவள் .இவனை …டக்கென எழுந்து அவன் தலையில் ணங்கென ஒரு கொட்டு வைக்கும் ஆவலை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள் .

அந்தக் கொட்டை தலையில்  உணர்ந்தானோ ..தன் போக்கில் தலையை தடவியபடி ஓரக்கண்ணால் அவளை ஆராய்ந்தான் .

” சித்தி வீட்டுக்கு போனப்ப ..எல்லோருமா லேக் போனப்ப …போட்டிங் டிக்கெட் வாங்க நின்னப்ப ..அங்க வச்சு ….இவரை …வந்து…சித்தப்பா கூட பேசினார்.அவருக்கு தெரிஞ்சவர்னு…அப்போதான் …”

ஒன்றுக்கொன்று தொடர்பின்றி தலையை குனிந்தபடி கண்ணை மூடிக்கொண்டு சொல்லி முடித்து அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கீழுதட்டை பிதுக்கினான்.ஏதோ ஆட்சேபிக்க வாயை திறந்தவன் போதும் ப்ளீஸ் என்ற அவளின் இறைஞ்சல் பார்வையில் கருணை கொண்டு வாயை மூடிக்கொண்டு மையமாக தலையை ஆட்டி வைத்தான் .

” அது…எப்பவுமே அப்படியெல்லாம் எங்க வீட்டு பொண்ணுங்களை தனியா அனுப்ப மாட்டோம் .அன்னைக்கு குழந்தை ரொம்ப ஆசைப்பட்டாளேன்னு… அதான் ,அவள் சித்தி கூட நல்ல மாதிரி பார்த்துக்கிடுவா…கூடவே வந்து …கூடவே நின்னு …அதான் …இல்லைன்னா “என தொடர்ந்த அத்தையை,

“உங்க வீட்டு பொண்ணுங்களை அப்படியெல்லாம்  அனுப்ப மாட்டீங்க…இல்லையா ஆன்ட்டி ?”என லேசான கிண்டலுடன் ஆரம்பித்தவன், “எனக்கு உங்க பொண்ணை பற்றி தெரியும்” என அழுத்தமாக அவள் முகத்தை பார்த்தபடி கூறி முடித்தான்.

“சரி…சரி பொண்ணு மாப்பிள்ளை சம்மதம் கேட்டுட்டீங்கன்னா மத்த விபரங்களை பேசலாம்ல…” அவன் பக்க உறவினர் ஒருவர் கேட்க,எழில்நிலாவினுள் மீண்டும் திக்…திக். அப்படி ஊர் சுற்றும் பெண் வேண்டாமென்று விடுவார்களோ?

கேள்வியாய் நோக்கிய தாய்க்கு இமைகளை அழுந்த மூடி திறந்து சம்மதம் தெரிவித்தான் நித்யவாணன்.கம்பீரமாய் நிமிர்ந்து “உங்கள் பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது” என சபையில் அறிவித்தான் .

குத்தூசி ஒன்று தொண்டையில் சொருகியதாய் உணர்ந்தாள் அவள் .ஆனால் என்ன இது வலிக்காமல் தித்திக்கிறதே !குருதிக்கு பதில் தேன் கசிந்தாற் போலிருக்கிறதே!

சந்திராவதி இனி உங்கள் முறை என்பது போல் மஞ்சுளாவை பார்க்க,மஞ்சுளா சோபாவில் அமர்ந்திருந்த மகளின் தோளில் கை வைத்து “எழில்…?” என்றாள்.

மத்தளங்கள் உடல் முழுதும் அதிர ,அன்னையின் மென் கேள்விக்கு “ம்” என சம்மதித்து தலையசைத்தாள் எழில்நிலா.




கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது வீடு. இரு பக்கத்து ஆட்களும் நேசத்துடன் கைக்குலுக்கிக் கொண்டனர்.

இப்போது அவன் விழிகள்  சொல்வதென்ன ? ப்ச்…யார் கண்டது இவன் விழி சொல்லும் மொழிகளை அலுப்புடன் எண்ணிக்கொண்டாள்.அன்று போல் இன்றும் புதிராகவே தோன்றினான்.

இரு குடும்பத்தினருக்குமிடையே அடுத்தடுத்த நிகழ்வுகள் பேசப்பட்டன .அவரவர் சௌகர்யங்கள் அலசப்பட்டன .இரு பக்கமும் பணப்பிரச்சனையற்ற குடும்பம் என்பதால் திருமண திட்டமிடல்களில் எந்த தடங்கல்களும் வரவில்லை .

அடுத்த அரைமணியில் தெய்வசிகாமணி மகன் நித்யவாணனுக்கும் ,பரமேஸ்வரன் மகள் எழில்நிலாவுக்கும் திருமணம் என முடிவு செய்யப்பட்டு பெண்ணுக்கு பூ வைக்கப்பட்டது .திருமணத்திற்கு மதுரையிலேயே மிகப் பெரிய திருமண மண்டபம் முடிவு செய்யப்பட்டது.பத்து நாட்கள் கழித்து சென்னையில் ரிசப்ஷன் தேதி குறிக்கப்பட்டது.

எழில்நிலா அடிக்கடி தன் கையை கிள்ளி கிள்ளி பார்த்து அவளுக்கு கையெல்லாம் சிவந்து விட்டது .நித்யவாணனின் பார்வையை பிடித்து அவன் மனதை அறிந்து கொள்ள முயன்றாள்.

ஆனால் அவன் பார்த்தால் அல்லவா ?அவள் சம்மதம் சொல்லும் வரை அக்கம் பக்க கவலையின்றி அவளை பார்வை பசிக்கு இரையாக்கி கொண்டிருந்தவன் பிறகு அவள் புறம் திரும்பவே இல்லை.

அவளை தவிர மற்ற அனைவருடனும் பேச அவனுக்கு நிறைய விசயங்கள் இருந்தன.அவள் தம்பிக்கு மேற்படிப்பு ஆலோசனை சொன்னான் .தந்தையுடன் அரசியல் பேசினான் .அத்தையிடம் குலதெய்வ வழிபாடு பேசினான் .அத்தை மகனுக்கு கிரிக்கெட் கோச்சிங் அட்ரஸ் சொன்னான் .அம்மாவின் சமையலை ரசித்தான் .அத்தை பெண் அஞ்சனாவிற்கு சில அழகு குறிப்புகள் கூட சொன்னான்.

வீட்டினர் அனைவரிடமும் அவரவர்க்கு தக்க இயல்பாக உறவாடினான் .அவளை மட்டும் ஒதுக்கினான் பார்வையில் கூட .

அடேய் கோழியை களவாடுற கள்ளப்பருந்து மாதிரி இவ்வளவு நேரம் பார்த்துட்டு,இப்ப ஏன்டா எவனோ மாதிரி உட்கார்ந்திருக்கிறாய்? இங்கே என்னை பாருடா.என்னை…இந்த எழில்நிலாவை உனக்கு கல்யாணம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இதில் உனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லையா?

மனதிற்குள் பல முறை இரைந்து பார்த்தும்,அது அவனை எட்டவில்லை.நிஜமாகவே இந்த கல்யாணம் நடந்துடுமா என்ன? கவலையோ…நிம்மதியோ புது வெள்ளத்தின் குமிழிகளாய் எழில்நிலாவின் மனதை நிறைத்த நேரம் அந்த இடையூறு வந்தது.

சீர் வரிசை விபரங்கள் பேச முயன்ற பரமேஸ்வரனை “உங்கள் குடும்ப வளம் தெரியும்.உங்களுக்கு விரும்பமானதை பெண்ணுக்கு செய்யுங்கள்” என்றார் தெய்வசிகாமணி.

“ஆனாலும் எங்கள் பக்க செய்முறைகளை நாங்கள் சபையில் பேசி விடுவதுதானே நியாயம்? “

“சேச்சே நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? இப்படி எல்லோர் முன்பும் பட்டியலிடுவதென்றால்…ம்கூம் அது எங்களுக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறது”

“என்னங்க இது ஆச்சரியம்! எங்க பொண்ணு கூட சேர்த்து  வண்டி நிறைய சீர் அனுப்பும் போது,ஒரு மாதிரி இல்லை.அதையே நாங்கள் வாயால் சொல்லும் போதுதான் மாதிரியாக இருக்கிறதா?” துடுக்காக கேட்டாள் கற்பகவல்லி.உடன் வீடு முழுவதும் ஒரு அமைதி பரவியது.

“என்னம்மா பேசுறீங்க?”அவர்கள் பக்கம் ஒரு குரல் கேட்க…

” உள்ளதை பேசுனாங்க” இவர்கள் பக்கம் ஒரு குரல் எழும்பியது.

தொடர்ந்து இரு பக்கமும் சிறு சலசலப்பு எழ ஆரம்பித்தது.

எழில்நிலாவின் கண்களில் உடனே நீர்த்திரை தோன்ற ஆரம்பித்திருக்க,மசமசப்பான பார்வையுடன் நித்யவாணனை பார்த்தாள்.ஏய் இப்போதாவது என்னை பாரேன்டா.இ…இங்கே நிலைமை வேறு மாதிரி போகிறாற் போலிருக்கிறது.

அவன் இப்போதும் அவளை பார்க்கவில்லை.அவனது கண்களும் கடும் சினத்தை காட்டிக் கொண்டிருந்தது.

“ஏய் நில்லுடி இதற்கெல்லாம் உன்னை ஒரு நாள் பழி வாங்காமல் விடமாட்டேன்” எப்போதோ சொன்ன அவன் குரல் இப்போது போல் அவள் காதுக்குள் ஒலித்தது.




What’s your Reaction?
+1
36
+1
24
+1
4
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!