Serial Stories வா எந்தன் வண்ணநிலவே…

வா எந்தன் வண்ணநிலவே-2

2

கல்யாண சீர்வரிசை கொடுக்கவில்லை என்றால் தானே பொதுவாக பிரச்சனைகள் வரும். நிறைய கொடுக்கிறேன் என்று சொல்வதிலுமா பிரச்சனைகள் வரும்? எழில்நிலா சுற்றி நடந்து கொண்டிருப்பவைகளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 கற்பகவல்லிக்கு முதலிலேயே இந்த சம்பந்தத்தின் மேல் லேசான பொறாமை இருந்தது என்பது எழில்நிலாவிற்கு இப்போதுதான் ஞாபகம் வந்தது.  திருமணப் பேச்சு வீட்டில் நடைபெற ஆரம்பித்ததுமே அதனை தடுக்க முடியாமல், கலங்கிய உள்ளத்தை முகம் காட்டாமல் இருக்க, தன்னைத்தானே உறவுகளின் மத்தியிலிருந்து மறைத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

 அவளைப் பற்றிய பேச்சு நடக்கும் இடங்களை விட்டு வெகு தொலைவாக தள்ளி இருக்க ஆரம்பித்தாள். உள்ளே பூட்டப்பட்ட அவள் அறை, மொட்டை மாடி வாட்டர் டேங்க் அடிப்புறம், தோட்டத்தின் மூலையிலிருந்த மாமர மேடை, வாசல் ஓரத்தில் இருந்த சலவைக்கல் பிள்ளையார் பீடம் என அவளுக்கான ஒதுக்கமான இடங்கள் அவர்கள் வீட்டில் நிறையவே இருக்கவே, எப்போதும் ஏதோ ஓர் இடத்தில் தன்னை முடக்கிக் கொண்டே இருந்தாள்.

 ஆனாலும் உணவின் போது,காரில் வெளியே பெற்றோருடன் செல்லும்போது என அவளும் உடன் இருக்கும் சந்தர்ப்பங்களில் அப்பா அம்மா தம்பி என அவள் திருமணம் குறித்து பேசுகையில் அவளுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வரன்,சென்னையில் பெரிய தொழில் குடும்பத்தை சேர்ந்த வளம் மிக்கவர்கள்  என்பது தெரிய வந்தது. அவள் இருக்கும் பொழுது மிகவும் குறைவான விபரங்களையே அவள் தாய் தந்தை பேசிக்கொண்டாலும்,விழுந்த வார்த்தைகளை காதில் வாங்காமல் இருக்க அவள் முயன்றாலும், மீறி காதில் விழுந்த வார்த்தைகள் எழில்நிலாவின் சந்ததி முழுமைக்கும் பணப்பிரச்சனை வராது என்பதாக இருந்தது.

 அவள் திருமணம் பற்றிய ஒன்றிரண்டு வார்த்தைகள் காதில் விழுந்த உடனேயே தன் கவனத்தை அங்கிருந்து கிளப்பி எங்கோ எறிந்து விடுவதால் எழில் நிலாவிற்கு மாப்பிள்ளை சம்பந்தப்பட்ட தகவல்கள் எதுவுமே தெரிந்திருக்கவில்லை. அம்மாவும் அப்பாவும் சென்னையில் மாப்பிள்ளை வீடு சென்று பார்த்துவிட்டு முழு மன திருப்தியோடு திரும்பி வந்து பெண் பார்க்க அழைப்பு விடுத்தனர்.

 அதன் பிறகு மஞ்சுளா இவள் காதில் ஒரு நாள் முணுமுணுத்தாள். “உன் அத்தையிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள் எழில். அவர்களும் அஞ்சனாவிற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்தானே! இது போன்ற சம்பந்தம் எங்கள் கண்ணில் படவில்லையே என்று உன் அத்தை மாமாவிடம் சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. இதையெல்லாம் நான் அப்பா காதுக்கு கொண்டு போக முடியாது. நீ புத்திசாலி பெண் புரிகிறதில்லையா?” 

அப்போதைக்கு அம்மாவிற்கு கடனே என்று தலையசைத்து வைத்திருந்தாள்.இந்த அம்மாவிற்கு வேறு வேலை இல்லை,அப்பா பக்கத்து உறவுகளை எந்நேரமும் குறை சொல்லிக் கொண்டு… என்றுதான் அன்று அவள் மனதில் தோன்றியது. ஆனால் இதோ இன்று அத்தை தனது வேலையை காட்டி விட்டார்களே! அம்மா இதற்குத்தான் பயந்தார்களோ! எழில்நிலா தன் தாயை பார்க்க மஞ்சுளாவின் கண்களும் அந்நேரம் கலங்கி இருந்தது. மகளின் கலக்கத்தை பார்த்ததும் இன்னமும் கண் கலங்க நான் சொன்னேன் பார்த்தாயா! என்று கண்ணால் ஜாடை காட்டினாள்.

 அப்பாவிடம் பேசுங்கம்மா, மகள் பதில் ஜாடை காட்ட மறுப்பாய் தலையசைத்தாள் தாய். எப்போதுமே கணவனிடம் பேச கொஞ்சம் தயங்குபவள்தான் மஞ்சுளா. இப்போதோ அவருக்கு உடல்நலம் சரியில்லை முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்த இந்த நாட்களில் நிச்சயம் பேசவே மாட்டாள் என்று எழில்நிலாவிற்கு புரிந்து போனது.

 அம்மாவைச் சொல்லி குற்றமில்லை இதோ அவளே அப்பாவின் உடல் நிலையை எண்ணித்தானே இந்த பெண்பார்க்கும் படலத்திற்கும் தொடர்ந்து பேசப்படும் திருமணத்திற்கும் ஒத்துக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறாள். ஆனால் அவளே எதிர்பாராதது அவனே மணமகனாக வருவான் என்பதை. இப்போது என்ன செய்வது வினாடியில் அவள் மனதில் இத்தனை எண்ணங்களும் முட்டி மோதி விட தாயை விடுத்து தகப்பனை நோக்கினாள்.




 மிகுந்த தர்ம சங்கடம் பரமேஸ்வரனின் முகத்தில்…மருத்துவர் முழு ஓய்வை கட்டாயப்படுத்திய பிறகு இன்னமும் சிறுவனாக இருக்கும் மகனிடம் தொழில் பொறுப்புக்களை கொடுக்க முடியாமல் அக்காவின் கணவரைத்தான் தொழிலுக்காக நம்பிக் கொண்டிருந்தார்.   எப்போதுமே தன்னைவிட வயதில் மூத்தவளான அக்காவை எதிர்த்துப் பேசும் வழக்கம் அவருக்கு கிடையாது.

 இப்போதும் இது என்ன பேச்சுக்கா.. விடுங்க…! என்று ஒரு வார்த்தையில் அக்காவை அடக்கும் வித்தை தெரியாமல் விழித்தபடி இருந்தார். மஞ்சுளாவோ இந்த குழப்பத்தில் கணவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பதட்டத்தில் வேகமாக அவர் அருகில் நகர்ந்து ஆதரவாக அவர் தோளை பற்றியபடி நின்றாள்.

 எழில்நிலாவின் தம்பி பிரதீப் என்ன செய்வதென தெரியாமல் பள்ளிப்பருவ குழந்தைமையில் இருக்க, எழில்நிலா மீண்டும் சரணடைந்தது நித்யவாணனிடமே. 

எனக்குத்தான் நீ தான் மாப்பிள்ளை என்று தெரியாது, உனக்கு நான்தான் பெண்ணென்று தெரியாமல் இருக்க வாய்ப்புகள் இல்லை. ஆக இந்த திருமணத்தை விரும்பித்தானே வந்தாய்? இப்போது நீயேதான் ஏதாவது செய்ய வேண்டும்.இப்படி ஒரு கோரிக்கையை அவனுக்கு கண்களால் அனுப்பி வைக்க, இமை சிமிட்டும் நேரம் மட்டும் அவன் கண்களை சந்தித்தவன், லேசாக தொண்டையை செருமிக் கொண்டான்.

 இவன் எதுவும் செய்வது போல் தெரியவில்லை. ஒருவேளை அப்பா அம்மாவிற்காக இங்கே வந்துவிட்டு இப்படி ஏதாவது ஒரு சாக்கிட்டு திருமணத்தை நிறுத்தி விடலாம் என்பதுதான் இவன் திட்டமோ! நிராசையுடன் அவனை பார்த்தாள்.ஆக…இதுதான் இவன் அன்று சொன்ன பழி வாங்கலா!

நித்யவாணனின் பார்வை இப்போது கற்பகவல்லி பக்கம் போயிருந்தது. “அதெல்லாம் எங்களுக்கு தெரியாது, எங்க வீட்டு பொண்ணுக்கு என்னென்ன சீர் செய்யப் போறோம்னு ஹேர்ப்பின்ல இருந்து ஸ்டிக்கர் பொட்டு வரை இங்கே நாங்கள் சொல்லித்தான் தீருவோம்” முழக்கமிட்டுக் கொண்டிருந்த கற்பகவல்லி தன் தோளை யாரோ தட்டும் உணர்வில் திரும்பிப் பார்த்து “பே” என விழித்தாள்.

” ரிலாக்ஸ் ஆன்ட்டி, தண்ணி குடிச்சுக்கோங்க “ஓரமாய் இருந்த பெரிய தண்ணீர் ஜக்கை தூக்கி அவள் முகத்தின் முன் நீட்டியவன் “இந்த கல்யாண பேச்சை தொடர்ந்து நடத்தலாமா இல்லை நிறுத்தி விடலாமா ஆன்ட்டி?” பவ்யமாக கேட்க எல்லோருமே அதிர்ந்தனர்.

அவனது இந்த நேரடியான கேள்வியில் திகைத்து நின்ற கற்பகவல்லி “வந்து… எதுக்கு… கல்யாண பேச்சு நிறுத்தனும்…?” தடுமாறினாள்.

” அதுதானே உங்க வீட்டு பொண்ணு கல்யாணத்தை நீங்களே நிறுத்த நினைப்பீர்களா என்ன?”

” ஆமாம்… ஆமாம், அஞ்சனா போல் எழிலும் என்னுடைய மகள் மாதிரிதான். இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி மாப்பிள்ளைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” சந்தடி சாக்கில் தன் வீட்டில் திருமணத்திற்கு இருக்கும் பெண்ணை சபையில் கூறிக் கொண்டாள் கற்பகவல்லி.

” அட உங்களுக்கு கல்யாண வயதில் மகள் இருக்கிறாளா? ஆனால் உங்களைப் பார்த்தால் அப்படி தெரியவே இல்லையே!நான் உங்கள் மகள் பள்ளிக்கு போய்க்கொண்டிருப்பாள் என்றல்லவா நினைத்தேன்” சபை நடுவே நித்யவாணன் சொன்ன இந்த முகஸ்துதியில் கற்பகவல்லியின் முகம் சிவந்தது.படபடத்த விழிகளுடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டாள்,இவன் பேச்சை வேறு யாரும் கவனிக்கிறார்களா என… ஏனென்றால் பள்ளி செல்லும் மகளை பற்றி  சொன்னபோது தனது பேச்சு சத்தத்தை வெகுவாக குறைத்திருந்தான் நித்யவாணன்.

 கற்பகவல்லிக்கு மிக அருகில் நின்று அவன் தோளுக்கு கீழே இருந்த கற்பகவல்லியின் முகத்திற்கு குனிந்து பேசினான். நீளமும் அகலமுமான அந்த பெரிய ஹாலில், விரிவாக போடப்பட்டிருந்த சோபாக்களில் சற்று தூரமாகவே அமர்ந்திருந்தனர் எல்லோரும். அவர்களின் கவனத்தை கவர என்றே சோபாக்களின் நடுமையத்தில் வந்து நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தாள் கற்பகவல்லி.




 அதட்டலாய் பேசுவது போல் முதலில் அவள் அருகில் நெருங்கியிருந்த நித்யவாணன் பிற்பகுதியில் மிக பேச்சை குறைத்து சிறு முணுமுணுப்பாக பேசிக் கொண்டிருந்தான். இது சற்று தள்ளி தூரமாக அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு கேட்கவில்லை, எனினும் பெண் என்ற முறையில் அனைவரும் பார்க்கும்படி நடு நாயகமாக போடப்பட்டிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்திருந்த எழில்நிலாவிற்கு நன்றாகவே கேட்டது.

 இவன் என்ன அத்தையிடம் இப்படி பேசுகிறான்! விழிகளை அகல விரித்து அவர்களை பார்த்தபடி இருந்தாள். எழுபத்தைந்து கிலோ உடம்பை நளினமாக காட்ட  சற்றே நெளிந்த கற்பகவல்லி “அது வந்து ரொம்ப சின்ன வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு… அதுதான் என்னை பார்த்தால் வயது தெரிவதில்லை” என்று முடித்த போது கன்னங்கள் லேசாக சிவந்ததை ஆச்சரியமாகப் பார்த்தாள். 

எழில்நிலா நித்யவாணனின் முகஸ்துதியை உணர்ந்தே இருந்தாள். ஆனாலும் அதற்கு அத்தை காட்டிய எதிர்வினையைத்தான் அவளால் நம்ப முடியவில்லை. அட, ஒரு சிறு பாராட்டு இந்த பெண்களை எவ்வளவு மென்மையானவர்களாக்கி விடுகிறது! ஆச்சரியமாக பார்த்திருந்தாள்.தன்னை பற்றியதோ, தனது செயல்களை பற்றியதோவாக ஒரு சிறு பாராட்டிற்கு இந்த பெண்கள்தான் எவ்வளவு ஏங்கிப் போயிருக்கின்றனர்,எந்த வயதினராக இருந்தாலும்.

வாஞ்சையுடன் அத்தையை பார்த்தவள்,கண்களில் குறும்பேற்றி பார்வையை அவனுக்கு மாற்றினாள்.”அடப்பாவி ‘ஆன்ட்டி’…ஹீரோவா நீ !” வாய்க்குள் முணுமுணுக்க,அதனை கவனித்து விட்டவனின் கண்கள் மின்னி உன் கேலியை ஏற்றுக் கொண்டேனென அறிவித்தது.

” பார்க்காமலேயே சொல்லிவிடுகிறேன் ஆன்ட்டி, உங்கள் மகளும் நிச்சயம் உங்களை போல அழகாகத்தான் இருப்பார்கள்.அவர்கள் திருமணம் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதே இல்லையே. அத்தோடு வீட்டிற்கு பெரியவர்களாக இப்போது கூடி வந்திருக்கும் உங்கள் தம்பி மகளின் திருமணத்தை நீங்கள்தானே முன்னிருந்து நடத்த வேண்டும்”

 கற்பகவல்லியின் தலை தானாக நிமிர்ந்து விட்டது. நித்யவாணனின் சாதுரியத்தை கன்னத்தில் கை தாங்கி சுவாரஸ்யமாக ரசித்துக் கொண்டிருந்தாள் எழில்நிலா. இவன் இப்படியெல்லாம் பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம். இது போலவே அவளிடமும்  மனம் உணர்ந்து பேசிப் பேசித்தானே, அவளையும் வெண்ணையாய் உருக வைத்துக் கொண்டிருந்தான். எழில்நிலாவின் மனதிற்குள் அவர்களது முன் சந்திப்பு பொழுதுகள் செம்பருத்தி இதழ்களாய் விரிந்தன.

கற்பகவல்லி தள்ளி ஓரமாக நின்ற தன் மகளை பார்த்துவிட்டு சோபாவில் அமர்ந்திருந்த அண்ணன் மகளையும் பார்த்தாள். முகத்தில் மகிழ்ச்சி பெருக்குடன் “ஆமாம் என் மகளுக்கு திருமணம் தானாகவே தேடி வந்து கை கூடும். ஆனால் இவளுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். நீங்கள் கவலைப்படாதீர்கள் தம்பி எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்”

 அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் இருக்கும், நித்யவாணனும் கற்பகவல்லியும் பேசிக் கொண்டது. பரமேஸ்வரன் தன் அக்கா எதுவும் தவறாக பேசுகிறாளோ என்று பயந்து அவர்கள் அருகில் எழுந்து வந்த போது, இந்தத் திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தித் தரவேண்டிய பொறுப்பு தன்னுடையது என்று நித்தியவாணனுக்கு வாக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள் கற்பகவல்லி.

 பரமேஸ்வரன் நிம்மதியுடன் தன்னிடம் திரும்ப “தம்பி நம்ம கோவில் ஐயரை கூப்பிட்டாயானால் லக்ன பத்திரிகையை இப்போதே எழுதிவிடலாம்” என்றாள் கற்பகவல்லி.

 நிம்மதி பெருமூச்சுடன் மீண்டும் சோபாவில் அமர்ந்த நித்யவாணன் வெற்றி புன்னகையுடன் எழில்நிலாவை திரும்பிப் பார்க்க, அவள் முகம் சுட்ட சாம்பல் போல் ஒளியிழந்து கருத்து கிடந்தது. நித்தியவாணன் யோசனையுடன் அவளை பார்த்துக் கொண்டிருக்கும் போதே மெல்ல எழுந்தவள் அறைக்குள் சென்று மறைந்தாள்.




What’s your Reaction?
+1
36
+1
22
+1
3
+1
1
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!