Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-18 (நிறைவு)

18

வீட்டு வாசலிலேயே இவர்களை எதிர்கொண்ட சுமலதா, உள்ளே என்பது போல் கையை காண்பித்தாள். அறை ஜன்னலை சுட்டி விட்டு சுமலதா ஒதுங்கி நிற்க, உள்ளே மாயா லேப்டாப் முன்னால் உட்கார்ந்திருந்தாள். 

கைகளை உயர்த்தி.. அசைத்து… தலையை குனிந்து… வணங்கி… நெஞ்சில் கை வைத்து குனிந்து… என்று விதம்விதமாக எதிரே இருந்தவருக்கு நன்றி வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“மாயா அநேகமாக கிளம்பி விட்டார்கள் என்று நினைக்கிறேன்” என்றாள் வைசாலி.

“என் வாழ்க்கையில் இருந்தா..? எப்படி ..?” கேட்ட சித்தார்த்தனுக்கு தன் கை போனை கொடுத்தாள். போனை பார்த்த சித்தார்த்தனின் கண்கள் வியப்பில் விரிந்தன. மகிழ்ந்தன.

அவர்கள் மாயா வீட்டை விட்டு கிளம்பும் தருணத்திற்காக காத்திருக்க அடுத்த இரண்டு மணி நேரத்தில், தான் கொண்டு வந்த உடைமைகளை மூட்டை கட்டிக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தாள் மாயா.

“எனக்கு ஒரு நடன நிகழ்ச்சி இருக்கிறது.போய்விட்டு ஒரு வாரத்தில் வந்து விடுவேன்” கிளம்பியவளின் முன்னால் கைநீட்டி தடுத்தான் சித்தார்த்தன்.

“என் அருமை மனைவி என்னை விட்டு போனால் என்னால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? நான் உன்னை விடமாட்டேன் மாயா?”

” என்ன உளறுகிறாய் ?வழியை விடு. எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது”

“உனக்கு எப்படியோ? எனக்கு என் மனைவிதான் முக்கியம். என்னை விட்டுப் போகாதே மாயா”

“பைத்தியக்காரா! என்னுடைய வாழ்க்கையை கெடுக்காதே! நான் போக வேண்டும். வழியை விடு”

” என் வாழ்க்கையே நீதான் மாயா. எங்கே போவதாக இருந்தாலும் என்னையும் கூட்டிக்கொண்டு போ”

” முட்டாளே! உன்னை கூட்டி போய்  என்ன செய்ய? நான் என் பார்ட்னருடன் பிரான்சுக்கு போகிறேன். ஸ்வேடனுக்கு அங்கே பாலே டான்ஸ் அகாடமியில் பிரைமரி டான்சர் பொசிஷன் கொடுத்திருக்கிறார்கள். நான் இல்லாமல் அங்கே போக மாட்டேன் என்று கூப்பிடுகிறான். இனி எங்கள் நடன வாழ்க்கையே மாறப்போகிறது. நான் சிறகடித்து வானத்தில் பறக்க வேண்டியவள். என்னை இந்த வீட்டிற்குள் போட்டு அடக்க நினைக்காதே. வழியை விடு”

“அப்படியானால் உன்னையே நம்பியிருக்கும் என்னுடைய வாழ்க்கை என்னாவது மாயா? என்னை கைவிட்டு விடாதே! எனக்கு ஒரு பதில் சொல்லிவிட்டு போ”




“இதோ இவளை திருமணம் முடித்தாயே! இவளை வைத்துக்கொண்டு மீத வாழ்க்கையை வாழ்ந்து கொள். என்னை ஆளை விடு” 

” ஓ, அப்படியா! சந்தோஷம் மாயா. இதை அப்படியே எழுத்திலும் கொடுத்து விடேன்” சித்தார்த்தன் அவள் முன்னால் சில பேப்பர்களை நீட்டினான்.

மாயா பரபரப்புடன் வாட்சை திருப்பி பார்த்துக் கொண்டாள். இந்த வாக்குவாதத்திற்குள் நான்கு முறை அவளுடைய போன் அடித்திருந்தது.  “இதோ வருகிறேன்” என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“என்ன? ஒரு பைசா செலவில்லாமல் என்னிடமிருந்து விவாகரத்து வாங்கிவிடலாம் என்று நினைக்கிறாயா?”பேப்பர்களை கோபத்துடன் பார்த்தபடி கேட்டாள்.

” இல்லை உனக்கான நியாயமான ஜீவனாம்சத்தை இதில் குறித்திருக்கிறேன். நமக்கு குழந்தைகள் கிடையாது மாயா. உனக்கான ஜீவனாம்சம் தான் உனக்கு கொடுக்க முடியும். இதனை மறுத்து நீ இப்போது கிளம்பினாலும் ப்ரான்சிலேயே தங்கி விட்டாய் என்ற காரணத்தைக் காட்டி ஆறு மாதத்தில் உன்னிடமிருந்து விவாகரத்து பெற என்னால் முடியும். அப்போது உனக்கு இந்த ஜீவனாம்சமும் நான் கொடுக்க வேண்டியதிருக்காது. கூடவே இதையும் பார்”

 சித்தார்த்தன் காட்டிய பக்கம் திரும்பிய மாயா அதிர்ந்தாள். சுமலதா அவ்வளவு நேரமாக அங்கே நடந்து கொண்டு இருந்தவைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள். 

“இந்த வீடியோ உன்னுடைய சோசியல் மீடியா ஃபாலோயர்ஸ் பார்க்க ,நாளை நீ உன்னுடைய மீடியா அக்கவுண்டுகளை தவறாக உபயோகித்தாயானால் இந்த வீடியோவை நான் பயன்படுத்துவேன். என்னை உதறித் தள்ளி நீ கிளம்புகிறாய், உன் வாயாலேயே என்னுடைய மறுமணத்திற்கு சம்மதிக்கிறாய், கூடவே என்னுடன் விவாகரத்துக்கும் சம்மதிக்கிறாய். கையெழுத்து போடு”

இதற்குள் இன்னமும் இரண்டு முறை மாயாவிற்கு ஃபோன் வந்துவிட,  ஒரமாக ஒதுங்கி நின்று ,இங்கு இருந்த நிலைமையை  எதிர்முனையில் அவளுடைய பார்ட்னர் ஸ்வேடனிடம் பேசினாள்.

“கிடைப்பதை வாங்கிக் கொண்டு வந்து விடு. இங்கே நமக்காக வளமான எதிர்காலம் காத்திருக்கிறது” என்றான் அவன்.

மாயா அதன் பிறகு ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை.காட்டிய இடத்தில் கையெழுத்திட்டு விட்டு திரும்பியும் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.அவள் கண்கள் வளமான எதிர்காலத்திற்கான கனவில் மிதந்து கொண்டிருந்தன.

ஆச்சரியமாக பார்த்து நின்ற கந்தவேல் “என்ன நடக்கிறது?” என்றார்.

“மாயா நம் வாழ்விலிருந்து போய் விட்டாள் அப்பா.எனக்கு விவாகரத்து கிடைத்து விட்டது” சித்தார்த்தின் குரல் கரகரத்தது.

“இன்னமும் எவ்வளவோ போராட வேண்டியதிருக்கும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.இவ்வளவு எளிதாக…எப்படிடா?”

“காரணம் அண்ணிதான்பா…” சித்தார்த்தன் சொல்ல,சுமலதா திடுக்கிட்டு பார்த்தாள்.அவள் கண்களில் மெலிதான கலவரம்.

” மாயாவின் பார்ட்னருக்கு பிரான்ஸ் டான்ஸ் அகாடமியில் முக்கிய பொறுப்பு கிடைத்தது, அவன் கிளம்புவது எல்லாவற்றையும் அண்ணிதான் எங்களுக்கு சொன்னார்கள்.அதனை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்”

சுமலதா நிம்மதி மூச்சு விட” இதெல்லாம் உனக்கு எப்படிம்மா தெரியும் ?” பாக்கியலட்சுமி கேட்டாள்.




” அத்தை மாயா சோசியல் மீடியாவில் பாப்புலர்.அவள் என் சொந்தக்காரி என்று என் தோழிகளுக்கு என் மேல் பொறாமை கூட உண்டு.நாங்கள்  அவளை பாலோ செய்பவர்கள்.அவள் மூலமாக அந்த ஸ்வேடனையும் பாலோ செய்கிறோம். ஸ்வேடனுக்கு கிடைத்த வேலை பற்றி அவர் பதிவு போட,நான்தான் மாயாவிடம் அதை தெரிவித்தேன்.மாயா ஸ்வேடனிடம் பேச,இருவருமாக கிளம்பி விட்டனர்.இவர்களது ரசிகர்களுக்கு கொஞ்ச நேரம் முன்பு இருவரும் நேரலையில் போய் நன்றி சொன்னார்கள்.இந்த தகவலை வைஷுவுக்கு சொல்ல,சித்தார்த்தும்,வைஷுவும் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்”

“சுமி நம்பவே முடியலைடி.நீதானா இவ்வளவு அறிவாக வேலை பார்த்தது!” சந்திரகுமார் மனைவியின் தோளணைத்துக் கொண்டான்

“ஓரமாக நின்று வீடியோ எடுத்தாய் பார்.அசந்துட்டேன்மா” கந்தவேல் பாராட்ட,சுமலதாவின் கண்கள் நிறைந்தன.

புத்தியில்லாமல் இந்த உறவுகளின் அருமையை உணராமல் இருந்தேனே!தங்கையிடமும்,

கொழுந்தனிடமும் கண்களால் மன்னிப்பு வேண்டினாள்.

“அக்கா செய்த தவறுக்கு அவளே பரிகாரமும் செய்து விட்டாள்” வைசாலி முணுமுணுத்தாள்.

“அண்ணி செய்த அழகான தவறு இது.உன்னை எனக்கு கொடுத்த நிகழ்வு.இதனை நான் மறக்கவே மாட்டேன் வைஷு.சரி கிளம்பலாமா?”

“எங்கே?”

“ம் …அந்த லிப்ஸ்டிக்கின் ருசியை தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.எத்தனை நாட்கள் தான் காத்திருப்பது?” 

சித்தார்த்தனின் பார்வை மனைவியின் இதழ்களில் பதிய,வைசாலியின் கன்னங்கள் காதலால் கனிந்தது.

-நிறைவு- 




What’s your Reaction?
+1
47
+1
18
+1
2
+1
1
+1
2
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!