Serial Stories யுகம் யுகமாய்..! 

யுகம் யுகமாய்..! -6

 6

ப்ருத்வியின் மடியில் எழவொட்டாமல் பசுங்கொடி போலத் துவண்டு கிடந்தவள் மின்னலென எழுந்து இடிபோல ஓர் அறையைத் தன் கன்னத்தில் இறக்குவாள் என்று எதிர்பார்த்திராத அங்கத் நிலைகுலைந்துதான் போனான்.  

வர்ஷாவின்  வேலைக்கான விண்ணப்பத்தை தாமஸ் க்ரூப் ஆஃப் கம்பெனியின் டைரக்டர் என்ற முறையில் அங்கத்தும் பரிசீலித்தான். அத்துடன் இணைக்கப்பட்டிருந்த ப்ரொஃபைல் ஃபோட்டோவைப் பார்த்ததுமே..வாவ் என்று குஷியாக விசிலடித்தபடி, வர்ஷாவுக்கு வேலை தர ஒப்புதல் தந்தான். அந்த நொடியிலிருந்தே அவனுடைய குறுகுறுப்பான பார்வை வர்ஷாவைத் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. 

ப்ருத்வியின் பர்சனாலிடிக்கு சற்றும் குறைந்தவனல்ல அங்கத். ஆனால் ப்ரித்வியைப் பார்க்கும்போது பெண்களுக்கு ஒரு கிறக்கம் வந்தால், அங்கத்தைப் பார்க்கையில் நடுக்கமும் மிரட்சியும்தான் வரும். காரணம் அங்கத்தின் கன்னத்தில் குறுக்கு வாக்கில் ,அடர்கறுப்பில், நீளமாக இருக்கும் கோடு போன்ற பர்த் மார்க்  அவன் அகத்திலிருக்கும் வில்லத்தனத்தை புறத்திலும் பிரதிபலித்தது. 

அவன் மனம் நாடிய பெண்களெல்லாம் நாசூக்காய் விலகிப் போனார்கள். ஆனால் வர்ஷாவை அப்படி விலகிப் போக விடாமல் அவளிடம் நல்லவனாகக் காட்டி, அவளைத் தன் வசம் ஈர்க்கத்தக்க சந்தர்ப்பத்தை எதிபார்த்திருந்தான். 

வர்ஷாவையும், டெய்ஸியையும் தொடர்ந்து வந்தவனுக்கு ப்ரித்வியின் திடீர்ப் பிரவேசம் ஷாக்கைக் கொடுத்ததென்றால், கன்னத்தில் விழுந்த அறை அவனுக்குள் வெறியைத் தூண்டியது. சாமர்த்தியமாக அதை மறைத்துக் கொண்டவன்,

“ஹேய்..வர்ஷா! வாட்”ஸ் ராங் வித் யூ? ப்ராஜெக்ட்டை சக்ஸஸ்ஃபுல்லா முடிக்கணும்னு ஹார்ட் வொர்க் செஞ்சதோட  ஹேங் ஓவர் இன்னும்  தீரலையோ?” 

“வெரி சாரி அங்கத்! என்னாச்சுன்னு எனக்கே ஒண்ணும் தெரியல !”

 சட்டென்று வர்ஷா வேகமாக அங்கிருந்து நடக்க, 

நிக்கட்டுமா? போகட்டுமா? என்பது போல அங்கத்தைப் பார்த்த ப்ருத்வி அவன் கண்களில் தெரிந்த கொலைவெறியைக் கண்டு  வர்ஷாவைப் பின்தொடர்ந்தான்.

“என்னாச்சுன்னு உனக்கே தெரியலையா? எப்படித் தெரியும்? அந்தப் ப்ருத்வி மடியில  உலகத்தை மறந்து, மயங்கிப் போய்க் கிடந்தத நானும்தானே பார்த்தேன். அவனுக்கு முன்னால் நீ கொடுத்த இந்த அறையை நான் மறக்க மாட்டேன் உன்னை வஞ்சம் தீக்காம விட மாட்டேன்.” சூளுரைத்தான். 




அதுவரை மேகமலை ப்ராஜெக்ட்டுக்காக இந்தியா போவதைப் பற்றி யோசிக்காதவன்..

அந்த நொடியே தன் பயணத்தை உறுதி செய்தான்.

தன்னுடைய அபார்ட்மெண்ட் வந்த வர்ஷாவுக்கும்..

“இப்படி மானர்ஸ் இல்லாம நடந்துகிட்டது நான்தானா?” எனக்குள்ள இப்படி ஒரு வயலன்ஸ் ஒளிஞ்சுகிட்டிருக்கா? ப்ருத்வி என்னை சரியான காட்டுமிராண்டினு இல்ல நினைச்சிருப்பான்? சே! என்ன மாதிரி பொண்ணு நான். இந்த அங்கத் ப்ர்ச்னையால  ப்ருத்விகிட்ட சொல்லிக்காமயே வந்துட்டேன்”

தன்னையே நொந்து கொண்டு..நைட் ட்ரெஸ்ஸுக்கு மாறியவளுக்கு கழுத்திலிருந்த மெல்லிய செயின் காணவில்லையென அப்போதுதான் தெரிந்தது. 

“அய்யோடா..! அது என்னோட சென்டிமெண்ட் செயினாச்சே! ஹார்ட் ஷேப் லாக்கெட்ல என்னோட ஃபேவரைட் ஃபோட்டோவை வெச்சு  ரொம்ப வருஷமா போட்டுகிட்டிருக்கேனே. ஒருதரம்  கூட இப்படி மிஸ்ஸானதில்லையே. அந்தக் காட்டுக்குள்ளேதான் எங்கேயாவது விழுந்திருக்கணும். எங்க போய்த் தேடறது? ப்ச்!

புது ஆட்களைப் பாத்தா ஏதாவது மாற்றம் தெரியுதானு  டாக்டர் லைலா அன்சாரி கேட்டப்ப இல்லை னு சொல்லிட்டோம்.…! ஆனா இன்னைக்கு அங்கத்தைப் பார்க்கையில் உள்ளூற ஏற்பட்ட மூர்க்கத்தனமான உணர்வுக்குக் காரணம் என்ன? பேசாம நாளைக்கு முதல் வேலையா டாக்டரைப் பார்த்துட வேண்டியதுதான்.”

முடிவு செய்தவளுக்கு, பாதி விழிப்பும், பாதி உறக்கமுமாக இரவு கடந்து போனது.

அதே நேரம் ப்ருத்வி தாத்தாவிடம்,

“தாத்தூ..! வர்ஷா அங்கத்தை அறைஞ்சப்ப எனக்கே பொறி கலங்கின மாதிரி ஆயிடுச்சு. என்ன அடி ? என்ன அடி? கண்டிப்பா அவனோட பல்வரிசை ஆட்டம் கண்டிருக்கணும். அவன் சரியான முரடன் தாத்து…இவளை ஏதாவது வெச்சு செய்யணும்னு ப்ளான் பண்ணுவான். இவ என்ன மாதிரி பொண்ணுனே கணிக்க முடியலையே! இன்னைக்கு உங்கிட்ட வர்ஷாவை அறிமுகப்படுத்தலாம்னிருந்தேன். எங்கே…? அவதான் அப்பப்ப பூ ஒன்று புயலானதுங்கற மாதிரி திடீர்..திடீர்னு மாறிடறாளே.”

தாத்து எந்த மறுமொழியும் கூறாமல்,சிந்தனை வயப்பட்டிருப்பதைக் கண்டு கொள்ளாமல் பேசிக் கொண்டே உடை மாற்றி , வாஷிங் மெஷினில் போட்டவன்,

வர்ஷா மயங்கி விழுகையில் அறுந்து விழுந்த செயினை எடுத்து ஜீன்ஸ் பாகெட்டில் போட்டுக் கொண்டதை, எடுத்து வைக்க மறந்தே போனான்.

காலை எழுந்ததும் டாக்டரிடம் அப்பாய்ன்ட்மென்ட் கன்ஃபர்ம் செய்ய வர்ஷா ஃபோனைக் கையில் எடுக்க, அதற்குள் காலிங்பெல் கூவியது. கதவைத் திறந்தால் டெய்ஸி.

” என்ன வர்ஷ்‌..நார்மலாயிட்டியா? ஸாரிப்பா! நானும் உன்னோட வந்திருக்கணும். நடந்த விஷயங்களை ப்ருத்வி கால் பண்ணி சொன்னான். சாலமனோட நான் டைம் ஸ்பெண்ட் பண்ணி ரொம்ப நாளாச்சு. அதான் அவனோட நான் போக வேண்டியதாயிடுச்சு”. 

குற்றவுணர்வு விலகாமல் பேசியவளிடம்,

“ஹேய்..ஃப்ரீயா விடு ..வா ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்” 

இரண்டு பேருக்கும்  ப்ரெட் சாண்ட்விச்சுகளையும் வெண்ணெய், காஃபி கோப்பைகள் சகிதம் டைனிங் டேபிள்க்கு வந்தாள். 

——————-

ஆருயிர்க் காதலனின் ஆலிங்கனத்திலும், இதழோடு இதழிணைந்த பரவசத்திலும் மெய்ம்மறந்திருந்த சோணைக்குழலி,




“நான்தான் பன்னகப் பிடாதி! உன்னை ஆளவந்த யமன்”

திடீரென செவிகளில் விழுந்த இந்த சொற்கள் அந்தப் பூமகள் மேனியை விதிர்விதிர்க்கச் செய்தது.

இத்தனை குரூரமான முகத்தையும், குரலையும் இதுவரை கண்டிராதவள் சிலையாக நின்றாள்.

“மேகமலை இளவரசிக்கு குணமலைக்குன்று அரியாசனம் மேல் ஆசை தோன்றி விட்டதோ?  இந்தக் கணத்தோடு உங்கள் காதல் காவியத்துக்கு முடிவுரை எழுதி விடு பெண்ணே! இல்லையேல் உன் வாழ்க்கைச் சரிதத்திற்கு முடிவுரை நான் எழுத நேரிடும், கவனத்தில் கொள். எச்சரிக்கிறேன்”

மிரட்டலாகச் சொல்லி விட்டுக் காற்றைப்  போல் கடுகி மறைந்தான்.

“இளவரசி…இளவரசி! பூபாலர் சென்று விட்டாரா? யாரோ வருவது போலத் தோன்றியதால் எச்சரிக்கை விடுத்தேன். இருவரும் மனம் விட்டு சம்பாஷித்தீர்களா? மந்தமாருதம் வீச , மலையமாருதமிசைக்க காதல் வானிலே சஞ்சரித்தீர்களா?

என்ன சொன்னார்? கிரகணம் முடிந்ததும் பறந்து வந்து இந்தச் சங்கு கழுத்தில் மாலை சூட வந்து விடுவாராமா? அடடே…இது என்ன கழுத்தில் புத்தம்புது பொன்னாரம்? ஓ…திருமணபந்தத்திற்கு அவர் தந்த அச்சாரமோ? இது மட்டும்தானா.

இல்லை ஆயுள் பரியந்தம் மறக்க முடியாதபடி வேறு ஏதேனும் கொடுத்தாரா?”

ப்ரியசகி நாணத்தில் சிணுங்குவாளென்று எதிர்பார்த்த யௌவனா, அவள் சிலையென சமைந்து, பேசாமடந்தையான கோலத்தைக் கண்டு அதிர்ந்து போனாள்.

“இது என்ன விபரீதம்? பூபாலவர்மன் குழலியின் மனமறிந்து நடந்து கொள்ளவில்லையோ? முதல் தனிமைச் சந்திப்பாயிற்றே? இனிக்க இனிக்கப் பேசித் தங்களுக்குள் ஒரு காதல் சாம்ராஜ்யத்தை சிருஷ்டி செய்து களித்திருப்பார்கள் என்று கனவு கண்டோமே! நம் முயற்சி அத்தனையும் விழலுக்கிறைத்த நீராமோ? “

கலங்கிப் போனாள் அந்தப் பேதை. அந்தக் கலக்கத்தில் குழலியின் கழுத்திலிருந்த பதக்கச் சங்கிலி காணாமல் போனதைக் கவனித்தாளில்லை.

பன்னகப்பிடாதியின் மிரட்டலைப் பற்றி யௌவனாவிடம் சொல்வதா வேண்டாமா என ஊசலாடியது குழலியின் மனம். பூபாலரை வரச்சொல்லி அவரிடம் சொல்வதே சாலச்சிறந்தது. இந்த யௌவனா ஒரு பயங்கொள்ளி. அச்சத்தில் யாரிடமாவது உளறி விடக் கூடும். முதலில் அந்தப் பன்னகப் பிடாதி யாரெனக் கண்டு பிடிப்போம்.

ஆழ்ந்த சிந்தனையில் உணவும் செல்லவில்லை. நீள் விழிகளும் துயில் கொள்ளவில்லை. பசலை நோய்க்கு ஔடதமளித்தவனோடு, பாணிக்கிரகணம் நல்லபடி நடைபெற வேண்டுமேயென்ற  பரிதவிப்புடனும், பன்னகப்பிடாதியின் மீது அடங்காச் சினமுமாக, மனக்கலக்கத்துடன் சப்ர மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்தவளைக் கண்காணித்துக் கொண்டிருந்த செவிலித்தாய், நாளை மகாராணியாரிடம் இளவரசியைப் பற்றிப்  பேசியாக வேண்டுமென விடியலை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.

அதேநேரம் குணமலைக்குன்றில் தங்கள் அரண்மனையை அடைந்த பூபாலனின் முகத்தில் இன்பக்களிப்புத் தாண்டவமாடியது.  அவனைக் கண்டதும் உடுப்புகளை மாற்றிவிட ஓடி வந்த சேவகர்களை, நிராகரித்து விட்டு உடைவாளைக் கழற்றியவன், உடைவாளின் உறையில் ஒரு பதக்கச் சங்கிலி மாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தான். இது குழலியின் வெண்சங்குக் கழுத்தை அலங்கரித்ததாயிற்றே!  அவளை இறுக ஆலிங்கனம் செய்ததில் அறுந்து உடைவாளின் உறையில் மாட்டிக் கொண்டதோ? ஆர்வத்துடன் சங்கிலியை எடுத்துப் பார்த்தான். இரத்தினச் சிவப்பும்,மரகதப் பச்சையும் சுற்றிலும் கண்ணைப் பறிக்க, நடுநாயகமாய் ஒரு பெரிய வைரம் சுடர்விட இதய வடிவிலான பதக்கமொன்று …




“என்னைத் திறந்து பாரேன்” என்றது. 

ஆனால் அந்தப் பதக்கத்தைத் திறந்து பார்ப்பதைக் காட்டிலும்

காதலியின் நினைவில் நீந்திக் களிக்கவே விரும்பினான். நித்ராதேவியும் அவனருகே வர  மறுக்க, பதக்கத்தைப் பத்திரப் படுத்தி விட்டு உப்பரிகை நாடிச் சென்றான்‌ . 

இளந்தென்றல் மேனியை மயிலிறகாய் வருட, “மனம் புகுந்த பின் மயிலிறகானீர்” என்ற குழலியின் குறும்புத்தனமான வார்த்தைகள் அவன் செவிகளை வருடியது. 

ஏ..சுக்லபட்ச சந்திரனே..! நீ என்று நிறைமதியாவாய்? நான் எப்போது என் காதல் மங்கையின் பதியாவேன்?

காதல் வெள்ளத்தில் மூழ்கியவன் செவிகளில் ஒற்றைப் புரவியின் குளம்போசை துல்லியமாகக் கேட்க‌‌..யாரிந்த நடுநிசியில் கோட்டைக்குள் வருவது? நொடிப்பொழுதில் மங்கையின் மனக்கோட்டைக் காதலன், தாய்நாட்டின் கோட்டைக் காவலனாக மாறினான்.

(தொடரும்)




What’s your Reaction?
+1
7
+1
8
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!