Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-9

9

“ஏய் தவறாக எதுவும் பேசி விட்டேனா? எதற்காக இப்படி விழித்துக் கொண்டு இருக்கிறாய்?” சித்தார்த்தன் அவள் முகத்தின் முன்னால் சொடுக்கிட தலையை உலுக்கி நிமிர்ந்தாள்.

” அது… அக்காவிற்கு ஏதோ நிறைய வேலை… வந்து… அத்தானுக்கும் அவளுக்கும்…  இல்லை… வந்து உங்கள் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்று…” சம்பந்தமில்லாமல் ஏதேதோ உளறுவது  தெரிந்ததும் வாயை இறுக மூடிக்கொண்டாள் வைசாலி.

 இப்படி உளறி கொட்டுவதற்கு பதிலாக காது கேட்காதது போல் நடித்துவிட்டு போய் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள்.

“அண்ணன் அப்படித்தான்” சித்தார்த்தன் தலையசைத்து சொல்ல…இவன் அண்ணன் எப்படித்தான்? சந்தேகத்துடன் அவனைப் பார்த்தாள்.

” பிறந்ததிலிருந்து வசதியாக வளர்ந்தவன், போகும் இடங்கள் எல்லாவற்றிலும் அதே வசதியை கொஞ்சமும் குறையாமல் எதிர்பார்ப்பான். அதனால்தான் இங்கே உங்கள் வீட்டில் அவனால் தங்க முடிவதில்லை. இப்போதும் அண்ணியை அண்ணன்தான் இங்கே தங்க விடாமல் இழுத்துக் கொண்டு போயிருப்பான் சித்தார்த்தன் சொல்லி முடிக்கவும் பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள் வைசாலி.

அப்பாடி இவன் வேறு ஏதோ பேசுகிறான்…

“ஆனாலும் இந்த வீட்டு பெண்ணை தானே உங்கள் அண்ணன் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்? இங்கே வரும்போது அட்ஜஸ்ட் செய்து கொள்ளத்தானே வேண்டும்?

ஐந்து வருடங்களாக தன் மனதிற்குள் அழுத்திக் கொண்டிருந்த கேள்வியை இப்போது கேட்டே விட்டாள்.

” அண்ணனின் திருமணம் முடிந்த நாளிலிருந்து இந்த உறுத்தல் உனக்கு இருக்கிறதா வைசாலி?”

” அதற்கும் முன்பிருந்தே… அதாவது உங்கள் அண்ணனுக்கும் என் அக்காவிற்கும் திருமண பேச்சு எடுத்த நாளிலிருந்து உங்கள் வீட்டினரின் செய்கைகள் எதுவுமே எனக்கு பிடிப்பதில்லை”

அவன் கேட்ட வேகத்திற்கு சொல்லிவிட்டவள் முடித்த பிறகே நாக்கை  கடித்தாள்.அவன் குடும்பத்தை பற்றி அவனிடமே குறை சொல்கிறோமே…ஆனால் அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லாமல் சித்தார்த்தன் தலையசைத்தான். “எனக்கும் பிடிக்காது” ஒப்புக் கொடுத்தான்.

“அண்ணன் விஷயத்தில் நிறைய முறை நானும் உன்னைப் போலவே உணர்ந்திருக்கிறேன். சில நேரங்களில் தவறு என்று சொல்லக்கூட செய்திருக்கிறேன், ஆனால் அப்படியெல்லாம் கேட்டுக் கொள்ளும் ரகம் இல்லை அவன். இதில் எனக்கு ஆச்சரியம் கொடுக்கும் விஷயம் என்னவென்றால் அண்ணியும் அண்ணனுடன் சேர்ந்து கொண்டு பேசுவதுதான். பொதுவாக பெண்களுக்கு பிறந்த வீடு மிகவும் பிடிக்கும் என்றுதானே சொல்வார்கள்? உன் அக்கா மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்?”

 இந்த கேள்விக்கு வைஷாலி என்ன பதில் சொல்வது? அக்காவிற்கு திமிர் கொழுப்பு இப்படித்த்தான் சொல்ல வேண்டும்.ஆனால் உடன் பிறந்தவளை அவளே எப்படி குறைத்து கூறுவாள்? வார்த்தைகளால் சொல்ல முடியாது தெரியவில்லை என்பதாக உதடுகளை பிதுக்கினாள்.




சித்தார்த்தனின் கண்கள் அவள் பிதுங்கிய உதட்டில் படிந்தது.ய “உன்னுடைய உதடுகள் அழகு வைசாலி” அவனுடைய ரசனையான குரல் வைசாலியின் குருதிக்குள் புரவிகளை ஓடவிட்டது.

எங்கிருந்து எங்கே தாவுகிறான் பார்! நெற்றியில் படிந்துவிட்ட வியர்வை துளிகளை புறங்கையால் ஒத்தி கொண்டவள் “நன்றி” ஒற்றை வார்த்தை உதிப்பதற்குள் மிகவும் சிரமப்பட்டு போனாள்.

“உன்னுடைய உதடுகள் வில் போன்ற வடிவத்தில் இருக்கின்றன” அவன் பார்வை இன்னமும் உதடுகளில் இருந்து நகரவில்லை. வைசாலி கீழ் உதட்டை மடித்து கடிக்க “இப்போது இன்னமும் அழகு” சித்தார்த்தனின் ரசனையின் எல்லை விரிந்து கொண்டே போனது.

ஆள்காட்டி விரலை அவள் உதடுகளுக்கு நேராக நீட்டியவன் “இதோ இப்படி மேல் உதட்டின் நடுவில் சிறு குழிவும் இரு ஓரங்களிலும் மிக லேசான நீட்டல்களுமாக இருக்கும் உதடுகளை வில் வடிவமென்று சொல்வார்கள்..இவ்வகை உதடுகளை பெற்றிருக்கும் பெண்கள் தற்சார்பும், சுய நம்பிக்கையும், பிறர் நிலை குறித்த கவலையும் உடையவர்களாக இருப்பார்கள் என்கிறது உதடு சாஸ்திரம்”

வைசாலியின் உதடுகள் Oவாக திறந்து கொண்டது. “உதடுகள் சாஸ்திரமா? அப்படி ஒன்று இருக்கிறதா?”

 “ஆமாம் அது சீன சாஸ்திரம். பெண்களின் உதடுகளை வைத்து அவர்களின் குணாதிசயங்கள் அதில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கும். இப்போது சொல் உன்னை பற்றி நான் சொல்வது சரிதானே?”

 ஒரு பக்கமாக சிறிது தலையசைத்து யோசித்த வைசாலி மீண்டும் உதடு பிதுக்கினாள். “தெரியவில்லையே இப்படி எல்லாம் என்னை நானே ஒரு நாளும் கவனித்துக் கொண்டதில்லை”

 சித்தார்த்தனின் பார்வை மீண்டும் அவள் உதடுகளின் மேல் விழுந்தது. “சற்றே தடிமனாய் இருக்கும் கீழ்  உதடுகள்…” திரும்ப ஆரம்பித்தவனை ஒரு கை உயர்த்தி நிறுத்தினாள்.

” அதென்ன பெண்களுக்கு மட்டும்தான் இந்த சாஸ்திரமும்…கணிப்புகளுமா? ஆண்களை கணிக்க தேவையில்லையா இல்லை கணிப்பிற்கு அப்பாற்பட்டவர்களா ?”

சினத்துடன் உருண்ட அவள் விழிகளை பார்த்தவன் இரு கைகளாலும் தன் இரு கன்னங்களையும் பொத்திக் கொண்டான் “அம்மாடி பயமாக இருக்கிறது” என்றான் நாடகத்தனமாக.

“சும்மா பேச்சை மாற்றாதீர்கள், சொல்லுங்கள் ஆண்களுக்கு இந்த சாஸ்திரங்கள் எல்லாம் கிடையாதா?” அதட்டினாள்.

” ஆண்களும் மனிதர்கள் தானே வைஷு. நிச்சயம் அவர்களுக்கும் தான் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் உன்னை போல பெண்கள் ஆண்களைப் பற்றி அறிந்து கொள்வதில் அதிக அக்கறை கொள்வதில்லை. அதனால் அவைகள் வெளி தெரிவதில்லை. ஆனால் ஆண்களோ பெண்களைப் பற்றி ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு அசைவிலும் அறிந்து கொள்ள புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அதனால் இது போன்ற சாஸ்திரங்களில்  பெண்களைப் பற்றிய கணிப்புகள் முன்னால் தெரிய வருகிறது”

“எதையாவது சொல்லிக் கொள்ளுங்கள்.ப்ச்… எனக்கு தூக்கம் வருகிறது,தூங்கப் போகிறேன்” கட்டிலை சுற்றி வந்து மறுபக்கம் படுத்தாள்.

” நான் சொன்னது சரியாயிற்று பார்த்தாயா? நான் உன்னிடம் காட்டிய அக்கறை உனக்கு என் மேல் இல்லை” குறைபாட்டுடன் அவளை பார்த்தபடி ஒருக்களித்து அருகே  சரிந்தான்.

 அநிச்சையாக ஒரு நொடி அவன் உதடுகளை தொட்டு மீண்ட அவள் விழிகள் இறுக மூடிக்கொண்டன. “எனக்கு தூக்கம் வருகிறது. இந்த பேச்சை பிறகு பேசலாம்”

” நைட்டி மாற்றிக் கொண்டு வா வைசு, இத்தனை நகைகள் சேலையுடன் தூங்குவாயா?”

 அப்படித்தான் வைசாலியும் நினைத்தாள். ஆனால் என்னவோ அவன் முன்பு இரவு உடையுடன் படுப்பதற்கு ஒரு வித கூச்சம் வர “இருக்கட்டும் நாளை மாற்றிக் கொள்கிறேன், இப்பொழுது தூங்க வேண்டும்”கண்களை மூடிக் கொண்டாள்.

 “ரொம்பவே தூக்கம் போல!” அவன் குரல் மிக அருகாமையில் கேட்க மனதுக்குள் திக்கென்றது அவளுக்கு.

“ஆ… ஆமாம் இன்று நிறைய வேலைகள் அல்லவா” தடுமாறிய குரலில் பேசி விட்டு விழிகளை இறுக்கினாள்.

 வெதுவெதுப்பான விரல் நுனி அவள் சுளித்திருந்த புருவங்களை மெல்ல நீவியது. “எதற்கு இவ்வளவு கஷ்டம்? ரிலாக்ஸாக தூங்கும்மா” வருடினார் போல் அவன் பேச ஏனோ ஒருவகை பாதுகாப்பு உணர்வை அடைந்தவள் நிம்மதியாக உறங்க துவங்கினாள்.

——–




“அடடே! மாப்பிள்ளை சாப்பாடு எல்லாம் முடிந்தது போலவே?” ஒரு வாரம் மாமியார் வீட்டில் இருந்து விட்டு வீடு திரும்பிய தம்பியை பார்த்து கொஞ்சம் குத்தலாக கேட்டான் சந்திரகுமார்.

“ரொம்பவே நல்லபடியாக முடிந்தது அண்ணா. அத்தையின் சமையல் சூப்பர் தெரியுமா!” தம்பி அண்ணனை பதிலுக்கு குத்தினான்.

” சரிதானடா மாமியார் வீட்டு விருந்தென்றால் நன்றாகத்தான் இருக்கும். இதையெல்லாம் வெளியே பெரிதாக சொல்வதற்கு என்ன இருக்கிறது?” முகச் சுளிப்போடு சொன்னாள் பாக்கியலட்சுமி.

” அண்ணனுக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரியவில்லையேம்மா. அதனால்தான் தெளிவாக விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” சித்தார்த்தன் சொல்ல தம்பியை முறைத்தான் சந்திரகுமார்.

“உன்னுடைய அறிவாளித்தனங்களை உன்னுடன் வைத்துக்கொள்.என் விஷயத்தில் தலையிட வேண்டாம்”

” நாம் இருவரும் ஒரே வீட்டில்தான் பெண் எடுத்து இருக்கிறோம் அண்ணா, பிறகு மாமியார் வீட்டு விருந்து பற்றி பேசும்போது உன்னுடையது என்னுடையது என்ற பிரிவு எப்படி வரும்?”

“உன்னைப்போல் நாலு கவளம் அதிக உணவு யார் போடுவார்கள் என்று உட்கார்ந்து இருப்பவன் நான் அல்ல” சந்திரகுமார் பிதற்ற,

” சந்திரா ஒழுங்காக பேசு” பதிலுக்கு கத்தினான் சித்தார்த்தன். வைசாலி பதட்டத்துடன் கணவனின் கைபிடித்து பின்னால் இழுத்தாள்

” சும்மா இருங்க “அவள் விழிகள் சந்திரகுமாருக்கு பின்னால் நின்றிருந்த சுமலதா மேல் விழ பதட்டம் எதுவும் இன்றி சண்டைக்கு தயாராக நின்ற சகோதரர்களை ஒருவித சுவாரசியத்துடன் பார்த்தபடி நின்றிருந்தாள் அவள்.

  கண்களால் சந்திரகுமாரை அடக்குமாறு வைசாலி சொல்ல என்னால் முடியாது என்பது போல் ஜாடை காட்டியவள் தனது வேடிக்கை பார்த்தலை தொடர்ந்தாள்.வைசாலிக்கு  சீ என்றானது. என்ன பெண் இவ?ள் இங்கே பேசு பொருளாக சிதறிக் கிடப்பது அவளுடைய பிறந்த வீடு என்று தெரியாதா? 

சித்தார்த்தனை நெருங்கி இழுத்தாள். “ப்ளீஸ் வாங்க நம்ம ரூமுக்கு போகலாம்.எனக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும். டயர்டாக இருக்கிறது”

 சித்தார்த்தன் சிரமப்பட்டு தன் கோபத்தை அடக்கிக் கொள்வது இறுகி இருந்த அவன் கன்னத்து தசைகளில் தெரிந்தது. வேகமாக படியேறி மாடிக்குப் போனான்.

சந்திரகுமார் வெளியே போய் விட வைசாலி சுமலதா அருகில் போய் “என்னக்கா இது, நீ அத்தானிடம் பேசி இருக்கலாமே?” என்றாள்.

” என்னடி பேச சொல்கிறாய்? உன் புருஷனை போல் என் புருஷன் கோழை கிடையாது. தைரியமாக நிமிர்ந்து நெஞ்சைத் தட்டிக் கொண்டு ஆம்பளையாக நிற்பார். அவரிடமெல்லாம் என்னால் பேச முடியாது” பெருமை கொப்பளிக்க பேசி விட்டுப் போன அக்காவை கண்டு தலையில் அடித்துக் கொண்டாள் வைசாலி.

 சொல்லுக்கு அடங்காமல் திமிறிக் கொண்டு திரிபவன்தான் ஆண் பிள்ளையோடு சேர்த்தியாமா? இவளை போன்ற பெண்கள் இருக்கும் வரை சந்திரகுமார் போன்ற ஆண்கள் மாறப்போவதே கிடையாது.

“பொண்டாட்டி பின்னால் அலையும் வழிசல் புத்தி பெரியவனுக்கு கிடையாது” இப்போது பெருமை பேசியவள் கற்றுக் கொடுத்து வளர்த்திருக்க வேண்டிய அன்னை.

 “ஆனால் என் கணவர் மனைவியை மதிப்பவர்.அவள் வலியை புரிந்து கொள்பவர் ” பெருமிதமாக மாமியாருக்கு பதிலடி கொடுத்தவளுள் கணவனின் தன்மையான, பெண்மையை போற்றும் குணமறிந்த நாளின் நினைவுகள்.




What’s your Reaction?
+1
51
+1
28
+1
2
+1
1
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!