Serial Stories கடல் காற்று

கடல் காற்று-3

  ( 3 )

கை கால்களோடு , கண்களும் கூட சற்று வசப்பட மறுத்து அலைந்து கொண்டிருந்தாற் போல்தானிருந்த்து. அந்த கண்களுக்கு இவ்வளவு சக்தியா ?  உள்ளங்கைகள் வியர்வையில் கசகசக்க கை குவித்தாள் .

” ம்ம்ம் ….” ஒரு வித உறுமலோடு தலையை வேறு இழுத்து ஆட்டினார் .

” அப்படி உட்கார் .அவர் பிறகு பார்ப்பார் ” அதிகாரம் அந்த அம்மாளின் குரலில் .

அமைதியாக மீண்டும் பெஞ்சில அமர்ந்தாள் .

ஐயாவின் அருகிலேயே அம்மாவிற்கு ஒரு நாற்காலி போடப்பட்டது. தோரணையாய் அதில் அமர்ந்தவள் கைகளில் ஒரு கணக்கு நோட்டை வைத்தார் கணக்குபிள்ளை தோற்றம் காட்டிய ஒருவர் .

அந்த பக்கமாக ஓரமாக அமர்ந்திருந்த மீனவ மக்கள் ஒவ்வொருவராக வர துவங்கினர் .கடன் கணக்கு …அவர்கள் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி போடப்பட்டு கறாராக அப்போதே வாங்க பட்டது .

கையில் பணமில்லாதவர்களின் சம்பளம் தயவு தாட்சண்யமின்றி பிடித்து கொள்ள பட்டது. நிறைய பேர் பணத்தை கொடுத்து விட்டு தொங்கி போன முகத்துடன் வெளியேறினர் .

சிலர் ” ஐயா இதுதானுங்க மிச்சம் . இதை வைத்துதான் வீட்டில் அடுப்பெரியனும் ” கை கூப்பினர் .

கணக்கு வாசித்து கொண்டிருந்த அம்மா ஐயாவை திரும்பி பார்க்க ம்ஹூம் ….என பலமாக தலையசைத்து ஒழுங்காக இருந்த கையால் போ..போ..வென சைகை காட்டினார் .

” ம் …ம்…அதான் ஐயா சொல்றாரில்ல போ..போ..அடுத்த தடவை புத்தியா பொழச்சிக்க பாரு ” தன் வெங்கல தொண்டையை திறந்தாள் அந்த அம்மாள் .

பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் கனத்தது. வாங்கிய கடனுக்கு பணம் செலுத்த வேண்டும்தான் .அதற்காக இப்படியா கருணையின்றி நடந்து கொள்வார்கள் .

இவற்றை விட மனம் அதிர வைத்த சம்பவம் ஒன்று அடுத்து நடந்த்து. இறுதியாக தயங்கி நின்றிருந்த ஒரு தம்பதி தயங்கியபடி வந்தனர் .

அவர்களை ஏறிட்ட அம்மாள் ” என்னா ஜோசப்பு கணக்கை பார்த்திடலாமா ? ” வெற்றிலையை மடித்து வாய்க்குள் அடக்கிக் கொண்டாள் .

ஒருசிறு கேவலுடன் அந்த ஜோசப் ஓடி வந்து ஐயாவின் கால்களை பிடித்து கொண்டான் .” ஐயா வேண்டாம்யா..எங்களை விட்டுடுங்க. எங்களால பணம் பெரட்ட முடியலை் .எங்கள் லாஞ்ச்சை எங்க்கிட்டயிருந்து பறிச்சுபுடாதீங்க. நானும் என் நாலு கொழந்தைகளும் மானமா சோறு தின்னுகிட்டு இருக்கிறது அதை வச்சுதாங்கையா”

” இந்த அறிவு பணம் வாங்கும் போதில்ல இருந்திருக்கனும் .இப்போ வந்து என்ன பண்ண ? ” அலட்சியமாக வெற்றிலை மென்றாள் .

” ஐயா …” ஏக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தவனை உதறினார் ஐயா.அவர் கால்களை பற்றியிருந்தவன் தள்ளி போய் விழுந்தான் .

” போழ்ழா…போ …போ…”

இப்போது அந்த ஜோசப்பின் மனைவி வந்து அம்மாவின் கால்களை பற்ற வந்தாள் .சுதாரித்த அம்மா அவள் குனியுமுன் எழுந்தவள் ,ஐயாவின் நாற்காலியை உருட்டியபடி உள்ளே போய்விட்டாள்.




தான் சென்னைக்கு அருகில்தான் இருப்கிறோமா ? சந்தேகம் வந்த்து அவளுக்கு .ஏதோ ஒரு அடிமைப்பட்ட தீவில் இருப்பது போன்றதொரு எண்ணம் தோன்றியது்.

கணக்குபிள்ளை” ஏய் ஜோசப் வாடா..இங்கே ஒண்ணும் நடக்காது .வா வந்து கையெழுத்து போட்டுட்டு லாஞ்ச்சை கொடுத்துட்டு போ .அப்படி உன்னை சோத்துக்கு திண்டாட விட்டுட மாட்டாங்க .வா…வா..” உள்ளே போனார் .

விசும்பியபடி அவர் பின் சென்றான் ஜோசப் .

அலமலந்து நின்ற அவன் மனைவியருகில் வந்த அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணொருத்தி, ” ஏட்டி  கண்ணை தொட.நீ நம்ம சின்ன ஐயாவை போய் தோப்புக்குள்ள பாரு .அவரு உனக்கு ஒரு வழி பண்ணுவாரு”

குரலை சற்று இறக்கியவள் ” உன் புருசன் இல்லாமல் நீ மட்டும் தனியா போய் பாரு ,” என்றாள்.மெல்ல தலையசைத்தாள் அவள்.

களுக்கென்று ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது பெண்கள் பகுதியிலிருந்து.திரும்பி சிரித்தவளை முறைத்து விட்டு தன் வேலைக்குள் நுழைந்தாள் ஆலோசனை சொன்னவள் .

ச்சையென்றானது .இப்படி ஒரு வில்லங்கமான குடும்பமா ?
அதிலும் கஷ்டமென்று வந்தவளை தோப்பிற்குள் வர சொல்லும் அந்த சின்ன ஐயா…என்ன மாதிரி ஜென்ம்ம் அவன் ?

இப்போது என்னை இங்கேயே விட்டுவிட்டு எல்லோரும் போய்விட்டனரே.என்ன செய்வது ?

நானே உள்ளேபோய் பார்க்க போகிறேன் .மதிப்போடு வெளியே நின்று பார்க்குமளவு மரியாதையான குடும்பமில்லை இது  தீர்மானித்தவள் தானே உள்ளே நுழைந்தாள் .

” ஏய் யார்நீ ? திறந்த வீட்டிற்குள் எதுவோ நுழைவது போல் நுழையுற ? ” காது அதிர்ந்த்து .

நல்ல கறுப்பில் சுமார் நாற்பது வயது மதிக்கலாம் போல் ஒரு பெண் .இடுப்பில் கை ஊன்றி வாட்ட சாட்டமாக விழிகளை உருட்டியபடி நின்றிருந்தாள் .

பார்த்ததுமே தெரிந்த்து..இவள் அந்த ஐயாவின் மகள் . அந்த சின்ன ஐயாாவின்  அக்கா.

” நான் சென்னையிலிருந்து வந்திருக்கிறேன். ஐயாவை பார்க்க வேண்டும் ்”

” அதற்கு நீ வெளியே நிற்க வேண்டும் “

” இல்லை ..வெளியேதான் நின்றேன் .ஐயா….”

” உள்ளே வந்து விட்டால் நீ வெளியே காத்திருந்திருக்க வேண்டும் ” நக்கல் குரலில் ..

” செல்லா விடு அவுங்களை …” கணீரென்ற குரல் கம்பீரமாக ஒலித்தது.

மாடிப்படியிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தான் அவன் .நேர் பார்வையுடன் தன் அக்காவை பார்த்தபடி …

” உங்கள் வேலை முடியும் வரை நீங்கள் இங்கே தங்கிக் கொள்ளலாம் .மேகலை இவுங்்களுக்கு அந்த கடைசி  ரூமை ஒதுக்கி கொடு ” ஒரு சிறு பெண் ஓடி வந்தாள் .

நான் கேட்காமலேயே எப்படி இவன் என் தேவையை தெரிந்து கொண்டான் .தெரியாத பெண்ணை எப்படி வீட்டினுள்ளேயே தங்க அனுமதித்தான் ..?அது சரி …இவனுக்குத்தான் பெண்ணென்ற உருவம் போதுமே .இகழ்ச்சியாக நினைத்துக் கொண்டாள் .

அவள் பேக்கினை வாங்கி கொண்டு ” வாங்க …” உள்ளே நடந்தாள் அந்த சிறுபெண் .

” என்ன தம்பி இது ? ,,” அக்காவின் ஆட்சேப கேள்விக்கு ஏதோ சமாதான பதில் சொல்லியபடி இருவரும் அருகிலிருந்த அறையினுள் சென்றனர் .

தான் இவ்வளவு சுலபமாக இந்த வீட்டினுள் நுழைந்து விட்டதை அவளால் நம்ப முடியவில்லை. ஆக இந்த சின்ன ஐயாவுக்கு அவள் எண்ணியது போன்றே முன்பே இரண்டு முறை பார்த்திருந்தும் அவளை ஞாபகம் இல்லை.

நல்ல விசாலமான பெரிய அறை . அங்கிருந்த சன்னல்களை திறந்தாள் .அவை கீழே வரை ப்ரெஞ்ச் வின்டோ முறையில் தரை தளம் வரை நீண்டிருந்த அமைப்பு .

சன்னல் வழியாகவே தோட்டத்திற்கு போய்விடலாம் போன்ற அமைப்பு ்இவ் வகை சன்னல்களில் எந்த அளவு பாதுகாப்பு இருக்கும் ? யோசித்தபடி அவற்றை திறந்தாள் .கடைசி சன்னலில் கொக்கி சிக்கிக் கொண்டது .

இழுத்து பார்த்தாள் .ம்ஹூம் …முடியவில்லை .அதனை விட்டுவிட்டு
இணைந்திருந்த குளியலறையில்
முகம் கழுவி சிறிது தோற்றத்தை சீர் செய்து கொண்டு மெல்ல வெளியே வந்தாள் .

ஒரு கப் காபி கிடைத்தால் நன்றாயிருக்குமே .யாரிடம் கேட்கலாம் ? எட்டி பார்த்தாள் .அடுக்களை எங்கே இருக்க கூடும் ?




” உன்னை யார் உள்ளே விட்டது ? எதற்கு இங்கே நடுவீடு வரை வந்து நிற்கிறாய்?  யார் நீ ? ” அந்த அம்மாள்தான் .வெற்றிலையை துப்பி விட்டாள் போலும் .வாய் அசை போடுவதை நிறுத்தியிருந்த்து.

” நான் ….” அவள் திணறினாள் .காபி ஆசை மறந்து விட்டிருந்த்து.

” சமுத்ரா .பெண்குரல் பத்திரிக்கை நிருபர் . நம் மீனவ பெண்களை பேட்டி எடுக்க வந்திருக்கிறார் .அப்படித்தானே ? ” கேட்டபடி அவளருகில் வந்து நின்று அவள் விழிகளுக்குள் ஊடுறுவினான் .

தொண்டை காய்ந்து விட சிறிது அச்சத்துடன் அவனை ஏறிட்டு பார்த்தாள் .அவன் விழிகள் மானை கண்ட வேட்டைக்காரனாக ஜொலித்துக் கொண்டிருந்தன. 




What’s your Reaction?
+1
14
+1
12
+1
1
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!