Serial Stories யுகம் யுகமாய்..! 

யுகம் யுகமாய்..!-11

11

“ப்ருத்வி…வில் யூ ப்ளீஸ் டூ மி எ ஃபேவர்? “

வந்தனா கேட்க…

“எதுக்கு இத்தனை ஃபார்மலா பேசறீங்க ஆன்ட்டி,..! கேளுங்க..எள்ளுன்னா எண்ணையா நிக்கறவனாச்சே நான்.

ஹஹ்ஹாஹா…!”

“வர்ஷா செக்கப் பண்ணிகிட்ட டாக்டர் கிட்ட ஒரு அப்பாயிண்ட்மென்ட் வாங்கணும். நான் அவங்களைப் பாத்து பேசணும். முடியுமா?”

“வொய் நாட்? இதோ இப்பவே அப்பாயிண்ட்மென்ட் வாங்கிடறேன்.”

டாக்டரை சந்தித்துப் பேசி விட்டு வந்தனா  சொன்ன விஷயங்களை ப்ருத்வி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.

 வர்ஷாவின் ஆழ்மனதில் இருந்து அவளை ஆட்டிப்படைக்கும் அந்த சக்தி என்ன என்பதைக் கண்டு பிடித்தாக வேண்டும் என்பதுதான் அவனுடைய முக்கியமான பாயிண்ட்டாக இருந்தது.

வர்ஷா தங்கள் கம்பெனிக்கு வந்த நாள் முதல் நடந்த நிகழ்வுகள்,டெய்ஸி மூலமாகக் கிடைத்த தகவல்களை அதிதீவிரமாக அனலைஸ் செய்ய, கிடைத்த ரிசல்ட் அவனை ஆச்சர்யப்படவும், அதிர்ச்சியடையவும் வைத்தது.

ஒவ்வொரு முறையும் தன்னைப் பார்க்கையில்‌‌..படபடப்பில் சைலண்ட்டாக மயங்கி விழும் வர்ஷா,அங்கத்தைப் பார்த்தாலோ ஆக்ரோஷமாகப் பொங்கி எழுந்து வயலன்டாக பிஹேவ் செய்து மயக்கம் போட்டு விழுகிறாள்.

அப்படியானால் நாம் சந்தேகப் பட்டது சரிதான். அங்கத்தினால் ஏதோ ஒரு வகையில் வர்ஷா பாதிக்கப்பட்டிருக்கலாம். நடந்த வரைக்கும் சரி..இப்போது வர்ஷாவின் பாதுகாப்புக்கு என்ன செய்வது?




“தாத்தூ….! அலறினான். 

அப்போதுதான் தியானம் முடிந்து எழுந்தவருக்குப் பேரனின் கலக்கம் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது.

“ப்ருத்வி..வர்ஷாவை வழியனுப்ப ஏர்போர்ட் போ. நான் அவளுக்குத் தந்த மஞ்சள் கிழங்கை எப்போதும் அவளோடு வைத்திருக்கக் சொல். நான் இப்போதே இங்கே நம் குலதெய்வத்திற்குப் பூஜை ஆரம்பிக்கிறேன். அம்மனின் அருள் கடாட்சம் ஒரு கவசமாக வர்ஷாவைக் காக்கும். நீ எதற்கும் கலங்காதே”

தாத்தாவின் மந்திரச் சொற்கள் அதீத தெம்பைத் தர…ஏர்போர்ட்டில் வர்ஷாவிடம் ,

“மஞ்சள் கிழங்கை எப்போதும் உன்னோடு, உன் ஹேண்ட் பேகில் வைத்துக் கொள்.ம்..எடு ..சீக்கிரம்..!

வர்ஷா மஞ்சள் கிழங்கை எடுத்து கைப்பையில் வைக்கவும்,ட்ராலியைத் தள்ளிக் கொண்டு டெய்ஸி பின்தொடர அங்கத் வந்து சேரவும் சரியாக இருந்தது.

“ஹேய் வர்ஷா..”  அங்கத் அருகில் வர,

 மயங்கி விழாமல் “ஹாய்” என்று புன்னகைத்த வர்ஷாவைப் பார்த்து டெய்ஸி ஆச்சர்யப்பட, நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ப்ருத்வி.

அவளுக்கு மட்டும் கேட்கும்படி ஹஸ்கி வாய்ஸில்

 “பீ அவேர் மை டியர்”  என எச்சரித்த ப்ருத்வி இருவருக்கும் பொதுவாக 

“பான் வாயேஜ்..ஹேவ் எ ஸேஃப் ஜர்னி”

வாழ்த்தி விட்டுக் கிளம்பினான். அவன் தலை மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த வர்ஷாவின் கண்களில் நிரம்பி வழிந்த காதலைக் கண்டு மனதுக்குள் சிரித்துக் கொண்ட அங்கத்,

“இந்தியா சென்று சேர்வதற்குள் நீ என்னவளாகி விடுவாய் பெண்ணே..!

உன் மொத்தக் காதலுக்கும் குத்தகைதாரன் நானே!”

கொக்கரித்தான்.

ஃப்ளைட் கிளம்பும் வரை வர்ஷாவுடன் மொபைலில் பேசிக்கொண்டேயிருந்த டெய்ஸி.. ஃப்ளைட் டேக் ஆஃப் ஆனதும் மனசேயில்லாமல் கிளம்பினாள். நாளை இந்நேரம் அவளும் கிளம்ப வேண்டுமே!

தாத்தா பூஜையில் மும்முரமாக இருக்க, அடுத்த நாள் பயணத்திற்கு ஆயத்தம் செய்யத் துவங்கினான் ப்ருத்வி.




ட்ரையரிலிருந்து துணிகளை எடுத்து வந்து மடித்தவன், ஜீன்ஸ் பாக்கெட்டில் ஏதோ தட்டுப்பட…அடடே…வர்ஷாவின் செயின்.. எப்படி மறந்தேன்? அட..! ஹார்ட் ஷேப் லாக்கெட்…சூப்பரா இருக்கே! திறக்க முயற்சிக்க.. ம்ஹூம் முடியவில்லை.வாஷிங் மிஷினில் அடிவாங்கி ,லாக் இறுகி விட்டது போல.

உள்ளே என்ன இருக்கும்? ஒருபுறம் குட்டிப் பெண் வர்ஷாவின் ஃபோட்டோ. மறுபுறம் கொஞ்சும் குமரியாக! கற்பனை இனிக்க லாக்கெட்டை உள்ளங்கையில் வைத்து இதழ் பதித்தான்.

“கைகள் கோர்த்து உன்னோடு போக என் நெஞ்சம்தான் ஏங்குதே..

தினம் உயிர் வாங்குதே …”

உருகி..உருகி அவன் பாட,

அவன் மனம் கவர்ந்தவளோ உயர…உயரப் பறந்து கொண்டிருந்தாள் வல்லூறு ஒன்றுடன்.

இந்தியாவையும்,அடிக்கடி (அரைகுறை நினைவில்) தன்னோடு பேசிப் பழகும் யவனாவை, பால்ய தோழியை நீண்ட நாள் கழித்துப் பார்க்கப் போகும் பரவசத்தில் குழந்தை போலப் பேசிக் கொண்டே வந்தாள் வர்ஷா. 

அடுத்தடுத்த இருக்கைகள்தான். தோளோடு தோள் இடித்துக் கொள்ளக்கூடிய நெருக்கம்தான். கட்டிப் பிடித்துக் கொண்டாலும் தவறாகப் பார்க்காத அமெரிக்க கலாச்சாரம்தான். ஆனால் ஏனோ வர்ஷாவிடம் கொஞ்சம் நெருங்கினாலே அங்கத்தின் உடல் எரிவது போல் இருந்தது. மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது.

தூக்கத்தில் சாய்ந்தாடிக் கொண்டே வந்தவளைத் தன் தோள் மீது சாய்க்க..அவள் தோளைத் தொட்டவனுக்கு நெருப்பைப் தொட்டது போலிருந்தது.

என்ன மாயம் இது? குழம்பித் தவித்தான் அங்கத்.

————–

சின்னமனூரில் வீட்டையே அதகளப் படுத்திக் கொண்டிருந்தாள் யவனிகா. 

சும்மாவா….? அவள் பால்யத்தோழி வர்ஷா வருவதோடு, அவள் கம்பெனி டைரக்டர் வேறு வருகிறாராம்! புது ஃபர்னிச்சர் வாங்கலாமென்றால் தடா.

மைக்ரோவேவ் ஓவன் வாங்கலாமென்றால் அதற்கும் தடா..! வருபவர்களை எப்படிக் கௌரவமாக நடத்துவது? எப்படியாவது வர்ஷாவுடன் அமெரிக்கா போய்விட வேண்டும். இனி இந்த. ஊரில் குப்பை கொட்ட என்னால் ஆகாது.பாஸ்போர்ட் ரெடியாக இருக்கிறது. விசாவுக்கு அப்ளை செய்ய வேண்டும். மெதுவாகத் தந்தையிடம் வந்தாள்.

“அப்பா…

“சொல்லுடா‌‌ !’

“எனக்கு அமெரிக்கா போக விசா ஏற்பாடு செய்யணும்ப்பா!”

“செஞ்சுட்டா போச்சு..அதுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம் செய்யணும். இன்னும் ஒரு மாசத்துல ராஜசேகர்,வந்தனாவும் வரப் போறாங்களாம். அப்ப கல்யாணத்தை வெச்சுக்கலாமா?”

அவ்வளவுதான்..ஃப்யூஸ் பிடுங்கிய பல்பாகி விட்டாள் யவனிகா!

————–




“பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு நெறியில் இருப்பர்”

 என்று தொல்காப்பியமே சொல்கிறது. 

அப்படியிருக்கையில் எங்கள் களவொழுக்கத்தைக் கண்டிக்க இந்தப் பன்னகப்பிடாதி யார்? எதற்காக என் மணாளனை நான் சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும் சிவபூஜை கரடியாக….இல்லையில்லை கொம்பேறி மூர்க்கன்  போலத் தொடர்ந்து வந்து எங்கள் சந்தோஷத்தில் குறுக்கிட்டு நஞ்சைக் கக்குகிறான் . அந்த வஞ்சகனை மலை போல் நம்புகிறாரே நம் நாயகர். 

காதலன், கணவனாகும் நாள் வெகு தொலைவில் இல்லைதான். ஆனாலும் இப்படி யாருமறியாது தனித்து சந்தித்து மகிழ இனி வாய்ப்பேது? மாலையிடும் நாளன்றுதான் காண முடியும் என் கண்ணாளனை. இன்னும் சில நாழிகை பேசிக் களித்திருக்கலாம். ஏதோ ராஜாங்க விஷயமென அவர் கவனத்தை திசை திருப்பி விட்டான் அந்த நாசக்காரன் . அவனுடைய உள்நோக்கம் யாதென்பதை அறியக் கூடவில்லையே. ஒற்றறிய யாரை அனுப்பலாம். இருக்கட்டும்…! எங்கு போய் விடப் போகிறான்? மெய்க்காப்பாளனாமே? கர்வத்துடன் சொல்கிறான்.  யாரிடம்? என்னிடமே வா?

விவாகம் முடிந்த பின் என் மணாளனைக் காக்க நானிருக்கிறேன் என்று அந்த அண்டங்காக்கையை அண்ட விடாமல் செய்து விடுகிறேன். புரவியில் ஏறியமர்ந்த பிறகு கூட அவர் ஏதோ சொல்ல வந்தாரே..? என்னவாக இருக்கும்? நினைக்க ,நினைக்க ஆறவில்லை சோணைக்குழலிக்கு!

“நாளை முதல் விரதம் நோற்க வேண்டும். மனம், பொறி வழி போகாது நிற்றல் பொருட்டு, உணவை விடுத்தேனும் சுருக்கியேனும்- 

மனம் வாக்கு. காயம் என்ற மூன்றினாலும் நெறிப்படி கடவுளை மெய்யன்போடு வழிபடுதலே விரதம் எனப்படுகிறது. ஐம்புலன்களையும் அடக்கி விரதக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றிப் பூஜை செய்ய வேண்டும். விரதபங்கமேதும் நிகழாதவண்ணம் வழிநடத்துவாய் தேவி..!”

மனமுருக வேண்டிக் கொண்டாள். காணாமல் போன பதக்கச் சங்கிலியின் நினைவு வேறு மனதில் ஊவாமுள்ளாக உறுத்திக் கொண்டிருந்தது.

அவசரமான ராஜாங்க அலுவல் என்று பன்னகப் பிடாதி பூபாலனை குணக்குன்றுக்கு அழைத்து வந்து விட,

பூபாலன் மனதில்‌‌…

“அடடா இந்த முறையும் குழலியின் பதக்கச்சங்கிலியைத் தர மறந்து விட்டோமே..! இருக்கட்டும்..! நம் அரண்மனைப் பொற்கொல்லரிடம் கொடுத்து, புதுப்பிக்கச் சொல்லலாம். அந்தப் பதக்கத்தை திறக்கவே முடியவில்லையே‌. அதற்குள் என்னதான் இருக்கும்? பொற்கொல்லரையே திறந்து தரச் சொன்னால்? வேண்டாம்..விவாகம் முடிந்து தனிமையில் நானும், குழலியும் சந்திக்கப் போகும் அந்த இனிமையான தருணத்தில் அதைக் காண்பித்து, அவள் வதனம்  தாமரையாக மலர்வதைக் காண வேண்டும். அது வரை பொறுத்திருப்போம். மனதுக்குள் கற்பனை சிறகடித்துப் பறந்தது.

அந்தப் பதக்கத்தை மட்டும் பூபாலன் திறந்து பார்த்திருந்தால்…

“கண்ணியும்செங் கண்ணும் கடிமணம் கண்டமலை

பெண்ணாய்க் குழலி பெரிதுவந்தாள் – தண்மதியாள்

பாங்கியிள காந்தி பதியோ குணக்குன்றான்

ஆங்கமு தற்ற அமைச்சு” 

குறு ஓலை நறுக்கில் குருநாதரால் கிரந்த மொழியில் எழுதப்பட்டு பதக்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாடலை பூபாலன் கவனித்திருக்கலாம். கவனித்திருந்தால் பெரும் விபரீதம் ஒன்று தவிர்க்க,தடுக்கப் பட்டிருக்கலாம்.

ஆனால்…

ஊழ்வினை வந்து உறுத்தூட்டுகையில்

பாராளும் மன்னனாக இருந்தாலென்ன?

ஏராளராக இருந்தால்தானென்ன?

யாவும் விதி வசமே!

(ஏராளர்- உழவர்)

(தொடரும்)




What’s your Reaction?
+1
9
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!