Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-14

14

“நடனம் அற்புதம்”

” யார் இந்த பெண்?”

” உங்கள் சொந்தமா?”

“ஓ  சுமலதாவின் தங்கையா?”

” ரொம்பவும் அருமையான பெண்”

” அழகாக இருக்கிறாள்”

 இப்படி விதவிதமான பாராட்டுக்களோடு வந்திருந்த விருந்தினர்கள் விடைபெற்றுப் போக, எப்படி அரங்கேற்றம் நடந்து முடிந்தது என்று புரியாமலேயே ஒரு விட மரத்த தன்மையுடன் நின்றிருந்தாள் வைசாலி.

 அதோ அங்கே நிற்கிறாள் ,அங்கே போகிறாள், அவர்களை உபசரிக்கிறாள்… இப்படி அவள் கண்கள் வீடு முழுவதும் சுற்றி வந்த மாயாவின் மேலேயே இருந்தன. சற்று முன் சித்தார்த்தனின் மனைவி என்று அவள் அறிமுகப்படுத்திக் கொண்ட போது இல்லை என்று சொல்லேன் என்பதாக சித்தார்த்தனை பார்க்க அவன் முகமே உண்மை என்று உணர்த்திவிட்டது.

” சுமா அக்காவுடைய சிஸ்டரா நீங்க? உங்கள் அரங்கேற்றத்தை மாமாவே செலவுகளை ஏற்றுக் கொண்டு நடத்துகிறாரா? இது போன்ற பொதுநல காரியங்களில் எல்லாம் மாமாவிற்கு மிகுந்த ஆர்வம் உண்டு. சீக்கிரம் தயாராகி வாருங்கள்” என்றவள்…

“ஒரு முக்கியமான விஷயம்..வாங்களேன்” சித்தார்த்தனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டாள். நடப்பதை நம்ப முடியாமல் அப்படியே அமர்ந்து விட்டவளை தேவகி தான் வந்து உலுக்கினாள்.




” என்னம்மா இப்படி உட்கார்ந்திருக்கிறாய்?”

 அழுகையுடன் தாயின் மடி புகுந்து விட துடித்தது அவள் மனது. ஆனால் இது சுற்றிலும் விருந்தாட்கள் நண்பர்கள் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில் எதுவும் வேண்டாம். தனக்கு தானே திடம் சொல்லி நிமிர்ந்து கொண்டாள். எத்தனையோ வருடங்களாக அரங்கேற்றத்திற்காக மனதிற்குள் ஆசைப்பட்டிருக்கிறாள். அந்த அடக்கி வைத்த ஆசைதான் இப்போது வைசாலியை செலுத்தியது.

 முன்பே பயின்றிருந்த நாட்டிய அசைவுகள் இயல்பாக அவளிடம் வெளிப்பட வந்திருந்தவர்கள் அனைவரும் கைத்தட்டி அவளுடைய நடனத்தை வரவேற்றனர். ஒரு மணி நேர நிகழ்ச்சி முடிந்ததும் உடலெங்கும் ஒரு வித நடுக்கம் பரவ அறைக்குள் வந்து அமர்ந்தாள். 

 இந்த நிகழ்வு முடிந்தவுடன் கந்தவேல் அவளையே மருமகளாக அறிமுகம் செய்வார் என்ற எண்ணம் முழுக்கவே நிராசையானது. ஏனெனில் கந்தவேலின் இரண்டாவது மருமகளாக சித்தார்த்தனின் மனைவியாக வீட்டிற்குள் எல்லா இடத்திலும் வளைய வந்தாள் மாயா. அவளை சித்தார்த்தன் உட்பட யாரும் தடுக்கவோ மறுக்கவோ இல்லை என்பதுதான் அங்கே பெருங் கொடுமை.

“எங்கள் வைசுவின் நெடுநாள் ஆசை. தயக்கத்தோடு நான் தள்ளிப் போட்ட விஷயத்தை இன்று நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்” குரல் கரகரக்க கந்தவேலின் கைகளை பற்றிக் கொண்டார் முகுந்தன். முகுந்தனுக்கும் தேவகிக்கும் மகளுடைய ஆசையை நிறைவேற்றிய மாமனார் மிக உயர்ந்தவராக தோன்றினார்.

கூடவே வந்திருந்தவர்களின் பாராட்டுகளும் சேர்ந்து கொள்ள மகள் சபையில் சித்தார்த்தனின் மனைவியாக அறிமுகப்படுத்தப்படாததை உணராமலேயே விடை பெற்று கிளம்பினர்.

எல்லோரும் கிளம்பிய பிறகு வேலைக்காரர்களையும் ஒவ்வொருவராக அனுப்பிய பின் வீட்டினர் மட்டுமாக தனித்திருக்க, கந்தவேலின் பார்வை முதலில் தாக்கியது சுமலதாவை.

” திடீரென்று வந்துவிட்டாள் மாமா,  சித்துவை எங்கேன்னு  மாடியேறவும் ஆரம்பிச்சுட்டா. முன்னால் போய் வைஷுவையும் சித்துவையும் எச்சரிக்கலாம் என்று நான் வருவதற்குள்… என் பின்னேயே ரூமுக்குள் நுழைந்து விட்டாள்”

 சுமலதா சொல்ல பெரும் மௌனம் நிலவியது. இன்னமும் நடன உடையை மாற்றாமலேயே நின்றிருந்தாள் வைசாலி.கண்களை சுற்றி தேடி மாயா அங்கே இல்லை என்பதை கண்டு கொண்டாள். அப்படியென்றால் அவள் இங்கே தங்குவதற்கு வரவில்லையா? ஆனால் ஏன் இங்கே வந்தாள்?வைசாலியின் பார்வை சித்தார்த்தனுக்கும் கந்தவேலுக்குமாக அலைந்தது.

” என்ன விஷயம் மாமா?” நேரடியாக அவர் முன் போய் நின்று கேட்டே விட்டாள். இதுபோன்ற கேள்விக்காக என்று கூட சித்தார்த்தனின் முன் போய் நிற்க அவள் விரும்பவில்லை.

 முகத்திற்கு நேராக கேட்பவளுக்கு பதில் சொல்ல முடியாமல் கந்தவேல் தலைகுனிய காலுக்கு கீழ் நீர் சுழல் ஒன்று உருவாகி தன்னை உள்ளிழுப்பதாக உணர்ந்தாள் வைசாலி.

திரும்பி சித்தார்த்தனை நோக்க இரு கைகளையும் இறுக கட்டிக் கொண்டு தலை குனிந்திருந்தவன் “சாரி வைசு” என்றான். அதற்கு மேல் வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெளிப்பட மறுத்தன.

வைசாலி குழம்பி நின்ற போது வாசல் கதவை தள்ளி திறந்தபடி உள்ளே நுழைந்தால் மாயா. ஜெயன்ட் சைஸ் டிராலியை உருட்டியபடி வந்தவள் “சரியான நேரத்திற்கு வந்து நமது குடும்ப விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்து விட்டேன்தானே மாமா?” என்று கந்தவேலிடம் பேசிவிட்டு, சித்தார்த்தன் பக்கம் டிராலியை தள்ளினாள்.

” இதை கொண்டு போய் நம் ரூமில் வையுங்கள்” மனைவிக்கான அதிகாரக் குரலில் சொன்னாள். அப்போதுதான் வைசாலியை கவனித்தவள் போல் கண்களில் ஆச்சரியம் காட்டியவள் “வைசாலி நீங்கள் உங்கள் வீட்டிற்கு இன்னும் போகவில்லை?” என்றாள்.

“சுமா அக்கா உங்கள் தங்கை பரவாயில்லை, ஏதோ கொஞ்சம் சுமாராக ஆடுகிறாள்” சொல்லிவிட்டு அனாவசியமாக உடலை குலுக்கி ஒரு மாதிரி சிரித்துக் கொண்டாள்.

இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்து “உடம்பெல்லாம் வலி, நான் போய் படுக்கிறேன்” என்றபடி படி ஏறியவள்   நின்று திரும்பி “மாமா எனக்கு ஊர் ஊராக சுற்றுவது பிடிக்கவில்லை. இனிமேல் நான் ஒழுங்காக வீட்டிலேயே இருந்து கொள்கிறேன்.ம்… நீங்கள் கவலைப்படாதீர்கள் சித்துவை நான் நன்றாகவே பார்த்துக் கொள்வேன்” என்றவள் மீண்டும் ஒரு சிரிப்பை சிந்தி விட்டு “வாங்க சித்து” என்று ஒரு மாதிரி ஹஸ்கி வாய்ஸில் அழைத்து விட்டு மாடி ஏறி போய்விட்டாள்.




பாக்கியலட்சுமி மெல்ல நடந்து வந்து வைசாலியின் தோள்களை தொட அவள் கண்களில் நீரோடு திரும்பி பார்த்தாள் “அப்படி பார்க்காதேம்மா, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. மாயாவிற்கும் சித்துவிற்கும் விவாகரத்து ஆகவில்லை.அந்த அடங்காபிடாரி விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறாள். கண் முன்னாலேயே தனிமையில் வாடும் மகனை எத்தனை வருடங்கள்தான் பார்த்துக் கொண்டிருப்பது! அதனால் தான் திருமணம் முடித்து வைத்தோம். இப்படி இவள் மீண்டும் வீட்டிற்குள் வந்த நிற்பாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை”

ஆக, ஏற்கனவே மணம் முடித்த ஒருவனுக்கு இரண்டாவது மனைவியாக மிகவும் கீழான நிலைமையில் இந்த வீட்டிற்குள் நுழைந்திருக்கிறாள். வைசாலியின் கண்களில் கண்ணீர் வழியத் துவங்கியது. சித்தார்த்தன் அவசரமாக அவள் அருகில் வந்து கண்ணீரைத் துடைக்க கை நீட்ட சட்டென  பின்னடைந்தாள். ஒற்றை விரல் ஆட்டி அவனை எச்சரித்தாள்.

” எல்லாரும் ஏமாத்திட்டீங்க” அனைவரையும் பார்த்த பார்வை இறுதியாக வந்து நின்றது அவள் சகோதரியிடம். நீயுமா அக்கா… வார்த்தைகளால் இல்லாது கண்களால் கேட்ட அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்தாள் சுமலதா.

“நீ இந்த ரூமில் தங்கிக்கோம்மா. நாளை மாமாவை வக்கீலை பார்த்து பேச சொல்லலாம்” பாக்கியலட்சுமி சொல்லி முடிக்கும் முன்பே அவள் சுட்டிக்காட்டிய அறைக்குள் வேகமாக நுழைந்திருந்தாள் வைசாலி.

 ஏனெனில் இன்னமும் சில வினாடிகள் அங்கேயே இருந்திருந்தால்  மயக்கம் வந்து விழக்குடிய அபாயத்தை தன் உடலில் உணர்ந்திருந்தாள். அனைவரின் முன்பும் மயங்கி விழுந்து, அது வேறு அசிங்கப்பட அவள் தயாராக இல்லை.

ஒரு மூச்சு கத்தி அழுதுவிட்டால் இந்த மனபாரமும் தலை சுற்றலும் குறைந்துவிடும் என்று எண்ணி கட்டிலில் விழுந்தவளுக்கு, பொட்டு அழுகை கூட வரவில்லை. ஒரு மாதிரி வெறித்தாற் போல் படுத்து கிடந்தாள்.

வாங்க சித்து… கொஞ்சல் குரலில் அழைத்துப் போன மாயாவின் நினைவில் மனம் கசங்கியது.இப்போது என்னுடைய அறைக்குள் அந்த மாயா அவனுடன், அதிர்ச்சியில் அவள் உடல் குலுங்கியது. இல்லையே அது முன்பு அவளுடைய அறையல்லவா? நான் தானே புதிதாக நுழைந்து கொண்டவள்… இப்படி யோசிக்க யோசிக்க மண்டை குழம்புவது போல் இருந்தது.

இவர்கள் சொன்னபடி எவ்வளவோ அநியாயம் செய்திருந்த அந்த மாயாவை வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்ல இங்கே யாரும் தயாராக இல்லை, மாறாக என்னைத்தான் ஒதுக்குகிறார்கள். இதன் காரணம்…. மேலே யோசிக்கவே பயந்து போய் வைசாலி தவித்துக் கொண்டிருந்தபோது அவளது அறைக் கதவு ரகசியமாய் தட்டப்பட்டது.




What’s your Reaction?
+1
46
+1
28
+1
2
+1
1
+1
0
+1
0
+1
10
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Thenmozhi
Thenmozhi
5 months ago

மனசே கனமா இருக்கு வைசுக்கு ஏ இப்படி

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!