Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-3

3

அரை மணி நேரத்திற்கும் அதிகமாகவே ஜில்லென்று குளிரக் குளிர ஷவருக்கடியில் நின்றாயிற்று. ஆனாலும் வைசாலியின் உள்ளக் கொதிப்பு அடங்கவில்லை. எவ்வளவு திமிர்! அத்தனையும் பணத்திமிர்! எந்த தைரியத்தில் என்னை இரண்டாம் தரமாக கேட்டு வந்திருப்பார்கள்? இவர்கள் பணத்தையும் பங்களாவையும் பார்த்து ‘ஈ’ என்று இளித்துக் கொண்டு போவோம் என்று நினைத்தார்களோ?

அவர்களுக்குத்தான் பரம்பரை திமிர் என்றால் இவளுக்கு என்ன வந்தது? உடன்பிறந்து 23 வருடங்கள் ஒன்றாக வளர்ந்தவள், அப்படியெல்லாம் முடியாது என்று அவள் வீட்டினரிடம் பேசியிருக்க வேண்டியதுதானே? வைசாலியின் கோபம் சுமலதாவின் வீட்டினர் அனைவர் மேலும் சுற்றி சுற்றி வந்தது.உடன் பிறந்தவள் மேல் சூரியத்தகிப்பு.

இதற்கு மேலும் நீருக்குடியில் நின்றால் உடல் விரைத்து விடும், என்று உணர்ந்து தலையை துவட்டி வெளியே வந்தவள் அலுவலகத்திற்கு கிளம்பி சாப்பிட வந்த தந்தையின் முகத்தை சிறு பயத்துடன் ஆராய்ந்தாள். மிகுந்த இறுக்கத்துடன் இருந்தது முகுந்தனின் முகம்.

முதல் நாள் அப்பா தனது பெரிய மகளை உடனிருந்து சீராட்டும் எண்ணமின்றி அறைக்குள் அடைந்திருந்தது நினைவு வர, மெல்லிய ஆசுவாசத்துடன் மூச்சு விட்டுக் கொண்டாள்.

இட்லிக்கு சாம்பார் ஊற்றிக் கொண்டவளின் தட்டில் கொத்தாக வந்து அமர்ந்தது கெட்டி தேங்காய் சட்னி.

ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள்.அப்பாவா…! 

” எதற்கு என் மூஞ்சியை பார்க்கிறாய்? தட்டை பார்த்து சாப்பிடு”அப்பாவின் அக்கறையை இந்த அதட்டல் உணர்த்தி விட,கரை கட்டி விட்ட கண்களை தாழ்த்தியபடி இட்லியை பிட்டாள்.

நேரமாகிவிட்டதால் நடன வகுப்பிற்கு விடுமுறை சொல்லிவிட்டு, போனில் ரஞ்சனியின் உறுமலான ம்மை சலனமின்றி கேட்டுக் கொண்டு, தனது ஷோரூமிற்கு செல்லலானாள். வாயிலை நெருங்கிய பிறகுதான் அந்த பயம் வந்தது, அவன் அந்த சித்தார்த்தன் இன்றும் வருவானா?

 முதலில் நேற்று ஏன் வந்தான்? என்னை பார்ப்பதற்காகவா? அதென்ன அவ்வளவு உரிமையான பேச்சு? முதல் நாள்,அவன்  கேள்விக்கு நிமிர்ந்து கண்களுக்குள் பார்த்த வைசாலி கைகளை கட்டிக்கொண்டு அவனை தீவிரமாக உறுத்து “ஸாரி” என்றாள்.

 உடன் முகம் சிறுத்த அவன் வேறு பேச்சுக்கு மாறிக் கொண்டான். எந்த எண்ணத்தில் அவ்வளவு உரிமை காட்டினான்? ஒரு வேளை… வைசாலியின் மனது பிசைந்தது. இன்று அவன் மீண்டும் வந்தால் எப்படி சமாளிப்பது?

 பயந்தபடி இருந்தவளுக்கு ஆறுதலாக

அவன் அன்று வரவில்லை. அத்தோடு கடந்த ஒரு வாரமாக ஸ்கூட்டர் சம்பந்தமாக அவளிடம் போனில் பேசியபடி இருந்தவனின் போன் காலும் வரவில்லை. ஆனால் அவன் மீண்டும் வருவான் என்பதில் வைசாலிக்கு உறுதி. ஏனெனில் ஒரு வாரமாக போனில் பிறகு நேரில் என்று பாலோ செய்து கொண்டு வந்த அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்னமும் அவன் வாங்கவில்லை.

 அன்று தனது தோழிக்கு என்று உடன் அழைத்து வந்த பெண்ணை காண்பித்தான்.நிச்சயம் மீண்டும் வருவான்.பொதுவாக இந்த மாதிரி நேரத்தில் இவர்கள் கம்பெனி ரூல்ஸ் படி வைசாலியே அவனை தொடர்பு கொள்ள வேண்டும். அந்த ஸ்கூட்டரை வாங்க வைக்க முயற்சிக்க வேண்டும்.ஆனால் வைசாலியால் அவனுடன் இயல்பாக போனில் பேச முடியும் என்று தோன்றவில்லை.

“நேற்று வந்த கஸ்டமர் என்று வரவில்லையா? என்ன சொல்கிறார்?” சங்கரன் கேட்க வைசாலி தடுமாறினாள்.




” அவர்… வந்து… இரண்டு நாளில்… வந்து…” சட்டென பொய் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

“இன்று போனில் பேசினீர்களா? என்ன சொல்கிறார்?”

“இ… இல்லை நேற்று பேசியதுதான்”

” இது என்ன பதில் வைசாலி மேடம்? அப்படி கஸ்டமர்களை விட நம்மால் முடியுமா? உடனே போன் செய்து அவரிடம் பேசுங்கள்” சொல்லிவிட்டு அவன் அடுத்து வந்த கஸ்டமரை கவனிக்க போய்விட்டான்.

 மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சங்கரன் மீண்டும் கேட்டபோது வைசாலி மறுப்பாக தலையசைக்க அவளை வினோதமாக பார்த்தான். “உங்களுக்கு என்னவாயிற்று மேடம்? வேலையில் அக்கறை போய்விட்டதா? ஹெட் ஆஃபீஸ்க்கு ஒரு மெயில் போடவா?” நக்கலாக கேட்டான்.

 இதுபோல் கஸ்டமர்களிடம் சரிவர நடந்து கொள்ளவில்லை என்று சக ஊழியர் ஒரு மெயில் அனுப்பினால் போதும், உடனே ஹெட் ஆஃபீஸிலிருந்து இவள் மேல் என்கொயரி வந்துவிடும். “நமது இந்த மாத சேல்ஸை நிறைவு செய்ய இன்னமும் நாம் ஐந்து வண்டிகளை விற்றாக வேண்டும் மேடம். நினைவில் இருக்கிறதுதானே?” அவன் கேட்க வைசாலி மௌனமாக தனது ஃபோனை எடுத்து சித்தார்த்தனுக்கு அழைத்தாள்.

இரண்டாவது ரிங்கிலேயே போனை எடுத்தவன் “கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். நானே கூப்பிடுகிறேன். தொல்லை செய்யாதீர்கள்” என்று போனை வைத்து விட்டான்.

” கஸ்டமர் எப்போதும் பிசியாகத்தான் இருப்பார்கள். நாம் அவர்களை தொடர்ந்து தொல்லை செய்தே ஆக வேண்டும். இன்று மாலை திரும்பவும் முயற்சியுங்கள்” சொல்லிவிட்டு சங்கரன் போய்விட்டான்.

அத்தோடு விடாமல் அன்று மாலை மீண்டும் அந்த கஸ்டமரிடம் பேசினீர்களா என்று விசாரிக்க வைசாலி வேறு வழியின்றி மீண்டும் போன் செய்தாள். இந்த முறை சித்தார்த்தன் போனை எடுக்கவே இல்லை.இரண்டு முறை முயற்சித்தும் போன் எடுக்கப்படாமல் போக,சங்கரனை பார்த்தாள்.

” நாளை எப்படியாவது பேசி விடுங்கள்” உத்தரவு போல் சொல்லிவிட்டு போனான் அவன். இவனுடைய உத்தரவிற்கு நான் ஏன் கீழ்ப்படிய வேண்டும், உள்ளத்துப் புகைச்சலை தனது வேலையை எண்ணி அடக்கி கொண்டாள். எப்பொழுது அவளை தடுக்கி விடலாம் என்று தருணம் பார்த்திருக்கும் சங்கரனுக்கு எந்த சந்தர்ப்பமும் தர விரும்பவில்லை அவள்.

 ஆனால் இவன் ஏன் போனை எடுக்கவில்லை? தயிர் மத்தாய் கேள்விகள் கடைந்தன அவளை.

அப்பா மறுத்ததை அக்கா அவள் வீட்டினரிடம் சொல்லியிருப்பாள். இவர்களுக்கு இவ்வளவு திமிரா? என்று கொதித்துப் போய் இருப்பார்கள் அவர்கள் அனைவரும். இதன் பாதிப்புதான் அவன் அவளது போனை தவிர்ப்பதன் காரணம் என உணர்ந்தாள் வைசாலி.

வீட்டிற்குள் நுழைந்ததும் தன்னை கலக்கமாக பார்த்த சிறிய மகளின் தலையை மென்மையாய் வருடினாள் தேவகி.”அப்பா முடியாது என்று சுமாவிடம் சொல்லியே அனுப்பிவிட்டார் வைஷு. பயப்படாதே”

வைசாலியினுள் நிம்மதி பெருமூச்சு. அன்று இரவு உணவின் பின் சற்றே ரிலாக்ஸாக வீட்டின் முன்வராண்டாவில் நடந்தபடி இருந்த பொழுது உள்ளே அவளது போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது.அது அவளது அலுவலக போன். ஏதோ பரபரப்புடன் வேகமாக உள்ளே ஓடிவந்து பார்த்தவள் எண்ணம் சரிதான்.அவன் சித்தார்த்தன்தான் அழைத்துக் கொண்டிருந்தான்.




What’s your Reaction?
+1
57
+1
24
+1
2
+1
2
+1
5
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!