Serial Stories

நீ தந்த மாங்கல்யம் -33 (நிறைவு)

(33)

எங்களை முடிந்தால் மன்னித்து விடுங்கள் ” கண்ணீருடன் குணாவின் கையை பிடித்தபடி வெளியேறி விட்டாள் சௌம்யா .

ஈஸ்வரமூர்த்தியும் , சந்திரவதனாவும் தலை குனிந்தபடி வெளியேற அவர்களை அனுப்ப மோகனரங்கம்
சென்றார் .

” சார் என் வேலை முடிந்தது .இனி நான் என் இடம் பார்த்து போகலாமென்று நினைக்கிறேன் ” என்றாள் காருண்யா .

யதுநந்தன் ” இன்னமும் உனக்கு நான் சாரா ?” என்று அவள் தலையில் கொட்ட வர , ” இல்லையில்லை ..நந்து” என சிரித்தாள் அவள் .

சற்றே தளர்ந்து நின்ற பாட்டியம்மாவை பார்த்த யதுநந்தன் “, வாருங்கள் பாட்டி நீங்கள் சிறிது ஓய்வெடுங்கள் ” என அவரை அழைத்து சென்றான் .

” அண்ணி நீங்கள் இப்படி ஏதாவது வித்தியாசமாக யோசிப்பீர்களென தெரியும் .அசத்திட்டீங்க அண்ணி ” என அவள் கைகளை பற்றி குலுக்கினான் கீர்த்திவாசன் .

” என்னை விட உங்களுக்கு இப்போது உங்கள் அண்ணன்தானே ரொம்ப குளோஸ் .நீங்க அவர்கிட்டேயே பேசிக்கோங்க ” கோபம் போல் முகம் திருப்பிக் கொண்டாள் முகிலினி .

” பேசலாம்தான் அண்ணி .ஆனால் பாருங்கள் பத்து வார்த்தைக்கு ஒரு முறை முகிலினி என்று உங்கள் பெயரை உச்சரிக்காவிட்டால் அண்ணன் என் பேச்சை காது கொடுத்து கேட்க மாட்டேனென்கிறார் .என்ன செய்வது அண்ணி ? ” என அவளிடமே ஆலோசனை கேட்டான் .

அடக்க மாட்டாமல் சிரித்தாள் முகிலினி .அவளை பாசத்துடன் பார்த்தபடி ” உண்மைதான் அண்ணி , அன்று உங்கள் மேல் மரக்கிளை விழாமல் காப்பாற்றினேனே .அதை தற்செயலாக அண்ணனின் காதில் போட்ட போது அவர் அப்படியே நெகிழ்ந்து நின்றார் .நான் அதனை என்னுடைய காரியங்களுக்கு உபயோகித்துக் கொண்டேன் ” என்றான் .

” உங்களை நாங்கள் கொல்ல முயற்சிக்கவில்லை .ஆனால் அசம்பாவிதங்கள் நடக்கின்றன . என கூறி அந்த மரக்கிளை விசயம் கூறினேன் .அண்ணன் யோசிக்க ஆரம்பித்து விட்டார் ” என்றான் .

ஆக தன் கணவன் ஆரம்பத்திலேயே எல்லா விசயங்களையும் கவனித்தபடியேதான் இருந்திருக்கிறான் .ஆனால் தன்னிடம் ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை .குழம்பினாள் முகிலினி .

அன்றிரவு அவர்கள் அறை பூக்களுக்கு இடையே இருந்தது .
“, என்னடி கட்டில் , பீரோ, டேபிள்னு எதையும் பார்க்க முடியாது போல .எல்லா இடமும் பூக்கள்தான் தெரியுது ” அறையை அலங்கரித்துக் கொண்டிருந்த வைஷ்ணவியிடம் கேட்டாள் முகிலினி .

” நீ பேசாமல் போய் டிரஸ் செய்து கொண்டு வா ” என அவளை டிரஸ்ஸிங் ரூமிற்குள் தள்ளினாள் வைஷ்ணவி .

அரைமணி நேரத்தில் வெளியே வந்த முகிலினியை பார்த்து பிரமிப்புடன் விழி விரித்தாள் .

“, இது அவரோட ப்ரெண்ட் அமிஷா கொடுத்த உடை .எப்படி இருக்கு ? ” என்றாள் .

” வாவ் ..இந்தி ஹீரோயின்கள்லாம் தோத்தாங்க போ.இன்னைக்கு சார் உன்கிட்ட விழுறவர்தான் பிறகு எழுந்திரிக்கவே போறதில்லை ” என்றாள்

” போடி அதுக்கு முன்னாடி நான் எப்பவோ அவர்கிட்ட விழுந்துட்டேன் ” என்றாள் முகிலினி .

” ஆத்தா நீ பிழைச்சிக்கிடுவ …சார் வர்ற நேரமாயிடுச்சு .நான் எஸ்கேப் ” பறந்து விட்டாள் அவள் .

விழுங்கும் பார்வையுடன் தன்னை நெருங்கிய கணவனிடம் ” நிறைய சந்தேகம் யது ” என்றாள் முகுலினி .

” ம்..கண்டிப்பாக முதலில் நம் சந்தேகங்களை நாம் தெளிவு பண்ணிக் கொள்வோம் .கேளு ” என்றான் .

“, உங்களுக்கு எப்போது சந்திரா அத்தை மேல் சந்தேகம் வந்தது ? “

” நீ அன்று கீர்த்திவாசனை பற்றி யோசித்து பாருங்கள் யது  என்று சொன்னாயே அப்போது “

” சதாசிவம் மாமா குடும்பமில்லை என்றால் , வேறு யாராக இருக்க முடியும் ? சந்திரா அத்தையை தவிர .ஏனென்றால் அவர்தான் சதாசிவ மாமாவை கை காட்டுகிறார் .மேலும் அதற்கு சாட்சியாக தன் கணவரையும் , கண்பார்வையையும் வேறு இழந்திருக்கிறார் .இதனால் அவர் மேல் சந்தேகம் கொள்ளவே தயக்கமாக இருந்தது “

” ம்..அதற்காகத்தானே அவர்கள் இந்த நாடகமே ஆடியது “

” சரியாக சொன்னாய் முகில் .அவர்களை சந்தேகப்பட்டு தொடர்ந்தாலும் எனக்கு எந்த ருசுவும் கிடைக்கவில்லை .கீர்த்திவாசன் வேறு விடாது படையெடுத்து கொண்டிருந்தான் .அவர்கள் குடும்பத்தை மன்னித்து விடும்படி .பேச்சுவாக்கில் உன் மீது ஒடிந்து விழுந்த மரக்கிளையை பற்றி கூறினான் .எனக்கு பொறி தட்டியது .”




எனக்கு அந்த நீச்சல்குள சம்பவத்திலேயே சந்தேகம் யது .அன்று யாரோ , எதுவோ கண்டிப்பாக என் கால்களை இடறி விட்டார்கள் .”

” அப்போதே ஏன் சொல்லவில்லை ? ” கோபமாக கேட்டான் யதுநந்தன் .

” அப்போது எனக்கு காருண்யா மேலல்லவா சந்தேகம் இருந்தது .நீங்கள் காருண்யாவிடம்  மிகவும் நம்பிக்கை வைத்திருந்தீர்கள் .பின் நான் எப்படி என் சந்தேகத்தை சொல்ல முடியும் ? “

யதுநந்தன் தலையசைத்துக் கொண்டான் .

” ஷாக்கடித்த போதும் சந்தேகம்தான் .ஆனால் அப்போதும் காருண்யா மேல்தான் .பெரியம்மாதான் தன் மேல் பரிதாப போர்வையை போர்த்துக் கொண்டிருந்தார்களே .”

” அன்று சௌம்யா மேல் சந்தேகமென்று நீ சொன்ன போது எனக்கு அடக்க முடியாத கோபம் .அவளும் , நானும் சிறு வயது முதல் நண்பர்கள் .இப்போது அவள் இன்னொருவர் மனைவி வேறு .அதனால் கோபம் மீறி …” என்றபடி அவள் கன்னத்தை வருடி ” சாரிடா …ரொம்ப வலித்ததா ? ” என உருகினான் .

” அன்றுதான் உங்கள் அத்தையின் நடிப்பை நான் தெரிந்து கொண்டேன் .அந்த அதிர்ச்சியில் உதிர்த்த வார்த்தைகள்தாம் அவை .”

” இதை நான் பின்னால் ஊகித்தேன் குட்டிம்மா ” சமயத்தை விடாமல் தன் உரிமையை அவள் மேல் நாட்டினான் யதுநந்தன் .

” நீங்கள் அடித்தது எனக்கு வலிக்கவில்லை யது .ஆனால் அதன் பிறகு உங்கள் பாராமுகம்தான் ….ஏன் யது ? “,

கண்களை இறுக மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் யதுநந்தன் .

” அது …முகில் …வந்து …அப்போது எனக்கு வேறு வழியிருக்கவில்லை .அன்று உன்னை அடித்துவிட்டு கோபத்தோடு அறைக் கதவை வேறு மூடிவிட்டு உள்ளே வந்து விட்டேன் .கொஞ்ச நேரத்திலேயே மனது உறுத்த தொடங்கியது. என்னை நானே நொந்தபடி அங்கிருந்த பூச்சாடியை பிடித்து தள்ளியபோது ….”

சொல்ல விரும்பாதது போல் கண்களை இறுக மூடி நின்றவன் ” அதனுள் ஒரு மைக் இருந்தது ” வறண்ட குரலில் சொல்லி முடித்தான்.

” என்ன …? ” அதிர்ந்தாள் முகிலினி .அவளுக்கு சௌம்யா முதலிரவிற்காக தங்கள் அறையை அலங்கரித்தது நினைவு வந்தது .

” உன் ஊகம் சரிதான் முகில் .அப்போதுதான் பொருத்தியிருக்கின்றனர்.இதன் மூலம் நாம் அறையினுள் பேசுவதையெல்லாம் கேட்டபடி இருந்திருக்கின்றனர் .

நான் அந்த மைக்கை நீக்கவில்லை முகில் .அதை அங்கேயே வைத்தால்தான் எதிரிகளை கணிக்க முடியுமென நினைத்தேன் .

இப்போது எனக்கு அத்தையின் மேலும் , சௌம்யாவின் மேலும் அழுத்தமாக சந்தேகம் வந்தது .ஆனால் எனக்கு ஆதாரம் வேண்டும் .தவிரவும் உன் உயிருக்கிருக்கும் ஆபத்தையும் போக்க வேண்டும் .இப்போது எனக்கு வேறு வழியில்லை .உன்னை தொடர்ந்து வெறுப்பது போன்றே நடிக்க ஆரம்பித்தேன் .

இதில் எனக்கு இரண்டு லாபம் .ஒன்று உன்னை வெறுக்க வேண்டுமென்ற எதிரிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும் .இரண்டு நாம் இருவரும் நம் அறைக்குள் பேசிக் கொள்வது குறையும் “

” யதுநந்தன் அறையினுள் பேச்சினை முழுவதும் தவிர்த்த காரணம் முகிலினிக்கு  இப்போது புரிந்தது .

“மறுநாள் காலை நம் அறைக்கு வந்த சௌம்யாவிடம் அதிகமாக சிரித்து பேசினேன் .மேலும் நம் அறை லாக்கிங் எண்ணையும் அவளிடம் தெரிவித்தேன் .முதல்நாள் நம் இருவருக்கும் நடந்த சண்டையில் உன்னை வெறுத்து விட்டதாக அவர்கள் நம்பும்படி செய்தேன் .

இதனால் அவர்களின் அடுத்த திட்டம் எனக்கு தெரிய வரும் .அத்தோடு உன் உயிரை பறிக்க நினைக்கும் எண்ணம் போகும் என்று நினைத்தேன் .அது சரியென்பது போல் உன் மேலிருந்த கவனிப்பை என் மேல் மாற்றினர் .

“என்னுடைய விலகல் உன்னை பாதிக்காமல் இருக்கவும் , உன்னை அருகிலிருந்து கவனித்து கொள்ளவும் உன் நல விரும்பியான வைஷ்ணவியை வர வைத்தேன் “

காருண்யாவை விட்டு நம் அறையை மேலும் ஆராய சொன்னேன் .இன்னும் இரண்டு இடங்களில் மைக் தெரிந்தது .”

மறநாள் காலை காருண்யா தங்கள் அறையிலிருந்து வெளியே வந்தது நினைவு வந்தது முகிலினிக்கு .

“, அன்று நீயும் அத்தையும் ஹாலில் நின்று சண்டையிட்டு கொண்டீர்களே.அதனை வீடியோ எடுத்து எனக்கு அனுப்பினாள் காருண்யா .அதற்கு முன்பே அத்தை பார்வையற்றவராக நடிப்பதை கண்டு கொண்டோம்.அன்று அத்தையின் முகத்தில் மண் அப்பினாயே …உன்னை அன்று கட்டிப்பிடித்து பாராட்ட வேண்டும் போல் இருந்தது .

“அப்போது முடியவில்லை .இப்போது….. “என்றவன்  அவளை இறுக அணைத்துக் கொண்டான் .சிறிது நேரம் கணவனின் அணைப்பை அனுபவித்தவள் ” யது நீங்கள் இன்னும் முழுவதுமாக பேசி முடிக்கவில்லை ” என சிணுங்கினாள் .
” ம்…ஆனால் இப்போது பேசத்தான் வேண்டுமா ? மீதம் நாளை பேசிக் கொள்ளலாமே ? “, என்றான் யதுநந்தன் தன் அணைப்பை இறுக்கியபடி .

சரியென்று சொல்லிவிடும் தன் ஆவலை அடக்கியபடி ” ம்ஹூம் …இப்போதே பேச வேண்டும் ” என்றாள் .

மனமின்றி அவளை விட்டு விலகி அவள் கன்னத்தில் தன் விரல்களால் விளையாடியபடி “இப்போது அத்தையின் பார்வையை பரிசோதித்த டாக்டரை பிடித்தோம் .அவர் மூலம் சங்கிலித் தொடர் போல் அனைத்தும் வெளியே வந்துவிட்டது “




” சௌம்யா அவள் அம்மாவின் கட்டுக்குள் அடங்கியிருக்கிறாள் என எனக்கு தெரிந்தது .அவளை அவளுக்கே உணர்த்தி விடத்தான் அவளுடன் நெருங்கி பழகினேன் .குணாவுடன் பேசி அவனை இங்கே வரவழைத்தேன் .என் எண்ணம் சரியாகி சௌம்யா கணவனுடன் கிளம்பிவிட்டாள் “

“, ஓஹோ …அதுதான் அன்று சௌம்யாக்காவோடு அவ்வளவு நெருக்கமாக நின்றுகொண்டிருந்தீர்களோ ?” பொய்யாய் முறைத்தாள் .

” ஏன்டி நானே எவ்வளவு கஷ்டப்பட்டு அவளுடன் மனப்பாடம் பண்ணி வைத்துக் கொண்டு காதல் பேசிக் கொண்டிருக்கிறேன் .இதில் நீ வேறு இடையில் அலங்கார தேர் போல் வந்து நின்று என்னை சோதிக்கிறாய் ? “

அன்று நான் வாங்கிக் கொடுத்த சேலையில் என் முன் வந்த போது எனக்கு உன்னை அப்படியே ….” என கூறி நிறுத்தினான் .

” அறையனும் போல் இருந்ததா ? “, என முகிலினி முடிக்க ” இல்லை ….” என்றவன் அவள் காதுக்குள் குனிந்து கிசுகிசுக்க ” சீச்சி …போடா …ரொம்ப கெட்ட பையன் நீ ….” என அவனை அடிக்க ….

” என்னது டா…வா …புருசனை டா போடுவ ? ” என அவளை பற்றி உலுக்க ….

” ஆமடா …புருஷா …அப்படித்தான்டா ….என்னடா ….செய்வ ….டா…..டா …..” என்றபடி அறையினுள் முகிலினி ஓட …

அவளை துரத்தி சென்று கட்டில் மேல் விழ்த்தியவன் ” என்ன செய்வேன்னு இப்போ காட்டுறேன்டி ” என அவள் மேல் பாய்ந்தான் .

தன் கழுத்தில் புதைந்த கணவனின் தலையை நிமிர்த்தியவள் ” யது உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்கனும் .என் அப்பாவின் மரணத்திற்கு நானே காரணமாக இருந்து விட்டு உங்களை துன்புறுத்திக் கொண்டிருந்தேனே .சாரி …சாரி …யது ..ப்ளீஸ் …”

” ஏய் மன்னிப்பு இப்படியா கேட்பது .இரு மன்னிப்பு கேட்கும் முறையை நான் சொல்லி தருகிறேன் ” வார்த்தைகளை கோர்த்து அவள் காதிற்குள் அனுப்ப ..சிலிர்த்தாள் அவள் .

” ஏய் எப்பவும் கவிதை சொல்வியே இப்போ ஒண்ணு சொல்லு பார்ப்போம் ” என்றான் .

கன்னக் கதுப்புகளில் உன்
நாவின் ஓவியங்கள்
சித்திர வேலைப்பாட்டில்
நிறைகிறது சேலை
மீசை வாசம் தின்று
மார்பு முடிக்குள் உதிர்கையில்
கவிதை கேட்கிறாய்
உனை வாசித்து
எனை எழுதவோ ?
எனை வாசித்து
உனை எழுதவோ ?
வார்த்தைகளை நான் தேட
எழுத்துக்களாய் என்னுள்
நிரம்புகிறாய் .
தாள முடியா தவிப்பிலுன்னை
தாங்க கூடிய பலம் பெறுகிறேன் .

” என்ன கவிதைடி …அசத்திட்ட போ குட்டிம்மா ….” அவளுள் புதைய தொடங்கினான் .

பாரம் தாங்காமல் கட்டில் பூக்கள் உதிர வெட்கம் தாளாமல் அறையினுள்ளிருந்த  மற்ற பூக்கள் உதிர துவங்கின .




What’s your Reaction?
+1
29
+1
13
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!