Serial Stories ஊரெங்கும் பூ வாசனை

ஊரெங்கும் பூ வாசனை-17 (நிறைவு)

(17)

     கைம்பெண்ணாக வந்து நின்ற மஞ்சளழகியைப் பார்த்து துடித்துப் போய்விட்டான் சுப்பைய்யா.

     எங்கோ ஒரிடத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தால்..?.

        ‘அவ புருசன் டவுனுக்குப் போய்ட்டு வரும்போது லாரியில அடிப்பட்டு செத்துட்டானாம். பாவம்’ நீலமேகத்தின் சாவு பற்றிய செய்திகள் காதை வந்து அடைந்த போது இதயம் வெடித்துப் போனான் சுப்பைய்யா.

     பழையபடி அப்பனின் குடிசையில் குழந்தைகளுக்கு அப்பனை காவல் வைத்துவிட்டு வயல்வேலைக்கு வந்தாள் மஞ்சளழகி.

         ‘உன்னை கட்டிக்க மாட்டேன்னு சொன்னால்ல…வாச தேடி வந்த ஸ்ரீதேவியை எட்டி உதைச்சா இல்லே அதான்….இப்படி அறுத்துப் போட்டுட்டு வந்து நிக்கறா’ பொக்கிஷம் தான் தீர்க்காத வஞ்சத்தை கடவுள் தீர்த்ததாக கொக்கரித்தார்.

     கொலை வெறி உண்டானது அவர் மேல்.

     எல்லாருக்கும்  கூலியை எண்ணிக் கொடுத்துவிட்டு கடைசியாக நீட்டிய கையைப் பார்த்து நிமிர்ந்த சுப்பைய்யா துவண்டுப் போனான்.

    மஞ்சளழகி!

       “மஞ்சளு..”

       “நாளைய கூலியையும் சேர்த்து இன்னிக்கே தந்துடறியாய்யா? நாளைக்கு கண்டிப்பா வேலைக்கு வந்துடறேன். அப்பனுக்கு உடம்புக்கு முடியலை. ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போவனும்”

    அவள் பேசுவது காதில் விழுந்தாலும் கண்ணெதிரே பழுத்து தலை சாய்ந்துக் கிடக்கும் வயலையும், அறுத்து குவித்துக் கிடக்கும் நெற்கதிர்களையும் பார்த்தான் சுப்பைய்யா.

    அத்தனைக்கும் சொந்தமாக வேண்டியவள். இந்த இடத்திலிருந்து எல்லாருக்கும் கூலி கொடுக்க கூடியவள். கையேந்தி நிற்கிறாள்.

    கலக்கமாக அவளைப் பார்த்தான்.

        “மஞ்சளு…நான் ஒண்ணு சொல்லலாமா?”

       “சொல்லுய்யா…?”

       “உன்னை…உன்னை நான் கட்டிக்கிறேனே…!”

    தூக்கி வாரிப்போட அதிர்ந்தாள் மஞ்சளழகி

      “ஐய்யா…”

     “நீ இப்படி இந்த சின்ன வயசுல அறுத்துப் போட்டுட்டு ரெண்டு புள்ளைகளை வச்சுக்கிட்டு சிரமப்படறதை பார்க்க முடியலை. எட்டுப்பட்டிக்கு சோறு போட்டு ஏழைக்காத்த அம்மன் கோவில்ல இப்பவும் உனக்கு தாலி கட்ட நான் தயார். நீ ஒரு வேளை விரும்பலைன்னா…சாதி சனத்தோட சாதாரணமா தாலிக்கட்டறேன். சொல்லு புள்ள…” கண் கலங்க சொன்னான் சுப்பைய்யா.




     கையெடுத்துக் கும்பிட்டு அழுதாள் மஞ்சளழகி.

         “ஐய்யா…நீ சாமி.. யாருக்கு இப்படி ஒரு மனசு வரும்? நீ மவராசனாயிருப்பே. ஆனா…ஆனா…அது என்னால முடியாதுய்யா. என் அத்தமவன் கூட நான் வாழ்ந்தது கொஞ்ச நாள்தான். ஆனா…அது போதும்ய்யா. நிறைவான வாழ்க்கை. சாவற வரைக்கும் நினைச்சுக்கிட்டுக்

கிடக்கற வாழ்க்கைய்யா அது. உன்கிட்ட எனக்கு ஒரே ஒரு உதவிதான்ய்யா வேணும். என் ரெண்டு பொட்ட புள்ளைகளையும் நல்லா படிக்க வைக்கனும். அதுக்கு நீ ஏதாவது உதவி செய்தா நான் காலம் முழுக்க உனக்கு நாயா உழைப்பேன்யா…”

    கண்ணீர் வழிய மஞ்சளழகி அவனை வேண்டிக் கொண்டாள்.

    இரண்டு நாட்களுக்கான சம்பளத்தை அவளுடைய கையில் திணித்து விட்டு நடந்தான் சுப்பைய்யா.

    முந்தானையால் பொங்கி பொங்கி வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்த ஆச்சியைப் பார்த்தான் மௌரியன்.

    அவனுடைய மனம் சொல்லணாத துக்கத்தில் இருந்தது.

    கண்களைத் துடைத்துக் கொண்ட மஞ்சளழகி நிமிர்ந்தாள்.

       “உன் தாத்தா சுப்பைய்யா விருப்பம் இல்லாமலேயே உங்க பாட்டியை கல்யாணம் பண்ணிக்கிட்டார். என்னோட ரெண்டு புள்ளைகளையும் அவர்தான் படிக்க வச்சார். பொண்ணுங்க பெருசா ஆனதும் தஞ்சாவூர்ல ஆஸ்டல்ல சேர்த்து நர்ஸ_க்கு படிக்க வச்சார். என் அப்பன் செத்த பின்னாடி உன் பாட்டி என்னை தனியா இருக்க வேண்டாம்னு வீட்டோட அழைச்சுக்கிச்சு. அதுக்கு எல்லா கதையும் தெரியும். என் ரெண்டு பொண்ணுங்களையும் உன் தாத்தா கல்யாணம் பண்ணிக் கொடுத்தார். உன் பாட்டி என்னை இந்த வீட்ல ஒரு வேலைக்காரி மாதிரி நடத்தலை. கூடப் பிறந்தவ மாதிரி நடத்துச்சு. பீரோ சாவியைக் கூட என் கையில கொடுத்து பணம் எடுத்தா, நகையை எடுத்தான்னு சொல்லும். அம்மா என்னைப் போய்னு …சொன்னா…இத்தனை சொத்தும் உன் காலடியில கொட்ட என் புருசன் தயாராயிருந்தும் அதை தூசு மாதிரி நினைச்சவ நீ. நீயா திருடிக்கிட்டுப் போவ? போடின்னு சொல்லும். அந்த வார்த்தைக்காகவே நான் இந்த வீட்ல நாயா உழைக்கிறேன். இப்ப பாட்டி உசிருக்கு போராடிக்கிட்டிருக்கு. அதுக்கு சேவை செய்யறதை நான் பாக்கியமா நினைக்கிறேன். உன் தாத்தா நினைச்சிருந்தா அவரோட பணத்திமிருக்கும், அதிகாரத்துக்கும் என்னை அவரோட காதலை ஏத்துக்கலைன்னு பழிவாங்கியிருக்க முடியும். தூக்கிட்டுப் போய் தாலிக் கட்டியிருக்க

முடியும். பலாத்காரம் செய்திருக்க முடியும். பொண்டாட்டியாவே இருந்தா கூட விருப்பம் இல்லாத பொண்ணை தொடக் கூடாதுங்கறதுதான் அதோட கொள்கை. தனக்கு கிடைக்கலைன்னாலும்…எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்தினாரு.. ரெண்டுப் புள்ளைங்களோட நான் புருசனைப் பறிக் கொடுத்துட்டு வந்து நின்னப்ப கூட பாதுகாப்பில்லாத என் இளமையை அனுபவிக்க நினைக்கலை. எனக்கு வாழ்க்கைக் கொடுக்கத்தான் நினைச்சாரு. அப்பவும் நான் மறுத்தப்ப என் மேல அவருக்கு கோபமோ வெறியோ வரலை. மாறா…என் மேல கருணை தான் வந்தது. மனசுல உள்ள காதல் காதலாவே இருந்துட்டா அது ஒரு கட்டத்துல சுயநலமா மாறிடும்.. அது கருணை, இரக்கம்னு மாறிட்டா ரொம்ப மேன்மையடையும். ஒரே வீட்ல ரெண்டு பேரும் இப்ப இருக்கோம். இப்ப அவர் மனசுல இருந்த பழைய காதல்  அன்பு, பாசம,; இரக்கம், கருணைன்னு மாறிட்டு. ஆனா…இன்னைக்கு காலம் அப்படியில்லை. டிவியிலவர்ற செய்தியையெல்லாம் கேட்டா  பகீர்ங்குது. தான் காதலிச்ச பொண்ணு தன்னை காதலிக்கலைங்கறதக்காக ஒருத்தன் அவ முகத்துல ஆசிட்டை ஊத்தறானாம், ஒருத்தன் தன்னை காதலிச்சவ அம்மா அப்பா பேச்சைக் கேட்டக்கிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டாள்னு அவளை கண்டந்துண்டமா வெட்டிப் போடறானாம். கடவுளே…ஏன் இன்னைக்கு பசங்க இவ்வளவு மோசமா மாறிக்கிட்டு வர்றாங்க.”

    அவள் சொன்ன இந்த வார்த்தைகள் மௌரியனை உச்சந்தலையில் மடேர் மடேரென அடித்ததைப் போலிருந்தது.

    அவனுக்குள்ளும் ஓடிக் கொண்டிருந்த திட்டமும் அதானே!

    மஞ்சளழகி சட்டென்று சுயநினைவிற்கு வந்தவளாய்…

     “ச்சே…நான் பாட்டுக்கு என் காதல் கதையையெல்லாம் பேசிக்கிட்டிருக்கேன். உனக்கு காபி போட்டு எடுத்தாரேன்”

என்று கூறிவிட்டு கீழே வந்தாள்.

    ‘காதல் தோல்வியில் இருப்பவன் இப்போது தாத்தாவின் காதல் கதையைக் கேட்டு மனம் தேறியிருப்பான்’ என நினைத்தாள்.




   அவன் தேற வேண்டும் என்றுதான் தன் பெண்களிடம் கூட சொல்லாத அந்த கதையை அவனிடம் சொன்னாள்.

   அவள் கீழே சென்ற பின் யாரோ பிடித்து உலுக்கிவிட்டதைப் போல் அமர்ந்திருந்தான் மௌரியன்.

    ஆச்சியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை செதுக்கிக் கொண்டிருந்தன. அந்த அறை முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

    தாத்தாவின் காதல் அவனை கரைத்துக் கொண்டிருந்தது. எத்தனை உன்னதமான காதல். அவருக்கிருந்த அதிகாரத்திற்கு, அந்தஸ்திற்கு, ஆஸ்திக்கு, செல்வாக்கிற்கு மஞ்சளழகியை அடைவது எத்தனை சுலபம்? ஆனால்…அவளுக்கு விருப்பம் இல்லை என்றதும் எத்தனை பெருந்தன்மையோடு நடந்துக் கொண்டிருக்கிறார்? விதவையாகி வந்த பின் கூட பாதுகாப்பில்லாத அவளை அவர் முறைகேடாக அணுகியிருக்கலாம். ஆனால்…ஒரு விதவைக்கு வாழ்க்கைக் கொடுக்க முன் வந்திருக்கிறார்.

    அவளுடைய குழந்தைகளை படிக்க வைத்திருக்கிறார். திருமணம் செய்துக் கொடுத்திருக்கிறார்.

    ஆனால்…அவருடைய இரத்தத்தில் வந்த நானோ…?

    சாரல் என்னை காதலிக்கவில்லை என்றதும் அவளை பழிவாங்கத் துடிக்கிறேன்.

    கொன்று போடலாமா என திட்டம் தீட்டுகிறேன்.

    ஆசிட்டை அவளுடைய முகத்தில் ஊற்றலாமா? என குரூரமாக நினைக்கிறேன்.

    ச்சீ…எவ்வளவு கீழ்த்தரமானவன் நான். கடவுளே…எவ்வளவு பெரிய பாவம் செய்ய இருந்தேன். தாத்தாவின் புனிதமான காதல் என்னையும் புனிதப் படுத்தி விட்டது.

    சாரல்…சாரல்;…எத்தனை அன்பானவள்? என் மீது எத்தனை நட்புக் கொண்டவள். அவளைப் போய்…அவளைப் போயா நான் அப்படி செய்ய நினைத்தேன்.

    சாரல் என்னை மன்னித்துவிடு. உன்னை இந்த உலகில் அசிங்கப்படுத்தி பார்க்க நினைத்த என்னை மன்னித்துவிடு.

    மானசீகமாக மன்னிப்புக் கேட்டான். மடிந்து மேஜை மீது கவிழ்ந்து குலுங்கி குலுங்கி அழுதான்.

     அந்த கண்ணீரில் அவனுடைய மனக் கறையெல்லாம் கரைந்துக் கொண்டிருந்தது.

     பாடைக் கட்டிப் போட்டால் பாடையில் போகும் நிலையில் இருப்பவர்கள் கூட எழுந்துவிடுவர் என்பது மூடநம்பிக்கையாக இருக்கலாம். ஆனால்…பாட்டி மெல்ல மெல்ல எழுந்துவிட்டாள்.

    நடமாடத் தொடங்கிவிட்டாள்.

       “ஐய்யா…நான் சொன்னேன் பாருங்க…பாடைக் கட்டிப் போட்டா அம்மா பொழைச்சிடுவாங்கன்னு. எப்படி சரியாப் போச்சு. எல்லாம் அந்த பேச்சியம்மனோட சக்திதான்.” என பூரித்துப் போனாள் மஞ்சளழகி.

      “பேச்சியம்மனோட சக்தி இல்ல ஆச்சி. உன்னோட சக்திதான். நீ தானே என்னை பெத்த தாய் மாதிரி கவனிச்சுக்கிட்டே. நீதான் என்னை எழுப்பி உட்கார வச்சுட்டே…”என மஞ்சளழகியை கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டாள் பாட்டி.

     மஞ்சளழகியை நன்றியுடன் பார்த்த தாத்தா சுப்பையாவின் கண்களில் தெரிந்த காதலை மௌரியன் பார்த்து சிலிர்த்துப் போனான்.

    அடுத்த நாளே நமச்சிவாயம் தன் மனைவி மகனுடன் ஊருக்கு கிளம்பினார்.

       “ஆச்சி…என் அம்மா அப்பாவை உன் கையிலதான் ஒப்படைச்சிட்டுப் போறேன் .பார்த்துக்க “ என நமச்சிவாயம் மஞ்சளழகியின் கைகளைப் பற்றிக் கொண்டு கண்கலங்கினார்.

    தாத்தா பாட்டியோடு சேர்த்து மஞ்சளழகியையும் நிற்க வைத்து மூவரின் கால்களிலும் விழுந்து வணங்கி ஆசிப் பெற்றான் மௌரியன்




      “என்னப்பா…என் கால்ல போய் விழுந்துக்கிட்டு” என நெளிந்தாள் மஞ்சளழகி.

    அவனைப் பொருத்தவரை அவள் அவனுக்குள் தெய்வமாகிப் போனாள்.

     கார் கிளம்பியது. வாசல்வரை வந்து மூவரும் வழியனுப்பினர்.

     வாசலைக் கடந்து, தெருவைத் தாண்டி மண் சாலையில் பயணித்த போது…. திடீரென காற்றோடு ஓடிவந்து தழுவிய மல்லிகை வாசம் ஜன்னலுக்கு வெளியே பார் பார் என்றது.

     ஜன்னலுக்கு வெளியே சாலையின் இருபுறமும் மல்லிகைக் கொல்லை. பூத்துக் குலுங்கும் அந்த மலர் கொல்லையில் ஆட்கள் வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

     பூக்களை கொய்து கூடையில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

     கார் போக போக மல்லிகைத் தோட்டமும் அதன் வாசனையும் வந்துக் கொண்டேயிருந்தது.

     அந்த ஊரே பூவாசனையால் மணப்பதைப் போலிருந்தது.

     ஊரெங்கும் பூ வாசனை! ஊரெங்கும் மட்டும் இல்லை மௌரியனின் மனதிலும்தான். பூ வாசனை. புது வாசனை.!

(முற்றும்)




What’s your Reaction?
+1
18
+1
10
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!