Serial Stories

நீ தந்த மாங்கல்யம்-30

( 30  )

” ஐய்யோ என்னடி இப்போ என்ன பண்றது ? நமக்கிருந்த ஒரே நம்பிக்கையும் போயிடுச்சே .ஏன்டி பாட்டி பெரியவர்கள். நாலும் தெரித்தவர்கள் .அவர்கள் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்வார்களென்றா நினைக்கிறாய் ? ” இன்னமும் மிஞ்சியிருந்தத நம்பிக்கையோடு கேட்டாள் வைஷ்ணவி .

” என் யதுவையே சம்மதிக்க வைத்து விட்டார்களே .பிறகு பாட்டி எந்த மூலைக்கு ? பேரனுக்கு சம்மதமில்லையென்றாலாவது பாட்டி கொஞ்சம் யோசிப்பார்கள் .இவர்தான் எங்கே …எப்போது தாலி கட்டவேண்டுமென்று பறந்து கொண்டிருக்கிறாரே ? ” கசப்புடன் சிரித்தாள் முகிலினி .

” என்னடி இப்படி எளிதாக சொல்கிறாய் ? நான் வேண்டுமானால் நந்தன் சாரிடம் பேசிப் பார்க்கட்டுமா ? ” வைஷ்ணவி அழுது விடுவாள் போல் இருந்தாள் .

தனக்காக துடித்து கொண்டிருந்த தோழியை அன்புடன் பார்த்தாள் முகிலினி .” இல்லைடி அது சரியாக வராது .எனக்காக நீ அவமானப்படும் நிலைமை வந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது .” என்றவள் தலையை பிடித்துக் கொண்டாள் .

” இதில் எங்கேயோ …எதையோ நான் மிஸ் பண்ணுகிறேன் .ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டியது .நடக்காமல் இருக்கிறது .அல்லது அதை நான் அறியாமல் இருக்கிறேன் .என்னவென்று எவ்வளவு யோசித்தும் பிடிபட்ட மாட்டேனென்கிறது ” என்றாள் .

மௌனமாக முகிலினியின் கையை பற்றி வருடி தனது ஆதரவை அவளுக்கு தெரிவித்தாள் வைஷ்ணவி .

ஒரு வாரம் நகர்ந்தது .என்று சௌம்யாவை திருமணம் செய்யப் போவதாக கூறினானோ அன்றிலிருந்து யதுநந்தன் முகத்தில் விழிக்க முகிலினி விரும்பவில்லை .இரவு படுப்பது கூட , விருந்தினர் அறையில் படுத்துக் கொண்டாள் .அதற்கான எந்த பிரதிபலிப்பும் யதுநந்தனிடம் இல்லை .

அப்படி போவதானால் போய் கொள் என்ற ரீதியில் நடந்து கொண்டான் .முன்பும் தான் வைஷ்ணவி விசயத்தில் சந்தேகம் கொண்ட போதும் கூட இப்படித்தானே பாராமுகமாக இருந்தான் .அவனுக்குத்தான் பிடிக்காததை யார் செய்தாலும் அவர்களை தண்டித்தேதான் ஆக வேண்டுமே .அது தாயானாலும் சரி , தாரமானாலும் சரி .

ஆனாலும் ஆசையோடு காதலித்து மணந்த மனைவியை இப்படி ஒதுக்க நினைப்பானா ? இது போன்ற சிந்தனைகளோடு
், அழுகையும் கலந்து கழிந்தது முகிலினியின் இரவுகள் .

அன்று காலை அந்த சேலையை அணிந்து கொண்டு , கண்ணாடி முன் நின்று பார்த்தாள் முகிலினி .

பன்னீர் ரோஜா  வண்ணத்தில் , மை ஊதா பார்டராக சேலையின் இருபக்கமும் மயில்கள் ஓடின .ஆங்காங்கே தங்க புட்டாக்கள் .அது யதநந்தன் அவள் அம்மா வீட்டில் இருந்த போது , கல்லூரி விழாவிற்கு சேலை அணிய வேண்டுமென்ற போது , அவளுக்காக வாங்கி வந்து ரகசியமாக தந்தது.

” இது வெறுமனே எண்ணூற்றி ஐம்பது ருபாய்தான் முகில் .ஆனால் நீ அணிந்து கொண்டாள் பத்தாயிரம் ருபாய் போல் ஒரு தோற்றம் வந்துவிடும் அதற்கு ” என வசனம் வேறு பேசினான் .

அதனை அணிந்து கொண்டு கல்லூரி விழாவிற்கு வரும்படி கூற , அம்மாவிற்கு என்ன பதில் சொல்வதென தயங்கினாள் முகிலினி .அதனை புரிந்து கொண்டு சரி பத்திரமாக வை .பின்னால் நமக்கே நமக்கென்று ஒரு நாள் வரும் அப்போது அணிந்து கொள்ளலாமென கூறியிருந்தான்.




அதைத்தான் இப்போது அணிந்து கொண்டிருந்தாள் .இந்த சேலை அவன் நினைவிலாவது இருக்குமா ? வருத்தத்துடன் நினைத்துக் கொண்டாள் .

மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவர்கள் பரம்பரை மங்கலநாணை குலதெய்வம் கோவிலில் வைத்து பூஜை பண்ணுவது வழக்கம்,இன்று அந்த நிகழ்வுக்காகத்தான் கிளம்பிக் கொண்டிருந்தாள் .

அந்த சேலைக்கு பொருத்தமாக ஜாக்கெட் தைத்து , இரண்டு கைகளிலும் , முதுகிலும் பெரிய வண்ண மயில்களை பதித்திருந்தாள் .பொருத்தமான மயில் காதனிகளும் , கழுத்தணியும் .அலங்காரம் முடித்து கண்ணாடியில் பார்த்தபோது மிக அழகாகவே இருப்பதாக அவளுக்கு தோன்றியது .
ஆனால் நானே ரசிப்பதற்கா இது ? ஆசையாக இந்த சேலையை வாங்கிக் கொடுத்தவன் இப்போது இதனை நினைவில் வைத்திருப்பானா?  உள்ளம் கலங்க யோசித்தாள் .

அவள் வேதனை பொய்யென்பது போல் அவளைக் கண்டதும் கண்களில் பளிச்சிட்ட மின்னலுடன் ” இந்த பிங்க் கலர் எவ்வளவு அழகாக உனக்கு பொருந்தியுள்ளது .ரொம்ப அழகாக இருக்கிறாய் ” என்றபடி அவளை நெருங்கினான் யதுநந்தன் .

அவன் மணமகன் போல் பட்டு வேட்டி சட்டையிலிருந்தான். கோவில் விசேசமென்பதால் இந்த பாரம்பரிய உடை போலும் .எப்படி எந்த ஒரு உடையும் இவனுக்கு அப்படியே பொருந்தி விடுகிறது .பெருமிதமாக கணவனை பார்த்தாள் .”

வானில் பறப்பது போன்றதோர் உணர்வுடன் நெகிழ்ந்து அவள் நின்ற போது , அவளருகே வந்தவன் சட்டென பார்வையை அவளுக்கு பின்னால் மாற்றிக்கொண்டு ” சௌமி ..அசத்தலா இருக்கிறாய் .அப்படியே தாமரைப்பூ ஒன்று உயிர் பெற்று வந்தது போல் உள்ளது ” என்றான் .

திரும்பி பார்த்த போது செந்தாமரை மலர் வண்ண விலையுயர்ந்த சேலையில் உண்மையாகவே அந்த மலர் போன்றே நின்று கொண்டிருந்தாள் சௌம்யா .தன் மாமன் மகனின் பாராட்டில் முகமும் தாமரையாக மலர .

முகத்தில் அடி வாங்கியது போல் உணர்ந்தாள் முகிலினி .இவளையா பாராட்டிக் கொண்டிருந்தான் ? அப்படியா நான் ஏமாந்து நின்று கொண்டிருந்தேன் ? இல்லையே அவன் கண்கள் என்னை ..என் உடலழகை நோகாமல் மென்றதே .அந்த கண்களின் ஸ்பரிசம் என் ஒவ்வோர் அணுவிலும் வீணை நரம்பாக மீட்டிக் கொண்டிருக்கிறதே .

அவனிடம் நேரிடையாகவே பேசி விடும் நோக்கத்தில் திரும்பியவள் அதிர்ந்தாள் .சௌம்யாவின் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டு மெல்லிய குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தான் யதுநந்தன் .தலை குனிந்தபடி இருந்தாள் அவள் .

இப்போது யதுநந்தனின் கைகள் பாம்பாக நீண்டு சௌம்யாவை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டன .மேலும் அவள் புறம் குனிந்து பேச …திகுதிகுவென எரிந்தது முகிலினிக்கு .




அப்படி என்ன கன்றாவியை பேசித் தொலைகிறார்கள் இருவரும் .அவள் இப்படி வெட்கப்பட்டு தலை குனிந்து நிற்கிறாள் .குனிந்து நிற்பதால் கண்களில் தெரியும்  கால்களை எப்படி  வாரி விடலாமென யோசிப்பாளாக இருக்கும் .அது தெரியாமல் இவன் ….

அதோ அங்கிருக்கும் பூச்சாடியை எடுத்து ஓங்கி இருவர் மண்டையிலும் போட்டாலென்ன ? தீவிரமாக இப்படி யோசிக்கும் போதே இது போன்ற சந்தேக கண்ணோட்டம் தன் கணவனுக்கு பிடிக்காது என்பது நினைவு வர , அவசரமாக தன் முக பாவத்தை மாற்றிக் கொண்டு அவர்களை நெருங்கி நின்றாள் .

பல்லை கடித்தபடி நெருப்பாய் எரிந்தபடி  அருகில்  நெருங்குகையில் ” உன்னுடைய இந்த அழகை ரசிக்கும் பாக்கியம் அந்த குணாவுக்கு கிடைக்காமல் போய்விட்டதே ” என அவளுக்கு புகழாரம் சூட்டி நெருப்பில் நெய் ஊற்றினான் யதுநந்தன் .

அழுத்தமான காலடியுடன் அவர்கள் எதிரில் போய் நின்று தெளிவாக அவன் கண்களுக்குள் பார்த்து முறைத்த போது , ” அடடா கோபத்தில் மயில்கள் கூட சிவக்கிறதே ” என்றபடி  அவளின் சேலை மயில்களை பார்வையால் வருடினான் .

குறும்பான இந்த பேச்சில்   குழம்பி நின்றாள் முகிலினி .நிச்சயமாக இப்போது யதுநந்தனின்
கண்கள்  மயில்களிலிருந்து   அவள் இழதழ்களில்  வந்து ஒட்டியிருந்தன .

மயில்களா ..? குனிந்து தன் சேலையை பார்த்துக் கொண்டாள் .யாரை சொல்கிறான் ? சேலையில் மயிலாடுவது எனக்குத்தானே .அதெப்படி அவளை அணைத்தபடி என்னை பாராட்டுகிறான் .இல்லை அவளைத்தானா ?

கோபம் குறைந்து குழப்பம் வந்தது முகிலினிக்கு .” கோவிலுக்கு போகலாமா. ..ம்…? ” என குனிந்து சௌம்யாவிடம் கொஞ்சியபடி அங்கிருந்து நகர்ந்தான் .அதோ அங்கே திரும்பிய போது என்னை பார்த்து கண் சிமிட்டினானோ ?

தலையை உலுக்கியபடி பார்த்த போது இவள் பக்கமே திரும்பாமல் நடந்து கொண்டிருந்தான் யதுநந்தன் .தலைமுடி ஒவ்வொன்றாக பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது முகிலினிக்கு .




” அவளது கைகளில் சுளீரென்ற சத்தத்துடன் ஒரு அறை வைக்கப்பட ” ஆ “, என்ற சத்தத்துடன் திரும்பினாள் .வைஷ்ணவி …கனல் வீசும் கண்களுடன் நின்று கொண்டிருந்தாள் .

” ஏய் எதுக்குடி இப்படி ஒரு முழியோடு நிற்கிறாய் ? நேற்றிரவு டிவியில் பூம்புகார் பார்த்தாயா ? அதன் பாதிப்புதானா இந்த முறைப்பு ? நல்ல படமில்ல .அருமையான வசனங்கள் …விஜயகுமாரி என்னா நடிப்பு ?…” கண்மூடி சிலாகித்துக் கொண்டிருந்த முகிலினியின் கழுத்தை பற்றினாள் வைஷ்ணவி .

” மேலே ஒரு வார்த்தை பேசினாயானால் கண்டிப்பாக கழுத்தை நெரித்து விடுவேன் .
இங்கே என்ன நடக்கிறது ,? நீ என்ன பேசிக் கொண்டிருக்கிறாய் ? உனக்கு சூடு சொரணையே இல்லையா ? உன் புருசன் அடுத்தவளை அணைத்துக் கொண்டு போகிறார் ? நீ இடிமண் மாதிரி நின்று கொண்டு கண்ணகி கதை பேசிக் கொண்டிருக்கிறாயே ?படபடவென பொரிந்தாள் .

” என்னை என்னடி செய்ய சொல்கிறாய் ? எல்லாமே என் கை மீறி நடந்து விட்டது .வா ..கோவிலுக்கு போய் அந்த அம்மனிடமாவது மனதார வேண்டி வருவோம் .” என்றாள் .

கோவில் வாசலில்  கீர்த்திவாசன் நின்றிருந்தான் . முகிலினிக்கு ஆச்சரியமாக இருந்தது .இது யதுநந்தன் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வல்லவா ? இங்கே அவர்கள் பரம எதிரியின்  குடும்ப வாரிசு எப்படி உள்ளே வர முடியும் ?

அவளின் ஆச்சரியப் பார்வையில் அவளருகே வந்து ,” அண்ணி எப்படி ? உங்கள் குடும்ப விழாவிற்கு ஐயா முதல் ஆளாக ஆஜர் .அதென்னவோ தெரியவில்லை .இப்போதெல்லாம் அண்ணனுக்கு எதற்கெடுத்தாலும் என் பெயர்தான் வாய்க்கு வருகிறது .இன்று கூட நீ வந்தால் தான்டா விழா நிறைவடையும். வந்திடுன்னு நேற்றே சொல்லிவிட்டார் .” பெரிதாக அளந்தான் .

” இந்த மேஜிக் எப்படி நடந்தது கீர்த்தி ? ” முகிலினிக்கு இன்னமும் ஆச்சரியம் விலகவில்லை .

“அது …”என்று பெரியதாக ஆரம்பித்தவன் அமைதியாகி ” உங்களால்தான் அண்ணி .நீங்கள் இல்லாவிட்டால் இந்த வீட்டு காற்றை கூட என்னால் சுவாசித்திருக்க முடியாதுண்ணி …” குரல் நெகிழ்ந்திருந்தது .

” டேய் என்னடா பண்ற ? ” யதுநந்தனின் குரல் .கோவிலுக்குள்ளிருந்து வந்து கீர்த்திவாசனை பார்த்தபடியிருந்தான்.

” அண்ணி நான் சொல்லை அண்ணனுக்கு நானில்லாமல் வேலை ஓடாதுன்னு .உடனே என்னை தேடிவிட்டார் பாருங்கள் ” அடக்கமாக அவளிடம் பெருமையடித்து விட்டுதான் ” இதோ வருகிறேண்ணா ” என உள்ளே சென்றான் .

” எப்படிடி இது ? “ஆச்சரியமாக கேட்டாள் வைஷ்ணவி .

” எனக்கும் புரியலை .நான் என்ன செய்தேன் ? ஒரு புல்லை கூட பிடுங்கி போடலை .என் வாழ்க்கையை காபந்து பண்ணவே எனக்கு தெரியவில்லை .இதில் இவரை குடும்பத்தோடு சேர்க்க போகிறேனாக்கும் .வா உள்ளே போய் அம்மனையாவது வேண்டுவோம் .எனக்கு ஒரு விடிவு கிடைக்கிறதா என்று பார்க்கலாம் ”
தோழியோடு உள்ளே நுழைந்தாள் முகிலினி .

கழுத்தில் அந்த மங்கலநாணை அணிந்தபடி எழிலாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அம்மன் .அம்மனின் கழுத்தில் அதனை போட்டு பூஜை பண்ணிவிட்டு , பிறகு குடும்ப பெண்கள் யாரும் அணிவதாயிருந்தால் அவர்கள் கழுத்தில் அந்த மங்கலநாண் அணிவிக்கப்படும் .

அப்படியில்லையெனில் மீண்டும் பெட்டியினுள் வைக்கப்பட்டு லாக்கருக்கு கொண்டு போக பட்டுவிடும் .முன்பு நிறை பால் செம்பினுள் அதனை வைத்து பாதுகாத்தார்களாம் .இப்போது காலத்திற்கேற்ப லாக்கரில் .

பாட்டியம்மாள் உள்ளே நுழைந்தார் .” எல்லோரும் வந்தாச்சா ? ” என்றார் .

கண்களை சுழட்டிப் பார்த்தாள் முகிலினி .பாட்டி , மோகனரங்கம் , சந்திரவதனா , கீர்த்திவாசன் , யதுநந்தன் ,சௌம்யா , காருண்யா …எல்லோரும் வந்து விட்டார்கள் .

மோகனரங்கம் பூஜையை ஆரம்பித்தார் .எல்லா சடங்குகளுடன் அந்த விசேஷ பூஜை நடக்க ஆரம்பித்தது .

சில நூறு வருடங்களுக்கு முன் தள்ளாடிக் கொண்டிருந்த தனது குடும்பத்தை இதோ இன்று இங்கு தெய்வமாக வீற்றிருக்கும் இந்த பெண் தந்நிலைக்கு கொண்டு வந்தாளாம் .அதற்கு  பரிசாக தன் கணவன் விசேசமாக செய்து அளித்த
இந்த மங்கலநாணை தன் கழுத்தில் பூட்டிக் கொண்டாளாம் .அதன் பிறகு அந்த பெண்ணின் சக்தியால் அந்த வீடு பெரும்பேறு பெற்றதாம் .

அவள் இறக்கும் போது அந்த மங்கலநாணை தன் மருமகளுக்கு அளித்து “இது எல்லோருக்கும் பொருந்தாது .அப்படி ஒரு பெண்ணுக்கு பொருந்தி விடுமாயின் அவள் காலத்தில் நம் குடும்பம் எட்ட முடியாத பல உயரங்களை தொடும் .இதற்கு நான் தெய்வமாய் இருந்து உதவுவேன் ” எனக் கூறி உயிர் துறந்தாள் .

அன்றிலிருந்து அந்த பெண்ணை தெய்வமாக்கி வணங்கி வருகின்றனர் .அந்த மங்கலநாணில் இருக்கும் வைரங்கள் சில பேரின் ஜாதகத்திற்கு ஒத்துப்போகும் .சிலருக்கு தோசமாகும் .தோசமாபவர்கள் அதனை அணியாமலிருத்தலே நலமென்றும் பின்னாளில் சிலர் கணித்து சொல்லி வைத்திருந்தனர் .

இவ்வளவும் தெரிந்திருந்தும் சௌம்யா எப்படி அதனை தைரியமாக அணிந்து கொள்ள துடிக்கிறாளென தெரியவில்லையே ? தனக்குள் எண்ணியபடி அம்மனை வணங்கினாள் முகிலினி .

” எனக்கு நல்வழி காட்டம்மா தாயே .அன்றொருநாள் உனக்கு போல் இன்றும் நம் குடும்பம் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது .அதனை தீர்த்து மீண்டும் நம் குடும்பத்தை நிலை நிறுத்த வழி சொல் தாயே ” மனமாற உருகி வேண்டிக் கொண்டாள் .

தீபாரதனை முடிந்ததும் அந்த மங்கலநாணை பூ, பழம் தட்டில் வைத்து அனைவரிடமும் நீட்டினார் மோகனரங்கம் .அனைவரும் பயபக்தியோடு அதனை தொட்டு வணங்கினர் .

கீர்த்திவாசனின் போன் ஒலியெழுப்ப , அதனை காதில் வைத்தபடி அவன் வெளியேறினான் .தன் முன் வந்த தட்டிலிருந்த மங்கலநாணை தொட்டு வணங்கிவிட்டு அதனை கையிலெடுத்தார் பாட்டியம்மாள் .அதனை யதுநந்தன் கையில் அளித்தார் .

தன்னருகே நின்றிருந்த சௌம்யாவை யதுநந்தன் பக்கத்திற்கு நகர்த்தினாள் சந்திரவதனா .யதுநந்தன் கையில் மங்கலநாணுடன் சௌம்யா பக்கம் திரும்பினான் .காருண்யா திருமண மந்திரங்கள் அடங்கிய பிளேயரை ஒலிக்க விட்டாள் .

” நந்தா இன்று மிகவும் நல்ல நாள் .இது போன்ற நாள் முப்பது வருடத்திற்கொரு முறைதான் வரும் .இந்த நாளை விட வேண்டாமென்றுதான் இன்று திருமணமென முடிவெடுத்தேன் .ம்…தாலியை கட்டு ” உத்தரவிட்டார் பாட்டியம்மாள் .

தலை சுற்றி கீழே விழுந்தாள் முகிலினி.




What’s your Reaction?
+1
19
+1
13
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!