Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-25

( 25 )

நல்ல சிகப்பு நிறத்தில் , ஆழ்ந்த பச்சையும் கலந்து , மயில் போன்றும் , பூங்கொத்து போலவும் நெருக்கமாக கற்கள் பதிக்கப்பட்டு கண்களை விரிய வைக்கும் அந்த “சோளி ” எனும் வட இந்திய திருமண உடையை ஆவலாக வருடினாள் முகிலினி .அமிஷா அளித்த பரிசு அந்த உடை .பொருத்தமான நகைகளையும் சேர்த்து அளித்திருந்தாள் .

பார்த்த உடனேயே அணிந்து பார்க்க தூண்டியது .இப்போதே அந்த உடையை அணிந்து கொண்டு யதுநந்தன் முன் நிற்க வேண்டுமென தோன்றியது முகிலினிக்கு .அதற்கு பொருத்தமாக அமிஷா அளித்திருந்த கழுத்தாரத்தை எடுத்து கழுத்தில் வைத்து கண்ணாடியில் பார்த்தாள் .

” ஆஹா …எவ்வளவு பாக்கியம் அந்த நகைக்கு ? எனக்கு வாய்க்கவில்லையே அந்த அதிர்ஷ்டம் .” பின்னால் வந்து நின்று அவளை சீண்டினான் யதுநந்தன் .

” என்ன அதிர்ஷ்டம் ? “, கண்ணாடியிலேயே அவனை பார்த்தபடி கேட்டாள் முகிலினி .

” இந்த அதிர்ஷ்டம்தான் ” என்றபடி அவள் கழுத்தை தழுவியிருந்த நகையின் மேல் விரல்களை ஓட்டினான் .கழுத்திலிருந்து கீழே இறங்கிய நகையின் மேல் பயணித்த அவன் விரல்களை செல்ல கோபத்துடன் பற்றிக் கொண்டாள் முகிலினி .

” ஏய் ..என்னடா ..நகையை தொட்டு பார்க்க கூட விட மாட்டேனென்கிறாய் ? ” செல்லமாக சலித்துக் கொண்டான் .
” நகையையா தொட்டு பார்த்தீங்க ? ” வராத கோபத்தை வரவைத்துக் கொண்டு கேட்டாள் .

” அட ..ஆமாம் குட்டிம்மா ..வேணும்னா பாரேன் “, என்றபடி மீண்டும் கைகளை கொண்டு வர , அவசரமாக விலகிக் கொண்டாள் முகிலினி .

” வெளியே போறீங்களா ? ” கணவனின் உடையை பார்த்தபடி யோசனையுடன் கேட்டாள் முகிலினி .

” நம்ம வீட்டு ஜெனரேட்டர் ஏதோ தகராறு பண்ணுதுடா .அதற்கு மெக்கானிக் வந்திருக்கிறான் .கரண்ட் கட் இப்போ அதிகமாக இருக்கே ?  இப்போ கூட கரண்ட் போகிற நேரம்தானே .அதற்குள் சரி பண்ணிவிட வேண்டுமென்று மெக்கானிக்குடன் காருண்யாவும் நின்று கொண்டிருக்கிறாள் .நானும் ….”

“போய் பார்த்துவிட்டு வாருங்கள் ” அவன் வார்த்தைகளை தானே முடித்து வைத்தாள் .மகிழ்ச்சிப் புன்னகையுடன் மனைவியை நெருங்கிய போது
அங்கே விரித்து வைத்திருந்த உடை யதுநந்தன் கண்களில் பட்டது .

“வாவ் …அழகாக இருக்கில்ல ? முகில் இதை இப்போவே போட்டுட்டு வாயேன் .பார்க்க வேண்டும் போல் உள்ளது ” என்றான் ஆசையுடன் .

“சரி …”என்று உடையை எடுத்த முகிலினி ” ஐய்யய்யோ , என்ன இந்த சட்டை இப்படி இருக்கிறது ? இதை எப்படி போடுவது ?” என்றாள் .

” எப்படி இருக்கிறது ” என்று எட்டி பார்த்த யதுநந்தன் “வாவ் ” என்று விழிகளை விரித்தான் .” என்ன அழகான வடிவமைப்பு .போய் உடனே அணிந்து வா குட்டிம்மா ” என்றான் .

சை இப்படியா முதுகு முழுவதும் தெரியும்படி ஒரு சட்டை தயாரிப்பார்கள் ?  இதை எப்படி அணிவது ?




முகத்தில் மெல்லிய சிணுக்கத்துடன் நின்ற மனைவியை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்து அவள் காதிற்குள் ” ஏய் இப்போ  அந்த  வேலையை  முடித்து விட்டு  .அரைமணியில் வருவேன் .அதற்குள் இந்த உடையோடு தயாராக இருக்க வேண்டும் .சரியா ? “, சிறு சில்மிஷத்தில் மனைவியை நெளிய வைத்து விட்டு  வெளியே சென்றான் .
கணவனின் கொஞ்சல் மனதோடு உடலையும் சேர்த்து இளக்க , அந்த உடையை எடுத்து தன் உடையின் மீதே வைத்து அழகு பார்த்தாள் .சட்டென கரண்ட் கட்டாகி விட்டது .அறையிலிருந்த டியுப்லைட் ஒன்று மட்டும் இன்வெர்ட்டர் உதவியுடன் சோகையாக வெளிச்சம் சிந்தியது .

சட்டையை வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்து எட்டிப்பார்த்தாள் .வீடு முழுவதும் அரை இருளில் மூழ்கியிருந்தது .ஆங்காங்கே சில எல்.இ.டி விளக்குகள் எரிந்த போதும் நிறைய இடங்கள் இருளிலேயே மூழ்கியிருந்தது .

பொன்னாயியும், முத்தரசியும் ஆங்காங்கே பெரிய மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துக்கொண்டிருந்தனர் .எல்.இ.டி விளக்கு வெளிச்சமும், மெழுகுவர்த்தி வெளிச்சமும் கலந்து வீடு ஏதோ தேவலோகம் போல முகிலினிக்கு  காட்சியளித்தது .

மேலே நின்றபடி தன் வீட்டை ரசித்துக் கொண்டிருந்தாள் .அவள் சிந்தனை கணவனை அடைந்து , அவனிடமிருந்து காருண்யாவிற்கு தாவியது .ஒரு நல்ல நட்பை சந்தேகப்பட்டு விட்டோமே என வருந்தினாள் .

அன்றைய அவர்கள் அணைப்பு கூட அமிஷாவின் வருகையை கொண்டாடக் கூடியதற்கானது என ஊகித்தாள் .அன்று ஏதோ கலெக்டர் , நம் ஊருக்கே போன்ற வார்த்தைகள் காதில் விழுந்ததே .

அதே போல் அன்று மாடியிலிருந்து பார்த்த போது தோளணைத்தபடி சென்றவர்கள் யதுநந்தனும் , காருண்யாவுமே .அதில் சந்தேகமில்லை .ஆனால் அந்த அணைப்பில் இப்போது நட்பை தவிர வேறு தெரியவில்லை முகிலினிக்கு .

அன்று காருண்யா மரத்தின் பின் அமர்ந்து கொள்ளவும் , யதுநந்தன் கையாட்டி விடை பெற்று சென்றுவிட்டான்.உடனே அங்கே போய் காருண்யாவை பார்க்கவே முகிலினி கீழிறங்கி போனாள் .அப்போதுதான் நீச்சல்குளத்தினுள் விழுந்தாள் .காருண்யா மட்டும் காப்பாற்றாவிட்டால் …

ஆனால் அன்று எப்படி குளத்தினுள் விழுந்தேன் ? பளிச்சென எரிந்தது .வீட்டு விளக்குகளோடு சேர்ந்து முகிலினியின் மூளையும் .

ஓ…கரண்ட் வந்துவிட்டது போலவே …இல்லை ஜெனரேட்டர் சரி பார்க்கப்பட்டதா ? .தன் அறையினுள் செல்ல திரும்பியவள் கண்களில் கீழே நடந்த காட்சி ஒன்றில் அப்படியே சிலையாகி சமைந்து நின்றாள் .

இந்த வீட்டினுள் காலடி வைத்ததிலிருந்து புரியாத பல விடயங்கள் இப்போது புரிந்தது .குழம்பிக் கிடந்த பல பக்கங்கள் சக் சக்கென அதனதன் இடத்திற்கு வந்து கச்சிதமாக பொருந்திக் கொள்ள தலை சுற்ற தொடங்கியது அவளுக்கு .

கடவுளே ..முருகா …சண்முகா இப்படியெல்லாம் நடக்குமா ? செய்வதறியாது தெய்வத்தின் நாமத்தை உருப் போட்டாள் .

தோள்களில் ஏதோ ஸ்பரிசம் படிய , வெலவெலத்து திரும்பினாள் .யதுநந்தன் தான் .” முகில் என்னாச்சுடா ? “, என்றான் பரிவாக .

புரியாத மொழி பேசுபவனை பார்ப்பது போல் அவனை பார்த்தாள் .கண்கள் கலங்கி கண்ணீர் வடிய துவங்கியது .

சிறிது நேரத்திற்கு முன்பு காதல் சொட்ட நின்றிருந்த மனைவியின் நிலையில் ஏற்பட்ட மாற்றம் யதுநந்தனுக்கு சலிப்பை தந்தது .அவனை பொறுத்த வரை இங்கே அழுகைக்கு சாத்தியமில்லையே .இந்த அழுகைக்கும் பின்னால் மனைவியின் கண்டதையெல்லாம் நினைக்கும் அந்த குணமே காரணமென்று எண்ணினான் .

எனவே அவளை நோக்கி ஏளனமாக ” என்னம்மா இப்போ யார் மேல் சந்தேகம் ? “, என்றான் ஏளனமாக .இந்த நேரடியான கேள்விக்கு பதில் சொல்ல தன் மனைவி தயங்குவாள் .
அப்போது அவளுக்கு நாம் விளக்கம் கொடுப்போம் என எண்ணியே இவ்வாறு கேட்டான் .

ஆனால் முகிலினி சிறிதும் தயங்காமல் ” சௌம்யா மேல் சந்தேகம் “, என்றாள் தெளிவாக .

திடீரென்று கண்கள் இருண்டு கன்னம் எரிந்தது முகிலினிக்கு .என்ன …என்ன நடந்தது இங்கே? .வலித்த கன்னத்தை தடவியபடி நம்ப முடியாமல் கணவனை நோக்கினாள் அவள் .

ஒன்றும் புரியவில்லை ஒரு நொடி
என்ன நடந்தது ?…
எரிகிறது கன்னம் ,
கொதிக்கிறது மனம் ,
சிறு வயது விளையாட்டிலும்
பதின் வயது படிப்பிலும்,
தோள் சேர்ந்த தோழமைகளிடமும் ,
கண்டதில்லை இதனை …
அன்பாய் அப்பாவும்
ஆதரவாய் சொந்தங்களும்
பல சமயம் தென்றலும்
சில சமயம் நானும்
அறிந்ததுண்டு என் கன்னக்
கதகதப்பை ….மயிலிறகாய்
பூக்களுக்கு சாட்டையடியா …?
வருடல் விடுத்து
வன்மை பிரயோகிக்கிறாய் …
பதிலுக்கு பதிலளிக்க அதிக
நேரமாகாது எனக்கு…
கழுத்துச் சங்கிலியின் பாரம்
மேலேறியதால் தாமதிக்கின்றன
என் கரங்கள் …

கன்னத்தோடு மனமும் சேர்ந்து கொதித்து கொண்டிருக்கும் அந்நிலையை கவிதையாய் வடித்தது அவள் மனம் .




இப்போது கண்ணீர் நின்றுவிட ஒரு வித மரத்துப்போன தன்மையுடன் கணவனை வெறித்தாள் அவள் .

அடித்ததோடு ஒற்றை விரலை நீட்டி அவளை எச்சரித்துக்கொண்டிருந்தான் அவன் .” ஒழுங்காக பேசு .அனிதா மேம் , வைஷ்ணவி , காருண்யா …இவர்கள் வரிசையில் இப்போது சௌம்யாவா ? அவள் அடுத்தவன் மனைவி வேறு .உனக்கு நா கூசவில்லை .சீச்சி என்ன பெண் நீ ? ” உறுமினான் .

” நந்து  …என்னப்பா ?  என்ன ஆச்சு ? ” என்ற கேள்வியோடு வந்த சந்திரவதனாவையும் , சௌம்யாவையும் அதே மரத்த பார்வை பார்த்தாள் முகிலினி .

” ம் …என் பொண்டாட்டியை பேய் பிடித்து ஆட்டுகிறது .நல்லா சாட்டையால் அடித்து அந்த பேயை ஓட்ட வேண்டும் .” நெருப்பை வாரி இரைத்துவிட்டு முகத்தில் அறைந்தாற் போல் கதவை அறைந்து சாத்தியவன் அறைக்குள் போய்விட்டான் .

அவமானத்தால் உடல் குறுக நின்றாள் முகிலினி .அதோ அங்கே கீழே நின்று பொன்னாயியும் , முத்தரசியும் கூட எல்லாவற்றையும் பார்த்து விட்டார்களே .இதோ இந்த இரண்டு பெண்களும் அவனது தீச்சொற்களை கேட்டு விட்டார்களே .எல்லாவற்றிற்கும் மேலாக அடித்து சாத்தப்பட்ட அறைக் கதவு வேறு .அது இனி என் அறைக்குள் வராதே என்றல்லவா சொல்லாமல் சொல்கிறது .

ஒரு எட்டு அறைக் கதவை நோக்கி எடுத்து வைத்தாள் .அவள் கையை பற்றி தடுத்தாள் சந்திரவதனா .” வேண்டாம்மா நந்துவுக்கு இவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்லை .ஆனால் இப்படி கோபப்பட்டவங்களை அதன் பிறகு அவன் மன்னிக்க மாட்டான் .இப்போது அவன் முன்னால் போகாதே .அவன் கோபம் தணியட்டும் .” என்றாள் .

அவளை உற்று நோக்கினாள் முகிலினி .சந்திரவதனாவின் பதட்டமான குரலுக்கு மாறாக சிரிப்பு சுமந்திருந்தனவோ அவள் கண்கள் ? ஆனால் இது உண்மையா ? யது இனி என்னை ஒதுக்கி விடுவாரா ? கண்கள் மீண்டும் பொழிய தயாராயின .

ஏதோ சாதனையாளர்கள் போல் நிற்கும் அந்த அம்மா ,மகளுக்கு தனது பலவீனத்தை காட்ட விரும்பாமல் அருகிலிருந்த விருந்தினர் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள் முகிலினி .

இரவு முழுவதும் பல கொடூரமான எண்ணங்களுடன் கழிந்தது .கணவன் தன்னை தேடி வருவான் என   அறை வாசலையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு முகிலினி உறங்கத் தொடங்கிய போது அதிகாலை ஐந்து மணி.

காலை எட்டு மணிக்கு கண் விழித்த போது தீயை வைத்து தேய்த்தது போல் எரிந்தன விழிகள் .அத்தோடு சேர்ந்து கொண்ட கன்னத்தின் எரிச்சல் மனதையும் காந்த வைத்தது .
பாட்டியம்மா அழைப்பதாக முத்தரசி வந்து கூறியபோது எரிந்த மனதில் திராவகம் கொட்டியது போல் ஆனது .என்றுமில்லாமல் இவர்கள் இப்போது ஏன் அழைக்கிறார்கள் .? குழம்பினாள் .

இவர்களுக்கு எப்போதும் என்னை பிடிக்காது .நேற்று அவர் என்னை அடித்தது இவர்கள் காதுக்கு சென்றிருக்கும் .இதை காரணமாக வைத்து என் பேரனை விட்டு சென்றுவிடு என்று கேட்பார்களோ ?

மத்தளமாய் ஆர்ப்பரித்த மனதுடன் பாட்டியம்மாவின் அறைக்கு போனாள் .

தூய வெண் பட்டுடன் , தங்க பிரேம் கண்ணாடியுடன் ,ஒரு நிமிர்வோடு சாய்வு நாற்காலியில் அமர்ந்து பகவத்கீதை படித்துக் கொண்டிருந்தார் பாட்டியம்மா .அவரை பார்க்கும் வரை நெஞ்சில் மண்டியிருந்த பயம் போய் , இப்போது பாசம் சுரந்தது முகிலினிக்கு .

ஏதோ ஒரு நெகிழ்வு .அப்படியே போய் அவர் மடியில் விழுந்து விட மாட்டோமா என்று இருக்க , தன்னை கட்டுப்படுத்த முடியாத தவிப்புடன் வாசலில் நின்றிருந்தாள் .

நிமிர்ந்து அவளிருந்த நிலையை பார்த்த பாட்டியம்மா பகவத்கீதையை அருகில் வைத்து விட்டு , இரண்டு கைகளையும் அவளை நோக்கி நீட்டினார் .

வாம்மா வந்து எனக்குள் அடங்கிக்கொள் எனும்படியான உலகை காக்கும் ஆதிசக்தி அன்னையின் தோற்றம் .

வெடித்து கிளம்பிய விம்மலுடன் ஓடிச்சென்று அவர் மடியில் தஞ்சமடைந்த முகிலினி அழத்துவங்கினாள் .




What’s your Reaction?
+1
22
+1
12
+1
1
+1
0
+1
0
+1
2
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!