Serial Stories

எனை ஆளும் நிரந்தரா-17

17

அந்த பார்ட்டி முழுவதும் சைத்தன்யனும், காதம்பரியும் அப்போதுதான் மணம் முடித்த புது தம்பதிகள் போல் கிண்டலும் கேலியுமாக பேசியபடி ஒருவரையொருவர் உரசிக்கொண்டு விருந்தினர்களை வரவேற்று அமர வைத்தனர்.

ஆதர்ஷ தம்பதிகள் என்பது சொல்லாமலேயே தெரிய மானசி தன் செய்கையில் மிகவும் மனம் நொந்தாள்.சிவ நடராஜனின் கோபத்தின் நியாயத்தை உணர்ந்து கொண்டாள்.ஆனால் அதனை அவன் உணர்ந்து கொள்வானா? ஏக்கம் நிறைந்த அவள் பார்வைகளை அவன் கண்டு கொள்வதாகவே இல்லை.

” என்ன ஒரு முட்டாள்தனமான முடிவெடுக்க இருந்தாய் ? இப்படி ஒரு உயர்ந்த நிலைமையில் உன்னை பார்ப்போமென்று நீ பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது நாங்கள் நினைக்கவேயில்லைம்மா?” அவர்கள் பள்ளி தலைமையாசிரியர்,இப்போது ரிட்டயர்டு ஆகி விட்டவர்.பெருமையாக காதம்பரியிடம் பேசினார்.

பிறகு அருகே நின்றிருந்த அவள் கணவரை பார்த்ததும் அதிகம் பேசி விட்டோமோ எனத் தயங்கி நிறுத்த,” கவலைப்படாதீர்கள் சார்.நீங்கள் சரியாகத்தான் பேசியிருக்கிறீர்கள்.சைத்துவிற்கு என் விசயம் எல்லாமே தெரியும்.என் முட்டாள்தனங்களை நான் அவரிடம் எப்போதும் மறைத்ததில்லை” சொன்னபடி கணவனின் கையோடு கை கோர்த்துக் கொண்டாள்

அவர் ஆச்சரியமாக பார்க்க சைதன்யன் புன்னகைத்தார்.” எல்லோருமே கடந்து வர வேண்டிய அடலசன்ட் பருவம்தானே சார் அது.நாமும் அதை கடந்துதான் வந்திருக்கிறோம்.பெண்ணென்பதால் காதம்பரி மேல் பழி போடுவது எந்த வகை நியாயம்?”

காதம்பரி நெகிழ்வுடன் கணவன் தோள் சாய்ந்து கொண்டாள்.” பக்குவமாக அந்தப் பருவத்தை கடந்தவர்களும் இருக்கிறார்கள் சைத்து.உதாரணத்திற்கு இதோ சிவா.பள்ளிக்கூடம் முழுவதும் அவனுடன் இரண்டு வார்த்தையாவது பேச துடித்துக் கொண்டிருக்கும் பெண்கள் நிறைய உண்டு.ஆனாலும் எல்லோரிடமும் அவன் கண்ணியமாகத்தான் நடந்து கொள்வான்.நீ காதலித்து சுற்றும் பையன் பெரிய ரவுடிக் கூட்டத்தை சேர்ந்தவன்.அவர்கள் நோக்கம் நீ இல்லை.உன் அப்பா,என்று நிறைய முறை என்னை எச்சரித்தான்.ஆனால் நான் அவன் கண்ணிலேயே மண்ணை தூவி விட்டு அந்த பையனுடன் சுற்றினேன்.அந்த வயதிலேயே சிவாவின் மெச்சூரிட்டியை இப்போது நினைத்தாலும் எனக்கு ஆச்சரியம்தான்”

“இதில் பெரிய கொடுமை என்னவென்றால் காதம்பரி,நீயும் சிவாவும் அடிக்கடி தனியாக பேசுவதை பார்த்து,நீங்கள் இருவரும் காதலிப்பதாக ஒரு செய்தி நம் பள்ளிக்குள் பரவியது தெரியுமா?”வெற்றி வேலன் சிரித்தபடி கூறினான்.

“வரம் கொடுத்த சாமியை யாராவது காதலிப்பார்களா என்ன?” இவ்வளவு நேரம் தனது பதவிக்கான கம்பீரத்தை தக்க வைத்திருந்த காதம்பரி இப்போது கண் கலங்க,”ஏய் காதம்பரி என்ன இது? பைத்தியம் போல் உளறிக் கொண்டு…” அதட்டியபடி அவளருகே வந்து கையை ஆறுதலாக பற்றிக் கொண்டான் சிவ நடராஜன்.

“என் பொண்டாட்டி டிபார்ட்மென்டிலேயே ரொம்ப ஸ்ட்ரிக்ட் எனப் பெயரெடுத்தவள் சிவா.ஆனால் இப்போது வரை நீங்கள் மட்டுமே  அவளுடைய வீக் பாய்ண்ட்.உங்களைப் பற்றி பேசினாலே உணர்ச்சி வசப்பட்டு விடுவாள்” சைதன்யன் புன்னகையோடு சொன்னார்.




“அன்று மட்டும் சிவா என்னை காப்பாற்றவில்லை என்றால் இன்று நான்.. ஏதோ ஒரு ரவுடி கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பேன். இப்படி கௌரவமாக உங்கள் மனைவியாக நின்று கொண்டிருக்க மாட்டேன். பைத்தியக்காரத்தனமாக  காதல் கடிதம் என்று  நான் கிறுக்கிய கிறுக்கல் ஒன்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு, என் அப்பாவையே சாட்சியாக்கி அவனுடன்  என் திருமணத்தையே முடிக்க திட்டமிட்டனர் .அந்த கிறுக்கலை சிவா கையில் எடுத்துக்கொண்டு போய் எங்கேயோ தூக்கி எறிந்து விட்டான்.அத்தோடு தைரியமாக என்னுடன் கமிஷனர் ஆபீசுக்கும் வந்து காதம்பரி யாரையும் காதலிக்கவில்லை என்று சாட்சியும் சொன்னான். அவர்கள்  வேறு வழி இன்றி கலைந்து போக, மாற்றல் வாங்கிக்கொண்டு நாங்களும் டெல்லி பக்கம் போய் விட்டோம். பிறகும் சிவா எனக்கு அடிக்கடி போன் செய்து தைரியம் சொல்லிக் கொண்டே இருப்பான். அவனுடைய தூண்டுதலால்தான்  நான் படிப்பை தொடர்ந்தேன். அப்பாவைப் போல் ஆக வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே என்னை இந்த நிலைமையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான். அதனால்தான் எனக்கு நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள்” காதம்பரி கண்கள் கலங்க தன்னுடைய முன் கதையை சொல்லி முடித்தாள்.

” காதம்பரி ரொம்ப ஸ்ட்ரிக்டான அதிகாரி என்கிறீர்கள் சைதன்யன் சார்.ஆனால் பாவம் அவளால் ஒரு புல்லட்டை கூட தாங்கி ஓட்ட முடியவில்லை.பாதுகாப்பிற்காக நானும் பின்னால் ஏற வேண்டியதாயிற்று “கனமான அந்த சூழ்நிலையை மாற்ற சிவ நடராஜன் கேலி பேசினான்.

” ஏய் என் பாதுகாப்பிற்காக ஏறினாயா? உன் புல்லட்டை எங்கேயாவது கொண்டு போய் மோதி விடுவேனோ என்ற பயத்தில் பின்னால் ஏறினாய்…”காதம்பரி சிலிர்த்துக் கொண்டு வர…

“அதையேதாம்மா நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்” சிவ நடராஜன் சிரித்தான்.

 நண்பர்கள் அனைவரும் இவர்களின் தோழமையை  ஒரு வித நெகிழ்வோடு பார்த்திருக்க மானசியோ தன்னை மிக கேவலமாக உணர்ந்தாள்.

எப்பேர்பட்ட நட்பை அவள் எவ்வளவு கேவலமாக நினைத்திருக்கிறாள், ஒரு அடியோடு அவன் நிறுத்திக் கொண்டதே பெரிய விஷயம். சுற்றியிருந்த கூட்டத்திலிருந்து பிரிந்து விலகி நடந்தாள்.

“காதல் வேண்டாம்,படிப்பு முக்கியம்னு நம்மையெல்லாம் ஜாக்கிரதைப் படுத்திய சிவாவும் இப்போது ஒரு இடத்தில் வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறான் தெரியுமா? எங்கே அவள்…? மானசி…” என்று காதம்பரி அழைத்தபோது மானசி அங்கே இல்லை.




What’s your Reaction?
+1
50
+1
19
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!