Serial Stories

எனை ஆளும் நிரந்தரா-11

11

“உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் அக்காவை சொல்லிக் கொண்டோ உங்கள் அப்பாவை சொல்லிக் கொண்டோ எங்கள் வீட்டிற்குள் வந்திருக்க வேண்டும். ஏதோ தொழிலை பற்றி பேசி அப்பா அண்ணனை திசை திருப்பி விட்டீர்கள்” போனை எடுத்ததும் குறைபட்டாள் மானசி.

“இது போங்காட்டம். உங்கள் வீட்டிற்கு வந்து சண்டை இல்லாமல் திரும்பிப் போக வேண்டும் என்பதுதான் உன்னுடைய சவால். இப்பொழுது அந்த சவாலுக்கு கீழ் குட்டி குட்டியாக பாய்ண்டுகளை சேர்க்கிறாயே, இது நியாயமா?” அவன் கேட்ட விதத்தில் சிரிப்பு வர…

“பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக அதன் திசையை திருப்பி விடுவது உங்கள் பாணியோ?” என்றாள்.

 “ஆனால் அதன் முடிவு அந்தப் பிரச்சனை தீர்வதாக இருந்தால் சரிதானே?”

“இல்லை எனக்கு புரியவில்லை, நம்முடைய திருமணம் எப்படி என் அண்ணனையும் உங்கள் அக்காவையும் சேர்த்து வைக்கும்? முதலில் நம் திருமணத்திற்கு இரு குடும்பங்களிலும் ஒத்துக்கொள்வார்களா என்ன?”

கேள்வியை கேட்கும் போதே அதில் இருக்கும் உண்மை புரிய மானசியின் மனதில் பெரும் கவலை வந்து ஒட்டிக் கொண்டது. எவ்வளவு ரிஸ்க் இந்த திருமணம்? இதை எப்படி நடத்த முடியும் என்று இவன் நினைக்கிறான்? கூடவே பிரிந்த தம்பதிகளை சேர்க்கும் திட்டம் வேறு. இதெல்லாம் எப்படி சாத்தியமாக கூடும்?

“அதெல்லாம் முடியும்” அடித்து பேசினான் சிவ நடராஜன். “எல்லாவற்றிற்கும் என்னிடம் திட்டங்கள் இருக்கிறது. அவற்றை செயல்படுத்த எனக்கு தேவை உன்னுடைய சம்மதம் மட்டுமே. நீ சம்மதித்து விட்டால் அடுத்தடுத்து எல்லாம் நல்லவையாகவே நடக்கும்”

“எனக்கு நம்பிக்கை இல்லை.உங்கள் நம்பிக்கையை கெடுப்பானேன்? சரி ஆரம்பியுங்கள்”

” எதை?”

” உங்கள் திட்டங்களை”.

” எந்த திட்டங்களை?”

” அதுதான் நம் திருமண…” உதடு கடித்து பேச்சை நிறுத்தினாள்.

“மானு, வெட்கப்படுகிறாயா என்ன?” எதிர் முனையில் குழைவாக ஒலித்தது அவன் குரல்.

“ம்கூம்” பேச்சு வராமல் ஒலியை பதிலாக்கினாள்.

” வீடியோ கால் வருகிறாயா? எனக்கு இப்போது உன் முகத்தை பார்க்க வேண்டும்”

” ம்கூம்”மானசி  போனை கட் செய்து விட்டாள். என்ன உணர்வு இது! முகத்தை கைகளால் அழுந்த துடைத்துக் கொண்டு தலையணையில் முகம் புதைத்து கொண்டாள்.

மீண்டும் சிவ நடராஜனின் போன். “எனக்கு உன்னுடைய முழு சம்மதம் வேண்டும் மானு” குழைவு குறைந்து

அழுத்தம் தெரிந்தது குரலில்.

அதென்ன திருமண சம்மதத்தை இப்படி அதட்டியா கேட்பான்?

“அண்ணனின் வாழ்வுக்காக எனக்கு  சம்மதம்” பட்டும் படாமலும் பதிலளித்தாள்.




 இரண்டு வினாடிகள் எதிர் முனையில் அமைதி நிலவியது. பிறகு “பெரிய தியாக பரம்பரைதான்” என்று விட்டு போனை கட் செய்தான்.

அதன் பிறகு நான்கு நாட்கள் அவனிடமிருந்து எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் போக, மானசியின் மனம் படபடக்க துவங்கியது. அப்படி எடுத்தெரிந்து பேசியிருக்கக் கூடாதோ? எனக்கு சம்மதம் என்று ஒழுங்காக சொல்லி இருக்கலாமோ? இப்போது அண்ணனின் வாழ்க்கை என்னாவது? தனக்குள் தானே உருண்டு கொண்டிருந்தாள்.

நான்காம் நாள் இரவு நாளை எங்கள் வீட்டில் இருந்து நம் திருமண விஷயம் பேச வருகிறார்கள் பாட்டியை கொஞ்சம் தயார் செய்து வை என்று அவனுடைய மெசேஜ் வந்தது.

என்ன இப்படி எளிதாக சொல்கிறான் குழம்பியபடி அவனுக்கு போன் செய்ய முயல பிசியாக இருந்தான். பிறகு எப்போது போன் செய்தாலும் பிசி அல்லது அவுட் ஆஃப் கவரேஜ் என்று வர, பெரிய இவன் அட போடா! நானே பார்த்துக்கொள்கிறேன், என்று போனை தூக்கி போட்டு விட்டாள்.

பூனை போல் தன் அறைக்குள் நுழைந்த பேத்தியை கவனிக்காதது போல் டிவியில் ஆழ்ந்திருந்தார் பாட்டி ரோஜாமணி.

பவ்யமாக பாட்டி காலடியில் தரையில் அமர்ந்து கொண்டவள் “பாட்டி நாளைக்கு உங்க பிறந்த வீட்டிலிருந்து நம்ம வீட்டுக்கு சில பேர் வருகிறார்கள்”

” அது யாரடி இங்கே வர்றது?”

” அதுதான் பாட்டி நம்ம அண்ணனோட சொந்தக்காரங்க”

” உன் அண்ணனோட சொந்தக்காரங்க நாமதானே! இப்படியா சொந்த்த்தை மறந்து போவாய்”

 ” ஈ… சிரித்து விட்டேன் போதுமா? பெரிய காமெடிதான்.நாளை உங்க பேரன் சிவாவோட வீட்டிலிருந்து நம்ம வீட்டுக்கு வர்றாங்க பாட்டி”

 திக்கென நிமிர்ந்தார் ” அவுங்க ஏன்டி இங்க வர்றாங்க?”

” நீங்கதானே பாட்டி அண்ணனோட வாழ்க்கை சம்பந்தமாக சிவா கிட்ட பேச சொன்னீங்க?”

” நீ போய் பேசினாயா என்ன? என்னிடம் சொல்லவே இல்லையே?”

” அப்புறமா ரெண்டு கோடு நோட்டுல டீடெயிலா எழுதி தர்றேன். இப்ப நான் சொல்றத மட்டும் கேளுங்க. நாளைக்கு வர்றவங்க கிட்ட நீங்கதான் பெரியவங்களா பக்குவமா நாலு வார்த்தை பேசணும்”

” சரிதான் வரட்டும் ,பக்குவமாக பேசி நம்ம வீட்டு மருமகளை வீட்டுக்குள்ள கூட்டிக்குவோம்”

மானசி எச்சில் விழுங்கினாள்

 “பாட்டி  அவங்க கல்யாணம் பேச வராங்க”

” என்ன திரும்பவும் கல்யாணம் பண்ண போறாங்களா?முதல்ல திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிக்கிட்டதால இன்னொரு தடவை அவங்க முன்னால பண்ணனும்னு நினைக்கிறாங்களா?”

” ப்பாட்டீய்  என்னை பேச விடுங்க.அவங்க வீட்ல இருந்து எனக்கும் சிவ நடராஜனுக்கும் கல்யாணம் பேச வராங்க”

 பாட்டி “ஆ” என வாய் திறந்து அமர்ந்து விட்டார்.




” என்னடி சொல்ற? இதெல்லாம் எப்ப நடந்தது? எப்படி அவனை வளைத்து பிடித்தாய்?”

“சீச்சி இதென்ன பேச்சு பாட்டி? நானில்லை அவர்தான் என்னிடம் திருமணம் செய்ய கேட்டார்”

” அப்படி கேட்க வைத்து விட்டாயா நீ?” பாட்டியின் ஆச்சரியம் அடங்குவதாக இல்லை.

” பாட்டி அண்ணனையும் அவர் அக்காகாவையும் சேர்த்து வைப்பதற்காகத்தான் எங்கள் திருமணம் புரிகிறதா?”

” ஓ…கதை அப்படி போகிறதா?” பாட்டி யோசித்தபடி பின்னால் சாய்ந்தார். தனது சோபாவை முன்னும் பின்னும் ஆடுவது போல் அமைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டார். மானசி பொறுமையாக காத்திருந்தாள்.

 தீவிரமாக யோசித்த பாட்டியின் முக குழப்பம் மெல்ல மெல்ல விலகி புன்னகை வந்தது.கண்களைத் திறந்து பேத்தியை பார்த்தவர் கட்டை விரலை உயர்த்தி “டன்” என்றார்.

 மானசியினுள் நிம்மதி பெருமூச்சு. “பாட்டி எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது. சொதப்பி விடாதீர்கள்”

” நான் பார்த்துக் கொள்கிறேன் போடி”

சிவ நடராஜனின் அப்பா சிவக்கடாட்சத்தின் கோபத்தை எண்ணி மனம்  படபடக்கு  மானசி காத்திருக்க, அவளுடைய கவலைக்கு அர்த்தம் இல்லாமல் போனது.

 ஏனெனில் மறுநாள் அவர்கள் வீட்டிற்கு திருமணம் பேச வந்தது வெற்றிவேலனின் மனைவி சிவஜோதி.




What’s your Reaction?
+1
39
+1
17
+1
1
+1
1
+1
3
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!