Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம் -24

( 24 )

டிரேயில் குளிர்பானங்களை அடுக்கி எடுத்தபடி யதுநந்தனின் ஆபீஸ் அறைக்குள் முகிலினி நுழைந்த போது , சோபாவில் அருகருகே அமர்ந்தபடி உற்சாகமாக பேசியபடி இருந்தனர் மூவரும் .

அவர்களின் இந்த உரையாடலில் இந்திய மாநிலங்களின் ஒற்றுமை தெரிந்தது .ஏனெனில் யதுநந்தனின் தாய்மொழி தமிழ் , காருண்யா கன்னடம் , கலெக்டர் அமிஷா இந்தி .இவர்கள் மூவரும் லண்டனில் ஒன்றாக படித்தவர்கள் .இப்போது வெகுநாட்கள் கழித்து சந்தித்துள்ள நண்பர்கள் தங்களை மறந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர் .

மிக அருமையான மனதிற்கு இதம் தரும் காட்சியாக அது இருந்தது .தங்கள் கல்லூரி நாட்களின் இனிய நினைவுகளில் உலவிக் கொண்டிருந்த தோழமைகள் நடப்பு நிலைக்கு வந்து ஒருவரையொருவர் கிண்டலடித்து கொண்டனர் .

தமிழும் , கன்னடமும் , இந்தியும் கலந்து விளையாடியது அங்கு .அனைவருக்கும் பொதுவென்று தமிழே அதிகம் பேசப்பட்டது .

” அமிஷா கடைசியில் உன் லட்சியத்தை அடைந்து விட்டாய் நீ .உன்னை இப்படி ஒரு மாவட்ட தலைவியாக பார்க்க எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது ” என்று தோழியை பெருமையோடு பார்த்தனர் யதுநந்தனும் , காருண்யாவும் .

” நீ மட்டும் என்ன உன் ஆசைப்படி  பெரிய டிடக்டிவ் ஆகி  விட்டாய் ” காருண்யாவை பார்த்து மற்ற இருவரும் கூற மெலிதாக அதிர்ந்தாள் முகிலினி .

காருண்யா டிடக்டிவ்வா  …?

” நம் நண்பனின் எண்ணம் தான் ஈடேறாமல் போய்விட்டது ” சிறு வருத்தத்துடன் யதுநந்தனை ஏறிட்டனர் தோழிகள் .

” இந்த பிஸினஸ் பார்க்கிற வேலையே எனக்கு ஆகாது .நான் கம்ப்யூட்டர் சாப்ட்வேரில் சாதித்து பெரிய அமெரிக்க கம்பெனியின் எம். டி யாவேன்னு சொன்னாய் நந்து .ஆனால் விதி உன்னை இங்கே தள்ளி விட்டதே ” வருத்தத்துடன் கூறினர் .

” அது கூட பரவாயில்லைப்பா.இந்த பணப்பிசாசுகளின் பேய் பசிக்கு அவனோட உறவுகளையும் இழந்து நிற்கிறானே ? அதை நினைத்தால்தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது ” அமிஷா கூற காருண்யா ஆமோதித்தாள் .

” ஏன் கருண் அவர்களை கண்டுபிடித்து விட்டாயா ? ” அமிஷா கேட்டாள் .

” ம்…முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் .சீக்கிரமே பிடித்து விடுவேன் ” உறுதியாக கூறினாள் காருண்யா .

” உன் கனவுகளை இழந்ததால் இப்போது நீ செல்லும் பாதை உனக்கு மிக கடினமானதாக உள்ளதா நந்து ? ” யதுநந்தனின் கைகளை தன் கைகளில் எடுத்தபடி கேட்டாள் அமிஷா .

” முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் உணர்ந்தேன் தோழிகளே .அதுவும் அம்மாவும் , அப்பாவும் இல்லாத தனிமை வேறு கொடுமை .இந்த கொடுமையில் எனது உயிருக்கு வேறு ஆபத்து .அந்த நேரத்தில் பணம் , சொத்து எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்காவது ஓடிவிடலாமெனத்தான் தோன்றியது .அந்த எண்ணத்தை போக்கி எனக்கு அப்போது துணையாக நின்று என்னை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தது என் பாட்டிதான்.




 

நான் சென்னை போகும் வரை வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் தான் இருந்தேன் .ஆனால் அங்கே போன பின்போ ….” யதுநந்தனின் பார்வை மனைவியின் புறம் திரும்பியது .

” வாழ்க்கை பல வசந்த பக்கங்களை எனக்கு அறிமுகம் செய்வித்தது .” தள்ளி அமர்ந்திருந்த முகிலினியின் கைகளை பிடித்து இழுத்து தன் அருகே அமர்த்திக் கொண்டான் .அவள் தோள்களை சுற்றி கைகளை போட்டு அணைத்துக் கொண்டான் .

” இப்போது என் தாய் தந்தை மரணம் கூட என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை .அந்த துயரம் போக்கும் பரிசாக இவள் எனக்கு கிடைத்ததாக எண்ணிக்கொண்டேன் .வாழ்க்கை இனிக்க தொடங்கியது ” என்றான் .

தோழிகள் இருவரும் கை தட்டி அவன் கருத்தை வரவேற்றனர் .கலங்கிய கண்களை மறைக்க மறுபுறம் திரும்பிக் கொண்டாள் முகிலினி .

என்ன மாதிரியான பாசம் இது .”என் தாய் , தந்தையின் மரணத்தையே மறக்கடிக்கிறாள் இவள்”என பாசத்தை கொட்டுகிறான் என் கணவன் .”என் தந்தையின் மரணத்தை நினைவுறுத்துகிறாய் நீ ” என அவனை தள்ளி வைக்கிறேன் நான் .எங்களின் வினோத உறவுக்குள் பிணைப்பை ஏற்படுத்திய  கடவுளின் ஜாலத்தை என்னவென்று சொல்ல ? ….

தொண்டையை செருமிக் கொண்டு
காருண்யாவை நோக்கி ” இவ்வளவு ப்ரெண்ட்ஸா இருக்கீங்க .பின்னே ஏன் இவரை சார்னு கூப்பிடுறீங்க ? ” என்றாள் .

இந்த கேள்வியின் மூலம் உனது தோழமையை நான் புரிந்து கொண்டேன் என கணவனுக்கு உணர்த்தினாள் .அதனை அறிந்த யதுநந்தனின் முகம் மலர்ந்தது .விழிகளை மூடி திறந்து உன்னை நான் அறிந்து கொண்டேன் என விழிமொழி பேசினான் .

இதனை கண்டு கொண்ட நண்பர் கூட்டம் “ஏய் “என கத்தி தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தியது .” பார்டா நாங்க இரண்டு பேரும் உங்கள் பக்கத்திலேயே ஒட்டி உட்கார்ந்து கொண்டு உங்களையே பார்த்துக்கொண்டு இருக்கிறோம் .கண்டுக்காமல் கண்ணாலேயே காதல் பண்றீகளா இரண்டு பேரும் “

காருண்யா முகிலினி காதையும் , அமிஷா யதுநந்தன் காதையும் பற்றி வலிக்காமல் திருக …

” இல்லையே …நான் உன்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் அமி .சத்தியம் வேணும்னா பண்ணட்டுமா ? ” என்றான் யதுநந்தன் .

” அடப்பாவி இதுக்கெல்லாம் சத்தியம் பண்ணுவியா நீ ? ” என்று அவன் முதுகில் மொத்த தொடங்கினாள் அமிஷா .

” காருண்யா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தப்பிக்க பார்க்கிறீங்களேப்பா .இதில் என்னை வேறு மேடம் போடுறீங்க ?” என்றாள் முகிலினி .உள்ளுக்குள் அன்று இவர்கள் இருவரும் நீச்சல்குளத்தருகில்  கை கோர்த்துக் கொண்டு போனதை பார்த்து சந்தேகப்பட்டேனே .என்று தன்னையே வெறுத்துக் கொண்டிருந்தாள் .

” இல்லைப்பா போடுகிற வேசத்தை ஒழுங்கா போடனுமில்லையா ? நந்து கிட்ட வேலைக்குன்னு வந்துட்டு எல்லோர் முன்பும் அவனை பெயர் சொல்லி கூப்பிட முடியாது பாருங்க .அதேதான் உங்களுக்கும் ”  என்றாள் காருண்யா .

” நந்துவிடம் துக்கம் விசாரிக்கவே இங்கே வந்தேன் .அப்போது என் கண்ணெதிரவே அவனை கொல்வதற்கான சதி ஒன்று நடந்தது .அதனை உணரக் கூடிய நிலையில் கூட அவன் இல்லை .அதிலிருந்து அவனை காப்பாற்றி விட்டு நிமிர்ந்தால் மறுநாள் மற்றொரு சம்பவம் .என் உயிர் நண்பனை உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இங்கே விட்டு விட்டு நான் அங்கே துப்பறிந்து என்ன சாதிக்க போகிறேன் .இதற்கொரு தீர்வு காணாமல் விடப்போவதில்லை என இங்கேயே தங்கி விட்டேன் ” என்றாள் காருண்யா .

” முகில் காருண்யா குடும்பம் மிகவும் வசதி படைத்தது .அவர்களிடம் இவள் நண்பன் வீட்டில் தங்கியிருந்து ஒரு கேஸை விசாரித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறி வைத்திருக்கிறாள் .அவள் அண்ணன் மட்டும் ஒருநாள் இங்கு வந்து இவள் என்னை சார் போடுவதை பார்த்தாரானால் நொந்து போய் விடுவார் ” என்றான் யதுநந்தன் .

” கருண்  சீக்கிரம் கண்டுபிடிய்யா .அதுக்கப்புறம்தான் நாம் நிம்மதியாக மூச்சு விட முடியும் .” என்றாள் அமிஷா .

” நந்து  என்னவோ ஸ்கூல் மேட்டர்னு  சொன்னியே .அது என்ன ? ” என்றாள் அமிஷா .விவரங்கள் சொன்னான் யதுநந்தன் .




” சரி இந்த ஒரு முறை நான் பார்த்துக் கொள்கிறேன் .இனிமேல் இது போன்ற பிரச்சினைகளுக்கு என்னிடம் வரக்கூடாது ” கண்டிப்பாக கூறினாள் அமிஷா .

” அட விடுங்கப்பா ..சும்மா சீரியசாகவே பேசிக்கொண்டு , கொஞ்ச நேரம் ஜாலியாக பேசலாம் ” என பேச்சை திசை திருப்பினான் யதுநந்தன் .

” முகிலினி யதுநந்தனுக்கு நாங்கள் படிக்கும் போது நிறைய பெண் விசிறிகள் உண்டு தெரியுமா ?  ” மெல்ல ஆரம்பித்தாள் அமிஷா .” ஆமாம்…ஆமாம் என்று அவளுடன் சேர்ந்து கொண்டாள் காருண்யா .

அதுதான் எனக்கு தெரியுமே …என்று மனதிற்குள் எண்ணியபடி வெளியே ” அப்படியா ? ” எனக் கேட்டு வைத்தாள் முகிலினி .

” ஐயோ ..அம்மா தாயே பரதேவதைகளே , நான் ஒரு வழியாக இப்போதுதான் அவளை சமாளிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் .இதில் நீங்கள் வேறு இடையிட்டு என் பிழைப்பை கெடுக்காதீர்கள் ” போலியாக அலறினான் யதுநந்தன் .

” சரி விடுப்பா ..பையன் ரொம்ப பயப்படுகிறான் .நாம் முகிலினியிடம் இன்னொருநாள் தனியாக பேசுவோம் ” என்றாள் அமிஷா .

” நீ கிளம்பும்போது இன்னின்ன இப்படி என்று ஒரு அவுட்லைன் போட்டுக் கொடுத்து விட்டு போ அமி .நான் நேரம் பார்த்து முகிலினியிடம் …” என்று விட்டு நிறுத்தி பற்ற வைத்து  விடுகிறேன் என சைகை காட்டினாள் காருண்யா .

” முகில் உனக்கு உள்ளே வேறு வேலை இருக்கிறதில்லையா ? போம்மா போய் பாரு. இங்கே நிறைய கெட்ட பசங்களா இருக்காங்க .அவுங்க சகவாசமெல்லாம் உனக்கு வேண்டாம் ” என்றுவிட்டு இதற்கு பரிசாக தலா இரண்டு அடிகளை முதுகில் வாங்கிக் கொண்டான் .

கள்ளமின்றி பழகும் அந்த நட்பு உள்ளங்களை நிறைந்த மனதுடன் பார்த்தாள் முகிலினி .இறுதியில் விடை பெறும் போது நண்பர்கள் ஒருவரையொருவர் அணைத்தபடி விடை பெறுவதை பார்த்தாள் .இந்த நட்பு அணைப்பைத்தானே தவறாக நினைத்தேன் என நொந்து கொண்டாள்.

திருமண பரிசாக ஒரு பரிசு பொட்டலத்தை முகிலினியிடம் கொடுத்தாள் அமிஷா .விடை பெற்றுக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் .

வெளியே வரவும் தங்கள் பால்யங்களை தொலைத்து விட்டு நிமிர்ந்து நின்றனர் நண்பர்கள் .இறுக்கமான முகத்துடன் யதுநந்தனும் , ஆராயும் விழிகளுடன் காருண்யாவும் , பதவி மிடுக்கோடு அமீஷாவும் மாறிப்போயினர் .

இப்படித்தான் மனிதர்கள் வேறு வழியின்றி தங்கள் இயல்பை தொலைத்து விட்டு வாழ பழகிக் கொள்கின்றனர் என எண்ணிக்கொண்டாள் முகிலினி .

ஏனோ இப்போது அவள் மனம் மேகங்களற்ற நிர்மல வானமாக இருந்தது .அங்கே நிலவாக உதித்தான் யதுநந்தன் .

அங்கே….இங்கே …என்று
எங்கெங்கோ தேடினேன் உன்னை
நிமிர்ந்து பார்க்கையில்
என் வான நிலவாய்
ஜொலித்துக் கொண்டிருந்தாய்
அவசரப்பட்டு தேய்ந்து விடாதே
இப்போதுதான் மொட்டவிழ்கிறது
இந்த தாமரை.

என்ற கவிதையோடு கணவனுக்கும் , இரவிற்கும் காத்திருந்தாள் முகிலினி .இரவும் வந்தது .முகிலினி வாழ்விலேயே மறக்க முடியாத கசப்பான இரவாக .




What’s your Reaction?
+1
18
+1
6
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!