Serial Stories ஊரெங்கும் பூ வாசனை

ஊரெங்கும் பூ வாசனை-11

(11)

    நமச்சிவாயம் மிக முக்கியமான வேலையில் ஆழ்ந்திருந்த போது ஜானகியிடமிருந்து அழைப்பு வந்தது.

    “ஹலோ சொல்லு ஜானகி?” என்றார்.

    “என்னங்க…நம்ம மௌரியன் காலேஜ்க்குப் போகலையாம்.” படபடப்பும் டென்ஷனுமாக ஜானகியின் குரல் ஒலிக்கவே பதற்றம் அவரைத் தொற்றிக் கொண்டது.

   “என்ன சொல்றே? காலேஜ் போகலையா?”

    “ஆமாங்க. கோகுல் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஃபோன் பண்ணினான். மௌரியன் ஏன் காலேஜூக்கு வரலைன்னு கேட்டான். எனக்கு திக்குன்னுது. அவன் காலையில காலேஜூக்குத்தானே போனான்னு சொன்னேன். இல்ல இங்க வரலைன்னு சொன்னான். அதுமட்டுமில்லை அன்னைக்கு டான்ஸ் ப்ரோக்ராம் கேன்சலாயிட்டுன்னு சொன்னான்ல…அது பொய். இவன்தான் சரியா ப்ரொக்ராம் நடக்கும் நேரத்துக்கு எங்கேயோ போய்ட்டானாம். காலேஜ் முழுக்க தேடியிருக்காங்க. இன்னைக்கும் காலேஜ் போகலையா? அதனால உடம்புக்கு என்னவோ ஏதோன்னு நினைச்சுக்கிட்டு கோகுல் ஃபோன் பண்ணி கேட்டான். எனக்கென்னமோ பயமாயிருக்குங்க. அவனோட நடவடிக்கை ஒண்ணும் சரியல்லை. அவன் கிட்ட எதோ பிரச்சனை இருக்கு. அதனால அவன் பாதிக்கப்ட்டிருக்கான். நம்மக்கிட்ட சொல்ல மாட்டேங்கறான். இப்ப காலேஜ் போகாம எங்க போனான்? நானும் ஃபோன் மேல ஃபோன் போட்டுப் பார்க்கிறேன். சுவிட்ச் ஆஃப்னு வருது.”

    நமச்சிவாயத்தால் எதுவுமே பேச முடியவில்லை. மனைவியின் படபடப்பு அவருக்குள்ளும் மெல்லிய பயத்தை உண்டுப் பண்ணியிருந்தது.

    “என்னங்க…எனக்கு பயமாயிருக்கு. நீங்க உடனே வீட்டுக்கு வாங்களேன். தனியாயிருந்தா மனசு என்னென்னவோ நினைக்குது.”

    “சரி..பயப்படாதே. அவன் என்ன சின்ன குழந்தையா? யாராவது கடத்திக்கிட்டுப் போக? யாராவது ஃபிரண்ட்ஸ் வீட்டுக்குப் போயிருப்பான். வருவான்.?”

     “எல்லா ப்ரண்ட்ஸ_ம் காலேஜ்ல இருக்கும் போது இவன் எந்த ப்ரண்ட் வீட்டுக்குப் போயிருப்பான்?”

    “காலேஜ்ல இருக்கறவங்க மட்டும்தான் ப்ரண்ட்டா? வேற ப்ரண்டே இருக்க மாட்டாங்களா?”




    “சரி நீங்க வர்றீங்களா?”

    “பர்மிஷன் போட்டுட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்தார்.

  தலையை கிறுகிறுவென சுற்றவதைப் போலிருந்தது.

  காலேஜ் போவதாக போக்கு காட்டிவிட்டு எங்கே போனான்?

  மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ளரில் மூடி வைத்திருந்த தண்ணீரை எடுத்து குடித்தார்.

  அன்றைக்கு டான்ஸ் ஆடாமல் ஏன் காலேஜை விட்டுப் போனான்? அப்படியே போயிருந்தாலும் நேரே வீட்டுக்கு வராமல் இரவு வெகுநேரம் கழித்து ஏன் வந்தான்?

   தூக்க மாத்திரையை ஏன் சாப்பிட்டான்?

    ஒரு வேளை…ஒரு வேளை போதை மாத்திரை பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கிறானா?

    அன்றைக்கு போதை மாத்திரை கிடைக்க வில்லையோ? அதற்கு பதிலாக தூக்க மாத்திரையை போட்டுத் தூங்கியிருப்பானோ?

   இதையெல்லாம் ஜானகியிடம் சொன்னால் அவள் எப்படி பயந்து போவாள்? தன் மகனுக்கு போதை மருந்து பழக்கம் இருக்கிறது என்பதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? இப்பொழுது கூட கல்லூரிக்குப் போகாமல் எங்காவது போய் போதை மாத்திரை சாப்பிட்டுவிட்டு சாய்ந்துக் கிடக்கிறானா?

   கற்பனையான எண்ணங்களே அவருக்குள் கனலை உற்பத்தி செய்ய விட்டிற்கு வந்தார்.

   வராண்டாவிலேயே கவலை முகத்துடன் அமர்ந்திருந்தாள் ஜானகி.

   அவரைக் கண்டதும் பதட்டமாக எழுந்து ஓடிவந்தாள்.

     “என்னங்க…என்னங்க நான் ஃபோன் பண்ணிக்கிட்டேயிருக்கேன். ஸ்விச்ட் ஆப்பாவே இருக்கு.”




    “நானும் ட்ரைப் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். ஸ்விச்ட் ஆஃபாவே யிருக்கு” என்றபடி தளர்வாக சோபாவில் அமர்ந்தாள்.

   “இப்ப என்னங்க பண்றது?”

   “கோகுலுக்கே மறுபடி ஃபோன் போட்டு கேட்போம். வேற எந்த ஃப்ரண்ட் வீட்டுக்காவது போயிருக்கானான்னு  பார்ப்போம்”

   சொல்லிக் கொண்டே கோகுலுக்கு அழைப்பு விடுத்தார்.

   தொடர்பில் வந்த கோகுலிடம் தங்களுடைய பயத்தையும், பதற்றத்தையும் சொன்னார்.

    “கவலைப் படாதிங்க அங்கிள். நாங்க அவனை தேடி அழைச்சுக்கிட்டு வர்றோம்” என்று கோகுல் சொன்னதும் பெரும் நம்பிக்கை உண்டானது.

   மனைவியின் கையைப் பற்றி ஆறுதல் சொன்னார்.

    “கவலையை விடு. அவனுங்க பார்த்துப்பானுங்க. எங்கயிருந்தாலும் தேடி கொண்டு வந்துடுவானுங்க”

  அவளுக்கும் பெரும் நம்பிக்கையும் சற்று நிம்மதியாகவும் இருந்தது.

  சொன்னதைப் போலவே அடுத்த இரண்டு மணி நேரத்தில் வாசலில் ஒரு கார் வந்து நிற்க இருவரும் வாசலுக்கு ஓடினர்.

   பின் சீட்டிலிருந்து கோகுல் மௌரியனை கைத்தாங்கலாய் அணைத்து அழைத்து வந்தான்.  கூடவே நண்பர்கள் சிலரும்.

   புடலங்காயாய் துவண்டு நடைத் தடுமாறிய மகனைப் பார்த்து இருவரும் அதிர்ந்தனர்.

  குப்பென்ற மதுவின் நொடி இருவரையும் தாக்கியதில் அடிவயிற்றில் அமிலம் சுரக்க கண்களில் அதிர்ச்சி பரவ தடுமாறினர். அவனை கொண்டு போய் படுக்கையில் கிடத்திவிட்டு அவனும் அவனுடைய நண்பர்களும் வந்தனர்.

   கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தனர்.

     “உட்காருங்க அங்கிள்”

   அவர்களின் எதிரே நடப்பது எதையும் நம்ப முடியாதவர்களாய் இருவரும் அதிர்ந்தனர்.

    “அங்கிள்…மௌரியன் நல்லா தண்ணியடிச்சுட்டு ஒரு பார்ல மட்டையாகி கிடந்தான்.”

   முந்தானையை எடுத்து வாயில் பொத்திக் கொண்டு விசும்பினாள் ஜானகி.

     “அவனுக்கு குடிப்பழக்கமெல்லாம் கிடையாதே…இப்ப ஏன்..இப்படி?”

அவள் வேதனையுடன் புலம்ப நமச்சிவாயம் அதிர்ச்சியிலிருந்து மீளாதவராய் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.

    “ஆன்டி…அவன் ஏன் டான்ஸ் ஆடாம பாதியிலேயே காலேஜை விட்டு போனான்? இன்னைக்கு ஏன் காலேஜூக்கே வரலைன்னு தெரியலைன்னு சொன்னேன்ல…ஆனா இப்ப ஏன்னு எல்லாமே தெரிஞ்சுட்டு” கோகுல் சொல்லவும் அழுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள் ஜானகி.

    “ஏன்…?”

    “காலேஜ்ல சாரல்னு ஒரு பொண்ணு. அவளை இவன் காதலிச்சிருக்கான். அவ இவன்கிட்ட ஃபிரண்டாத்தான் பழகியிருக்கா. ஆனா…இவன் அவ தன்னை காதலிக்கிறாள்னு நம்பிக்கிட்டிருந்திருக்கான். பங்ஷன் அன்னைக்கு அவளை இன்னொரு பையனோட நெருக்கமா பார்த்திருக்கான். காண்டாகி அவனை இழுத்துப் போட்டு அடிச்சிருக்கான். அவ அவனைத்தான் தான் காதலிக்கிறதா சொல்லியிருக்கா. அதனால ரொம்ப வெக்ஸான இவன் டான்ஸ் ஆடாம காலேஜை விட்டு வெளியே போயிருக்கான். எங்கெங்கோ சுத்திட்டு வீட்டுக்கு லேட்டா வந்து தூக்க மாத்திரையைப் போட்டுத் தூங்கியிருக்கான்.”




   தாய் தந்தை இருவர் முகத்திலேயும் அதிர்ச்சி வியர்வையாய் மாறியிருந்தது.

    “இந்த காதல் கதையெல்லாம் உனக்கெப்படித் தெரியும்?”

    “இன்னைக்குத்தான் இவன் காலேஜ் வரலைன்னதும் அந்த பொண்ணு சாரல் எல்லாத்தையும் சொன்னா.”

   இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்க கோகுலே பேசினான்.

    “ஆன்டி…பாவம் இவன் ரொம்ப மனசொடிஞ்சப் போயிருக்கான். என்னைக் கேட்டா இவனை ரெண்டு மூணு நாளைக்கு காலேஜ் வர விடாம நீங்க வீட்ல வச்சே பார்த்துக்கங்க. இந்த விஷயத்தை அவன்கிட்ட கேட்காதீங்க. அம்மா அப்பாவாவே இருந்தாலும் தன் காதல் தோல்வியை அவனால சொல்ல முடியாது. அதனால அவனை சாமதானப்படத்தற மாதிரி பேசுங்க.

முடிஞ்சா வெளியே எங்கேயாவது அழைச்சுக்கிட்டுப் போங்க. ஏன் இப்படி குடிச்சேன்னும் கேட்காதிங்க. அவன் ரிலாக்ஸானதும் இதைப் பத்திப் பேசுங்க.” என்று கூறிவிட்டு எழுந்தனர்.

    மற்ற நண்பர்கள் வாசலுக்குப் போக கோகுல் மட்டும் என்ன நினைத்தானோ திரும்ப ஜானகியிடம் வந்து கிசு கிசுப்பான குரலில் “ஆன்டி…சொல்றேனேன்னு பயப்பட வேண்டாம். அவன் ரொம்ப மனசொடைஞ்ச மாதிரி தெரியுது. அவனை ராத்திரி தனியா தூங்க விடாதீங்க. கிட்ட இருங்க. காதல் தோல்வி ரொம்ப பயங்கரமானது. தப்பா ஏதாவது முடிவெடுத்துடப் போறான்.” என்று அடிவயிற்றில் கத்தியை சொருகிவிட்டுப் போனான்.

   வெளிறிப் போன முகத்துக்கு மாறிப் போயிருந்தாள் ஜானகி.

   நமச்சிவாயமும், ஜானகியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டனர்.

   மௌரியனுக்குள் இப்படி ஒரு காதல் விஷயம் இருப்பதை இருவருமே நினைத்துப் பார்க்கவில்லை.

   என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் மௌனமாக இருந்தனர்.

   கோகுல் வேறு பயமுறுத்திவிட்டுப் போனது உறுத்திக் கொண்டுயிருந்தது.

   ஜானகியின் கண்களில் மட்டும் அவ்வப்போது கண்ணீர் கசிந்துக் கொண்டிருந்தது.

   மகனை எப்படி சரியாக்குவது என யோசித்தபடியே இரவு முழுவதும் இருவரும் உறங்காமலிருந்தனர்.

காலையில் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிக் காத்திருந்தது.




What’s your Reaction?
+1
14
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!