Serial Stories

ஊரெங்கும் பூ வாசனை-10

(10)

    “இந்தாய்யா…நில்லுய்யா….” வரப்பில் வேட்டியை மடித்துக் கட்டியபடியே நடந்துக் கொண்டிருந்த சுப்பைய்யாவின் பின்னால் அதே வரப்பில் ஓடிவந்தாள் மஞ்சளழகி.

   திரும்பிப் பார்த்த சுப்பைய்யா அட…பார்த்துப் புள்ள. வரப்பு பூரா ஒரே சேறாயிருக்கு. வழுக்கிட்டு வுழந்துடப் போறே” என்றான்.

    அவனருகே வந்து மூச்சு இரைக்க நின்றவள்” என் வாழ்க்கையிலேயே சேத்தை அள்ளிப் போட்டுட்டு…வரப்புல கெடக்கற சேத்தைப் பத்தி கவலைப்படறியா?”என்று சீறினாள். அவளுடைய கத்தலில் வயலில் மீனுக்காக நின்றிருந்த நாரைக் கூட்டம் ஜிவ்வென வானில் பறந்தன.

    “என்ன மஞ்சளு…என்னமோ பொடி வச்சு பேசறே?”

    “ஆமா…பொடி. இட்லி பொடி. மூக்குப் பொடி…யோவ்…என்னத்தைய்யா என் அத்த மவன்கிட்ட சொன்னே?”

    “நான் ஒண்ணும் சொல்லலியே.”

    “யோவ்…யோவ்…பொய் பேசாதைய்யா. நீ என்னமோ என்னைப் பத்தி சொல்லியிருக்கே. என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு ஊருக்குப் போயிட்டு”

     “என்னாது? உன்னை புடிக்கலைன்னு சொன்னானா? உன்னைப் போய்…யாருக்காவது புடிக்காம இருக்குமா? ஏன் புடிக்கலையாம்?”

    “நான் கருப்பாயிருக்கேனாம்”

    “அவன் மட்டும் என்ன பச்சைக்கிளி மாதிரி இருக்கானாமா?”

    “நானும் கருப்பாம் அவனும் கருப்பாம். கொழந்தை குட்டிக பொறந்தா எல்லாம் காக்கா குஞ்சுக மாதிரி இருக்குமாம். அதனால நீயும் சேப்பா ஒருத்தனைப் பாத்துக் கட்டிக்க. நானும் சேப்பா ஒருத்தியப் பாத்துக் கட்டிக்கறேன். நமக்கு செவப்பா புள்ளை பொறக்கலைன்னாலும் மாநிறத்திலயாவது பொறக்கும். நம்ம பரம்பரை கலரை நாமதான் மாத்தியமைக்கனும்னு சொல்லிட்டு காலையிலயே மொத பஸ்ஸ_க்குப் போயிட்டு.”

    “கடவுளே….அப்படியா சொன்னான் அவன்?”

     “சொல்லுய்யா…நீ தானே அவனுக்கு இப்படி சொல்லிக் கொடுத்தே. இல்லாட்டி அது அப்படி போகாதுய்யா. என் வாழ்க்கையில இப்படி மண்ணையள்ளி போட்டுட்டியேய்யா! உன் பண்ணையில மாடா ஒழச்சதுக்கு இதுதான் நீ தர்ற பரிசாய்யா?”

     “இதவிட பெரிய பரிசை நான் தர்றேன் மஞ்சளு. நீ சொன்ன மாதிரியே என் அப்பன் ஆத்தளை உன் வூடு ஏறி பொண்ணு கேட்க கூட்டியாறேன். ஏழைக்காத்த அம்மன் கோவில்ல எட்டுப்பட்டியையும் கூட்டி சோறு போட்டு உன் கழுத்துல தாலிக் கட்டறேன். நாளையிலேர்ந்து நீ வயலுக்கு வரவேண்டாம். வூட்டுலயிரு. வெயில்ல நின்னு நின்னுதான் நீ கருத்துப் போயிட்டே. வூட்டுல நாலு நாளு இருந்தேன்னு வச்சுக்க செவப்பாயிடுவே. நம்ம கல்யாணத்துக்கு உன் அத்த மவன் வருவான்ல. இவளையாடா நீ கருப்புன்னு சொன்னேன்னு நாக்கைப் புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேக்கறேன்.” சொல்லிவிட்டு விளையாட்டாக அவளுடைய கன்னத்தைத் தட்டிவிட்டு அவளைக் கடந்து போய் கொண்டேயிருந்தான்.

     மஞ்சளழகி சிலையாய் உறைந்தவளைப் போல் நின்றிருந்தாள்.

    வீட்டுப் படியேறும்போதே மனதிற்குள் ஒரு முடிவுடன்தான் ஏறினான் சுப்பைய்யா.

     மஞ்சளழகியை கல்யாணம் பண்ணிக்கப் போறதை சொல்லிடனும். அப்பா கண்டிப்பாக வாலறுந்த பல்லி கணக்கா குதிப்பாருதான். அதுக்கெல்லாம் பயப்படக் கூடாது. பணம் காசு கௌரவம்னு அடிக்க கூட வருவாரு. அதுக்கெல்லாம் அஞ்சக் கூடாது. நாட்டாம்மை வூட்டுக்கு நாத்து நடறவ மருமவளான்னு நாண்டுக்கிட்டு சாவப் போறேன்னு ஓடுவாரு.   அதுக்காகவெல்லாம் நான் முடிவை மாத்திக்க கூடாது.

மஞ்சளழகியைக் கட்டிக்கனும்னு நான் எவ்வளவு சிரமப்பட்டுக்கிட்டிருக்கேன்னு அவருக்கு எங்கத் தெரியப் போவுது. அந்த நீலமேகத்தை நேத்து கரவா கரைச்சு என் காதலை சொல்லி அவன் கால்ல வுழந்து கெஞ்சாதக் கொறையா கெஞ்சி என் காதலை வாழவிடு, மஞ்சளழகி இல்லன்னா நான் செத்துடுவேன்னு மெரட்டி…உன் அத்தப்பொண்ணுதானே…அவளை கட்டிக்கிட்டு நீ போயி கஞ்சிக்கும் கூழுக்கும் கஷ்டப்படத்தானே வைக்கப் போறே…அவ மகராணியா




வாழப்போறது உனக்குப் புடிக்காதான்னு அவனோட பாசத்தை தூண்டிவிட்டு… உனக்கு என்னா தேவைன்னாலும் சொல்லு செஞ்சித்தர்றேன், செவத்த காளை ரெண்டு வாங்கித்தாரேன். பால் மாடு ரெண்டு வாங்கித்தாரேன்…மளியக் கடை வேணுமின்னாலும் ஒண்ணு போட்டுத்தாரேன்னு ஆசைக்காட்டி அவனை சம்மதிக்க வச்சு விடிஞ்சதுமே மொத பஸ்ஸ_க்கு ஓட வச்சேன்…எனக்கு மூச்சு போய் மூச்சு வந்தது யாருக்குத் தெரியும்? எல்லாம் என்னோட மஞ்சளு எனக்கு வேணும்னுதானே…அப்பாரு ஏதாவது ஆட்டம் காட்டுனா அப்பறம் இல்ல இருக்கு…’ கங்கணம் கட்டிக்கொண்டவனாய் வீட்டுக்குள் வந்தவனை ஊஞ்சலில் அமர்ந்து வெற்றிலைப் போட்டுக் கொண்டிருந்த பொக்கிஷம்,

     “மவனே…வா இப்படி வந்து ஊஞ்ச பலகையில குந்து. உன்கிட்ட ஒரு விசயம் பேசனும்” என்றார்.

     “என்னா…?” என்றபடி அவருக்கு அருகே அமர்ந்தான்.

    “வடபாதி மாணிக்கம் தோப்பு தொரவை விக்கப் போறாராம். சரி வாங்கிப் போடலாமேன்னு வெலை வெரம் தோதுப் படுதான்னு வெசாரிக்கப் போனேன். அப்பத்தான் அவரு பொண்ணு ..பேரு பொன்னியோ என்னமோ அப்படித்தான் மாணிக்கம் கூப்பிட்டதா நாபகம். ஆமாம்… தண்ணி கொண்டார சொன்னாரு. பொண்ணு நம்ம ஏழைக்காத்த அம்மன் மாதிரியே தகதகன்னு மின்னுறா. அப்பத்தான் ஒரு யோசனை மனசுல ஒடுச்சு. மாணிக்கத்தோட தோப்புத் தொரவை பணம் காசு கொடுக்காமலேயே வாங்கிடலாம்னு.”

    “அதெப்படி…பணங்காசு கொடுக்காம வாங்கவே. கட்டி வச்சு பத்தரத்துல கையெழுத்து வாங்குவியா?”

    “ஆமாடா கட்டி வச்சுத்தான் வாங்கப்போறேன். மாணிக்கத்தை கட்டி வச்சு இல்ல. அவன் பொண்ணை உனக்கு கட்டி வச்சு…ஓசியிலேயே வாங்கப் போறேன்.”

    “யாரு…அந்த ஏழைக்காத்த அம்மனையா?”

     “ஏழைக்காத்த அம்மனை நீ கட்டிக்க முடியாதுடா. செவன் நெத்திக் கண்ணைத் தொறந்து எரிச்சுப்புடுவாரு. அந்த பொன்னியை…சொன்னேன்.”

    “உனக்கு தோப்புத்தானே வேணும். நீயே கட்டிக்க….”

   “அடேய்…அந்த புள்ளைக்கு இருவது வயசுதான்டா இருக்கும்”

    “அப்ப முப்பது வயசாயிருந்தா கட்டிப்பியா? ஆளைப் பாரு….எனக்கு பொன்னியும் வேணாம். காவேரியும் வேணாம். நீ அடுத்தவன் சொத்தை அபகரிக்க நான்தான் கெடைச்சேனா?”

    “அப்ப கல்யாணமே பண்ணிக்காம இருக்கப் போறியா?”

    “இருக்கலாம்தான். ஆனா…நீ சேத்து வச்ச சொத்தையெல்லாம் எனக்குப் பொறவு ஆள உனக்கு பேரப்புள்ளை வேணுமேன்னுதான் யோசிக்கறேன்.”

     “புத்தியிருந்தா சரி”

      “அதனாலதான் நாளைக்கு நாம பொண்ணு பாக்க போவோம்”

     “அப்படியா….அப்பன்னா மாணிக்கத்துக்கிட்ட சொல்லிடட்டா? வாசல்ல வான்கோழி வாங்கி உட்டுருக்கான்டா. சாடையா சொல்லிட்டம்ன்னா வான்கோழி பிரியாணி போட்டுடுவான்.”

     “உனக்கு கிண்ணி கோழி பிரியாணி கூட புடிக்குமில்லே…”

     “ஆமாடா. ஆனா அவன் வூட்ல கிண்ணி கோழி இல்லடா.”

     “மஞ்சளு வூட்ல இருக்கு. அவ நல்லா வக்கனையா சமைப்பா. நாத்து நட வரும்போது அவளோட தூக்குல இருக்கறதை நிறைய தடவை திருடித் தின்னுருக்கேன். கிண்ணி கோழி கொழம்பு வைக்க சொன்னா நல்லா வப்பா”

     “அவ எதுக்குடா நமக்காக கிண்ணி கோழி கொழம்பு வைக்கனும்?”

     “அவ வூட்டுக்குத்தானே நாம நாளைக்கு பொண்ணு பாக்கப் போறோம்”

     “எலேய்….” என கத்தியவராய் ஊஞ்சலிலிருந்து குதித்தார்.




   “என்ன….?” என அவனும் எகிறினான் ஊஞ்சலிலிருந்து இறங்கி.

என்னமோ ஏதோ என உள்ளிருந்து அம்மா தேவகி ஓடிவந்தாள்.

    அப்பாரும் மகனும் அடித்துக் கொள்ளாதக் குறையாக சண்டைக் கோழிகளாய் காலில் கத்திக் கட்டிக் கொண்டு குதித்தனர்.

     “எலேய்…எலேய்…என்னடா சொல்றே? அவ வூட்டுப் பக்கம் அடிக்கடி நீ போறேன்னு கேள்விப்பட்டேன். ஏதோ வயசுக் கோளாறுன்னு நினைச்சேன். ஆனா…அவளை பொண்டாட்டியாவே ஆக்கிக்க முடிவுப் பண்ணிட்டியா? வெட்கமாயில்லை உனக்கு? நம்ம தராதரம் என்ன? அந்தஸ்து என்ன? ஏன்டா உனக்கு இப்படி புத்தி போச்சுது? நாத்து நடறவளை நடுவூட்ல கொண்டாந்து வைக்க நீ நினைச்சின்னா அதுக்கு நான் ஒத்துக்க  மாட்டேன். அவ மேல ஒனக்கு ஆசையிருந்தா அப்பப்ப போயிட்டு வா. அஞ்சோ பத்தோ கொடுத்துட்டு வா. அதை வுட்டுட்டு…”

     “அப்பா…என்ன பேசறோம்னு புரிஞ்சுக்கிட்டுப் பேசுங்க. அப்பப்ப அவ வூட்டுக்குப் போயிட்டு வர்றதுக்கு நான் ஒண்ணும் அவ்வளவு கேவலமானவன் இல்லை. அவளும் அந்த மாதிரிப் பொண்ணு இல்லை. நீ சொன்னதை மட்டும் அவ கேட்டிருந்தாள்ன்னா நாட்டாம்மைன்னுக் கூடப் பாக்க மாட்டா. வெட்டி பொலிப் போட்டுடுவா”

     “போடுவாடா. போடுவா. நாம அளக்கற நெல்லை வாங்கித் தின்னுப்புட்டு என்னையே வெட்டுவா. அவளை மருமவளா ஏத்துக்கிட்டா இந்த எட்டுப்பட்டியும் என்னை பத்துக்காசுக்கு மதிக்க மாட்டானுங்க. எந்த பஞ்சாயத்திலேயும் போயி மீசை முறுக்கி நான் குந்த முடியாது. என் உசிரே போனாலும் இது நடக்காது.”

     பொக்கிஷம் சுடும் புகையாய் வார்த்தைகளைக் கக்கினார்.

     தேவகி அரண்டுப் போனவளாய் மகனைப் பார்த்தாள்.

        “அப்பா…நான் அவளுக்கு வாக்கு கொடுத்துட்டேன். அப்பன் ஆத்தாளோட வந்து பொண்ணு கேக்கறதா. எட்டுப்பட்டிக்கும் சொல்லி ஏழைகாத்த அம்மன் கோவில்ல வச்சு தாலிக்கட்டி சோறு போடறதா. கொடுத்த

வாக்கை என்னால மீற முடியாது. நாளைக்கு அவளைப் போய் பொண்ணு கேட்கப்போறோம்.” திட்டவட்டமாய் சொன்ன மகனை திகிலாய் பார்த்தாள் தேவகி.

     “ச்சீ…ச்சீ…அவ குடிசையில நொழைஞ்சு என்னை பொண்ணுக் கேட்க சொல்றியா? என்னா இளப்பம்டா உனக்கு?”

    துண்டை எடுத்து உதறினார்.

      “நீ மட்டும் எனக்கு மஞ்சளை கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா நான் இந்த ஊர்லயே இருக்க மாட்டேன். அவளை இழுத்துக்கிட்டு மெட்ராஸ_ப் பக்கம் ஒடிடுடுவேன். எங்க இருக்கேன்னு கூட சொல்ல மாட்டேன். செத்து கித்துக் கிடந்தேன்னு வச்சுக்க உனக்கு கொள்ளிப் போட சொல்லக் கூட என் அட்ரஸ் கெடைக்காது. அனாதை பொணமாத்தான் நீ போவனும்.”

  மகன் எறிந்த வார்த்தைகள் ஈட்டியாய் அவரை வந்து தாக்கின.

      “நீ சேத்து வச்சிருக்கியே சொத்து அத்தனையையும் உனக்கு பிறகு ஆள நான் இருக்க மாட்டேன். இந்த ஊரு சனம் அத்தனையும் கூடிப் பேசி சொத்தை பங்குப் போட்டுக்கும்.”

    அவர் சிலையாக மாறி நிற்க தேவகி ஓடிவந்து அவரிடம் கையெடுத்துக் கும்பிட்டாள்.

      “சாமி…சாமி…என் புள்ளை ஊரை விட்டு ஓடறமாதிரி பண்ணிடாதைய்யா. ஒத்த புள்ளை பெத்து வச்சிருக்கோம். ஊரை அடைச்சு சொத்து சொகம் சேர்த்து வச்சிருக்கியே…வரப்புல உட்காந்தவன், வாய்க்கால்ல கழுவுனவன்…வாசலோட போறவன்னு கண்டவனும் தின்னுப் பாக்கவா சேத்து வச்சிருக்க? என் புள்ளை போயிட்டா என் உசுரும் போயிடும். அவனுக்கு யாரு இஷ்டமோ அவளையே கட்டிவச்சிடு சாமி…”

    படக்கென காலில் விழுந்து கட்டிக் கொண்டு அழுதாள்.

    பாவம்…பொக்கிஷம் ஆடித்தான் போய்விட்டார். அதற்கு மேல் சிலிர்த்துக் கொண்டு பேச அவரிடம் வார்த்தைகள் இல்லை.

சம்மதித்தார்.




What’s your Reaction?
+1
22
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!