Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-23

( 23 )

கீர்த்திவாசனுடன் பேசிவிட்டு உள்ளே வந்த யதுநந்தன் மிகுந்த கோபத்துடன் இருப்பதை அவனது இறுக்கமான முகம் காட்டியது .

சும்மா லேப்டாப்பை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும் அவன் அதில் மனம் பதித்து வேலை எதுவும் பார்க்கவில்லை என்பது தெரிந்தது .

இப்போது அவனருகில் நெருங்கவே முகிலினிக்கும் பயம்மாக இருந்தது .அதிலும் கடந்த ஒரு வாரமாக இருவருக்குள்ளும் சரியான பேச்சு வார்த்தை கூட கிடையாது .இப்போது போய் எப்படி பேசுவது ?…

துணிவை வரவைத்துக் கொண்டு ” அவர் ..கீர்த்திவாசன் என்ன விசயமாக உங்களை பார்க்க வந்தார் ? ” என்றாள் .

வேகமாக திரும்பி அவளை உறுத்தபடி ” உனக்கு அவனை எப்படி தெரியும் ? ” என்றான் .

” அது ..கோவிலுக்கு போன போது …என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ” தயங்கிக் கொண்டே பதிலளித்தாள் .

“வேறென்ன சொன்னான் …?” இதைக் கேட்கும் போது யதுநந்தனின் முகம் மேலும் இறுகியது .

மேலண்ணத்தில் ஒட்டிக் கொண் ட நாக்கினை கஷ்டப்பட்டு பிரித்து ” வேறு ஒன்றும் கூறவில்லை .சும்மா அறிமுகம் தான் .நான் ஒரு ஆர்வத்தில் கேட்டேன் ” தடுமாறியபடி பதில் கூறினாள் .

சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் எதிரே பார்த்தபடி இறுகியே அமர்ந்திருந்தான் .தனக்கு பதில் கிடைக்காது என்ற முடிவுக்கு முகிலினி வந்த போது வாய் திறந்தான் யதுநந்தன் .

” எங்கள் தாத்தா இருவரும் பங்கு பிரிப்பதற்கு முன்பு ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்தி வந்தனர் .நாளடைவில் இந்த ஊரில் அது பெரிய பள்ளியாகி விட்டது .பங்கு பிரிக்கும்போது சரஸ்வதியை பிரிக்க வேண்டாமென்று என் தாத்தா அந்த பள்ளியை அவர்களுக்கே விட்டுக் கொடுத்து விட்டார் .

தாத்தாவிற்கு பிறகு , அவர் மகன் கைகளுக்கு போய் , இப்போது இந்த அறிவு கெட்டவன் கைகளில்தான் பள்ளி நிர்வாகம் இருக்கிறது .இவன் ஒழுங்காக அதனை பார்க்காமல் , ஊர் சுற்றியதால் வந்த பிரச்சினை இது .




இந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வின் போது பள்ளியில் தேர்வு கண்காணிப்பதற்கு வந்த ஆசிரியர் ஒருவர் கேள்வித்தாளை தனது போனில் போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் வேறொருவருக்கு அனுப்பியுள்ளார் .இந்த ஒழுங்கீனம் வெளிவந்து அரசாங்கம் வரை போய்விட்டது .

இனி பள்ளிக்கு கெட்ட பெயராயிற்றே .மேலும் பள்ளியின் உரிமம் கூட பறிக்கப்படாலாமென தகவல் வந்துள்ளது .

இவன் ” இப்போது நான் என்ன செய்யன்னு ? ” கேட்டுக்கிட்டு என்கிட்டே வந்து நிற்கிறான் .முட்டாள் ” ஆத்திரத்துடன் மேஜையில் ஓங்கி குத்தினான் யதுநந்தன் .உடனே ” உஷ் ” என்ற ஒலியுடன் கைகளை பிடித்தான் .

” என்னவாயிற்று ? ” பதறியபடி வந்து அவன் கைகளை பிடித்து பார்த்து ஆராய்ந்தாள் முகிலினி .மேஜையில் இருந்த ஏதோ ஒரு குண்டூசியோ என்னவோ கைகளில் குத்திவிட்டது போலும் .சிறு ரத்த முத்து ஒன்று திரண்டு நின்றது யதுநந்தன் கைகளில் .

” ஐயோ …ரத்தம் ” என குரல் கொடுத்த முகிலினி அவசரமாக அவன் கை விரல்களை தன் வாயில் வைத்துக் கொண்டாள் .அடுத்த நொடியே யதுநந்தனின் ஆழ்ந்த அணைப்பில் அவன் மடி மீது இருந்தாள் .

” ம் …விடுங்க …” என்ற அவளின் வார்த்தைகளை முடிக்க அவள் இதழ்களுக்கு சுதந்திரம் அளிக்கவில்லை யதுநந்தன் .

நீண்ட அந்த முத்தத்திற்கு பிறகு நெகிழ்ந்து கணவன் தோள்களில் சரிந்தபடி ” இந்த விசயத்தில் கீர்த்திவாசனுக்கு உதவவில்லை என்றாள் நம் குடும்பத்திற்கும் தானே கெட்ட பெயர் “, என கேட்டாள் .

” ம்….ஆமாம் அதற்காகவாது அதனை சரி பண்ணத்தான் வேண்டும் ” மனமின்றி கூறினான் யதுநந்தன் .

“ஆனால் அவர்கள் குடும்பம் நடந்து கொண்ட முறைக்கு இதனை செய்ய எனக்கு துளியும் விருப்பமில்லை ” என்றான் கசந்த குரலில் .

” நடந்த விசயங்கள் எதற்கும் தன் குடும்பம் காரணமில்லை என்கிறார் அவர் ” மெல்ல சொன்னாள் முகிலினி .

” அவன் சொன்னானென நீயும் அதனை நம்பினாயாக்கும் ? ” கோபத்துடன் அவள் தோள்களை பற்றி உலுக்கினான் .

” இல்லை நம்பவில்லை .ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ ? என யோசித்து பார்த்தேன் அவ்வளவுதான் ” என்றாள் .

தனது கோபத்தை அடக்க இதழ் கடித்தபடி அமர்ந்திருந்த கணவனின் கன்னத்தை மெல்ல வருடியபடி ” நீங்களும் அப்படியும் கொஞ்சம் யோசித்து பாருங்களேன் யது ” என்றாள் மென்மையாக .

யோசிக்க தொடங்கினான் யதுநந்தன் .

வாழைப்பூவை பிரித்தெடுக்கும் முறையை முத்தரசிக்கு விளக்கிக் கொண்டிருந்தாள் முகிலினி .” இதோ இப்படி பிரித்தெடுக்கனும் .இந்த நடு நரம்பை நீக்கிடனும் .சுற்றி உரித்து பிரித்தெடுத்து விட்டு கடைசியில் கொஞ்சம் தண்டோடு சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும் .இதனை மொட்டு என்று சொல்வோம் ” என்று வாழைப்பூ குழம்பு வைக்கும் முறையை தொடர்ந்து கூறினாள் .

“என்னம்மா நீ சமையலில் பெரிய கில்லாடி  போலவே “அருகில் அமர்ந்து  அவள் விவரணைகளை கேட்டுக் கொண்டிருந்த சந்திரவதனா சிரித்தபடி கேட்டாள் .

” நானில்லை பெரியம்மா .என் அம்மாதான் பெரிய சமையல் கில்லாடி .இந்த வாழைப்பூ குழம்பு அவர்களின் ஸ்பெஷல் .இதை யதுநந்தன் எங்கள் வீட்டில் தங்கியிருக்கும் போது மிகவும் விரும்பி சாப்பிடுவார் .அதனால்தான் இன்றைய விருந்தில் இந்த அயிட்டத்தையும் சேர்க்கலாமென செய்து கொண்டிருக்கிறேன் ” என்றாள் முகிலினி .

” ஓஹோ , அப்போ விருந்தாள்களுக்கு செய்வதாக கூறிக்கொண்டு , உன் புருசனுக்கு சமைக்கிறாயென்று சொல் ” என்று கிண்டலடித்தவள் ” ஏன்மா இன்று விருந்திற்கு யார் வரப் போவது ? ” என்று கேட்டாள் .

” இந்த மாவட்ட கலெக்டர் பெரியம்மா ” பெருமையாக உரைத்தாள் முகிலினி .

“இவரும் , கலெக்டரும் ஒன்றாக படித்தவர்களாம் .இப்போது இந்த பக்கம் ஏதோ வேலையிருப்பதால் அதற்காக அவர் வருகிறாராம் .அவருக்கு நம் வீட்டிலேயே விருந்து கொடுப்பதுதானே மரியாதை .அத்தோடு அப்போது நம் பள்ளிக்கூடம் விசயமும் பேச போவதாக இவர் என்னிடம் கூறினார் ” சமையலை கவனித்தபடி சந்திரவதனாவின் கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருந்தாள் முகிலினி .

” எனக்கென்னவோ இன்னமும் அந்த பள்ளிக்கூட விசயத்தில் நந்து அவர்களுக்கு உதவுவது துப்புரவாக பிடிக்கவில்லை ” என்றாள் சந்திரவதனா .

” ஏய் முகில் சமையல் முடிந்ததா ? ” கேட்டபடி உள்ளே நுழைந்தான் யதுநந்தன் .




” நந்து இது என்ன ஆச்சரியம் ?
இந்நேரத்திற்கு வந்து நிற்கிறாய் ” என்றாள் சந்திரவதனா .

” கொஞ்ச “…நேரம் கிடைத்தது அத்தை .அதனால் வந்துவிட்டேன் “அரத்தத்துடன் கூறிவிட்டு முகிலினியை பார்த்து கண் சிமிட்டினான் .

கொஞ்ச நேரமாம் …குறும்பை பார் .கணவனை செல்லமாக முறைத்தாள் முகிலினி .அவன் இதழ்களை குவித்தான் அவளை நோக்கி .கண்களால் சந்திரவதனாவை சுட்டிவிட்டு அடுப்பிடம் திரும்பிக் கொண்டாள்  முகிலினி .

மெல்ல நடந்து முகிலினியின் பின் வந்து நின்றவன் அவள் அடுப்பில் எதையோ கிளறியபடி இருக்க , அவளின் பின்கழுத்தில் தன் சூடான இதழ்களை பதித்தான் .திடுக்கிட்டு திரும்பிய முகிலினி சத்தமின்றியே அவனை தள்ள முயல , அவன் போக மறுக்க ….

” நந்து …முகிலினி ….எனக்கு கண்தான் தெரியாது .காது நன்றாக கேட்கும் ” என்ற சந்திரவதனாவின் கிண்டல் குரலில் அசடு வழிந்தனர் இருவரும் .

” ஒரு போன் போட வேண்டும் …” என்றபடி தன் போனை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டான் யதுநந்தன் .சந்திரவதனாவும் சிறிது ஓய்வெடுக்க போவதாக கூறி சென்று விட்டாள்.

கணவனின் முன்தின ஆழ்ந்த இதழணைப்பையும் , இன்றைய அவசர இதழ் பதிப்பையும் மனதால் சுவைத்தபடி சமையலை முடித்தாள் முகிலினி .

எல்லா சமையல் வகைகளும் இன்று மிக நன்றாக அமைந்திருப்பதாக அவளுக்கு தோன்றியது .எல்லாவற்றையும் மேஜையில் அழகாக அடுக்க சொல்லி விட்டு மாடியில் தங்கள் அறைக்கு சென்று தனது தோற்றத்தையும் சீராக்கி வந்தாள் .

வாசலில் சிறு பரபரப்பு .கலெக்டர் வந்து விட்டார் போலும் .எட்டி பார்த்த போது முதலில் ஒரு போலீஸ் வாகனம் வந்தது .தொடர்ந்து வந்த காரிலிருந்து இறங்கிய உருவத்தின் கால்கள் மட்டுமே முகிலினிக்கு தெரிந்தன.

ஏனெனில் கலெக்டருக்கு மாலையிடுவதாக கூறிக் கொண்டு முழுவதுமாக அவரை மறைத்து கொண்டு  நின்றாள் காருண்யா .இவள் ஏன் இன்று ஆயிரம் வாட்ஸ் ஆக ஜொலிக்கிறாள் .அவளை யோசனையுடன் பார்த்தாள.
முகிலினி .

அருகில் நின்றிருந்த யதுநந்தன் முகத்திலும் அதே பரவசம் தெரிந்தது .இருவருமாக ஆளுக்கொரு பக்கமாக நின்றபடி கலெக்டரை அழைத்து வந்தனர் .
இப்போது கலெக்டர் தெளிவாக தெரிய ஆவலுடன அவர் முகத்தை ஏறிட்டு பார்த்த முகிலினி ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள் .

அது …அவர்….அவள் …அந்த கலெக்டர் ஒரு பெண் .




What’s your Reaction?
+1
23
+1
12
+1
3
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!