Serial Stories எனை ஆளும் நிரந்தரா

எனை ஆளும் நிரந்தரா-13

13

“இந்த பாரம்பரியங்களும் சட்டதிட்டங்களும் நம்முடைய வசதிக்கேற்ப நாமே வடிவமைத்துக் கொண்டதுதானே? வயதில் குறைந்தவளைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் ஆண்களின் சில வசதிகளுக்காக  உருவாக்கப்பட்ட  சட்டங்களில் ஒன்றுதான். நம் பாரம்பரிய சட்டமென்று பழமை பேசுவீர்களானால்,இதோ நான் உங்கள் மனைவியின் அம்மா, ஒரே மகளை மணம் முடித்துக் கொடுத்ததும்,கணவரின் மறைவுக்கு பிறகு  என்னுடைய வீட்டிற்குள்தானே முடங்கி கிடந்திருக்க வேண்டும்.ஆனால் அந்த உலக நடப்பை தாண்டி  என் மகளுக்காக  உங்கள் வீட்டிற்கே வந்து வாழவில்லையா?”

” இது நாள் வரை இங்கே எனக்கு எந்த மரியாதை குறைவும் ஏற்பட்டதில்லையே! இதோ 30 வருடங்களுக்கு பிறகு இன்றுதான் நாம் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசி இருக்கிறோம். இது பயமோ வெறுப்போ கிடையாது. நம் இருவருக்கும் பரஸ்பரம் ஒரு மரியாதை. என் மகளை சந்தோசமாக வைத்திருக்கும் மருமகன் எனும் வாஞ்சை எனக்கும், இந்த அற்புதமான பெண்ணை பெற்று எனக்கு மனைவியாக தந்தவர் என்ற மதிப்பு உங்களுக்கும். பிறரால் புரிந்து கொள்ள முடியாத இந்த  பாசப்பிணைப்பை மகள் வீட்டோடு போய் உட்கார்ந்து கொண்டாயே, என்று இப்போதும் குறை பேசும் என் பிறந்த வீட்டு சொந்தங்களுக்கு புரிய வைக்க முடியாது”

” அதனால்தான் எனக்கு என் மகளும் மருமகனும் முக்கியம் என்று என் சொந்தங்களை விலக்கி வாழும் முடிவெடுத்தேன். இப்போது நம் குழந்தைகள் அவர்கள் வாழ்க்கைக்கான முடிவை துணிந்து எடுத்துள்ளார்கள்.அதற்கு எல்லாம் தெரிந்த நீங்களே தடையாக இருப்பீர்களா?”

பாட்டி பேசப் பேச மணிவண்ணன் தளர்ந்து அமர்ந்தார்.”நம்மை விட இந்தக் கால பசங்க ரொம்ப தெளிவு மாப்பிள்ளை.பெரியவர்கள் நாம், ஒன்று அவர்களுடன் ஒத்து கை கோர்த்துக் கொள்ள வேண்டும்  அல்லது எனக்கு சரி வராதுப்பா என்று ஒதுங்கி விட வேண்டும்.சிவகடாட்சம் ஒதுங்கிக் கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறான்.நீங்கள் என்ன முடிவெடுக்க போகிறீர்கள்?”

“நா..நான் கடாட்சத்துடன் ஒத்து போய் விடுகிறேனத்தை” மணிவண்ணன் சொல்ல,”அடப் பாருங்கம்மா அதிசயத்தை! கடாட்சம் அண்ணாவோடு இவர், கொட்டபாக்கன் வகையறா தளபதி மணிவண்ணன் ஒத்துப் போகிறாராம்” சகுந்தலா கிண்டல் பேச மனைவியை முறைக்க முயன்றும் முடியாமல் பொங்கி வந்த சிரிப்பை அடக்காமல் வழிய விட ஆரம்பித்தார் மணிவண்ணன்.

நடந்த சம்பவங்களை ஆச்சரியமாக பார்த்திருந்தாள் மானசி்.ஆக அவளுக்கும் சிவநடராஜனுக்கும் திருமணம் நடக்க போகிறதா? தன்னைத் தானே பத்தாவது தடவையாக கிள்ளிப் பார்த்துக் கொண்டிருந்த போது ,போனில் வந்தான் சிவநடராஜன்.

” போதும் உடம்பெல்லாம் தடுப்பு விழுந்து விட போகிறது “

ஞே என விழித்தாள்.என் கிள்ளல் இவனுக்கு எப்படி தெரியும்? பயத்துடன் சுற்றி முற்றி பார்த்தாள்.

“கேமெராவெல்லாம் வைக்கவில்லை.ஒரு ஊகம்தான்.மானு நமது திருமண ஏற்பாடுகள் நகைகள்,துணிமணிகள் எடுக்க என உன் அண்ணனையே அனுப்பு “




“நீங்கள் உங்கள் அக்காவை அனுப்புவீர்களாக்கும்”

“நம் திருமண நோக்கம் உனக்கு தெரியும்தானே?”

“ம்…ஆனால் உங்கள் அக்காவை எப்படி இங்கேயே வர வைத்தீர்கள் ?”

” சிம்பிள் அப்பாவுடன் வெட்டி வம்பிழுத்து சண்டை போட்டாயிற்று.இடையில் அக்காவிடம் என் உயிர் காதல் என்ற புலம்பல்.இப்போதுதான் உன் நிலைமை புரிகிறது,உனக்கும் இப்படித்தான் இருந்ததா என்று அவளது காதல் உணர்வை தூண்டி விடும் வசனங்கள்.அக்காவை அவள் காதல் காலங்களுக்குள் நுழைத்து விட்டு என் காதலை காப்பாற்றேன் என்ற கெஞ்சல்.அவ்வளவுதான் அக்கா தம்பியின் காதலையாவது சேர்த்து வைப்போமென பெண் புலியாக கிளம்பி விட்டாள்”

மானசி பேச்சின்றி இருக்க,”என்ன மானு நான் சாதித்து விட்டேன்தானே?”சீண்டினான்.

“ம்க்கும் பெரிய சாதனைதான்.எவ்வளவு பொய்கள்?”

“என்ன பொய்கள்?”

“வந்து..இ..இந்த காதலெல்லாம் பொய்தானே?”

“அப்படியா? நாம் காதலிக்கவே இல்லையா மானு?”

அவன் கேள்வியில் அவளுக்கு மூச்சடைத்தது.

“இ…இல்லை.நா…நான் இல்லை”

“ஆனால்…நான்” என்றவன் நிறுத்தி அவளது இதயத்தை துடிக்க வைத்துவிட்டு” எப்படியும் நாம் காதலித்தேயாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.அதனால் சீக்கிரமே என்னை காதலிக்க பயின்று கொள்” அதிகாரம் கொப்பளிக்க சொல்லி விட்டு போனை வைத்தான்.

இப்படி கட்டாயப்படுத்தி வருவதா காதல்? கரித்த கண்ணோரங்களை கட்டுப்படுத்தினாள்.

அவளை காதலிக்கும்படி கட்டளையிட்டு விட்டாலும் சிவ நடராஜன்  தன் வரையில் அதற்கான ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை என்றே மானசிக்கு தோன்றியது.

“உன்னுடைய நிச்சயப்பட்டு என்ன கலர் அக்கா?” இவர்கள் நிச்சயதார்த்தத்திற்காக பட்டெடுக்க வந்த இடத்தில் அக்காவின் பழைய நினைவுகளை தூண்டிக் கொண்டிருந்தான்.

சிவஜோதி தம்பியை முறைத்தாள். “எங்களுக்கு எங்கே நடந்தது நிச்சயதார்த்தம்?”




” மறந்துட்டேன்” ஞாபக மறதி போல் தன் தலையில் தட்டிக் கொண்டபடி வெற்றிவேலனை பார்க்க, அவன் “இப்போது உனக்கு ஒரு பட்டுச் சேலை எடுத்துக் கொள்ளேன் ஜோதி. பணம் நான் கொடுத்து விடுகிறேன் என்றான்”

“ஏன் என்னிடம் பணம் இல்லை என்று நினைத்தீர்களா?” சீறினாள் சிவஜோதி.

” அப்படி இல்லைம்மா நிச்சயப்பட்டு என்பது மாப்பிள்ளை வீட்டினர் எடுத்து தருவது, அதனால்தான் நான் தருவதாக சொன்னேன்”

” நம்முடைய திருமணமே பிழை என்கிறேன். இதில் திரும்பவும் நிச்சயத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமா? ஒன்றும் தேவையில்லை, பேசாமல் இருங்கள்” பளிச்சென கண்முன் விரிந்து கிடந்த புடவைகளை புரட்ட ஆரம்பித்தாள்.

“இந்த லெமன் கிரீன் எப்படி இருக்கிறது?” சிவஜோதி எடுத்து காட்டிய பச்சை பட்டு மானசிக்கு பிடிக்காமல் போனது.

” எனக்கு இந்த பிங்க் தான் பிடித்திருக்கிறது” ஒரு புடவையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்.

“ரொம்ப காடி…”என்றவள் தொடர்ந்து பட்டிக்காடு என்ற ரீதியில் ஏதோ முணுமுணுக்க,

வெகுண்டெழப் போன மானசியின் தோளில் கை வைத்து அழுத்தினான் சிவநடராஜன்.

” அண்ணி நாத்தனார் சண்டை அப்புறம்.இப்போது நாம் எடுத்த வேலையை முடிப்போம்” குனிந்து காதுக்குள் பேசியவனின் மூச்சுக் காற்று பின் கழுத்தை குறுகுறுக்க நகர்ந்து அமர்ந்து கொண்டாள் மானசி்.

“இதை அணிந்து பார்க்கிறீர்களா மேடம்?” கடை பணியாள் பெண் கேட்க,மானசி தயாராக “இந்த சேலையை இவர்களுக்கு கட்டி காட்டுங்கள்” வெற்றிவேலன் லெமன் யெல்லோ புடவையை சிவஜோதி மேல் போர்த்தினான்.

“வேண்டாமென்றேனே…” அவள் முறைக்க,”நான் வாங்க சொல்லவில்லையே” கைகளை விரித்தான்.

இரு பெண்களும் அவர்கள் விருப்ப புடவையோடு கண்ணாடி முன் நின்ற போது,ஆண்களின் கண்களில் மின்னல் தெறித்தது.

“கல்யாணப்பெண் யாரென்று தெரியவில்லை” மானசி களைந்த பின்னும் அவிழ்க்க மனமில்லாது இன்னமும் கண்ணாடி பார்த்து நின்ற சிவஜோதியை பார்த்து முகம் சுளித்தாள்.

“இருவரும்தான் மானு.அவர்கள் திருமணம் சொந்தங்களின்றி இது போன்ற சம்பிரதாயங்களின்றி நடந்ததை மறந்து விடாதே”

சிறு இளக்கம் வந்தாலும் சிவ நடராஜனின் பேச்சில் மானசிக்கு முழு ஒப்புதல் இல்லை.அவளறிந்த வரை சிவஜோதிக்கு இது போன்ற சாதாரண விசயங்களில் ஆர்வம் இருக்குமென தோன்றவில்லை.ஆனால் வெற்றிவேலன் அந்த சேலைக்கும் பில் போட்டு பணம் கொடுத்த போது சிவஜோதி மௌனம் சாதித்ததை ஆச்சரியமாக பார்த்தாள்.

“அக்கா சாதாரண பெண்தான் மானு.வாழ்வில் பெரிய அளவில் சாதிக்கும் லட்சியம் வைத்திருந்தாலும்,அவளுக்கும் சராசரி ஆசைகள் உண்டு”

காரில் வீடு திரும்பும் போது சிவ நடராஜன் சொல்ல,அவன் பேச்சில் அரை கவனம் வைத்திருந்தாள் மானசி.அதை சொல்வதற்கு இவன் எதற்காக என் தோளை உரசியபடி அமர்ந்திருக்கிறான் என யோசித்துக் கொண்டிருந்தாள்.

“நிச்சய புடவையை உங்கள் பாட்டியிடம் காட்டி விட்டு போகிறோம் வெற்றி” சிவ நடராஜன் சொல்ல கார் மானசி வீடு நோக்கி போனது.

மணிவண்ணன் ஒதுங்கிக் கொள்ள,பாட்டியும்,சகுந்தலாவும் புடவைகளை பிரித்து பார்த்து சந்தோசப்பட்டனர்.

“உன் கலருக்கு இந்த புடவை பொருத்தமாக இருக்கும் ஜோதிம்மா.நிச்சயத்தப்போ இதையே கட்டிக்கோ” சகுந்தலா சொல்ல லேசாக தலையசைத்தவளை எரிச்சலாக பார்த்தாள் மானசி.மாமியாருக்கு கொஞ்சம் மரியாதை தர வேண்டாமா? மனத் தாங்கலுடன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டவளை பின் தெடர்ந்தான் சிவ நடராஜன்.




What’s your Reaction?
+1
50
+1
21
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!