Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-21

(21)

அவ்வளவு நேரம் பனிமலையாக குளிர்ச்சியை வாரிக் கொட்டிக்  கொண்டிருந்த அந்த நீச்சல்குளம் இப்போது பாலையாக மாறி அனலடித்தது யதுநந்தனுக்கு.

ராட்சசி கொஞ்சமாவது என் மனதை புரிந்து கொள்கிறாளா ? மனதிற்குள் மனைவியை திட்டியபடி சிறிது  நேரம் நீந்தியபடி இருந்தான் .பின் வெளியேறி அறைக்கு வந்து உடை மாற்றியவனுக்கு உடனே முகிலினியை காண வேண்டும் போல் இருக்க சந்திரவதனாவின் அறையை நோக்கி நடந்தான்

அறையினுள்  நுழைய முயன்ற போது ” நீங்கள் ஓய்வெடுங்கள் பெரியம்மா .நான் ஏஸி போடுறேன் ” என்றபடி சுவிட்ச் போர்டுக்கு நடக்கும் முகிலினி தென்பட்டாள் .

போட்டுவிட்டு வரட்டும்..அவளை அழைத்துக் கொண்டு சாப்பிட செல்லலாம் .பிறகு வெளியே எங்கேயாவது கூட்டி செல்ல வேண்டும் .பாவம் வந்ததிலிருந்தே வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறாள் .என்று எண்ணியபடி மென் நடையுடன் நடக்கும் மனைவியை ரசித்தபடி நின்றிருந்தான் .

சுவிட்ச்சை தொட்டவுடன் முகிலினியின் மாறுதல் தெரிந்துவிட கணமும் தாமதியாமல் பூ ஜாடி வைப்பதற்கென அருகிலிருந்த மரத்தாங்கியை எடுத்து வேகமாக முகிலினியை தட்டி  கீழே தள்ளினான் .

முகிலினி மின்சாரம் வாங்கியது அதிகபட்சம் முப்பது நொடிகள் இருக்கலாம் .அதற்குள் உடல் முழுவதும் மரத்து போனது போல் ஆகி பற்கள் கிட்டி உதடு கோணிக்கொண்டது .சந்திரவதனா ” ஐய்யோ என்னம்மா ஆச்சு” என்று  அலறியபடி அருகில் வந்தாள் .

யதுநந்தன் தனது போனில் டாக்டரை  அழைத்தான் .இயல்பான உடல்நிலைக்கு முகிலினி திரும்ப ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது .
அருகிலேயே அமர்ந்திருந்தான் யதுநந்தன் .

” இப்போ எப்படிடா இருக்கு ? “, லேசான பதட்டத்துடன் கைகளை பற்றிக்கொண்டான் .

” ம் ” தலையாட்டினாள் முகிலினி .அவள் தலையை வருடியபடி அருகில் அமர்ந்த யதுநந்தனிடம் குனிந்து மெல்லிய குரலில் ” நந்து முகிலினியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் .நீ போய் முதலில் இந்த கோளாறுக்கெல்லாம் காரணமானவர்களை கண்டுபிடி”  என்றாள் சௌம்யா .

இப்போது யதுநந்தனின் முகத்தில் ஆத்திரம் தெரிந்தது .” அவன் மட்டும் என் கையில் மாட்டினானென்றால் ….” பற்கள் நெறிபடும் சத்தம் முகிலினி வரை கேட்டது .அவளுக்கே மெல்லிய குளிரெடுத்தது .

” விடு நந்து …இவ்வளவு டென்சன் வேண்டாம் .கொஞ்சம் நிதானமாக விசாரி “அவன் தோள்களை சமாதானமாக  தட்டினாள் சந்திரவதனா .கண்களால் முகிலினியை வருடி ஆறுதல் அளித்தபடியே அங்கிருந்து நகர்ந்தான் யாதுநந்தன் .

” இப்போ எப்படிம்மா இருக்கு ?” அவள் அருகில் அமர்ந்தபடி தலை வருடினாள் சந்திரவதனா .மறுபுறம் அமர்ந்து ஆதரவாக கைகளை பற்றிக் கொண்டாள் சௌம்யா .ஏனோ இப்போது தனிமையே வேண்டும் போல் முகிலினிக்கு தோன்றியது .

” பரவாயில்லை பெரியம்மா நான் கொஞ்சம் தூங்குறேன் ” என்று கண்களை மூடிக்கொண்டாள் .

” அம்மா முகிலினி ஓய்வெடுக்கட்டும் .நாம் போகலாம் ” என சௌம்யா கூற இருவரும் வெளியேறினர் .அவர்கள் போனதும் சிறிது நேரம் படுத்திருந்த முகிலினிக்கு பற்களை கடித்தபடி விட்டால் காரணகர்த்தாவை அறைந்தே விடுவது போன்ற யதுநந்தனின் கோபம் நினைவு வந்தது .

ஆத்திரத்தில் யாரையும் ஏதாவது செய்து விடுவாரோ என்னவோ ? எதற்கும் ஒருமுறை போய் பார்த்து விடுவோம் என எண்ணி மெல்ல கட்டிலுலிருந்து இறங்கி நடந்தாள் .இன்னமும் உடல் முழுவதும் ஒரு மதர்த்த தன்மை இருக்கத்தான் செய்தது .சமாளித்தபடி படியிறங்கினாள் .




பாதி படியில் நிற்கும் போது ” இந்த சமாளிப்பு பேச்செல்லாம் என்னிடம் வேண்டாம் .எனக்கு தேவை சரியான பதில் .அந்த சுவிட்ச் பழுதாயிருப்பது தெரிந்தும் ஒரு வாரமாக அதை சரி பண்ணாமலிருந்தது ஏன் ? ” வீட்டு எலெக்ட்ரிக்கல் வேலைகளை செய்யும் எலக்ட்ரீசியனை விரட்டிக் கொண்டிருந்தாள் காருண்யா .குரலில் டன்டன்னாய் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது .

அந்த எலக்ட்ரீசியன் திணறிக் கொண்டிருக்க கால்களை அகற்றி நின்றபடி இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டினுள் விட்டபடி ( ஒரு வேளை பாக்கெட்டினுள் துப்பாக்கி வைத்திருப்பாளோ ? ) தோரணையாக நின்றபடி விசாரித்துக் கொண்டிருந்த காருண்யாவையே பார்த்தபடி நின்றாள் முகிலினி .

” முகில் ஓய்வெடுக்காமல் ஏன் எழுந்து வந்தாய் ? ” பின்னிருந்து வந்து அவள் தோள்களை அணைத்தபடி கேட்டான் யதுநந்தன் .

” தப்பு செய்தவர்களே அதை கண்டுபிடிக்க விசாரணை நடத்துவதை இப்போதுதான் பார்க்கிறேன் ” காருண்யாவை பார்த்தபடியே ஏதோ நினைவில் கூறிவிட்டு பிறகு நாக்கை கடித்து கொண்டாள் முகிலினி .

” நீ ..வா ..முதலில் கொஞ்ச நேரம் படுத்திரு ” மனைவியின் உடல்நிலையிலேயே கவனம் வைத்திருந்த யதுநந்தன் அவளை பற்றி திருப்பி இரண்டு படியேறிய பின்பே முகிலினியின் வார்த்தைகளில் கவனம் செல்ல நின்று “, இப்போது என்ன சொன்னாய் ? “, எனக் கேட்டான் .

குரலில் இப்போது சிறிது உஷ்ணம் தெரிந்தது .அவளை பற்றி சொன்னதும் அவ்வளவு கோபம் வருகிறதோ ..உள்ளூர புகைந்தபடி ” நான் போய் படுக்க போகிறேன் ” தன் தோள்களை சுற்றியிருந்த அவன் கைகளை தள்ளி விட்டு மாடியேறினாள் .

மறுநாள் காலை கண்விழித்ததுமே இன்று கோவிலுக்கு போயே ஆக வேண்டுமென தோன்றியது முகிலினிக்கு .இத்தனை பிரச்சினைகளில் சிறிது நேரமாவது அந்த அம்மன் காலடியில் கொண்டு சென்று கொட்டினால்தான் நிம்மதி கிடைக்குமென தோன்ற குளித்து சாப்பிட்டு கிளம்பி விட்டாள்.

அந்த கீர்த்திவாசன் நினைவு வந்தாலும் அவனுக்கு பயந்து கோவிலுக்கே போகாமல் ஏன் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் .

கோவிலை வலம் வந்து , அம்மனை தரிசித்து அம்மன் முன் அமரும் வரை அவன் கண்ணில் படவில்லை .நிம்மதியோடு ஆலயத்தின் ஒரு புறம் அமர்ந்து மனதை ஒரு நிலைப்படுத்தி சிறிது நேரம் தியானத்தில் மூழ்கினாள் .

மனமும் , உடலும் லேசானதை உணர்ந்தவள் நிறைந்த நிம்மதியுடன் கோவிலை விட்டு வெளியேறினாள் .வாசல் படியிலேயே அமர்ந்திருந்தான் கீர்த்திவாசன் .

இவளை பார்த்ததும் ” வணக்கம் அண்ணி ” பளிச் சிரிப்புடன் கை கூப்பினான் .” உங்களுக்காக தினமும் வந்து காத்திருக்கிறேன் தெரியுமா ? “என்றான் .

” இங்கே பாருங்கள் நான் இப்போதுதான் என் எல்லா பாரங்களையும் அம்மனின் இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக வந்து கொண்டிருக்கிறேன் .ஏதாவது பேசி என் கோபத்தை கிளறாதீர்கள் ” என்றாள் .

” இல்லை அண்ணி ஒரு பத்து நிமிடங்கள் அண்ணி .உங்கள் மூடை கெடுப்பது போல் பேச மாட்டேன் .ப்ளீஸ் அண்ணி …” இதனை கீர்த்திவாசன் பரபர நடையோடுதான் சொல்ல முடிந்தது .ஏனெனில் முகிலினி வேகமாக நடக்க துவங்கியிருந்தாள் .

அதோ அங்கே கிடக்கிறதே சிறு துரும்பு .அதுவும் நீயும் எனக்கு ஒன்றுதான் என்ற பார்வையோடு வேகமாக நடந்து கொண்டிருந்தாள் முகிலினி .

” அண்ணி நம் குடும்பத்தில் பெரியவர்களுக்குள் சண்டை வந்த போது நாம் பிறந்திருக்கவே இல்லை .அப்படி சண்டையிட்ட பெரியவர்கள் யாரும் இப்போது உயிரோடும் இல்லை .அப்படியிருக்கையில் இன்னமும் அந்த பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு இளையவர்கள் நாமும் ஏன் இன்னமும் முகம் திருப்ப வேண்டும் .ஒற்றுமையாக போகலாமே ..? “

வேகமாக முகிலினி திரும்பி பார்த்த பார்வையில் சூரியக்  கதிர்வீச்சின் உச்சபட்ச வெக்கை இருந்தது .” இப்போது வரை என் கணவரின் உயிரை பறிக்க முயற்சித்திருக்கிறது உன் குடும்பம் .எனக்கு இதெல்லாம் தெரியாது என்று நினைத்தாயா ? “

” இல்லை அண்ணி ..அதற்கு நாங்கள்  காரணமில்லை .அதை நாங்கள் கோர்ட்டிலேயே நிரூபித்திருக்கிறோம் ” என்றான் அவசரமாக .

” ஓஹோ அதை எங்களை நம்ப சொல்கிறீர்களோ ? தைரியமிருந்தால் இதை உன் அண்ணனிடமே சொல்லி பாரேன் ” நக்கலாக கேட்டாள் ..

” அது …நான் அண்ணனிடம் பேசத்தான் நினைத்தான் .அவர் என்னை ஒரு பார்வை பார்த்தார் பாருங்கள் .கை கால்களெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டன .பிறகு எங்கே பேச ? ” பரிதாபமாக சொன்னான் .

அவனது பாவனையில் வந்த சிரிப்பை அடக்கியபடி ” இது விபரம் உங்கள் அண்ணனிடம் கேட்டு சொல்கிறேனே ” என்றாள் சாதாரணமாக .

” என்னது …? அண்ணீ …உங்களுக்கு என் மேல் ஏதும் கோபமென்றால் நீங்கள் நாலு அறை என்னை வைத்து விடுங்கள் .அண்ணன் முன்பு மட்டும் என்னை நிற்க வைத்துவிடாதீர்கள் .அதென்னவோ அவர் முன்பு நிற்கும் போதெல்லாம் கர்ஜிக்கும் சிங்கத்தின் முன்பு கூண்டுக்குள் நிற்பது போன்றே தோன்றுகிறது ” பரிதாபமாக கூறினான் .

” அப்போது இனி என்னுடன் பேச முயற்சிக்காதீர்கள் ” இறுதி முடிவாக கூறிவிட்டு விலகி நடந்துவிட்டாள் முகிலினி .செய்வதறியாது நின்றான் கீர்த்திவாசன் .

வீட்டை நெருங்கிய போது எதிரில் வந்தான் யதுநந்தன் .கர்ஜிக்கும் சிங்கமென்ற கீர்த்திவாசனின் வர்ணனை நினைவு வர, கூடவே முதன் முதலில் கணவனை கண்ட போது கம்பீர களிற்றுடன் ஒப்பிட்டதும் நினைவு வர , இவைகளையே மெய்ப்பிப்பது போன்ற கம்பீர நடையில் வரும் கணவனை நெகிழ்ச்சியாக பார்த்தபடி நின்றிருந்தாள் முகிலினி .

அங்கு தூரத்தில் வரும் போதே மனைவியின் பார்வை நெகிழ்ச்சியை கண்டுகொண்ட கணவன் அருகில் வந்து அவள் கைகளை பற்றிக்கொண்டு என்னவென புருவங்களால் வினவினான் .

” என் அப்பாவின் க்ளையண்ட்டாக இல்லாமல் உங்களை வேறு ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் நான் ஏன்  சந்திக்கவில்லை யது …?”

முகிலினியின் ஆற்றாமை நிறைந்த குரலிலும் , சில நாட்கள் கழித்து கிடைத்த “யது ” என்ற அவளது அழைப்பிலும் யதுநந்தன் ரொம்பவே உருகிப்போனான் .

” என்னடா எதற்காக இப்படி தேவையில்லாத விசயங்களை திணித்து மண்டையை உழப்பிக் கொள்கிறாய் ? ” பரிவுடன் கேட்டபடி அவள் தோள்களை வருடினான் .

அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் முகிலினி .பேச்சற்ற மௌனமே அவர்களுக்கிடையே அப்போது எல்லையற்ற ஆறுதலாக இருந்தது .வெறும் அன்பு மட்டுமே தெரிந்த அந்த அணைப்பில் எல்லையில்லா ஆறுதல் அடைந்த முகிலினி பெரும் நிம்மதியுடன் கண்களை மூடிக்கொண்டாள் .

தம்பதிகளின் அந்த ஆறுதல் அணைப்புக்கு விரோதியாக ஒலித்தது யதுநந்தனின் போன் .

சலிப்புடன் ” எடுத்து பேசுங்க .உங்க காருண்யாவாத்தான் இருக்கும் ” என்றாள் முகிலினி .

சிறு கோபத்துடன் அவளை பார்த்தபடி யதுநந்தன் எடுத்த அவன் போன் திரையில் தெரிந்தது காருண்யாவின் பெயரே .சிறு எரிச்சலுடன் முன்னே நடப்பதாக அவனுக்கு ஜாடை காட்டிவிட்டு மெல்ல நடக்க துவங்கினாள் முகிலினி .

” இங்கே வீட்டின் பின்புறம் அந்த கொய்யா மரங்கள் இருக்குமிடத்தில் இருக்கிறேன் ..வா ” என தகவல் சொன்னான் யதுந்ந்தன்.




ஒருநிமிடம் அவரை தனியே விட்டுவிடக் கூடாதே இவளுக்கு மனதிற்குள் கசந்தபடி நடந்தாள் முகிலினி .அந்த திருப்பத்தில் திரும்பி உள்ளே நுழைந்து விட்டால் வீடு வந்துவிடும் .அங்கே திரும்பிய படி இயல்பாக திரும்பி பார்த்தவள் திடுக்கிட்டாள் .

அங்கே ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி நின்றிருந்த யதுயந்தனும் , காருண்யாவும் ஏதோ பேசியபடி திடீரென ஒருவரையொருவர் அணைத்து கொண்டனர் .அவசரமாக முகத்தை திருப்பிக் கொண்டு வேக நடையுடன் வீட்டின் பின் வாசலை நோக்கி நடந்தாள் முகிலினி .

” என்ன சந்திப்பு நிகழ்ந்து விட்டதா ? ” நக்கலான  குரல் கேட்டு நிமிர்ந்தாள் .சௌம்யா .முகத்தில் கேலி வழிய நின்று கொண்டிருந்தாள் .

” என்ன …? ” புரியாமல் அவளை பார்த்தாள் முகிலினி .

” நந்தனை எங்கே ….எங்கேன்னு தவித்துக் கொண்டு வந்தாளே அந்த காருண்யா .வேறு வழியில்லாமல் நான்தான் பின்னாலிருக்கலாமென கை காட்டினேன் .வந்திருப்பாளே …சந்திப்பு நிகழ்ந்திருக்குமே ….” எவ்வளவு குத்தல் இவள் குரலில் .

அவளது குத்தல் குரலிலும் , நந்தன் என்ற அழைப்பிலும் வெகுவாக மனம் கலங்கிய போதும் அவள் எதிரில் கணவனை விட்டுக் கொடுக்க மனம் வராமல் ” ம் ..வந்தார்கள் …ஏதோ தொழில் விசயம் பேசுகிறார்கள் .எனக்கு ஒன்றும் புரியவில்லை.அதனால் முன்னால் வந்துவிட்டேன் ” என்றாள் .

” ஆமாம் ..என்னென்னவோ ..ஏதேதோ பேச வேண்டியது ..தொழில் என்று பெயரிட்டு கொள்ள வேண்டியது ….” என்று தொடர்ந்த அவள் குத்தல்களை காதில் போட்டுக் கொள்ளாமல் அவளை கூர்ந்து நோக்கினாள் முகிலினி .

” ஏன் சௌம்யாக்கா உங்கள் கணவர் மும்பையில் தானே இருக்கிறார் .எப்போது வருகிறார் உங்களை அழைத்து செல்ல ? ” சௌம்யா குரல் நக்கலை தனது குரலில் கொண்டு வந்தாள் முகிலினி .

பேயறைந்தது போல் நின்றாள் சௌம்யா .




What’s your Reaction?
+1
23
+1
9
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!