Serial Stories

ஊரெங்கும் பூ வாசனை-9

(9)

    எதிரே இருந்த கண்ணாடி  டம்ளரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மௌரியன்.

   பொங்கிக் பொங்கி வந்த கண்ணீரை அடக்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

    சட்டென்று எடுத்து மடக் மடக்கென குடித்தான். குடித்து முடித்தவன் கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.

    மூடிய கண்களுக்குள் சாரல் வந்து சிரித்தாள். அவள் சிரிக்க சிரிக்க அவனுக்குள் உள்ளே எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது.

   சாரல்!

   அவனுக்குள் நேற்றுவரை தூறிக் கொண்டிருந்த சாரல்! அவனை காதல் மழையில் நனைத்துக் கொண்டிருந்த சாரல். ஒவ்வொரு துளிகளிலும் அவள் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்த சாரல்!

   பெருமழையாய் மாறி தன்னை நனைத்து சிலிர்க்க வைக்கப் போகிறது என நம்பிக் கொண்டிருந்த சாரல்.

   இன்ப வெள்ளமாக மாறி அவனை மூழ்கடிக்கப் போகிறது என கனவுக் கண்டுக் கொண்டிருந்த சாரல்.

    வாழ்க்கை முழுவதும் ஆனந்த ஆறாக சீராக பாய்ந்து அவனுடைய இதயப்படகை பயணிக்க வைக்க போகிறது என நினைத்துக் கொண்டிருந்த சாரல்.

    ஆனால்…பெரிய இடியாக உருமாறி அவன் தலையில் விழுந்து விட்டது.

    அவனுடைய ஒவ்வொரு செயலுமே அவளுக்காகத்தானே? அவன் ஆடும் நடனமே அவள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தானே…

    ஆனால்…

    நேற்றைய நிகழ்வில்…விழாவில் அவன் தயாராகி நின்றபோது மேடைக்கு கீழே அதுவரை அவள் அமர்ந்திருந்த இருக்கை காலியாக…

    ஏன்…ஏன்…எழுந்துப் போனாள்?

அடுத்த நிகழ்ச்சி என்னுடையதுதானே?

என்னுடைய ஒவ்வொரு அசைவையும் அவள் உள்வாங்கிக் கொண்டு ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தானே…

   முக்கியமான நேரத்தில் எழுந்து எங்கே போனாள்.?

   கழிவறைக்குப் போயிருப்பாளோ?

   காத்திருந்தான்.

   இவ்வளவு நேரம் இருந்தவளுக்கு திடீரென என் நிகழ்சி வரும்போது என்ன அவசரம்?

    மேடையில் நடந்துக் கொண்டிருந்தது ஒரு ஆங்கில நாடகம். எப்படியும் முடிய அரைமணிநேரம் ஆகும்.

   வந்துவிடுவாள். தனக்குத்தானே மனதைத் தேற்றிக் கொண்டு மேடைக்கு பின்னாலிருந்து திரையை விலக்கி விலக்கி அவள் வந்துவிட்டாளா வந்துவிட்டாளா என பார்த்துக் கொண்டிருந்ததுதான் மிச்சம்.

   இவ்வளவு நேரம் என்ன செய்கிறாள்?

   நிமிடத்தில் எல்லாவற்றையும் மறந்தான்.

   இன்னும் கொஞ்ச நேரத்தில் தன் நிகழ்ச்சி மேடையில் அரங்கேற வேண்டும். அதற்காகவே மாணவக் கூட்டம் காத்திருக்கிறது என்பதை மறந்தவனாக அவளைத் தேடிக் கொண்டு வந்துவிட்டான்.

    மாணவக் கூட்டத்தில் தேடியவன் அவளைக் காணாது கல்லூரி கட்டிடத்தின் அறைகளை நோக்கி வராண்டாவில் நடந்தான்.

   வகுப்பறைகளையே ஒவ்வொரு நிகழ்ச்சிக்குமான அலங்கார அறையாக மாற்றியிருந்தனர்.

   அந்த அறைகளில் இனிமேல் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளுக்காக மாணவ மாணவிகள் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தனர்.

    தோழிகள் யாருக்காவது மேக்கப் போட்டுவிட போய்விட்டாளா?

    ஓவ்வொரு அறையாக நுழைந்து தேடினான்.




    இல்லை.

பார்த்துக் கொண்டே வந்தவன் அந்த வராண்டாவின் கடைகோடியில் இருவர் சுவரில் சாய்ந்த வண்ணம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான்.

   அவளைப் பார்த்தால் சாரலைப் போல்தான் தெரிந்தாள்.

   பின்புறம் திரும்பி இவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தாலும் அலை அலையாய் இடை வரை பறந்துக் கொண்டிருந்த கூந்தலைக் கொண்டு அவள்தான் என கண்டுப்பிடித்துவிட்டான்.

   கிட்டே நெருங்க நெருங்க அவளுடன் பேசிக் கொண்டிருந்தது மகேஷ் என்று தெரிந்தது.

     ‘என் ப்ரோக்ராமைப் பார்க்காமல் இங்கே வந்து இவனோடு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது?’ என எரிச்சலாக அவன் அவளை நெருங்க அதே நேரம் மகேஷ் சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டே சட்டென்று அவளை இழுத்து அவளுடைய கன்னத்தில் ஆவேசமாக முத்தமிட்டான்.

    பின்னாலிருந்து யாரோ கோடாரியால் தாக்கியதைப் போல் நிலைதடுமாறிய மௌரியன் எங்கிருந்தோ வந்த ஆவேசத்துடன் “டேய்….” என ஓடிப்போய் அவனுடைய சட்டையைப் பிடித்து பளார் பளாரென கன்னத்தில் அறைந்தான்.

     மோகத்தின் தாலாட்டில் தவழ்ந்துக் கொண்டிருந்த மகேஷ் இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலை குலைந்துப் போய் சமாளிக்க முடியாமல் தடுமாற சாரல்தான் கோபத்தோடு மௌரியன் பக்கம் திரும்பினாள்.

    “மௌரி…மௌரி…” என்ன பண்றே? அவள் தடுக்க தடுக்க மகேஷை கீழேத் தள்ளி போட்டு மிதித்துக் கொண்டிருந்தான் மௌரியன்.

   எதிர்த்து அடிக்க முடியாமல் சுருண்டான் மகேஷ்.

    “மௌரி…விடு அவனை” மௌரியனைப் பிடித்து இழுத்த சாரல் வெறிக்கொண்டவளாய் கத்தினாள்.

    “மௌரி…அவனை எதுக்கு அடிக்கிறே…?”

       “அவன்…அவன்…உன்னை உன்னை…” மௌரியின் விழிகள் ரத்தமாய் சிவந்துவிட்டிருந்தன. உதடுகள் துடித்தன. பற்கள் நறநறத்து மகேஷை கடித்து குதறிவிட தயாராக இருந்தன.

      “அவன்…என்னை முத்தமிட்டான். அதுக்கென்ன இப்ப?” சீறினாள்.

    நெஞ்சில் அறைந்ததைப் போல் ஸ்தம்பித்து நின்றான் மௌரியன்.

    “அவன்…அவன் எப்படி உன்னை?”

    “அவன் என்னோட லவ்வர். எஸ் அவனை நான் காதலிக்கிறேன். அதனால அவன் என்னை கிஸ் பண்ணினான். அதனால உனக்கென்ன?”

    அவள் அழுத்தமாய் ஆணித்தரமாய் சொல்ல மௌரியன் கால்கள் தளர்ந்து நொடித்துக் கொண்டு கீழே விழுந்துவிடும் நிலைக்கு ஆளானான். பக்கத்திலிருந்த சுவரை சட்டென்றுப் பிடித்துக் கொண்டான்.

    “சாரல்….என்ன சொல்றே? அவன்…அவன் உன்னோட லவ்வரா?”

    “எஸ்” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னாள் சாரல்.

    “அப்ப நான்?”

  அவனுடைய கேள்விக்கு முகம் சுருக்கியவள் “நீ என்னோட ஃபிரண்ட்” என்றாள்.

  ஃப்ரண்ட்! ஃப்ரண்ட்! ஃப்ரண்ட்!

  மடமடவென பாட்டிலிலிருந்ததை க்ளாஸில் சரித்தான் மௌரியன்.

  சிவந்திருந்த கண்கள் இன்னும் இன்னும் நிறமேறிக் கொண்டிருந்தன.

  கண்ணாடி க்ளாஸ் உடைந்துவிடும்படி இறுக்கினான்.

  ஃபிரண்ட்! நான் வெறும் ஃபிரண்ட்தானா?




    “சாரல்…சாரல் நீ என்ன சொல்றே? நான்… நான் வெறும் ஃபிரண்ட் தானா? அப்படின்னா…நீ என்கிட்ட பழகினதெல்லாம்…”

    “ஃப்ரண்ட்டாத்தான்”

    “நோ…நோ….நீ என்னை லவ் பண்ணின.”

    “நான் என்னைக்காவது உன்னை லவ் பண்றேன்னு சொல்லியிருக்கேனா?”

  பாம்பாய் அவள் சீறியது இன்னும் காதுகளில் அதிர்வை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.

    “நீயா எதையாவது நினைச்சுக்கிட்டா அதுக்கு நான்தான் காரணமா?”

     ‘நானா நினைச்சுக்கிட்டேனா? நோ…நீ என்னை காதலிச்சே. என்னை காதலிச்சே!’

  உள்ளுக்குள் அலறினான்.

  க்ளாஸில் இருந்ததை எடுத்து மடக் மடக்கென குடித்தான்.

  கண்களில் போதையாடு சேர்ந்து குரூரம் வந்து உட்கார்ந்துக் கொண்டது.

    ‘சாரல்! நீ என்னை காதலிச்சே. நானும் உன்னை காதலிச்சேன். ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்கலையேத்தவிர நாம காதலிச்சது நம்ம மனசுக்குத் தெரியும். காதலைசொல்ல ரெண்டு பேருமே துடிச்சுக்கிட்டிருந்தோம். நல்ல சமயத்தை எதிர்நோக்கியிருந்தோம். சத்தியமா இந்த பங்ஷன் முடிஞ்சதும் நீ என்னோட நடனத்தை வழக்கம் போல பாராட்டுவே. அதிசயம் உன் கண்கள்ல தெரியும். பிரமிப்பு உன்; புருவங்கள்ல விரியும். என் திறமை உன் வார்த்தைகள்ல வெளிப்படும். நல்ல எதிர்காலம் இருக்குன்னு உன் நாக்கு எதிர்காலம் கணிக்கும். நீ  உருகி மெய் மறந்திருக்கப்போற அந்த நேரத்துல என் காதலை சொல்ல நான் துடிச்சுக்கிட்டிருந்தேன்.

    ஆயிரம் கண்கள் என் நடனத்தைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி இல்லை. உன் இருவழிகளும் பார்ப்பதுதான் எனக்கு சிலிர்ப்பு. அதற்காகத்தானே பத்து நாட்களாய் கடினமான பயிற்சி செய்துக்கிட்டிருந்தேன்.

   அந்த நிமிடங்களுக்காகத்தானே காத்துக்கிட்டிருந்தேன்.

   சரியாக அந்த நேரம் பார்த்து போய்விட்டாய்.

   மனதுக்குள் என் மேல் காதல் வைத்துக் கொண்டு இன்னொருவனின் முத்தத்தில் எப்படித் திளைத்தாய்?

   என் மேல் காதலே இல்லை என எப்படி பொய் சொன்னாய்?

   அவன்…

மகேஷ்….மகேஷ் உன்னை என்ன சொல்லி தடுமாற வைத்தான்? தடம் புரள வைத்தான்?

    என் பக்கம் நின்ற உன்னை எப்படி இழுத்துக் கொண்டான்.?

    தெரியும். எனக்குத் தெரியும். அவன் என்ன சொல்லி உன்னை வலையில் வீழ்த்தியிருப்பான் என எனக்குத் தெரியும்.

   மகேஷ் பிரபல சினிமா டைரக்டர் வேதநாயகனின் ஒரே மகன். அந்த கெத்தும் திமிரும் அவனிடத்தில் அதிகம். பணத்திமிரை பல இடங்களில் காட்டுவான்.

   சாரல் பேரழகி. பிரமிக்க வைக்கும் இளமை. ஒருமிக்க வைக்கும் எவர் பார்வையையும்.

   மகேஷ் மயங்கியதில் வியப்பில்லை.

   அவளை மயக்கியதிலும் வியப்பில்லை. காரணம் அவன் சொன்ன காரணம் அப்படிப்பட்டதாக இருந்திருக் வேண்டும்.

   சாதாரணமாகவே சாரலுக்கு நடிப்பில் ஆர்வம் மனதில் அலையடித்துக் கொண்டிருந்தது.




   அந்த ஆர்வத்திற்கு உரம் போட்டு உயர வளர்த்துவிட்டிருந்தது கல்லூரி மேடைகள்.

    ‘நீ நிச்சயம் ஹீரோயினா நடிக்கலாம்டி. பெரிய ஸ்டாரா வலம் வருவே.’ தோழிகள் வேறு தூபம் காட்டி துதிப் பாடிக் கொண்டிருந்தனர்.

   உள்ளுக்குள் உலா வந்த கதாநாயகி மகேஷிடம் கவிழ்ந்து விட்டாள்.

   பெரிய டைரக்டரின் மகன். சினிமா வாய்ப்பு மிக சுலபமாகக் கிடைக்கும்.

ஸோ….மலர்ந்தும் மலராத காதலை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கிறாள். கள்ளிப் பால் கொடுத்து கொன்றிருக்கிறாள் காதல் என்ற குழந்தையை.

    கதாநாயகி ஆசைக்காக தன் கதாநாயகனையே மாற்றிக் கொண்ட உன்னை நான் சும்மா விடப் போவதில்லை.

    என்னை என்ன இளிச்சவாயன் என்று நினைத்தாயா?

    சாரல்…உன்னை சகதியாக்குறேன்டி!

வெறித்தனமாக சூளுரைத்துக் கொண்டான்.

    முழு பாட்டிலையும் எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டான்.




What’s your Reaction?
+1
12
+1
12
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!