Serial Stories

நீ தந்த மாங்கல்யம்-18

( 18 )

காலை யதுநந்தன் எழுவதற்கு முன் எழுந்து வாக்கிங் செல்வது போல் வீட்டை சுற்றி நடக்க துவங்கினாள் .உடலில் இருந்த காயங்களை யதுநந்தனிடம் காட்ட விரும்பவில்லை .அதற்கொரு விளக்கம் கூற வேண்டியதிருக்கும் .

முன்தினம் கோவிலிலிருந்து வந்த முகிலினியின் உடலில் காயங்களை பார்த்து சௌம்யா பதறிவிட்டாள் .ஒன்றுமில்லை என சொல்லியும
் கேட்காமல் சந்திரவதனாவிடம் சொல்லி அவள் மருந்து கொண்டு வந்து தடவ சொல்லி …பார்த்து போக கூடாதா ? ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா ? என ஆயிரம் கேள்விகள் .

தன் மேல் உள்ள பாசத்தினால் வந்த விசாரணைகள்தான் என தெரிந்தாலும் முகிலினிக்கு இதற்கெல்லாம் பதில் சொல்ல அலுப்பாக இருந்தது .

அதே கேள்விகளை யதுநந்தனிடமிருந்து தவிர்க்க எண்ணியே இவ்வாறு வெளியேறி விட்டாள் .

நடந்தபடியே கீர்த்திவாசனை நினைவு கூர்ந்தாள் .தன் பெயரை சொன்னவன் அவளது நடுக்கத்தை கண்டு “வாங்க கொஞ்ச நேரம் உட்காரலாம்” என்று கோவிலினுள் அழைத்து சென்றான் .

உள்ளிருந்து ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தவன் ” குடிங்க …கொஞ்சம் அதிர்ச்சி குறையும் ” என்றான் .

காய்ந்த தொண்டையை உணர்ந்த முகிலினி வேகமாக அந்த தண்ணீரை வாங்கி குடித்தாள் .அவன் கூறியது போன்றே நெஞ்சப்படபடப்பு மட்டுபட்டு உடல் நடுக்கம் குறைந்தது .

” நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? “, என்றாள் அவனை பார்த்து .

” இங்கே பக்கத்தில்தான் .உங்களிடம் பேசத்தான் வந்தேன் .ஆனால் அதற்கு இது தருணமில்லை .நீங்கள் உங்கள் வீட்டிற்கு சென்று ஓய்வெடுங்கள் .நாளை முடிந்தால் இங்கே வாருங்கள் பேசலாம் “என்றான்  .

யார் அவன் ? என்னிடம் என்ன பேச நினைக்கிறான் ? அப்போது முகிலினி இருந்த நிலைமையில் இதையெல்லாம் அவனிடம் கேட்க தோணவில்லை .இன்று அதனை அறிவதற்காகவாது கோவிலுக்கு போக வேண்டுமென நினைத்தாள் .

யதுநந்தன் கீழே ஆபிஸ் ரூமிற்குள் நுழைந்ததும் முகிலினி மேலே வந்தாள் .அங்கே சிறிது நேரம் அவனும் , காருண்யாவும் வேலை பார்த்த பின்பு பத்து மணிக்கு மேல்தான் ஆபிஸ் போவார்கள் .

தங்கள் அறைக்கான நம்பரை அழுத்தி உள்ளே வந்தாள்.அந்த வீட்டின் எல்லா அறைகளில் இது போன்ற நம்பர் லாக் முறை இருந்தது .அவரவர் அறைக்கு அவரவர் விரும்பிய வண்ணம் லாக் செய்து கொள்ளும் வசதி .

முதலில் யதுநந்தன் வைத்திருந்த நம்பரை தங்கள் தனிமைக்காக இருவருமாக மாற்றியிருந்தனர் .தாங்கள் இருவரும் முதன் முதலில் சந்தித்த நாளுடன் அவள் பிறந்தநாளையும் நம்பர் லாக்கில்  இணைத்திருந்தான் யதுநந்தன் .அவர்களின் முதல் சந்திப்பு  தேதி நிச்சயமாக முகிலினிக்கு மறந்து போயிருந்தது .

அதனை யதுநந்தன் மறக்காமல் நினைவு வைத்திருந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது .சந்தோசமாகவும் .இந்த நெருடல் மட்டும்  தன் உள்ளத்தில் எழாமலிருந்திருந்தால் அவன் மிக நல்ல கணவனே .

பெருமூச்சுடன் ஒரு கனத்த டவலை உடலில் சுற்றிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் .லேசான உடல் வலி இருந்ததால் வெந்நீரில் குளிக்க எண் ணி பாத்டப்பில் வெந்நீரை திறந்து விட்டாள் .அதிலிருந்து எழுந்த ஆவி குளியலறையை நிறைத்தது .

உடலில் ஆங்காங்கே இருந்த சிராய்ப்புகளுக்கு பஞ்சினால் டெட்டாலை ஒத்தி எடுத்தாள் .நெந்நீர் ஆவி கண்ணாடியில் படர்ந்தது .” யது ” என்று அதில் எழுதினாள் .அழித்தாள் .”முகில் “என எழுதினாள் .லவ் என எழுதி “யது “என எழுதி இதயம் வரைந்தாள் .”முகில் லவ் யது” என சொல்லி பார்த்துக்கொண்ட போது பட்டென குளியலறை கதவு திறந்தது .

யதுநந்தன்  தான் .”முகில் லவ் யது ” வை கண்ணாடியில் பார்த்தவன் குளிக்க தோதாக நின்ற மனைவியை கண்களால் விழுங்கியபடி முன்னால் வந்தான் .




” லேப்டாப் எடுக்க மறந்துட்டேன் .நீ கீழே இருந்தாயே …யாரு பாத்ரூம்லன்னு பார்க்க வந்தேன் …” வாய் ஏதோ காரணம் சொல்ல கண்கள் காதல் வழிய மனைவியின் வெற்று தோள்களை வருடியது .

எவ்வளவு பலவீனமான  காரணம் .ரூமிற்குள் வேறு யாரும் நுழைய முடியாது என தெரிந்திருந்தும் ….கணவனின் கண்களின் அழைப்பில் மிரண்டு போன முகிலினி மெல்ல பின்வாங்கி கண்ணாடியில் சாய்ந்து நின்றாள் .

அவளுக்கு இருபுறமும் தன் கைகளை அரணாக ஊன்றியவன் அவளை நோக்கி குனிய ” நீ …நீங்கள் ..கா..காத்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள் “, திணறலாக மொழிந்த முகிலினி கண்களை இறுக மூடிக்கொண்டாள் .

“, இது என்ன முகில் ? ” யதுநந்தனின் குரலில் பதட்டம் தெரிந்தது .அவள் காயங்களை பார்த்து விட்டிருந்தான் .

” கடவுளே நிறைய இடத்தில் தெரிகிறதே .என்ன பண்ணினாய் .அதுதான் நேற்றிலிருந்து ஒளிந்து கொண்டே திரிகிறாயா ? ” அவள் தோள்களை மென்மையாய் வருடிய அவன் கைகளில் இப்போது நிச்சயம் காதல் இல்லை .அன்போடு கூடிய பாசமும் , பரிவும் மட்டுமே இருந்தன .

அப்படியே கணவன் தோள் சாய துடித்த உடலை அடக்கியபடி ” ஒன்றுமில்லை .நேற்று கோவிலுக்கு போன போது கீ..கீழே விழுந்துட்டேன் “, திணறினாள் முகிலினி .

யதுநந்தனின் பாசம் தன்னை இப்படி பலவீனமாக்கும் என்று முகிலினிக்கு தெரியும் .அதனாலேயே அவள் அவன் கண்ணில் படாமலிருக்க முயன்றாள் .

“, சின்ன பிள்ளையா நீ ? கீழே விழுந்தேன் என்கிறாய் ? ” அதட்டியவன் .அவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டான் .

கட்டிலில் விட்டுவிட்டு மருந்து தடவ துவங்கினான் .” குளித்து விட்டு போடலாமென்று நினைத்தேன் ” முணுமுணுத்தாள் முகிலினி .

” கொஞ்சம் பேசாமலிருக்கிறாயா ? ” கால் முட்டியில் மருந்து தடவியபடி அவளை கடிந்தான் .மேலும் உடல் காயங்களை அவன் ஆராய பற்களை கடித்து முகம் திருப்பி உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டாள் முகிலினி .

” இன்று வெளியே எங்கேயும் போக வேண்டாம் .பேசாமல் படுத்து ஓய்வெடு .” என்றான் .

அது சரி இந்த சின்ன காயங்களுக்கு ஒரு ஓய்வு தேவைதான் என மனதிற்குள் எண்ணியபடி வெளியே தலையாட்டி வைத்தாள் .

மனமில்லாமல் வெளியே கிளம்பி சென்றான் யதுநந்தன் .ஏனெனில் அதற்குள் அவனை மூன்று முறை போனில் அழைத்திருந்தாள் காருண்யா .

முகிலினிக்கு அவன் வெளியேறிய பின்தான் ஒழுங்காக மூச்சு விட முடிந்தது .விரைவாக சென்று மறக்காமல் குளியலறை கதவை மூடிக்கொண்டு குளிக்க துவங்கினாள் .

கோவிலில் இவளுக்காகவே போல் கீர்த்திவாசன்  காத்திருந்தான் .புன்னகைத்து ” ஹாய் …” என்றான் .தலையசைத்தாள் முகிலினி .

” வாருங்கள் அம்மனை வேண்டிவிட்டு வருவோம் ” என கோவிலினுள் நுழைந்தான் .

உள்ளே நுழைந்த முகிலினி மோகனரங்கத்தை தேடினாள் .
” அவர் போனபின்தான் நான் வருவேன் ” என்றான் கீர்த்திவாசன் .

தொடர்ந்து தீபமேற்றி தீபாரதனை காட்ட துவங்கினான் .முகிலினிக்கு உறுத்த துவங்கியது .இவ்வளவு உரிமையோடு பூஜை செய்கிறானென்றால் ….

” உங்கள் வீடு எங்கே இருக்கிறது ? உங்கள் அப்பா யார் ? ” எனக் கேட்டாள் .

தீபத்தை அவளிடம் காட்டியபடி ” என் அப்பா பெயர் சதாசிவம் .” என்றான் .

தீபத்தை கண்களில் ஒற்றாமல் விடுவிடுவென வெளியே நடக்க துவங்கினாள் முகிலினி .

” சிஸ்டர் …சிஸ்டர் …ப்ளீஸ் நில்லுங்கள் .” பின்னாலேயே ஓடி வந்தான் கீர்த்திவாசன் .காதில் வாங்காமல் நடையை துரிதப்படுத்தினாள் .ஆனால் தனது வேக எட்டுக்களால் இரண்டாவது நிமிடம் அவளை வழிமறித்திருந்தான் கீர்த்திவாசன் .

” சிஸ்டர் …” என்றவன் சற்று நிறுத்தி ” இல்லை நீங்கள் எனக்கு அண்ணி முறை வருகிறது .அண்ணி …ப்ளீஸ் நான் சொல்வதை ….”

” சீச்சீ …வழியை விடு …உனக்கு உறவா நான் ?உன் குடும்பத்தார்
செய்த காரியத்திற்கு உன் மூஞ்சியில் முழிப்பதே பாவம் .தள்ளு அந்த பக்கம் …”,

வேகமாக நடந்துவிட்டாள் முகிலினி .தோல்வியுடன் நின்றான் கீர்த்திவாசன் .

வீட்டினுள் வந்த பின்னும் கொதிப்பு அடங்கவில்லை முகிலினிக்கு .அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் .என் கணவர் குடும்பத்தாரின் உயிரை வாங்கியவன் .என் கணவன் உயிரை பறிக்க முயன்ற குடும்பத்தான் …ஏன் இவனாகவே இருக்க கூடும் …எவ்வளவு தைரியம் இருந்தா …?

அன்று இரவு வரை அவன் சிந்தனையேதான் முகிலினிக்கு .மாடி பால்கனி வழியே தோட்டத்தை பார்த்தபடி நின்றிருந்தாள் .இனி துணைக்கு ஆள் இல்லாமல் கோவிலுக்கு போக கூடாது என உறுதி செய்து கொண்டாள் .தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் ஒளியில் நீச்சல்குள நீர் மின்னுவதை பார்த்தபடி இருந்தாள் .




அதோ அந்தப்பக்கம் நீச்சல்குளம் பக்கம் யாரோ போவது போல் தெரிகிறதே .கால்களை எக்கி எட்டி பார்த்தாள் .

இரு ஆண்கள் …கையை கோர்த்தபடியா ? இல்லையில்லை தோள்களை அணைத்தபடியா ? …யாராக இருக்கும் ?.

உள்ளுக்குள் ஏதோ உறுத்த டக்கென கீழே இறங்கி நீச்சல்குளத்தை அடைந்தாள் .சுற்றும் முற்றும் பார்த்தாள் . இப்போது யாருமில்லையே .அதோ அங்கே அந்த மரத்தின் பின்னால் இருக்கின்றனரோ ?

வேகமாக நடந்தாள் .சட்… இந்த புடவை காலை தட்டுகிறது .லேசாக புடவையை தூக்கி பிடித்தபடி நடக்க நினைத்த போது காலை எதுவோ தடுக்க நிலை தடுமாறி நீச்சல்குளத்தினுள் விழுந்தாள் .

ஐய்யோ எனக்கு நீச்சல் தெரியாதே …மனதுக்குள் அலறியபடி மடக்மடக்கென தண்ணீரை குடித்தபடி உள்ளே …உள்ளே ….போய்க்கொண்டிருந்தாள் .




What’s your Reaction?
+1
18
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!