Serial Stories ஊரெங்கும் பூ வாசனை

ஊரெங்கும் பூ வாசனை-13

(13)

      மௌரியனுக்கு எரிச்சலாக இருந்தது. இதே தாத்தா வீட்டில் எவ்வளவு சந்தோஷமாக எவ்வளவு குதூகலாமாக ஒருகாலத்தில் இருந்திருக்கிறான். அதே தாத்தா வீடுதான்.

    அதே வீட்டில் இன்று அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

   அவனுடைய மனதில் உருவான திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என சிந்திக்க முடியவில்லை.

    மனதுக்குள் எரியும் நெருப்பை இந்த சூழ்நிலை ஊதி அணைத்ததுவிடும் போலிருந்தது.

    வெந்துக் கொண்டிருக்கும் வெறித்தனத்தை தணிய வைத்துவிடும் போலிருக்கிறது.

    சிங்கமாக கர்ஜித்துக் கொண்டிருக்கும் ஆக்ரோஷத்தை சிதைத்துவிடும் போலிருக்கிறது.

    பத்து தலை நாகமாய் படமெடுத்தாடிக்கொண்டிருக்கும் பழியுணர்ச்சி செத்து விடும் போலிருக்கிறது.

    சாரலை எப்படி பழிவாங்குவது எப்படி பழிவாங்குவது என சதா நினைத்துக் கொண்டிருக்கும் அந்த எண்ணத்தையே இல்லாமலாக்கிவிடுமோ இந்த சூழ்நிலை என்றத் தோன்றியது.

    இங்கே வந்ததே தவறோ? என நினைத்தான்.

    மனைவி போய்விடுவாள் என்ற துக்கத்தை ஜீரணித்துக் கொள்ள அல்லது மறக்க அவர் பேரனையே சுத்தி சுத்தி வந்தார்;

    அவனிடம் எதையெதையோ பேசினார்.

    வாய்க்கால் வரப்பு என அவனை அழைத்துக் கொண்டு சுற்றினார்.

 சில வருடங்களாக அவன் படிப்பின் காரணமாக கிராமத்திற்கு வராததால் ஊருக்குள் நடந்த விஷயங்களையெல்லாம் சுவாரசியமாக சொன்னார்.

   அடுத்த வாரம் வரப் போகும் காளிக்கட்டி திருவிழா வரைக்கும் உன் பாட்டி உயிரோட இருந்தா தேவலை என கவலைப் பட்டார்.

   காளிக் கட்டி  விழா ஏற்பாடுகளை கவனிக்கும் குழுவில் இவனை அறிமுகப்படுத்தினார்.

    ‘என்ன என்ன செய்யனும்னு இவன் கிட்ட சொல்லுங்க. அதுக்கான நிதியை இவன்கிட்ட கொடுத்தனுப்பறேன்’ என பொறுப்புகளைக் கொடுத்து இவனை கோவிலுக்கு அனுப்பி வைத்தார்.




  அதனால் பெரும்பாலான நேரங்கள் அவன் காளிக் கோவிலில் இருக்க வேண்டியிருந்தது.

  காளி கோவிலின் விழா ஏற்பாடுகள் அலங்காரங்கள் என கோவில் வேலைகளில் அவன் ஈடுபட ஈடுபட அங்குள்ள கிராம மக்களுடன் பழக பழக அவன் தன் கல்லூரியில் நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் மறந்துக் கொண்டிருந்தான்.

வீட்டிற்கு வந்தால்…

ஆச்சியின் கவனிப்பு.

    “தம்பி..தம்பி “ என சுற்றி சுற்றி வருவாள். இதோ…அவனுக்காக ஒதுக்கப்பட்ட இந்த அறையைக் கூட எத்தனை நேர்த்தியாக வைத்திருக்கிறாள்.

   கதவு தட்டும் சத்தம் கேட்டது.

   இதோ இந்த நிமிடம் கூட கதவைத் தட்டுபவள் அவள்தான்.

   கதவைத் திறந்தான்.

     “தம்பி சாப்பிட வாங்க..”

    “எனக்கு பசியில்லை. நான் அப்பறம் சாப்பிடறேன்” அவன் தவிர்த்ததுக்கு காரணம் சாப்பாட்டு மேஜையில் அனைவருடனும் சேர்ந்து சாப்பிடவே அவனுக்குப் பிடிக்கவில்லை.

    அப்படி சாப்பிடும் நேரம் இனம்புரியாத ஒரு பாசப் பிணைப்பு அவனைக் கட்டிப் போடுகிறது. அந்த பிணைப்பு அவனுடைய திட்டங்களை உருவாக்க விடாமல் செய்து விடுமோ என்று தோன்றியது.

      “நீங்க வந்த பிறகுதான் சாப்பிடனும்னு எல்லாரும் காத்துக்கிட்டிருக்காங்க. முக்கியமா உங்க தாத்தா…”

    வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாக கீழே இறங்கி வந்தான்.

      ‘சீக்கிரமாக இங்கிருந்து கிளம்பி விட வேண்டும். பாட்டி ஏதோ…அடுத்த நிமிடமே செத்துப் போய்விடும் என்பதைப் போல் தாத்தா எல்லாரையும் வரவழைத்தார். ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் போன பாடு இல்லை. கோவில் காரியத்தில் தாத்தா கூட பாட்டியை மறந்துவிட்டார். இந்த ஆச்சிதான் ஓடி ஓடி பாட்டியை கவனித்துக் கொண்டிருக்கிறது பாவம்…’




    கீழே வந்தவனை தாத்தா “வாப்பா” என அழைத்தார்.

    தாத்தாவின் பக்கத்தில் அமர்ந்தான்.

    ஆச்சி பரிமாறத் தொடங்கினாள்.

வித விதமாக சமைத்திருந்தாள்.

       “அம்மா…உயிருக்கு போராடிக்கிட்டிருக்கும் போது இப்படி தடபுடலா எதுக்கு சமைக்கிறே….சிம்பிளா சமைச்சா போதாதா?” என நமச்சிவாயம் சாப்பாட்டு மேசை முழுவதும் பரவியிருந்த உணவு வகைகளை ஒருவித குற்றவுணர்வுடன் பார்த்தார்.

       “நல்லாயிருக்கே! வயசானா…உடம்புக்கு வந்து படுக்க வேண்டியதுதான். இன்னைக்கு அம்மா நாளைக்கு நான்…அடுத்து இவரு…அதுக்காக சாப்பிட வேண்டிய உங்களுக்கெல்லாம் அம்மாவுக்கு கொடுக்கற கஞ்சியை கொடுக்க முடியுமா? முக்கியமா…இதோ இந்த ராசா. வளர்ற புள்ளை. நல்லா சாப்பிடனும். ராசாவுக்காக பன்னாக்கிட்ட சொல்லி நல்ல மீனா எடுத்தார சொன்னேன். ராலு நண்டு கூட நல்லாயிருக்குன்னு எடுத்துட்டு வந்து கொடுத்தா.” என்றவாறே எல்லாருக்கும்; பரிமாறினாள்.

     “இந்தா எனக்கு ஒரு துண்டு போதும். புள்ளைகளுக்கு வை.” என்ற தாத்தாவைப் பார்த்தான் மௌரியன்.

   சொன்னதோடல்லாமல் தன் தட்டில் இருந்த மீன் துண்டங்களை எடுத்து பேரன் தட்டில் வைத்தார்.

       “பொண்டாட்டியை நினைச்சே சரியா சாப்பிடறதில்லை. எனக்கென்னமோ அது கெடக்கும் போலிருக்கு. நீங்கதான் போயிடுவீங்க போலிருக்கு. நல்லா சாப்பிடுங்க” என ஆச்சி அதட்டலாய் இரண்டு மீன் துண்டுகளை எடுத்து அவர் தட்டில் வைத்தாள்.

    நமச்சிவாயம் ஆச்சியைப் பார்த்தார. அவருடைய மனம் நெகிழ்ந்து.

      “ஆச்சி நீ மட்டும் இந்த வீட்ல இல்லைன்னா…நினைக்கவே பயமாயிருக்கு”

      “ஆமா…நான் இல்லன்னா யாரும் சாப்பிடாம தூங்காம கிடப்பாங்க. பூனைக் கண்ணை மூடிட்டா பூலோகமே இருண்டு போயிடும் பாரு…. சாப்பிடற நேரத்துல அதையும் இதையும் பேசிக்கிட்டு. சாப்பிடுங்க” என அதட்டினாள் ஆச்சி.

      “அப்பா கோவில் வேலையெல்லாம் எப்படிப் போயிட்டு இருக்கு?” என்றார் நமச்சிவாயம்.

      “ம்…ஊருக்காரங்க எல்லாத்தையும் பாத்துக்கிறாங்க. இதோ இவனையும் அப்பப்ப கோவிலுக்கு அனுப்பி பார்த்துட்டு வரச் சொல்லிக்கிட்டிருக்கேன்”




    அவர் அப்படி கோவிலுக்கு மௌரியனை அடிக்கடி அனுப்பவது அவர்களுக்கும் நிம்மதியாக இருந்தது.

    அவனுடைய மனதில் ஏற்பட்டிருந்த காதல் தோல்வி இந்த இடமாற்றம் கோவில் வேலைகள் இவற்றால் அவனுடைய மனம் லேசாகும் என நினைத்தனர்.

     “இந்த வருஷம் யாரு காளி கட்டிக்கப் போறா?” என்ற நமச்சிவாயத்தை ஏறிட்ட தாத்தா ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு சாதத்தைக் கிளறி வாயில் வைத்தவாறே சொன்னார்.

       “நான்தான்”

    இதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்.

    வாயில் வைக்கப் போன சோற்றை வைக்காமலேயே அதிர்;ச்சியுடன் ஏறிட்டார் நமச்சிவாயம்.

       “அப்பா…என்ன சொல்றிங்க? நீங்களா?”

      “ஆமா…”

      “ஏங்கய்யா…இந்த வயசுல நீங்க போயி எப்படி…காளிக் கட்டிக்கிட்டு…?  ஆச்சி அவரை பாவமாகப் பார்த்தாள்.

      “அவ பொழைச்சு வரனும்னு காளிக் கட்டிக்கறதா வேண்டிக்கிட்டேன்,”

     “அப்பா…உங்களால முடியுமா? காளி கட்டிக்கறதுன்னா சாதாராண விசயமா? உடம்பு ஒத்துழைக்க வேணாமா? நாள் பூரா பச்சத்தண்ணிக் குடிக்காம வேஷங்கட்டி, எட்டுப் பட்டியையும் சுத்தி  ஆடனும்.”

       “வேண்டிக்கிட்டேன். ஆத்தா சக்தி தருவா.”

    அதன் பிறகு அங்கே மௌனம் நிலவியது. யாரும் பேசவில்லை.

    ஆச்சிதான் மெல்ல ஆரம்பித்தாள்.

       “ஐய்யா…ஒண்ணு சொல்லட்டா”

      “சொல்லு”

      “அம்மாவை பாடைக்கட்டிப் போட்டா என்ன?”

   இதைக் கேட்டு அதிர்ந்துப் போனான் மௌரியன்.

   ஆனால் அது மற்றவர்களின் முகத்தில் அதிர்ச்சியைத் தரவில்லை.

     ‘என்ன இந்த கிழவி சாவறதுக்கு முன்னாடியே பாடைக்கட்ட சொல்றா’ என ஆத்திரப்பட்டான்.

    “பாடைக்கட்டிப் போடலாம்தான். காலம் காலமா பாடைக்கட்டி கிடக்கறவங்க மேல காளியாத்தா உயிர்த்தண்ணி தெளிச்சா அவங்க பொழைச்சப்பாங்கங்கற நம்பிக்கை இருக்கு. ஆனா…இவ ஆறுமாசமா படுத்த படுக்கையா கெடக்கறா. இன்னைக்கோ நாளைக்கோன்னு உசிரை கையில பிடிச்சிக்கிட்டு கெடக்கா. காளியாத்தா உயிர் தண்ணி தெளிச்சு இவ பொழைக்கலைன்னா…ஆத்தாவோட சக்தியை ஊரு சந்தேகப்படும்படி ஆயிடும். அதான் யோசிக்கறேன்.”

    “அதுக்காக பாக்க முடியுமா? ஆத்தா தன்னோட சக்தியை காப்பாத்திக்கவாவது அம்மாவை பொழைக்க வச்சடுவா பாருங்க. அம்மாவை நாம பாடைக்கட்டிப் போடுவோம்”

    மௌரியனுக்கு ஒன்றும் புரியவில்லை. “தாத்தா…என்னது இது உயிரோட இருக்கறவங்களை எதுக்கு பாடைக்கட்டனும்னு சொல்றிங்க?” என்றான்.

    ஆச்சிதான் அதற்கும் பதில் சொன்னாள்.

        “ராசா நீ ரொம்ப வருசமா ஊருக்கே வரலை இல்லியா? அதான் எல்லாத்தையும் மறந்துட்ட. காளி கட்டி ஆடும்போது கோவில் வாசல்ல ஊருக்குள்ள உடம்பு சரியில்லாதவங்க, சாவ பொழைக்க கெடக்கறவங்க இவங்களை பாடைக்கட்டிப் போட்டா காளி உயிர்த்தண்ணி தெளிப்பா. அவங்க உயிர் பிழைச்சுப்பாங்க. அந்தக் காலத்துல ஒருத்தி தன்னோட புருசனை அவன் செத்து போயிடுவானோங்கற நேரத்துல இந்த மாதிரி




கோவில்ல கொண்டு வந்துப்போட்டாளாம். அவன் உயிர் பொழைச்சுக்கிட்டானாம். அதிலேர்ந்து இந்த வழக்கம்.”

        “இதெல்லாம் சுத்த மூட நம்பிக்கை. பாடைக்கட்டிப் போட்டா பொழைச்சிடுவாங்களாம். அப்ப ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலேயும் ஐசியு வார்டுல இருக்கறவங்களை இப்படி கொண்டாந்து பாடைக்கட்டிப் போடுங்களேன் பொழைக்கறாங்களான்னு பார்ப்போம்.” என்றான்.

     நமச்சிவாயத்திற்கு சிரிப்பாக வந்தது.

இவன் வயதில் இவரும் இப்படித்தான் கேட்டிருக்கிறார். எல்லார் முன்னிலையிலேயும் அந்த நேரத்தில் சிரிக்கக் கூடாதென இருந்தார்.

   ஜானகி மட்டும் மகனை முறைத்தாள்.

      “ராசா அப்படி சொல்லாதப்பா…சாமி குத்தமாயிடம். தாத்தா வேற காளிக் கட்டிக்கப் போறார்.” என்றாள் ஆச்சி.

      “ஏன் பாட்டியைக் கட்டிகிட்டது  பத்தாதா? காளியை வேற கட்டிக்கப் போறாரா?”

     “ஐய்யோ…ஐய்யோ…என்னா பேச்சு பேசற? காளி கட்டிக்கறதுங்கறது காளி வேஷம் போடறது”

     “காளின்னா பொம்பளைதானே. அப்பறம் என் ஆம்பளைங்க காளி வேஷம் போட்டுக்கறாங்க. பொம்பளைங்க போட மாட்டாங்களா?|         இந்தக் கேள்விக்கு யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.

      “அது வந்துப்பா…காளி வேஷம் போட்டுக்கறவங்க மேல காளி நெஜம்மாவே பிரசன்னமாயிடுவா. அவளோட சக்தியை தாங்கிக்கற உடல் வலிமை பொம்பளைங்களுக்கு கிடையாது. தவிர அப்ப காளி ஆடற ஆட்டம் இருக்கே அது மாதிரி பொம்பளையால ஆட முடியாது….அப்பறம்…” என ஆச்சி ஏதேதோ கதைகள் சொல்லி சொல்லி சமாளித்தபடியும் அவனை ஆச்சரியப்படவும் வைத்துக் கொண்டிருந்தாள்.

     அந்த கதைகளைப் கேட்க கேட்க மௌரியனுக்குள்ளும் காளியின் ஆவேசம் வந்துக் கொண்டிருந்தது,

    அவனுடைய கண் முன்னே…சாரலின் முகம் தெரிந்தது.

    அவளுடைய கழுத்தை  பிடித்து தன் கோரைப் பற்களால் ரத்தம் குடிக்க வேண்டும் போல்துடித்தது உள்ளுக்குள் இருந்த காளி.




What’s your Reaction?
+1
12
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!