Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-26

(26)

அந்த சூடான பானம் தொண்டைக்கு மிக இதமாக இருந்தது .அதை அருந்தி முடித்ததும் கேவல்கள் குறைந்து ஒரு நிதானத்திற்கு வர முடிந்தது முகிலினிக்கு .இப்போது தனது அழுகைக்காக  சிறிது வெட்கமாக கூட இருந்தது அவளுக்கு .
காலி கப்பை கீழே வைத்த முகிலினியின் கைகளை பற்றி தனது மடியில் வைத்துக் கொண்டார் பாட்டியம்மா .

” உங்களுக்குள் என்னம்மா பிரச்சினை ? இப்படி கை நீட்டும் அளவுக்கு ..ம் ? ” என்றார் பரிவாக .மூக்கை உறிஞ்சியபடி தனது பாரத்தை அவரிடம் இறக்கி வைக்க வாயை திறந்த முகிலினி திகைத்தாள் .

இதனை எப்படி பாட்டியிடம் சொல்ல முடியும் ? சந்திரவதனா அவரது மகள் .சௌம்யா அவருக்கு பேத்தி .ரத்த உறவுகள் இவர்கள் .நான் பேரன்  மனைவியென்றாலும் வேறு குடும்பத்து பெண் .அதுவும் ஒரு திடீர் திருமணத்தில் உள்ளே வந்தவள் .

என்னை பாட்டி ஏற்றுக்கொண்டாரா என்பதே இன்னும் சரியாக தெரியவில்லை .அழும் குழந்தைக்கு மிட்டாய் போல கூட இந்த அன்பு இருக்கக்கூடும் .இதில் அவர்கள் சொந்தத்தையே அவர்களிடம் குறை கூறினால் , …

நேற்று இவர்கள் பேரன் எனக்கு பேய் பிடித்து விட்டதாக கூறினார் .இனி இவர்களும் கூறுவார்கள் .வாயை திறந்து விட்டு மீண்டும் இறுக மூடிக்கொண்டாள் .

பாட்டி மெல்ல அவள் தலையை வருடினாள் .” முகில்மா உங்களுக்குள் என்ன பிரச்சினையோ எனக்கு தெரியாது ? ஆனால் அது நந்துவோட அன்பை பற்றியதாக இருந்தால் என்னால் உனக்கு சில விளக்கங்கள் கொடுக்க முடியும் .

நந்துவை அவன் உயிருக்கு ஆபத்திருந்த நிலையில் அவனுக்கு சிறிதும் விருப்பமற்ற நிலையில்தான் உங்கள் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அனுப்பி  வைத்தேன் .எப்போது  திரும்பி வந்து விடுவானோ என்ற பயத்தோடு இருந்தேன் .

ஆனால் அவன் அங்கேயே பசை போல் ஒட்டிக் கொண்டான் .விசாரித்த போது உன்னை பற்றிய விவரம் எனக்கு வந்தது .உன் தந்தை , தாய் பற்றி எனக்கு விவரணை தேவையிருக்கவில்லை .அவர்களை நான் நன்கு அறிவேன் .நல்ல வித்திலிருத்து முத்தன்றி வேறு விளைந்திருக்க வாய்ப்பில்லையே .

இருந்தும் ஒரு சிறு மன திருப்திக்காக மோகனரங்கத்தை அங்கே அனுப்பி வைத்தேன் .அப்போது யதுநந்தனின் இருப்பிடம் இங்கே அனைவருக்கும் தெரிய வந்துவிட்ட நேரம் .உன்னால் அவன் இருப்பிடம் வெளி வந்ததால் அதில் மோகனுக்கு உன்னிடம் சிறு அதிருப்தி .”




முகிலினிக்கு அன்று தன் வீட்டில் தன்னை ஆராய்ச்சி பார்வை பார்த்த மோகனரங்கம் நினைவு வந்தார் .எவ்வளவு கூர்மையான குத்தும் பார்வை .

” அன்று நீதான் முகிலினியா ?  என கேட்டபோது , பதில் சொல்லாமல் கையை கட்டிக் கொண்டு ஒரு பார்வை பார்த்தாயாமே .மோகன் அசந்து விட்டானாம் .

” அப்படியே உங்களை சிறு வயதில் பார்த்தது போல் இருந்தது அக்கா “, என என்னிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்தான் .”

ஆக நான் அவரையும் தவறாகத்தான் கணித்திருக்கிறேன் .மனதிற்குள்ளாக நொந்து கொண்டாள் முகிலினி .

“ஆனாலும் என்னால் இந்த காதலை நம்ப முடியவில்லை .காரணம் நந்தன்தான் .அவன் ஒரு பெண்ணின் மீது திருமணம் என்பது வரை ஆசை கொள்வானென நான் நம்பவில்லை .அவன் இயல்பிலேயே பெண்கள் மீது நாட்டமில்லாதவனாகவே இருந்தான்.

பெண்ணென்றால் ஒரு அலட்சியம். பணத்திற்காக எதுவும் செய்பவர்கள் என்ற எண்ணம் அவனுக்கு உண்டு .அபுர்வமாக அவனுக்கு வாய்த்த பெண் தோழிகள் கூட அமிஷா , காருண்யா போல ஒரு வகையில் சாதனை பெண்களாகவே இருந்தனர் .

அவன் உன்னை திருமணம் செய்து கொள்வானென உன்னை மணம் முடித்து இங்கே அழைத்து வரும் வரை எனக்கு நம்பிக்கை இல்லை .அன்று உங்கள் இருவரையும் அந்நியோன்னியமாக கோவிலில் வைத்து பார்த்தேனே .அன்று எனக்கிருந்த மகிழ்ச்சிக்கு இணையில்லை .”

சிறு கூச்சத்துடன் தலை குனிந்து கொண்டாள் முகிலினி .

” நீங்கள் இருவரும் சந்தோசமாக மணவாழ்க்கையை வாழ்கிறீர்கள் என நினைத்தேன் .ஆனால் ….இப்போது …என்னம்மா ? என்ன பிரச்சினை ? “, என்றார் பாட்டியம்மா .

” அவர் அன்பில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை பாட்டி .நான் பதிலுக்கு அவர் மீது காட்டும் அன்பு முள்ளில்லாத அபூர்வ வகை ரோஜாவாக கள் வழிய இருக்க வேண்டுமென நினைத்தேன் .நான் …அது …வந்து ..சும்மா தாலி கட்டிவிட்ட ஒரு காரணத்திற்காக மட்டும் உடனே கட்டிலில் அன்பை காட்ட போய்விடக் கூடாது என்று நினைத்தேன் .

எங்களிருவருக்குமிடையே இருக்கும் அன்பு பரஸ்பரம் சிறு உறுத்தலுமின்றி அழகான மழலை பாதமாக முதலில்  மனதில் ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்தேன்.அதனால் எங்களுக்கிடையில் ஒரு மென் திரை விரிந்து கிடந்தது .ஆனால் அது இப்போது சுவராக மாறி விடுமோ ? என பயப்படுகிறேன்.” என்றாள் .

இதற்கு மேலும்தான் பாட்டியின் மகளையோ , பேத்தியையோ குறை சொல்ல முடியாதே .பின் பாட்டியும் கூட என்னை விரட்டினாலும் விரட்டுங்க விடுவார் .அவரைப்போல .என்று துயரத்துடன் நினைத்தபடி

ஏன் பாட்டி அவரை மனம் பாதிக்கும் அளவு மிகவும்  கோபமூட்டி விட்டால் அவர்களை ஒதுக்கி விடுவாராமே ? அப்படியா ? ” எனக் கேட்டாள் .

பெருமூச்சுடன் ஒப்புதலாக தலையசைத்தார் பாட்டியம்மாள் .” ஆமாம்மா .அவன் படிக்கும் போது யாரோ ஒரு பெண்ணுடன் பைக்கில் போனதை கொஞ்சம் சந்தேகத்துடன் விசாரித்தாள் அவன் அம்மா .அவ்வளவுதான் .என் மேல் எப்படி சந்தேகப்படலாமென ஒரு வருடம் வரை அவன் அம்மாவுடன் பேசாமலேயே இருந்தான் .”

முகிலினியின் முகம் வெளுத்தது .அதனை பார்த்ததும் ” ஆனால் நீ அவனுடைய ஆசை காதலி ஆயிற்றே .உன்னையும் அதே போன்றே நடத்துவானென்று நான் நினைக்கவில்லை ” ஆதரவாக உரைத்தார் .




ஆனால் முகிலினி அப்படித்தான் நினைத்தாள் .ஒரு முறை சந்தேகப்பட்டதற்கே அவன் அன்னைக்கே ஒரு வருட தண்டனை .நான் அவன் சொன்னது போலவே எப்போதும் சந்தேக கண்ணுடனேயே இருந்திருக்கிறேன் .என்னை இனி திரும்பியாவது பார்ப்பானா ?

மனதிற்குள் இருந்த அளவற்ற கோபத்தின் வெளிப்பாடு தானே நேற்று விழுந்த அறை “, முகிலினியின் கைகள் தானே கன்னத்தை தடவியது .

” எதையாவது நினைத்து மனதை குழப்பிக் கொள்ளாதேம்மா .” என்றார் பாட்டியம்மாள் .பின் ” ஒரு நிமிடம்மா ” என்று எழுந்து தன் இடுப்பிலிருக்கும் சாவிக்கொத்தால் பீரோவை திறந்தார் .அந்த நீளமான நகை பெட்டியை எடுத்து வந்தார் .

அது அன்று கோவிலில் வைத்து பூஜை செய்த நகைப்பெட்டி .அதனை முகிலினி கைகளில் கொடுத்தார் .” திறந்து பாரம்மா ” என்றார் .

திறந்து பார்த்த முகிலினி பிரமிப்பால் விழி விரித்தாள் .அது ஒரு தாலி .தங்கத்தில் சரடு செய்யப்பட்டு  தாலியின் நடுவில் அம்மையப்பன் உருவம் உயர்ஜாதி  வைரத்தில்  அமைக்கப்பட்டு நவரத்தினங்களும் சுற்றி பதிக்கப்பட்டிருந்தது.அதன் வடிவமைப்பு அதன் பழந்தன்மையை சொன்னது .அதன் ஜொலிப்பு விலைமதிப்பை சொன்னது .

” இது நம் பரம்பரை மங்கலநாண் முகில்மா .என் கழுத்தில் இருந்தது .என் மாமியார் எனக்கு கொடுத்தார் .ஆனால் அவர் அணிந்திருக்கவில்லை .”கேள்வியாய் நோக்கினாள் முகிலினி .

” இதற்கு  ஒரு கதை உண்டும்மா .இது நம் பரம்பரையில் அரசர் காலத்திலிருந்து வழிவழியாக நமக்கு வந்ததாக கூறப்பட்டு வருகிறது .நமது முன்னோர்கள் காலத்தில் ஒரு அரசர் கிட்டத்தட்ட தனது உயிரை தானமாக கொடுக்கும் அளவிற்கு போய் தன் குடும்பத்தை காத்த தன் மனைவிக்கு பரிசாக இந்த மங்கலநாணை செய்து கொடுத்தார் .

அது அந்த பெண்ணின் கழுத்திலிருக்கும் வரை அந்த குடும்பத்தில் நற்சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன .அவள் கணவரின் மரணத்தின் பின் நிறை பால் சொம்பில் போடப்பட்டு பாதுகாக்கப்பட்ட அந்த மங்கலநாண் அவள் மருமகள் கழுத்திற்கு போனதும் பல தீயசம்பவங்கள் நடக்க , மீண்டும் அது நிறை பால்சொம்பிற்குள்ளேயே பாதுகாக்கப்பட்டது .

பின் அவளின் மருமகளின் கழுத்திற்கு போனபோது நல்ல சம்பவங்கள் நடக்க , இதனை அணியப்போகும்  பெண்களின் பின்னணி ஆராயப்பட்டு அவர்களில்  கள்ளமற்றவர்களாக , குடும்ப நலனை கருத்தில் கொள்பவர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே அணியக் கொடுக்க பரம்பரை சீராக வளர்ந்தது .சிறு தவறு இருந்தாலும் தீயவை நடந்தன .

இந்த மங்கலநாணை  நம் பரம்பரை தெய்வமாக போற்ற ஆரம்பித்தோம் .எனக்கு முன்பு மூன்று தலைமுறையாக யாருக்கும் இந்த மங்கலநாண் பொருந்தவில்லை .எனக்கு பொருந்தி வந்தது .மூன்று தலைமுறைகளாக நலிந்திருந்த நம் குலத்தொழில் தலையெடுத்து நிமிர்ந்தது .

அப்போது கூட்டுத்தொழில் வேண்டாமென்ற என் சொல்லை கேட்காமல் என் கணவர் அவர் தம்பியுடன் ஆரம்பித்த தொழில் நன்றாக நடந்தாலும் , பாகப்பிரிவினை பிரச்சினை வந்துவிட்டது .தம்பி கேட்டதையெல்லாம் கொடுத்துவிட்டு பிரிந்து வந்த பிறகும் தொழில் பல மடங்கு முன்னேறவே செய்தது .

இருந்தும் நம்பி சேர்ந்த தம்பி செய்த துரோகம் என் கணவரை பாதிக்க அவர் அதிக நாட்கள் உயிரோடு இருக்கவில்லை .அதன்பிறகு நந்தனின் அம்மாவிற்கு இந்த மங்கலநாண் ஒத்துவரவில்லை .இதோ இன்று வரை இதனை நான் பாதுகாத்து வருகிறேன் .இதற்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை நம் குலதெய்வ கோவிலில் பூஜை செய்ய வேண்டும்.

இப்போது இந்த மங்கலநாண் தனது அடுத்த பயணத்திற்காக அமைதியாக காத்துக் கொண்டிருக்கிறது .அது இளைப்பாறுமிடம் உன் கழுத்தாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன் .” என்றார் .

அந்த மங்கலநாணை தன் கண்களில் ஒற்றிக்கொண்ட முகிலினி , அதனை கவனமாக பெட்டியில் வைத்து பாட்டியிடமே நீட்டினாள் .

” பாட்டி தெய்வத்தன்மை நிறைந்த இந்த மங்கலநாணை அணிந்து கொள்ளும் தகுதி எனக்கிருக்கிறதா என முதலில் என்னை நான் ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொள்கிறேன் .பிறகு இதனை அணிந்து கொள்கிறேன் .ஏனெனில் ஒரு சிறு தவறும் நம் குடும்ப வளர்ச்சியையே  பாதிக்கும்.” என்றாள் .

அவளை அணைத்து உச்சி முகர்ந்தார் பாட்டியம்மாள் .” தங்கம் வைரமென்றதும் பாய்ந்து வந்து அள்ளி கழுத்தில் போட்டுக் கொள்ளும் பெண்களைத்தான் பார்த்திருக்கிறேன் .நீ மிகவும் வித்தியாசமானவள் .நந்தன் சொன்னது சரிதான் .” என்றாள் .

” என்ன சொன்னார் பாட்டி ?”

” என் மனைவி நிச்சயமாக இந்த மங்கலநாணுக்கு பொருந்தியவளாக இருப்பாள் .”

கண்கள் கலங்கியது முகிலினிக்கு .என் யதுவுக்கு என் மேல் எவ்வளவு நம்பிக்கை .

” கண்ணை துடைத்துக் கொண்டு போம்மா .நல்லதே நடக்கும் ” என்றார் பாட்டியம்மாள் .

“முகில்மா கணவன் மனைவிக்கிடையில் என்றுமே ஈகோ வரக்கூடாது ” என்றார் முகிலினி வெளியேறும் போது .

புரிந்து கொண்ட பாவனையில் தலையசைத்து வெளியேறி தங்கள்  அறையை அடைந்த முகிலினி துணுக்குற்றாள் .

அறைக்குள் மிக அருகே நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர் சௌம்யாவும் , யதுநந்தனும் .

இவளை பார்த்து விட்ட சௌம்யாவின் பார்வையில் வெற்றி மதர்ப்பு இருந்தது .




What’s your Reaction?
+1
22
+1
16
+1
2
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!