Serial Stories

எனை ஆளும் நிரந்தரா-15

15

“இதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வையேன் மானு.கல்யாணமென்றால் எத்தனை வீட்டு வேலைகள் இருக்கிறது? எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை” சகுந்தலா பரபரப்போடு அங்குமிங்கும் அலைய,மானசி புன்னகையோடு தாயை பார்த்தாள்.

மூன்று மாதங்கள் கழித்து நடக்கப் போகும் திருமணத்திற்கு இப்போதே பரபரப்பு.அம்மா காட்டி விட்டுப் போன அலமாரியை இழுத்துப் போட்டு ஒதுக்கலானாள்.மனம் முழுவதும் இரண்டு நாட்கள் முன்பு சிவ நடராஜன் கொடுத்த முத்தத்தின் சுவடுகள் தித்திப்பாய் பரவியிருந்தது. அவனுடனான திருமண வாழ்வு அவ்வளவு கடினமாயிருக்காதென அவளுக்கு தோன்ற ஆரம்பித்திருந்தது.

அண்ணன் அக்கா என காரணம் சொல்லி இருவரும் தங்கள் வாழ்விற்கு ஒரு வட்டம் போட்டுக் கொண்டாலும்,தங்களுக்கெனவும் தனி வாழ்விருக்கிறதென்பதை உணர வைத்ததல்லவா அந்த முத்தம்?

தரைக்கு மேல் ஓரடி உயர்ந்து விட்ட பாதங்களுடன் இரண்டு நாட்களாக நடமாடிக் கொண்டிருந்தாள் அவள்.பாடலொன்றை மெலிதாய் முணுமுணுத்தபடி அலமாரியை அடுக்க துவங்கியவளின் கண்களில் அந்த நோட்டு தென்பட்டது.காதம்பரியின் நோட்டு…

முகமெங்கும் வியர்த்து விட அப்படியே அமர்ந்து விட்டாள்.இந்த சம்பவத்தை அவள் மறந்து விட்டாளென்றில்லை.அவளால் மறக்க கூடிய விசயமுமில்லை இது.காதம்பரி சிவ நடராஜனின் சிறு வயது முட்டாள் காதல் என மனதை சமாதானம் செய்து வைத்திருந்தாள்.

நடுங்கும் விரல்களால் நோட்டை புரட்டி கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு முன்பு படித்ததை மீண்டும் வாசித்தாள்.பக்கம் முழுவதும் வாங்கிய முத்தத்தின் ஈரங்களை விலாவரியாக எழுதி வைத்திருந்தாள் காதம்பரி.

சற்று முன் நிமிடத்திற்கொரு முறை மின்னல்களை உடலுக்குள் அனுப்பிக் கொண்டிருந்த சிவ நடராஜனின் முத்தங்கள் இப்போது மதிய கதிராய் காய்ந்தன.எந்த வயதிலும் முத்தங்கள் இவனுக்கு இப்படித்தானா? ரசித்து…ருசித்து…அவனது வார்த்தைகளே இப்போது அவளுள் குறுவாளை  பாய்ச்சின.

இதை மறந்து விடு…திரும்ப திரும்ப மானசியின் மனம் எடுத்துக் கூறினாலும்,ஒரு வகை விரக்தியினுள் விழுந்தாள்.

“கோவிலுக்கு போயிட்டு வர்றேம்மா” மன அமைதிக்காக கிளம்பி விட்டாள்.

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்கம்மா.மேடம் சாமி கும்பிட்டு வரட்டும்” கோவில் பணியாள் இவளை நிறுத்த,மானசியினுள் கோபக்கனல்.கொஞ்சம் தாட்டியான பெண்ணொருத்தி பட்டு சேலையில் உடல் முழுவதும் நகைகளுடன் சந்நிதியை சுற்றி விட்டு தீபாரதனைக்காக நின்றிருந்தாள்.

“எங்கள் ஊர் கோவிலில் என்னையே நிறுத்துகிறாயா?” மானசியை நன்கு அறிந்த அந்த ஊழியர் தடுமாற,அந்தப் பெண் திரும்பிப் பார்த்தாள்.உடன் அவள் முகம் மலர்ச்சிக்கு போனது.அங்கிருந்தே கையசைத்து கூப்பிட்டாள்…

“மானசி”




மானசி திகைப்பாய் அவளருகே போனாள்.அவள் கைகளை பற்றிக் கொண்டவள்”எப்படி இருக்கிறாய் மானசி?உன்னைப் பார்த்ததில் ரொம்ப சந்தோசம்” பேசிக் கொண்டே போக,மானசி நாசுக்காய் கைகளை உருவிக் கொண்டாள்

“சாரி…எனக்கு உங்களை…வந்து…நீங்க யாருன்னு தெரியலை”

அந்தப் பெண்ணின் முகம் வாடியது.”அடையாளம் தெரியாமல் மாறி விட்டேனா?ஆனால் நீ அப்படியேதான் இருக்கிறாய்.அதே குழந்தை முகம். மாறவேயில்லை. சிவா

சொன்னது சரிதான்”

 மானசி திடுக்கிட்டாள் ” எந்த சிவாவை சொல்கிறீர்கள்?”

“நம்ம ஹீரோ சிவாவைத்தான்” அந்தப் பெண் லேசாக கண் சிமிட்ட மானசிக்கு வாந்தி வரும் போல் இருந்தது.

“ஏய் மானசி இன்னமும் என்னைத் தெரியவில்லையா? நான் காதம்பரி”

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வாங்கி ஸ்தம்பித்து நின்ற  மானசியின் தோளில் கை வைத்தாள் காதம்பரி.

“நம்ம ப்ரெண்ட்ஷில் சிவாவோடு மட்டும்தான் தொடர்பில் இருக்கிறேன்.உனக்கே தெரியுமே…என்னோட ஹீரோ அவன்தான்.போனால் போகிறதென என் ஹீரோவை உனக்கும் கொஞ்சம் விட்டுத் தருகிறேன்.பிழைத்துப் போ”

“மேடம்” இவர்கள் பேச ஆரம்பித்ததும் பணிவுடன் தள்ளிப் போய் நின்று கொண்ட பெண்களில் ஒருத்தி  அர்ச்சனைத் தட்டை கொண்டு வந்து நீட்டினாள்.அதனை வாங்கி ஐயரிடம் கொடுத்த காதம்பரி அர்ச்சனைக்காக சொன்ன பெயரில் மானசி திடுக்கிட்டாள்.

சிவ நடராஜனின் குலம்,கோத்திரம்,நட்சத்திரம் என தெளிவாக சொல்லி விட்டு விழி மூடி காதம்பரி கடவுளை தொழ ஆரம்பிக்க,மானசி மெல்ல அங்கிருந்து விலகி வந்துவிட்டாள்.

ஒரு மனிதனின் முதல் காதலை அவனால் எப்பொழுதும் மறக்க முடியாது.எப்போதோ எங்கோ படித்த வரிகள் இப்போது மானசிக்கு நினைவு வந்து மனதை இம்சித்தன.

இப்போது நான் என்ன செய்யப் போகிறேன்? அவனுடைய அக்காவிற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடுகள் என்பது தெளிவு. ஆக இதிலிருந்து அவன் பின் வாங்கப் போவதில்லை. ஆனால் ஒப்புக்கு எந்திரம் போல் அவனுடன் வாழ என்னால் முடியுமா?

மனம் முழுவதும் குழப்பத்தில் இருந்தவள் சிவ நடராஜனின் இரண்டு போன் அழைப்புகளை கவனிக்கவில்லை.கவனித்த பிறகு மேலும் இரண்டு அழைப்புகளை தானே தவறவிட்டாள். அவனும் அதன் பிறகு அழைக்கவில்லை.

 அதுதானே ஏன் அழைக்கப் போகிறான்? அவனுக்கென  ஒருத்தி காத்துக்கொண்டிருக்கையில் என்னை ஏன் அழைக்கப் போகிறான்? நினைத்தபடி சோர்ந்து கிடந்தவள் முன் சிவஜோதி வந்து நின்றாள்.

” இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம். முகத்தை இப்படி வைத்துக் கொண்டு படுத்துக் கிடந்தால் என்ன அர்த்தம்? எழுந்து வா பியூட்டி பார்லர் போய்விட்டு வரலாம்”

“நான் வரவில்லை” தலையசைத்து மறுத்தாள் மானசி.

அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு போன சிவஜோதி அடுத்த நிமிடமே வெற்றிவேலனுடன் வந்து நின்றாள். “என்ன மானு ஜோதி கூப்பிட்டால் போக வேண்டியதுதானே?” தாங்கல் தெரிந்த அண்ணனின் குரலில் வெறுத்து பார்த்தாள்.

 இப்போது ஒரு மாதமாகத்தான் முகத்தில் ஒளியுடன் நடமாடிக் கொண்டிருக்கிறான். இதற்காக அவள் எவ்வளவு பாடுபட்டாள்? இப்படி தோன்றியவுடன் சட்டென எழுந்து விட்டாள் “போகலாம்”

“ரெட் ஒயின் பேசியல், கோல்டன் பேசியல், பிரஸ் ப்ரூட் பேசியல்…” என்று தானே கல்யாணப் பெண் போல் சிவஜோதி தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க, மனம் அதில் ஒட்டாமல் பார்லரின் ஜன்னல் வழியே  சாலையை வேடிக்கை பார்த்த  மானசி ஓரிடத்தில் விழிகள் நிலைக்க அதிர்ந்தாள்.

 அங்கே சிவ நடராஜனின் ராயல் என்ஃபீல்டை காதம்பரி ஓட்டிச் செல்ல அவளுக்கு பின்னால் அமர்ந்திருந்தான் அவன். இருவரின் முகத்திலும் உற்சாகம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.




இவர்களின் உறவு திருமணத்திற்கு பின்பும் முடியப்போவதில்லை என்று புரிந்து விட மானசிக்கு அழுகை வந்தது.

“வா மானசி” பேஷியலுக்கு  சிவஜோதி அவள் தோள் தொட்டு அழைக்க பட்டென அந்த கையை உதறினாள்.

“திருமணத்தையே நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன். இதில் அலங்காரத்திற்கு என்ன அவசியம் ?”வெடு வெடுத்து விட்டு வேகமாக அங்கிருந்து வந்து விட்டாள் மானசி.

அடுத்த அரைமணியில் அவள் அறையினுள் வந்து நின்றான்

சிவ நடராஜன்.

“என்ன விஷயம் மானசி?”




What’s your Reaction?
+1
41
+1
21
+1
2
+1
1
+1
2
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!