Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-9

9

“ஆவிக்கும் எடுக்குமோ தாகம்? அதனாலா ரத்தத்தில் வேகம்?” ஹரிணி கவிதை பாடினாள். 

“என் பிராணனை நீ எடுக்கறது போதாதுன்னு இந்த ஆவியும் எடுக்கப் போகுது இனிமே! ஹேய், இது பாரு… இந்த ரத்தக் கோடு இழுத்துட்டே போய் இதோ இந்த ரூம்ல முடியுதே. ரூமும் உள்பக்கம் பூட்டிய மாதிரி இருக்கு. அப்போ உள்ளே எதுவும், இல்ல… யாரும், இருக்காங்களா?”

ஆதித்யா இதோ வருகிறேன் என முத்துவேலுடன் சென்ற பிறகுதான் இந்த ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. 

நூல் பிடித்தாற்போல் ரத்தத்தை பிடித்துச் சென்ற இருவரும் சட்டென்று ஒரு உருவத்தில் முட்டிக் கொண்டனர். 

அவ்வுருவத்தின் கண்கள் பெரிய கோலிக் குண்டாய் தெறித்து வெளியில் விழுந்து விடும் போல் இருக்க மூக்கு கோணலாய் சப்பையாய் இருந்தது. சிரிப்பென்பதே அறியாத உருவம் என்பதை அதன் தடித்த உதடுகளும் முன் துருத்தி நின்ற ஈட்டி போன்ற பற்களும் சொல்லியது. போலியோ வந்த ஒரு கால் அவன் ஏன் சாய்ந்து நடக்கிறான் எனச் சொன்னது.

“எங்கே இருந்து வர நீ? பூட்டிய கட்டுக்குள் நீ எப்படி?” ஹரி கேட்டான்.

“அதோ, சமையல் கூடம், அங்கிருந்து வரேன். உனக்கு என்ன வேணும்? சைவமா? அசைவமா?”

“ஓ! சமையல்கட்டுப் பகுதிக் கதவு எப்பவும் திறந்திருக்குமா? அதுக்கு வேற வழியும் இருக்கா?”

“இருக்கு. இல்லாம நாங்க என்ன உங்க கட்டுக்குள்ள புகுந்து வருவோமா என்ன? சரி, சொல்லு! புதுசா வந்திருக்கியே, அசைவம் சாப்பிடுவியா? காடை கௌதாரி எல்லாம் இருக்கு.”

“எனக்கு மாமிசம் தான் வேணும். மனுஷ மாமிசம்!” ஹரி ஆழம் பார்த்தான்.

“அது… அது..!”

“இந்த ரத்தக் கோடு என்னது? எங்கிருந்து எதுவரை போச்சுன்னா… இந்த அறை தான்… இதில் யார் இருக்கா இப்போ? வெளிப்பகுதி பூட்டப் பட்டாலும் உள்ளிருந்து நீங்க எல்லோரும் வர வசதி இருக்கும் போது, இந்த அறை ரகசியம் உனக்குத் தெரிந்தே இருக்கும். சொல்லு! முதலில் உன் பேரைச் சொல்லு” ஹரிணி கையில் துப்பாக்கியுடன் குரல் உயர்த்தினாள்.

“நானு செந்தாமரை. முத்துவேல் வந்தானே அவனோட தோஸ்து. இங்கன தான் ரொம்ப வருஷமா கெடக்கேன். இந்த வீட்டில் ஆல் இன் ஆல் நாந்தான்!”

“ஆக அமானுஷ்யம் ஆவின்னு கதை கட்டி இந்தப் பகுதிக்கே வர விடாம பண்ணினது நீ தானா? ” ஹரிணி கேட்டாள்.

“இல்லம்மா.. அதெல்லாம் தெரியாது எனக்கு. எனக்கு தெரிஞ்சதெல்லாம் முத்துவேல். அவன்தான் இந்த வேலைய எனக்கு வாங்கிக் கொடுத்தான்.”

“சரி. சொல்லிட்டுப் போ. இந்த அறையில் என்ன இருக்கு? ஏன் இந்த ரத்தக் கோடுகள்?”

“ஐயா! அதுக்குத்தான் வெரசா வந்தேன். இந்த அறைக்குள்ள வெறும் படிக்கட்டு தான் இருக்கு. அதுல ஆவிகளை அடைச்சு படியா கட்டி வைச்சிருக்காங்கன்னு ஒரு பேச்சு. இல்ல… ரணபத்ரக் காளி தான் சூட்சும உருவில் இந்த அறைக்குள்ளாற அடைபட்டுக் கிடக்கான்னு முத்துவேல் சொல்வான்! அதுக்கான படையலை ஒவ்வொரு அமாவாசையும் பௌர்ணமியும் பலியா படைச்சிடுவேன். இன்னிக்கும் பௌர்ணமியில்ல! காலையிலேயே கோழிய வெட்டிப் படைச்சிட்டேன். அதான் இந்த ரத்தக் கீத்து.”

“ம்ம்… சரி… துடைச்சுட்டுப் போ!”

“ஐயா..சாப்பாடு சைவமா? அசைவமா?”

“சைவம்தான்! சுத்த சைவம்! நாங்களே அங்க வரோம். நீ இனி வர வேணாம் செந்தாமரை” – ஹரி சொன்னதும் தலையாட்டிக் கொண்டே சென்றுவிட்டான்.

ஹரியின் போன் அடித்தது. 

அந்தப் பக்கம் ஆதித்யா.

“இன்று இரவு ஒரு பான்ஃபயர் வைச்சுக்கலாமா? நல்ல க்ளைமேட். அமாவாசை இரவு வேறு. சிறு விளையாட்டுகளும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனந்தனை மறக்க இக்கொண்டாட்டம் உதவும். வாட் யூ ஸே?”

“ஓ! நிச்சயமாய்! எத்தனை மணிக்கு?”

“இரவு ஒன்பதில் இருந்து பன்னிரெண்டு மணி வரை!”

“வெல், ஹரிணி நன்றாய் ஆர்கனைஸ் செய்வாள். உங்கள் மனைவியைப் பார்க்க இன்னும் சற்று நேரத்தில் அங்கு வருவாள். பேசிக் கொள்ளுங்கள்.” போனை வைத்த ஹரி தன் கைகளை ஹரிணியை நோக்கி அகல விரித்தான்.




ஓடி வந்து அடைக்கலமானாள் அவள்.

“மை ஸ்வீட்டி!”

“ஸ்வீட்டிக்கு என்னவாம்?”

“நாம் எடுத்துக் கொண்ட ப்ரொஜெக்ட்டிலேயே தலையும் புரியாம காலும் புரியாம நிக்கறது இது ஒண்ணு தான்! எந்த நூலைப் பிடிச்சு எந்த வழி போறது? ம்.. உள்ள இருக்கறது ஆவியா? மாந்திரீகமா? காளியா? இல்லை மனுஷனா? ஆனந்தனை யாரு கொன்னு இருப்பா?”

“காதலியை கையணைப்பில் வைச்சுக்கிட்டு கவிதை சொல்லாம கொலை ஆராய்ச்சி பண்றது நீ ஒருத்தன் தான் ஹரி!”

“ஹேய்… நாம வந்த வேலை அப்படி கண்ணு! சரி, சொல்லு – உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா? பயமா இல்லையா இப்படி ஆவி இருப்பதாய் சொல்லப்படும் கட்டுக்குள் இருப்பது?”

“என்ன பயம் ஹரி நீ இருக்கும் போது? உன் கட்டுக்கு முன் இந்த ஆறாம்கட்டு எம்மாத்திரம்?”

“தேங்க்ஸ்டி பட்டு! ஆமாம், ஆதியின் அம்மா பொங்கல் வைச்சதெல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சுது?”

“முத்துவேல் இருக்க விஷயத்திற்கா பஞ்சம்? அவன் சொன்னதுதான். அந்த எழில்மாறன் கூட அவங்க யூனிட் ஆட்களும் தங்கி இருக்காங்களாம். இப்போ ஒரு செட் எக்ஸ்ட்ரா நடிகர்கள் வேறு! அதை ஆதி சொல்லலை நம்ம கிட்ட!”

“ஓ! ஒவ்வொரு புதிரா  ரிலீஸ் பண்ணுவோம். இப்ப ப்ரெஷ் ஆகிட்டு ஒரு சுத்து போய் விசாரிச்சுட்டு வா! முதலில் காயத்ரி மேடம், அப்புறம் முத்து மீனாட்சி மேடம். இருவரிடமும் தூண்டில் போடு.”

“ஸ்யூர்!”

*****

அதேநேரம் அரண்மனையின் கிழக்கு மூலையில் இருந்த ஒரு வற்றிய ஆற்றின் படிக்கட்டில் அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தார் புரபசர் ராமாமிர்தம். அவருடைய ஆராய்ச்சியின்படி பஞ்சலோகம் மற்றும் நவரத்தின சிலைகள் அங்கு பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாகக் குறிப்புகள் சொல்கிறது – பாரிவள்ளல் காலத்து ஐம்பொன் சிலைகள் அவை.  

மீண்டும் தன் கைவசம் இருந்த குறிப்பைப் படித்தார். குறிப்பு ஒரு பாடலாய் இருந்தது.

ஆறி னெதிரோடும் ஆற்றலுடை ஆறுமது

ஆறா விழிகாக்கும் ஆடையெல்லாம் மஞ்சளம்மா!

வீழ்வாய் வெளிச்சமுண்டு வீசும்கை வலமிருக்க 

விடையது இடம்கொள்ளும் வித்தையல்ல கண்டுபிடி!

இப்பாடல்படி தேடிய போது கிடைத்த ஆறு தான் இது. இறங்கிப் பார்த்து தோண்டலாம் என நினைத்த வேளையில் இரு ஜோடிக் கண்கள் அவரை மறைவாகப் பார்த்த வண்ணம் இருந்தன.

இறங்குவதும் ஏறுவதுமாய் இருந்தவர் சுற்று முற்றும் ஒருமுறை பார்த்தார். தூரத்தில் முத்து மீனாட்சி வந்து கொண்டிருந்தாள்.

சரி, இடம் பார்த்தாகி விட்டது. சமயம் பார்த்து இதற்குள் இறங்கிப் பார்க்கணும். ஆள் நடமாட்டம் இருக்கும்போது பார்த்தால் ஆபத்து.




படியேறிவிட்டார் புரபசர்.

“என்ன புரபசர் சார்? வந்தீங்க, இறங்கினீங்க, ஏறீனீங்க… என்ன விஷயம்? தண்ணியில்லாத ஆற்றில்கூடக் குளிப்பீங்க போல?” காட்சியைப் பார்த்த கண்களுக்குச் சொந்தக்காரன் முத்துவேல் நக்கலாகக் கேட்டான்.

“ஆமா சார், நானும் பார்த்தேன். புரபசர் என்னவோ ஏறராரு இறங்கராரு… கையில் என்னவோ பேப்பரு வேற.” என்ற படி மறைவிலிருந்து வெளிவந்தான் இன்னொரு ஜோடிக்கண்களுக்கு உரியவன்.

“அட..நீ அந்த யூனிட் ஆளு தானய்யா? இங்க என்ன உனக்கு வேலை?” முத்துவேல் கேட்டான்.

“வின்செண்ட் சார் தான் லொகேஷன் பார்க்கச் சொன்னாரு. அதான் இந்த மரத்து மேல ஏறி உட்கார்ந்திருந்தேன்”

“உம் பேரு?”

“ஹான்… பத்… இல்லயில்ல.. பாண்டி!” சொன்ன அவனின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் முத்துவேலுக்குச் சிரிப்பூட்டியது. சினிமாக்காரங்க ஒப்பனையே ஒப்பனை என்று நினைத்துக் கொண்டான்.

புரபசர் இவர்களோடு என்ன பேசுவது என்று சற்று விழித்தார். பின் தோளைக் குலுக்கிக் கொண்டு நடந்து விட்டார்.

அதற்குள் மீனாட்சி ஆற்றின் அருகில் வந்திருக்க.. முத்துவேல் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா? இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கீங்களே. எங்ககிட்டச் சொன்னா எடுத்து வந்திருப்போமே?”

“நேத்து ஒரு பூ பறிச்சேன்ப்பா பூஜைக்கு. அந்த மணமான பூ இந்தப் பகுதியில்தான் கிடைக்குது. அதான் நடந்து வந்தேன். ஹான்… அதோ அது தான்!”

“இதுவாம்மா… இது மஞ்சள்பூ! இந்த மகரந்தக் காம்பில் சில சமயம் பூநாகம் கூட கிடக்கும். பூ பறிச்சுட்டு  இப்படித் தரையில் தட்டிட்டு எடுக்கணும்.”

“பூ நாகமா? பாம்பா? ஹையோ… முன்னகூட தட்டாமத் தான் பறிச்சுட்டுப் போனேன். பூ நாகம் இருந்திருக்குமோ?” பயந்தாள் மீனா.

“மலைப் பகுதியிலே எல்லாமே ஜாக்கிரதையா இருக்கணும். தட்டிட்டுப் பறிச்சுட்டுப் போங்க! இந்தக் குட்டி நாகம் காதுக்குள்ள புகுந்து உசுரையே குடிச்சுடும். கவனமா இருங்க!*

ஒரு பூநாகம் மனுஷன இந்தப் பாடு படுத்துமா? 

மனதில் குறித்துக் கொண்டான் பாண்டி.




******

மாலை மணி ஏழு.

அரண்மனைக்கு வெளியே  திறந்த வெளியில் சிறு விறகுகள் அடுக்கப்பட்டு தீ மூட்டி வைத்திருந்தார்கள். அதைச் சுற்றி தங்கியிருந்த அனைவருமே கூடி இருந்தார்கள். அங்கங்கே சிறு குடில்கள் தற்காலிகமாய் அமைக்கப் பெற்று அவற்றில் சாப்பாடு டேபிளில் பரிமாறப்பட்டது. 

விளையாட்டும் கூச்சலுமாய் இடமே கலகலத்துக் கிடக்க பாண்டியின் கையில் அடித்த போனின் ஒலி யாரையும் கேட்கவில்லை.

அந்த இடத்தை விட்டுச் சற்று நகர்ந்து சென்று காதில் வைத்தான் அவன்.

“என்ன… இந்த நம்பருக்கு போனே வராதுன்னே… இப்ப நீயே பண்ற? என்ன விஷயம்?”

“பட்சி உன் ஏரியாவுல தான் இருக்கு. பேரு தீபா. பாட்டனி ஸ்டூடண்ட். நம்ம கொழுத்த வலைல மாட்டப் போற திமிங்கலத்தை விட்டுடாத!”

“வை… கவனிக்கறேன்!”

அந்தப் பக்கம் அமைதியானது. 

மீண்டும் வந்தவனின் கண் அர்ஜுனன் கண்ணாய் மாறிப் போனது. அம்பு விடும்போது இலக்கொன்றே குறியாகப் பாண்டியும் கிருபா, கோதையுடன் அமர்ந்திருந்த தீபாவையே கவனித்தான். தீபாவின் பார்வையோ வசந்தின் மீது லயித்திருக்க, ஜான் சுறுசுறுப்பாக எல்லோருக்கும் ஜூஸ் எடுத்து வரச் சென்றிருந்தான். 

கோதையோ சமயம் பார்த்திருந்தாள். கிருபாவிடம் பேச. அவள் கையில் அப்போதுதான் பறித்த மஞ்சள் பூ. 

எழில்மாறன் தன் அஸிஸ்டெண்ட்களோடு கலந்து விவாதித்துக் கொண்டே க்ருபாவிடமும் பேசிக் கொண்டிருந்தார்.

சிறிதுநேரத்திலேயே இந்த இளைஞர்களின் அலப்பறை அலுத்தவர்களாக, மீனாவும் காயத்ரியும் ஸ்வேதாவும் ஆலயத்திற்குக் கிளம்பிவிட்டார்கள், பௌர்ணமியன்று அம்மனைத் தரிசித்தால் விசேஷம் என்று.

சந்தனபாண்டியன் அங்கிருந்த இரைச்சல் பொறுக்க முடியாமல் அங்கிருந்து சற்று விலகி குன்றின் சரிவுக்கருகில் சென்று நிற்க… அங்கு பால் நிலவுக்குப் போட்டியாக ஒரு ஒளி! காற்றிலாடும் துகில் போல வெண்ணிற மேனியில் அவரை நளினமாய் ஒரு பெண் வா வாவென அழைத்தாள். 

ஆசையுடன் சென்று பார்த்தால், அவளைக் காணோம். காற்றிலே கரைந்துவிட்டாளோ?

தவித்துக் கொண்டு நின்றபோது, அருகில் நிழலாடியது. பதறித் திரும்பினால்… மணி!

“அட, நீ வந்துட்டியாடா? வசதியாப் போச்சு. அந்தப் பெண்!” என்று கை காண்பித்தார். அவனைப் பற்றி விசாரிக்கக்கூட அவருக்குத் தோன்றவில்லை.

“முடிச்சா போச்சு… வாங்க!” என்றான் மணி.

*****

அதே சமயம், கூட்டத்திலிருந்து ஆதியைத் தனியே அழைத்து போலீஸிடம் இருந்து தனக்கு வந்த தகவலைச் சொல்லிக் கொண்டிருந்தான் ஹரி. கூடவே ஹரிணியும்.

“மணி காலையிலேயே செத்துப் போயிட்டான்!”




What’s your Reaction?
+1
9
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!