Serial Stories தீரா…நிலதீரா…!

தீரா…நிலதீரா…!-2

2.வில்வ வனநாதர் ஆலயத்தில்…!

*********************************************

மேலப்பாளையம் ஜமீன் கோட்டை. சிறியது எனினும்  விசாலமான அரண்மனையும்   மிகுந்த கட்டுக்காவலுமாய்  கம்பீரமாகயிருந்தது.

அரண்மனையின் உள்ளே இருந்த உணவுக் கூடத்தில் ஒருபுறம் நீள்வட்டவடிவ மேஜையும் அதைச் சுற்றிலும் வேலைப்பாடான நாற்காலிகளுமிருந்தன. ஆயினும் அதன் இன்னொரு பகுதியில் தரையில் பட்டுப்பாய் விரிக்கப்பட்டு அதில் அமர்ந்திருந்த இருவரின் முன்னே சிறு மணைப்பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

“ஆனாலும் தம்பீ! நீங்கள் செய்தது என் மனதுக்கு சரியாகப் படவில்லை. என்ன இருந்தாலும் ராஜாங்கத்தை பகைத்துக் கொள்ளலாமா? அதிலும் நம்ம ஜமீன் மைசூர் அரசாங்கத்துக்கு கீழே வருவது. சுல்தான் வழியாக சேர வேண்டிய வரிப்பணத்தை திருப்பிக் கொண்டு வந்து பங்கீடு பண்ணியது நியாமா? “

தீர்த்தகிரியிடம் அவனுடைய அண்ணியார் கெம்பாயியம்மா புலம்பிக் கொண்டிருந்தார். 

 களியுருண்டையும் குழம்பையும் அவன் முன்னான இலையில் வைத்தபடியே ஒரு கும்பா நிறைய பசுமோரையும் இரண்டு பெரிய லோட்டாக்களையும்  அருகில் வைத்தாள்.

” கெம்பூ! தீர்த்தா செய்ததில் என்ன தவறு இருக்கிறது. நம் நாட்டு மக்களிடமிருந்தே எல்லாவற்றையும் சுரண்டிக் கொண்டு போய் அந்தப்பறங்கியர் காலடியில் கொட்டுவதாம்.. 

அவர்கள் அதை வைத்துப் பிழைத்தே நம்மீது படையெடுத்து வந்து அடிமைப் படுத்துவார்களாம். இப்படி நாலு பேர் திருப்பி அடித்தால் தான் புத்தி வரும்.”

தீர்த்தகிரியின் அண்ணன் குழந்தைச்சாமி கோபத்துடன் கொந்தளித்தார்.

“ஆனாலும் வேகத்தைவிட விவேகமே நல்லது என்கிறேன்.திப்பு சுல்தானின் கோபத்தை நம்முடைய ஜமீன் தாங்குமா? “

“அண்ணியார் வருத்தப்பட வேண்டாம். சுல்தானும் ஆங்கிலேயரை எதிர்க்கிறார்தான். இப்படி நான் செய்த செயலில் உள்ளூர மகிழ்வார். நம்மீது சினம் கொள்ளமாட்டார். சினம் கொண்டாற்போல போக்கு காட்டுவார் “

ஏதோ பேச வாயைத் திறந்த கெம்பாயியம்மாளை சின்ன கூச்சலுடன் ஓடிவந்த அவளின் செல்வங்கள் கட்டிக்கொண்டு வாயை அடைத்தனர்.

“அம்மா நான் குதிரையேற்றம் நன்றாக செய்தேன். ஆசான் பாராட்டினர். “

“அம்மா நானுமே விற்பயிற்சி மிகச்சரியாக செய்து ஆசானிடம் பாராட்டு பெற்றேன் “

இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு தாயிடம் தாங்கள் பெற்ற பாராட்டைக் கூறினர்.

“எனக்குத் தெரியுமே! என் செல்வங்கள் எத்தனை கெட்டிக்காரர்கள் என்று”

என்று உச்சி முகர்ந்தாள். 

தந்தையிடமும் சிற்றப்பனிடமும் கூட மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 

“பலே! பலே “

என்ற உற்சாகத் தட்டல்களைப் பெற்றுக் கொண்டவர்கள் தாத்தனையும் பாட்டியையும் தேடி ஓடினர்.

அதன்பின்னே சகோதரர்கள் ஏதோ பேசிக் கொண்டே உணவை முடித்துக்கொண்டு வெளியேவர அவர்களின் மற்ற சகோதரர்கள் தங்களின் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வந்திருந்தனர்.

மேலபாளையம் ஜமீன் ரத்தினம் சர்க்கரை மன்றாடியாருக்கு குழந்தைச்சாமி மூத்த புதல்வன் அவனுடைய மனைவி கெம்பாயியம்மாள்.

சொந்தத் தாய்மாமனின் மகளையே மணந்து கொண்டு இரு குழந்தைகளுக்கும் தகப்பனாகி விட்டான். 

அடுத்தவன் தீர்த்தகிரி

அடுத்து இருவர்.

இவர்களனைவரும்  செல்லம் கொஞ்சும் தங்கையாக பர்வதம். அவளையும் பக்கத்து ஊரிலேயே திருமணம் முடித்து வைத்திருந்தனர். 

தீர்த்தகிரி அஞ்சாநெஞ்சம் கொண்ட வீரன் தன்னொத்த வீர இளைஞர்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு வாள்பயிற்சி விற்பயிற்சி என்று கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான். எந்தநேரமும் எதுவும் நேரலாம் அந்நியஆட்சியை எதிர்க்கவும் ஒடுக்கவும் இளைஞர்கள் தயார்நிலையில் எந்தநேரமும் இருப்பது அவசியமென உணர்ந்தவன் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். இதனால் இவன் பின்னே ஒரு வீரர் கூட்டமேயிருந்தது. 




அவனுமே சிலம்பாட்டம் மல்யுத்தம் தடிவரிசை வில்வித்தை வாள்வீச்சு என அத்தனையிலும் நன்கு பயிற்சி பெற்றவன்.தம்பியா பெரியதம்பி, சிவந்தாரையர் , கீலேதார் என தலைசிறந்த ஆசான்களிடம் பயின்றவன். 

அவற்றை பயிற்றுவிக்கவும் செய்தான். கொங்குப்படை என்றபெயரில் படை திரண்டு நின்றது அவன் பின்னே. அதில் பலதரப் பட்டவர்களுமிருந்தனர்.  வீரம் ஒன்றே தகுதியாக அந்நியனை வேரறுப்பது என்பது மட்டுமே தாரக மந்திரமாக இணைந்த மறவர் கூட்டம் அது.

தோழர்களைச் சந்தித்து அளாவளாவியவன் மாலைச் சூரியன் மலைவாயிலில் விழுமுன்னே தன் செம்பழுப்புப் புரவியை கோயில் பக்கம் திருப்பினன். 

அவனுடைய குதிரை  “செம்பா”அவன் உணர்வை அறிந்து கொண்டாற் போல் வேகமாகப் பறந்தது. 

வடக்கு வாயிலருகே இருந்த சிறு கானகத்தின் நடுவே இருந்தது அந்த சிவன் கோயில். வில்வ மரங்கள் அதிகம் செறிந்த வனத்தின் நடுவே வாசம் செய்து கொண்டிருந்தார் வில்வ வனநாதர். சின்னஞ்சிறு கோயிலேயானாலும் அழகாக இருந்தது.  உயர்ந்தெழுந்து நின்ற கொடிமரமும் கருவறைக்கு முன்னே அமர்ந்திருந்த நந்தீஸ்வரருமாக அற்புதமாக இருந்தது. 

உள்ளே நிலமங்கை கண்மூடி கைகூப்பி நின்றிருந்தாள். வெளிறிய கார்மேக நிறம். நீண்ட கூந்தலைப் பின்னி பூ வைத்திருந்தாள். மேகவர்ணச் சீலையில் சிறு ஜரிகையிழையோட நெற்றியில் திலகமும் திருநீறும். புஷ்பராகக்கல் பதித்த தோடு விளக்கொளியில் பளிச்சிட்டது.பிறை நெற்றிக்குக் கீழே வானவில்லாய் வளைந்த புருவங்களுக்குக் கீழே கயல்விழிகளிரண்டு நீரோட்டமாய்த் துள்ளின. சரேலென்று இறங்கி  நிமிர்ந்த நாசியில் ஒற்றைக்கல் மூக்குத்தி பளபளத்தது. கன்னக் கதுப்புகள் செழுமையுடன் மினுங்கியது.கொவ்வை செவ்விதழ்கள் முத்துப்பற்களை தங்களுக்குள் மூடி வைத்துக் கொண்டு கஞ்சத்தனம் காட்டின.

பூஜைக்கூடை கரத்தில் இணைந்திருக்க பிரகாரம் சுற்றிவந்து குளத்தின் கரையருகேயிருந்த. ஒரு பருத்த விருக்ஷத்தினடியில் நின்றாள். 

செம்பா அவளை  உணர்ந்து விட்டது போலும்.  கனைத்து தன் வரவைக் காட்டிக் கொண்டது.கயல்விழிகள் மன்னவனைத் தேடின.

புரவியை வாசற்புரத்தே விட்டவன் நேரே வந்து சிவலிங்கத்தைத் தொழுது திருநீறணிந்து கொண்டு குளத்தருகே  வந்தான். 

அவள் ஆவலுடன் நின்றிருந்தாள். இருவருக்குமே ஒருவரையொருவர் கண்டதுமே கமலப்பூவாய் முகம் மலர்ந்தது. ஆண் மகன் முகத்தில் ஆர்வமும் ஆசையும் புனலாட பெண்ணவள் வதனமோ செங்காந்தள் பூவாய் சிவந்தது. 

சங்ககிரியில் சிவன் மலைக்கும் சென்னிமலைக்குமிடையே இவன் செய்ததெல்லாம் அவளுக்கும் எட்டியிருந்தது. தீரன்

சின்னமலை  என்ற பட்டப் பெயர் இப்போது அவனோடு ஒட்டிக் கொண்டு அலைவதையும் அவள் தந்தை சொல்லக் கேட்டு பெருமிதம் கொண்டாள். 

“மங்கை!   எப்படியிருக்கிறாய்? “

“பூர்ண நலம் அத்தான்”

” மாமா  நலம் தானே “

“அனைவரும் சுகமே நீங்கள் தாம் இப்போது மக்களின் பேசுபொருளாகியுள்ளிர்கள்”

 ” அப்படியா! என்ன பேசுகிறார்கள்”

கைவிரல்கள் மீசையை நீவிக் கொள்ள காற்றில் கேசச்சுருள்கள் தோளிலும் நெற்றியிலும் ஆடி அழகு சேர்த்தன.

“ஏன்…தங்களுக்கு ஏதும் தெரியாதோ? “

“தெரியாமல்தானே உன்னை வினவுகிறேன் “

“தெரியாமல்தான் செய்தீர்களாக்கும்”

“செய்தேன் செய்தேன் என்கிறாய். நானோ ஒன்றுமே செய்யவில்லை.செய்யவும் அனுமதி மறுக்கிறாய்”

“ஹாங்! “என்று அவனை விழிவிரித்துப் பார்க்க அவனோ குறும்பாய் கண் சிமிட்டினான்.

“ஓ…ஒன்றுமறியா பாலகர்தாம் தாங்கள்”

“அப்படி நான் கூறவேயில்லையே “

“அப்போது அனைத்தும் அறிந்தவர்தாம் என்கிறிர்”

“இப்போதுதானே  அறியா பாலகன் என்றாய்”

“அத்தான்ன்ன்ன்!.நீங்கள் பேச்சை மடைமாற்றம் செய்கிறீர்கள்.”

“ஆஹாங்…சரி சொல் கண்ணே! “

” அத்து மீறல் வேண்டாம். நான் ஒரு முக்கியமான செய்தியை கூற வந்தேன்”




சொல் என்பது போல பார்த்தான்.

“இன்று அத்தையார் எம் இல்லத்திற்கு வந்திருந்தார்”

“என் அன்னையாரா “

“ம்! தம் சகோதரனுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

தங்களுக்கு திருமாணவயது ஆகி விட்டதாமே! “

அவள் சிரம் நிலம் நோக்கியது.

“அப்படியா! நீ என்ன நினைக்கிறாய்”

என்றபடியே அவளின் நாடியைப் பற்றி உயர்த்தினான்.

“அச்சோ! எனக்குத் தெரியாது அதெல்லாம். “

இமைக்குடைகள் தாழ்ந்தன வதனம் எழும்பியபோதும்.இதழ்கள் லேசாய்த் துடித்தன

“அன்னை வேறென்ன கூறினார்”

“நல்லநாள் பார்த்து பெண்கேட்டு வருவதாகக் கூறிச் சென்றார்”

“என்னிடம் ஒன்றுமே கூறாமல் பெண்கேட்டு வந்தால் எப்படி? பெண் எனக்குப் பிடிக்க வேண்டாமா? “

ஆம்பலையொத்து மலர்ந்திருந்த முகத்தாமரை வதங்கிக் கூம்பியது.

“ஹேய்! பொம்மா! ஏனிந்த வாட்டம். விளையாட்டுக்குச் சொன்னேன். எங்கே என்னைப் பார்..அத்தான் முகம் காணப் பிடிக்கவில்லையா “

“அப்படி நான் எப்போது சொன்னேன்.”

“நீ முகம் திருப்பினால் என்ன பொருள்”

“நீங்கள் தானே விருப்பமில்லை என்று…”

“என் பொம்மாயியிடம் நான் விளையாடக் கூடாதா “

என்றவன் தன் இடுப்பு மடிப்பிலிருந்து ஒரு பொருளை எடுத்து அவள் முன்னே நீட்டினான்.

அது அழகான முத்துவளை.

“நான் போனதிங்கள் சீரங்கப் பட்டினம் வரை போயிருந்தேனில்லையா? அங்கே கடைவீதியில் வாங்கி வந்தேன். “

“அச்சோ! மிகவும் அழகாக உள்ளது. “

கைகளில் அணிந்து கொண்டாள். 

“உன் கரங்களுக்கெனவே வடிவமைத்தாற் போல் பாங்காக இருக்கிறது  பொம்மாயி..”

“பொம்மாயி  நானும்  ஒரு விஷயம் சொல்லவே வந்தேன். “

அவன் சொல்லத் துவங்கவும் அவளின் முகம் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே சமயத்தில் வெளிப்படுத்தியது. வதனம் இருண்டு ஒளிர்ந்தது. கைவிரல்கள் பூஜைக்கூடையை இறுக்கிப் பிடித்தன.நீள் விழிகள் இரண்டும் அலைப்புறுதலுடன் அவனின் வீரம் செறிந்த வதனத்தை ஏறிட்டன. 

அவனுடைய இடுப்புப்பட்டியிலிருந்த ஓலை லேசாய் வெளியே தலைகாட்டியது.

( தீரன் வருவான்)

தீரா…நிலதீரா….!




What’s your Reaction?
+1
5
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!