Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-16

16

ஆறாங்கட்டு ஹரியால் திறக்கப்பட்டது. ஆதி படிக்கட்டு அறையை நெருங்கினான். உள்ளிருந்து “ஸ்வ… ஸ்வே…” என்று மூச்சிரைக்கும் குரல் அவர்களுக்கு நன்றாகக் கேட்டது.

“அண்ணா… அவர்… எப்படி இங்கே? அவருக்கு என்னாச்சு?” என்று ஏதேதோ புலம்பினாள் ஸ்வேதா. சொல்லச் சொல்லக் கேட்காமல் அவளும் அவர்களோடு கூட வந்திருந்தாள். அவர்கள் என்றால் ஆதி, ஹரி, ஹரிணி, மற்றும் என்ன காரணத்திற்காகவோ சந்தானபாண்டியன். கொஞ்சம் தள்ளி மரியாதையுடன் நின்றுகொண்டிருந்தான் முத்துவேல். சப்தம் கேட்டுச் செந்தாமரையும் சமையல்கட்டைவிட்டு ஆறாங்கட்டு வாயிலுக்கு வந்துவிட்டான். மற்றவர்கள் எல்லோரும் ஹாலிலேயே தங்கிவிட்டார்கள். பயம்!

பையிலிருந்து கொத்துச் சாவியை எடுத்த ஆதி சற்று நிதானித்தான். “ஹரி! கதவைத் திறக்கட்டுமா? ஆபத்து ஒண்ணும் இல்லையே?” என்று கேட்டான்.

“சீக்கிரம் திறந்து தொலை, ஆதி!” என்றாள் ஸ்வேதா படபடப்பாய். ஆனால் ஹரியிடமிருந்து பதில் வராததைக் கண்டதும் ஆதி திரும்பிப் பார்த்தான்.

ஆச்சரியமாக, ஹரியும் ஹரிணியும் ஆறாங்கட்டுக்குள் நுழையவேயில்லை. ஐந்தாங்கட்டுக்கும் ஆறாங்கட்டுக்கும் நடுவிலிருந்த சிறிய இடைவழியிலேயே நின்றுகொண்டிருந்தார்கள்.

“என்ன, இங்கேயே நின்னுட்டீங்க? பயந்துட்டீங்களா? இந்த அறைக்குள் ஏதாவது பயங்கரமா இருக்கா? திறக்கறதுக்கு முன்னாடி ஏதாவது பந்தோபஸ்து பண்ணிக்கணுமா?” என்று ஆதி வெளியே வந்து கேட்டான். அவன் கிண்டல் பேச்செல்லாம் விடைபெற்றிருந்தது.

ஹரி சிரித்தான். “ஆதி! இந்த அறையில் என்ன இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். அன்று விபூதியில் ரத்தம் கலந்தபோதே இங்கே ஏதோ அமானுஷ்ய சக்தி அலையுதுன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். இந்த அறையைத் திறக்க நீங்க தயங்கவே வேணாம். இந்தப் படிக்கட்டுகளில் சிறைப்பட்டிருந்த மிக முக்கியமான சக்தி ஏற்கெனவே வெளிப்பட்டாச்சு! ஆனா, அவ்வப்போது இங்கே திரும்பவும் செய்யுது! ஒருவேளை நீங்க இந்த அறையைத் திறக்கும்போது அது காணப்படலாம்! ஆனா அதனால் நமக்கெல்லாம் எந்த ஆபத்தும் இல்லை!

“க்ருபாவைச் சந்தானபாண்டியன் அடிக்கறதுக்கு முன்னாடி, நானும் ஹரிணியும் இந்தப் படிக்கட்டு அறையைத் திறந்து பார்த்தோம். அப்போ அந்தச் சக்தி வெளிப்பட்டு வெளியே உலாவப் போச்சு! எங்களை அப்போ அது ஒண்ணும் பண்ணலையே!”

“என்ன இதெல்லாம் அபத்தப் பேச்சு! உள்ளே என் அண்ணன்…” என்று ஸ்வேதா ஆரம்பிக்க, “ஸ்வேதா! மாரீசன் கதை கேட்டிருக்கீங்களா நீங்க?” என்று இடைவெட்டினான் ஹரி.




ஸ்வேதா விழிக்க, ஹரி தொடர்ந்தான். “இராவணன் கிட்ட சீதை மாட்டணும்னா, இராம லக்ஷ்மணர்களை அவளைவிட்டுப் பிரிக்கணும்! அதுக்காக, ‘ஹா சீதா, ஹா லக்ஷ்மணா’ என்று இராமர் குரலில் கத்தினான் மாரீசன்!”

“அப்போ, இங்கே என் அண்ணன் குரலில் கத்தறது வேறு யாரோன்னா சொல்றீங்க?” என்றாள் ஸ்வேதா அழுகைக் குரலில்.

“இது உங்க அண்ணன் குரலான்னே எனக்குச் சந்தேகமா இருக்கு! நீங்க கேட்டே பல ஆண்டுகள் ஆகியிருக்குமே! சரி, இப்போ இந்த அறையை நீங்க திறந்தா, வனமங்கை இங்கே இருக்கறதை, அல்லது இங்கிருந்து வெளியேறுவதைப் பார்க்கலாம். அல்லது செங்காளை என்ற மாடு இருக்கலாம்! ஏன், உங்க பிரதரேகூட இருக்கலாம்!”

தலைசுற்ற ஆரம்பிக்க, ஹரிணியைப் பார்த்தாள் ஸ்வேதா.

“ஆமாம் ஸ்வேதா! நாமெல்லாரையும் அசைத்துப் பார்க்கக்கூடிய எந்தக் காட்சி, அல்லது எந்தச் சப்தத்தை வேண்டுமானாலும் இங்கே க்ரியேட் பண்ணிடுவாங்க! ஏன், புரொபஸர் இறந்தபோது இங்கே ஒரு தேள் இருந்ததே, அது ஒரு கல்பிதம், உங்களுக்கு வந்த கனவுகள் கல்பிதம், உங்க மாமியாருக்கு வந்த கனவுகூடக் கல்பிதம்தான்! ஒரு ஸ்ட்ராங்கான மனது உங்க எல்லாரையும் மெஸ்மெரைஸ் பண்ணிட்டு இருக்கு!”

ஸ்வேதாவுக்கு இதையெல்லாம் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் மயக்கம் வந்தது. கீழே விழ இருந்தவளை ஆதி தாங்கிக் கொண்டான். “ப்ளீஸ் யாராவது கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்களேன்” என்றான்.

“வெயிட், அதெல்லாம் வேண்டாம்” என்ற ஹரி, உள்ளே வந்து தன் கையை ஸ்வேதாவின் நெற்றியில் வைத்துக் கட்டைவிரலால் அழுத்தினான். ஒரு பெரிய மூச்சுவிட்டு, இருமிக் கொண்டு ஸ்வேதா விழித்துக் கொண்டாள். சுற்றுமுற்றும் மிரளமிரளப் பார்த்தாள்.

“ஸ்வேதா, நீங்க உங்க அத்தையோடு போய் இருக்கணும்னா இருங்க, இங்கே என்ன நடக்குதுன்னு நாங்க பார்த்துக்கறோம். ஹரிணி, கொண்டுபோய் விட்டுட்டு வா” என்றான் ஹரி.

“இல்லை, வேண்டாம்” என்றாள் ஸ்வேதா அவசரமாக. “அவன் நல்லது பண்றானோ, கெட்டது பண்றானோ, அவன் என் ரத்தம், என் அண்ணன்! அவன் உயிரோடுதான் இருக்கான்னா, அவனை நான் கண்டிப்பா பார்த்தே ஆகணும்! அதுக்கப்புறம் அவன் என்னைக் கொன்னாலும் கவலையில்லை!”

ஹரி அவளைப் பரிதாபமாகப் பார்த்தான். “ஸ்வேதா, உங்களுக்கு இன்னும் நிறைய அதிர்ச்சிகள் காத்திட்டிருக்கு. அதிர்ச்சிகளும் ஆபத்தும் ஒண்ணுசேர்ந்து உங்களைத் தாக்க வேணாம்னு பார்த்தேன். ஆனா இந்த நெருப்பாற்றில் நீந்தி வெளியே வரதுதான் நல்லது, தவிர்க்கறது நல்லதில்லை. நீங்க மனதைத் திடப்படுத்திக்கிட்டு வாங்க, எதுநடந்தாலும் உங்களை நாங்க காப்பாத்தறோம்” என்றான்.

ஒப்புக்கொண்டவளைப்போல் ஸ்வேதா எழுந்தாள். “ஸ்வேதா!” என்றான் ஆதி பதறி. அவளுடைய உறுதியான பார்வையைச் சந்தித்ததும் வேறு வழியின்றி மீண்டும் சாவிக் கொத்தை எடுத்தான்.

“நாம போக வேண்டியது அங்கே இல்லைன்னு சொன்னேனே! இங்கே வாங்க” என்றான் ஹரி.

எல்லோரும் ஐந்தாங்கட்டும் ஆறாங்கட்டும் சந்திக்கும் இடைவழியில் மாட்டப்பட்டிருந்த நிலைக்கண்ணாடி முன் கூடினார்கள்.

“எல்லோரும் நான் சொல்றதைக் கவனமா கேளுங்க. இங்கேதான் புரொபஸர் நிலவறைக் கதவு இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்கார். அவர்கிட்டயிருந்த ப்ளானை நான் பார்த்தேன். நாம தேடவேண்டிய ஆள் அந்தப் படிக்கட்டு ரூமில் இருப்பார்னு எனக்குப் படலை, ஆறாங்கட்டு நிலவறைலதான் இருப்பார்னு தோணுது. ஆசாமி இல்லேன்னாலும் இங்கே ஏதோ ரகசியம் இருக்கணும், இல்லேன்னா ப்ரொபஸர் இந்தக் கதவைத் திறக்கும்போது ஏன் கொல்லப்படணும், சொல்லுங்க?” – ஹரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹரிணி ரப்பர் க்ளவுஸ் அணிந்து நிலைக்கண்ணாடியின் பித்தளைக் குமிழ்களைத் தடவ ஆரம்பித்திருந்தாள்.

“இங்கே என்ன இருக்கும்னு…” என்று ஆதி சொல்வதற்குள், “ஹரி…” என்று உரத்த குரலில் அதிசயித்தாள் ஹரிணி.

ஆம், நிலைக்கண்ணாடி கதவுபோல் புரண்டு நின்றிருக்க, சுவற்றில் வழியிருந்தது. படிகள் கீழே இறங்கின.

*****

“எங்கே வந்திருக்கோம்? இதுதான் நிலவறையா?” என்று கேட்டார் சந்தானபாண்டியன். அவரும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்திருந்தார் என்பது அப்போதுதான் தெரிந்தது.

ஹரி அவரைச் சந்தேகமாகப் பார்த்தான். அதைப் பொருட்படுத்தாமல் அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். “இங்கே உடையார் குடும்பத்துப் பொக்கிஷம் எல்லாம் இருக்காமே? புரொபஸர் சொல்லிட்டிருந்தார். எதையும் கண்ணில் காணோமே” என்றார்.

அவர் ஏன் அமானுஷ்ய பயங்களை மீறி அங்கே வந்திருக்கிறார் என்பது இப்போது புரிந்தது.




அதற்குள் ஸ்வேதா “கொஞ்சம் எல்லாரும் இங்கே வாங்களேன்” என்று அலறினாள்.

அவளும் ஆதியும் மற்றவர்களிடமிருந்து விலகி ஹால் போன்ற அமைப்பிலிருந்து பிரிந்த ஒரு சிறு அறைக்குள் நுழைந்திருந்தார்கள். அங்கே… ஒரு கண்ணாடிப் பெட்டியில் ஒரு உடல் கிடத்தப்பட்டிருந்தது. எந்த அசைவுகளும் இல்லையாயினும் உற்றுப் பார்த்தால் அந்த உடல் மூச்சுவிடுவது தெரிந்தது. உயிரோடுதான்… ஆனால்… யார்?

“இது… என் அண்ணனா ஹரி?” எல்லோர் மனதிலும் இருந்ததைக் கேட்டுவிட்டாள் ஸ்வேதா.

“ஸ்வேதா, இப்போ ஒரு விஷயம் உங்களுக்குத் தெளிவுபடுத்தணும். அங்கே எல்லோருக்கும் முன்னால் இதைப் பேச வேண்டாம்னு நினைச்சேன், காரணம், நான் சொல்லப் போறதையெல்லாம் எல்லாராலும் ஜீரணிக்க முடியாது…” – அவன் பீடிகையிலேயே ஸ்வேதா நடுங்கினாள்.

“ஃபர்ஸ்ட் அண்ட் ஃபோர்மோஸ்ட், இது உங்க அண்ணன் இல்லை. உங்க அண்ணன் இப்போ உயிரோடும் இல்லை!” என்று பட்டுக் கத்தரித்தாற்போல் சொல்லிவிட்டாள் ஹரிணி.

“என்… என்ன சொல்றீங்க? நீங்கதானே…”

“ப்ளீஸ் ஸ்வேதா! நாங்க சொன்னதை நினைவுபடுத்திப் பாருங்க. உங்க குடும்பத்தில் ஒருவர் இப்போ உயிரோட இருக்கறதா சொன்னேன். அது உங்க அண்ணன்னு நீங்களே கெஸ் பண்ணிட்டீங்க.

“கேளுங்க ஸ்வேதா! புரொபஸர் தாக்கப்பட்டபோது, அவர் தன்னைத் தேள் கடிச்சதா சொன்னார். அந்தத் தேளைக் கண்டுபிடிச்சு அடிச்சுடணும்னு நான் முயன்றேன். அப்போ எனக்கு ஒரு பொருள் கிடைச்சது. அரண்மனை ப்ளான்ஸ், நிலவறை, பொக்கிஷங்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் தான் இருந்த நிலையிலும் புரொபஸர் தன் பெட்டியில் பூட்டிட்டார். ஆனா, ஒன்று கீழே விழுந்திட்டது, அதை அவர் கவனிக்கலை.

“அது ஒரு பழைய டாக்குமெண்ட் வைக்கிற குழாய்! அதனை எடுத்துப் பார்த்தபோது அதில் ஒரு ஜாதகம் இருந்தது. பழைய, நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஜாதகம்ங்கறதால, அதைப் பற்றி நாங்க ரொம்பக் கவலைப்படல. புரொபஸர் பெட்டியைத் திறந்து மற்ற விஷயங்களைப் பார்க்கறதில்தான் நாங்க கவனம் செலுத்தினோம். எனக்கு அஸ்ட்ராலஜி தெரியும்ங்கறதால, விளையாட்டா அந்த ஜாதகத்தைப் படிச்சேன்… அப்போதான், அந்த அதிர்ச்சியான விஷயம் எனக்குத் தெரியவந்தது…”

“ஜாதகம்னா… யார் ஜாதகம்?” – என்று கேட்டான் ஆதி.

“இந்தக் குடும்ப மூதாதை – ரகுநாத உடையாரோட ஜாதகம்! அதிலே நான் பார்த்த விஷயம் என்னன்னா, அந்த ஜாதகத்தில் மாரக தசையே இல்லை! மரணமே காட்டலை” என்று சேர்த்துக் கொண்டான் ஹரி, எல்லோருக்கும் புரிவதற்காக. “அவருடைய ஆயுளைக் கணிக்கவே முடியலை!” 

“அ… அப்போ… இவ குடும்பத்தினர் உயிரோடு இருக்கறதா நீங்க சொன்னது…”

“யெஸ், ரகுநாத உடையாரைத்தான்! அவர்தான் இங்கே, இந்த நிலவறையில் மறைஞ்சு இருக்கார்னு நினைக்கறேன். இந்த அரண்மனை கமர்ஷியலைஸ் ஆகி, அவர் கண்டுபிடிக்கப்பட்டுடக் கூடாதுன்னு இப்படியெல்லாம் பண்றாருன்னு தோணுது!”

“இந்த உடல்… ரகுநாத உடையாரா?” என்று ஆதி கேட்க, ஸ்வேதா பதறிச் சற்றுத் தள்ளிப் போனாள்.

“இருக்கலாம். சாதாரணமான மனித ஆயுளை மீறி வாழ்கிற யாரும் நார்மலா இருக்க முடியாது. இதுமாதிரி கோமா ஸ்டேஜ்க்கு அவங்க உடல் போயிட்டு வர வேண்டியிருக்கும். ரொம்ப வீக்கா இருப்பாங்க” என்றான் ஹரி.

“அப்படியா? நான் அப்படி ஒண்ணும் வீக்கா இல்லையே? கல்லு மாதிரிக் கிண்ணுனு இருக்கேனே!” – புதுக் குரல் ஒன்று கேட்டது.

புன்னகைத்துக் கொண்டு நின்றிருந்தான் முத்துவேல்.




What’s your Reaction?
+1
10
+1
9
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!