Serial Stories தீரா…நிலதீரா…!

தீரா…நிலதீரா…! -1

1.ஓலை பறந்தது

************************

 காண்பதையெல்லாம் பொன்னிறமாய்  மாற்றியே த் தீருவேன் என்று சங்கற்பம் எடுத்துக் கொண்டது போல் மேற்றிசைச் சூரியன் பொலிந்து கொண்டிருந்தான். நல்ல ஜாதி காளைமாடுகள் பூட்டிய அந்த வண்டிகள் முன்னும் பின்னுமாய் திரைபோட்டுக் கட்டப்பட்டிருந்தது. சற்றே உயரமாய் கூடுபோலெழும்பி மறைப்புடன் உள்ளேயிருப்பது வெளியே தெரியாத வகையில்   ஓலையினாலும் வண்ண வண்ண வஸ்திரங்களினாலும் மூடப்பட்டிருந்தது.

 இன்னொரு வண்டியும் இதே போன்ற நேர்த்தியுடன் தொடர்ந்து வர முன்னும் பின்னுமாய் ஆறு வீரர்கள் குதிரைகளில் அந்த வண்டிகளின் ஓட்டத்திற்கேற்ப சென்றனர். 

“ஆஜாத்! இப்படி அன்னநடை போட்டால் சிவன்மலைக்குப் போய் சேர்ந்தாற்போல் தான். சங்ககிரியிலேயே இருக்கிறோம் நாம்.”

“அரே மீரு! மே க்யா கரூங்? நீதானே நன்றாக உணவருந்திவிட்டு புரண்டு கொண்டிருந்தாய்.”

“சரி சரி! வீண் பேச்சு வேண்டாம். ஜல்தி! ஜல்தி”

இன்னொருவன் அவசரப் படுத்தினான்.. 

அதன்பின்பு வேகமெடுத்தது அந்தக் கூட்டம். 

அதே சமயம். 

அந்தப் பாதையில் வண்டி மாடுகளுக்கு நான்கடி முன்பாக ‘சரசர’ வென ஏழெட்டு ஈட்டிகள் மணலில் குத்திக்கொண்டு  நிமிர்ந்து நின்று பாதையை மறைத்த வேலியாய் வானைப் பார்த்தன.

மூக்கணாங்கயிறை இழுத்துப் பிடித்தான் வண்டிக்காரன்.ஆறு புரவி வீரர்களும் முன்னே வந்து திடீரென முளைத்த அந்த ஈட்டிச்சுவரைக் கண்டு திகைத்தனர். 

குதிரை லகானை இழுத்துப் பிடித்தபடி சுற்றி முற்றி பார்வையை ஓட்டினான் மீரு என்பவன்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை

அறுவரின் புரவிகளும்  தாறுமாறாய் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்தன. அதன் மேலே பயணித்த மனிதர்களோ குழம்பினர்




அப்போது பக்கங்களிலிருந்த மரங்களின் பின்னின்றும் புரவிகளின் கனைப்போசையும் சருகுகள் மிதிபடும் ஒலியும் கேட்க இருபுறமும் பார்வையையோட்டினர் அறுவரும்.

செம்பழுப்பு புரவி மீதொன்றில் அமர்ந்திருந்தவன் இளம் பிராயத்தினனாய் இருந்தாலும் விழிகளில் தீக்ஷண்யம் சுடர் விட்டது.

தலைக்குழல்கள் தோள்வரை சுருள்சுருளாய் புரண்டது. இடையில் தொங்கிய நீளவாள் அவன் வீரத்தை கட்டியம் கூறியது. கையில் குத்தீட்டி ஒன்றும் கதிரொளியில் பளபளத்தது.

இடுப்பையொட்டி நாலைந்து குறுவாட்களும் செருகப்பட்டு எந்நேரமும் அவன் அவற்றையும் பயன்படுத்தத் தயங்க மாட்டான் என்று சாட்சி  கூறின,

அவனுடனேயே மேலும் மூவர் வர 

ஆஜாத்தும் மீரும் மென்னகை பூத்தனர். 

தாங்கள் அறுவர். வண்டியோட்டிகளையும் சேர்த்துக் கொண்டால் எண்மர். இவனோ சிறுவன். இவன் நம்மை எதிர்ப்பதாவது…?

என்ற எண்ணம் தந்த செருக்கில்  

“சிறுவனே! தவறு …தவறு செய்கிறாய். இந்த வண்டி எங்கே போகிறது என்று தெரியுமா “

“தெரியும்”

“தெரிந்துமா இப்படி செய்கிறாய்? விளையாட்டுப்பிள்ளை என்பது சரியே “

“ஹாங்…யார் விளையாட்டுப்பிள்ளை என்று பார்த்து விடுவோமே! வாளை எடுங்கள்”

ஆஜாத்தும் மீருவும் நகைத்தனர். 

“தம்பி! இது விளையாட்டு விஷயமில்லை. விளையாட நேரமுமில்லை. நாங்கள் செல்ல வேண்டும்”

மீரு நயம்பட பேசலுற்றான்.

“தம்பீ! இது மைசூர் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தாக வேண்டும். நீ இப்…”

“இது எங்கள் மக்களின் வரிப்பணம் வீரரே அதுவும் தெரியும். இது மைசூர் அரசாங்கம் வழியே பறங்கியரை அடையப் போகிற விஷயமும் தெரியும்.உங்களுக்கு உயிர்மேல் ஆசையிருப்பின் உடனடியாக இதை விட்டுவிட்டு உங்கள் வழியே சென்று விடுங்கள். பிறகு ….உங்கள் விருப்பம்”

மீருவின் பொறுமை பறந்து விட்டது

“என்னடா…சிறுவன் என்று பார்த்தால் மிக அதிகமாகப் பேசுகிறாய்? நாங்கள் ஓடுகிறோமா? நீயா என்று பார்த்து விடுவோம்.”

அவன் முடிக்குமுன்னே ஆஸாத்தும் மற்றவர்களும் பாய வந்தவனுடைய நண்பர்களும் வாளெடுக்க அந்த இடம் சிறு துவந்தயுத்தத்திற்கு இடம் தந்து ‘டணால் டணால்’ என்று வாட்களோடு வாட்கள் மோதும் ஒலியை எதிரொலித்தது.

ஒரு நாழிகைக்கும் குறைவான நேரத்திலேயே வந்த இளைஞனின் வாள் மேலோங்கி நிற்க 

“மயூரா?! இவர்களை கட்டிப்போடு.வேலப்பா நீயும் முத்துச்சேர்வையும்  இந்தவண்டிகளோடு போய் ஊர்ச்சாவடியில் நிறுத்திவிட்டு அய்யாவுக்கு தகவல் கொடுங்கள். இதை அவரவர்க்குரியதை பிரித்துக் கொடுத்துவிடுங்கள்.ம்! புறப்படுங்கள்”

அவன் குரலில் ஆளுமை இருந்தது.வண்டிகள் நகரத் துவங்கியதுமே.

“மன்னித்து விடுங்கள் வீரர்களே! இவை எம்மக்களின் வியர்வைத்துளிகளில் விளைந்தவை. இவற்றை நீங்கள் வரிவசூல் என்ற பேரில் கொள்ளையடித்துக் கொண்டு போய் ஆங்கிலேயன் காலடியில் கொட்டுவதை இந்த மண்ணின் மைந்தனாய் என்னால் அனுமதிக்க முடியாது. வாணிகம் செய்ய வந்தவன் நம்மை அடிமை படுத்தப் பார்க்கிறான். அவன் கொழுத்து செழிக்க நாமே நம் செல்வத்தைத் தூக்கித் தரவேண்டுமா? “




உரையாடிய வண்ணமே அவர்களின் கட்டுக்களை விடுவித்தவன் கீழே விழுந்துகிடந்த வாட்களை அவர்களிடம் தந்தான். 

“சற்று தொலைவில் வரும் கிராமத்தில் காயத்திற்கு மருந்திட்டுக் கொள்ளுங்கள் நண்பரே! மன்னியுங்கள் “

அவர்கள் வெறுமனே நிற்க

“சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே ஒருவன் சின்னமலையாக வந்தான். அனைத்தையும் கவர்ந்து சென்று விட்டான் என்று உங்கள் அரசரிடம் கூறுங்கள்”

என்றவன் தன் நண்பனுடன் புரவியைத் திருப்பிக் கொண்டு வந்தவழியே மரங்களினூடே புகுந்து போய் விட்டான்.

அரசவை..

மைசூர் சாம்ராஜ்யத்தின் மிக அழகான அரண்மனை.அந்த நீண்ட தர்பாரின் இருபுறமும் காற்றுக்கான சாளரங்கள் மிக உயரத்திலிருந்தன நான்கு வாயில்களும் அதனருகே இரு வீரரர்கள் கையில் வேலுடன் நின்றிருந்தனர். வாயிற்கதவுகள் வேலைப்பாடு மிகுந்தவையாய் அழகோடு மிளிர்ந்தன. செல்வச்செழிப்பு எல்லா இடங்களிலும் பளிச்செனத் தெரிந்தது.சுவர்களின் இருபுறங்களிலும் கேடயங்களும் வாட்களும் செருகப்பட்டிருந்தன. சுவர்களில் அழகிய இயற்கைக்காட்சிகளும் பூங்கொத்துகளும் கண்ணுக்கு விருந்து படைத்தன.

நடுநாயகமாய் அமைந்திருந்த அரைவட்ட மேடையில் பொன்னாலமைந்த கைப்பிடியோடு கூடிய சிவப்புநிற பட்டாடையோடு பொன்ஜரிகையுடன் அலங்கரிக்கப்பட்டு  பளபளத்த இருக்கையொன்றில் மிக கம்பீரமாக அமர்ந்திருந்தார் திப்பு சுல்தான். .விலையுயர்ந்த மரகதக் கற்களும் சிவப்பு ரத்தினமும் பதிப்பிக்கப்பட்ட  மாங்கனிவடிவபதக்கமொன்று அவருடைய சிரத்தின் மீதிருந்த பட்டுத்தலைப்பாகையில் அமைந்திருந்தது. பட்டுத்தலைப்பாகை வட்டவடிவாக இரண்டு முறை இறுக்கமாக சுற்றப்பட்டு  விளிம்புகளில் விலையுயர்ந்த கற்கள் மினுமினுத்தன.அதனுச்சி பதக்கத்தின்  கீழாக மூன்று சரங்களாக கொற்கை முத்துக்கள் ஊசலாட. இறுதியில் இணைந்திருந்த சிறுசிறு நீலமணிகள்  நீலநிறத்தை அந்த சிவப்பு ரத்தினத்துக்கு ஈடாக போட்டியிட்டு உமிழ்ந்தன. அடர்ந்த புருவங்களுக்கு கீழே ஒளிரும் கூர்மையான விழிகள். செதுக்கினாற்போன்ற நீள நாசிக்குக் கீழே கற்றை மீசை கன்னங்கரேலென்று முறுக்கியபடி நின்று வதனத்தில் கம்பீர அழகைப் பெருக்கியது.

ஒருகரம் இருக்கையின் கைப்பிடியிலிருக்க. மற்றொன்று தொடையின் மீதிருந்தது. 

அந்த விஸ்தாரக்கூடம் முழுவதும் இருவரிசையில் இருக்கைகளிருக்க. தரையில் சிவப்புக் கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது.

அரசவைப் புலவர் முதல் முதன்மந்திரி மற்றும் முக்ய அதிகாரிகளுடன் படைத்தளபதிகளுமிருந்தனர்.வெளியே வீசிய குளிர்காற்றுக்கு எதிராக உள்ளே அனைவரினன் வதனங்களிலும் வெம்மையடித்தது.

எப்போதுமே புன்னகை தவழும் திப்பு சுல்தானின் முகத்திலும் கோபத்தினால் செம்மை ஏறியிருந்தது. வீரம் ததும்பும் விழிகள் அனலைக் கக்கின.

தீர்த்தகிரி என்னும் சின்னமலையின் செய்கை பேசுபொருளாகியிருந்தது. திப்பு கொதிநிலையிலிருந்தார். தந்தை ஹைதரலிக்கு உடல்நலமின்றி போகவே தர்பாருக்கு வரவில்லை. நிகழ்ந்ததை கேள்வியுற்ற தந்தையின் சினமே திப்புவிடம் எதிரொலித்தது.

தன் ஆளுகைக்குட்பட்ட மேலப்பாளையம் ஜமீனைச் சேர்ந்த சிறுவனுக்கு இத்தனை ஆணவமா.?

மீரு ஆஜாத்து சொன்னதைக் கேட்டவருக்கு அத்தனை சினமெழுந்தாலும் அறுவரை நிலைகுலையச் செய்த வீரச்செயலை மெச்சிக் கொள்ளாமலிருக்க முடியவில்லை திப்பு எனும் உண்மை வீரனால்.

‘எம்மக்களின் தினவெடுத்த தோள்களுக்கு உணவளிக்கவேண்டும். வயிற்றுக்கு மட்டுமே ஈந்தால் போதாதே! ‘

திப்பு சுல்தானின் நெஞ்சு விம்மியது. மந்தஹாசம் மீசைக்கடியில் புரண்டது.

அவரின் சிவந்த நயனங்கள்  முக்யப் பிரதானியும்  நண்பருமான கிரிமீரே சாயபுவைப் பார்க்க அவர் பார்வை தன் மெய்க்காப்பாளன் ஹுசேனிடம் தாவியது. 

யாருடைய கவனத்தையுமே கவராமல் அவன் சாரைப்பாம்பைப் போல கூட்டத்தினின்றும் நழுவினான்.

மீசையை நீவிக் கொண்டு சபையை ஏறெடுத்த திப்புவின் கவனத்தில் ஹுசேன் வேகமாக வெளியேறியது தப்பாமல் விழுந்தது.




அந்த இளைஞன் கூறச் சொன்னதாக சொன்ன வார்த்தையை அட்சரம் பிசகாமல் மீரு  அரசரிடம் கடத்தினான்.

“சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் இடையே சின்னமலையாக ஒருவன்  வந்தான். அவன் அனைத்தையும் கவர்ந்து போய்விட்டான். “என்பதை மீண்டும் ஒருமுறை தன்னுள் கூறிக்கொண்ட திப்பு சுல்தான்.

“அவன் என்ன தீரன் சின்னமலையோ? “என்று சினத்தோடு இரைந்தார்.

காலத்துக்கும் அந்த இளைஞனின் பெயர் தீரன் சின்னமலையாகவே சரித்திரத்தில் நிற்கப் போகிறது என்று அறியாமலே வார்த்தைகளை அரசன் உதிர்க்க ததாஸ்து தேவதைகள் வாழ்த்தைத் தூவிவிட்டு நகர்ந்தன.

சபை கலைந்த பின்பு முதன்மந்திரியும் சாயபும் மட்டுமே இருக்க திப்பு சுல்தான் இருவரையும் நோக்கினார்.

கிரிமீரே சாயபு தன் எண்ணத்தை சுல்தான் முன்பு வைக்க. திப்பு “பலே! பலே! ” வென சிலாகித்தான்.

அவன் சிந்தையில் கனவு விரிந்தது. ஆங்கிலேயனை முற்றிலுமாக விரட்டியடிக்கும் மறவர்படையின் தீரத்தில் புன்னகை விரிந்தது. 

மைசூர் அரசாங்கத்தின் படைவீரனொருவன் ஓலை ஒன்றுடன் மேலப்பாளையம் ஜமினுக்குப் பறந்து கொண்டிருந்தான்.

மேலப்பாளையம் …..

ஜமீன் மாளிகையில்.

( தீரன் வருவான்)

தீரா…நிலதீரா…!




What’s your Reaction?
+1
6
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!