Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-13

 13

கோதை அழுதழுது களைத்துப் போயிருந்தாள். “என்னால தான் க்ருபாவுக்கு இந்த நிலைமை? நான் கத்தி கலாட்டா பண்ணாம இருந்தா அவன்பாட்டுக்கும் தூங்கிக்கிட்டிருந்திருப்பான். இப்படி கண்முழிக்காம கிடக்கிறானே! தீபா! அவனுக்கு ஏதானும் ஆச்சுதுனா நான் உயிரோட இருக்க மாட்டேன்.”

“ப்ளீஸ் கோதை! அழாதே! அவனுக்கும் ஒண்ணு ஆகாது. நீ அழுதழுது படுத்திட்டேனா உன்னை யார் பார்க்கிறது?” நண்பர்கள் சுற்றி நின்று ஆறுதல்படுத்தினாலும் கோதைக்குத் தாளவேயில்லை.

யாரைத் தவறாக நினைத்தாளோ அந்த ஹரிணி தான் க்ருபாவைக் காப்பாற்றியிருக்கிறாள். அவள் மட்டும் சரியான நேரத்தில் பார்த்து முதலுதவி செய்திராவிட்டால் க்ருபா என்ன ஆயிருப்பானோ!

இரவு அவன் கதவைத் திறந்து ஓடியபோதே கூடப் போயிருக்க வேண்டும். தீபா தான் தடுத்தாள்.

“அவன் சாமர்த்தியசாலி. பார்த்துப் பக்குவமா கையாண்டு கண்டுபிடிப்பான். நாமளும் கூடப் போனா பிரச்சினைதான். மேலும் நம்மால அவனுக்கு உபத்திரவம்தான்.”

தீபா பேச்சைக் கேட்டு போகாமலிருந்தது தவறில்லை. ஆனால் போனவன் அரைமணி நேரமாகக் காணவில்லை என்றதும் அவனைத் தேடி வந்தவளை  ஆதித்யா எதிர்கொண்டான். “இந்த நேரத்தில் ஏன் மா வெளியே வர்றீங்க?”

“க்ருபா! இந்தப் பக்கமா நடந்திட்டிருந்தான். அவனைத் தேடி வந்தோம்.”

பேசிக்கொண்டிருந்த போது ஆதியின் மொபைல் ஒலித்தது.

அதன் பின் நடந்ததெல்லாம்….

இப்போது நினைத்தாலும் உடல் பதறியது.

“நிஜமாவே க்ருபாவுக்கு ஒண்ணுமில்லேடி… இதைப் பாரு கோதை. டாக்டர் வந்து பார்த்திட்டு அதிர்ச்சியில மயங்கி கிடக்கிறதா சொல்லிட்டாரு. அவன் இப்ப தூங்கிகிட்டிருக்கான். முழிச்சதும் என்ன நடந்துச்சுனு கேட்பான் பாரு.”

ஹரிணி புன்சிரிப்போடு சொன்னவாறே எதிரில் நின்றிருந்தாள். “இப்ப சொல்லு கோதை.நேற்று என்னென்ன நடந்துச்சு? நீ மறைக்காம எல்லாத்தையும் சொன்னா தான் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும்.”

“நீங்க என்ன போலீஸா? ஏன் இதையெல்லாம் கேட்கறீங்க?”

“அப்ப நீங்களெல்லாம் போலீஸா? யாரை, எதுக்காகக் க்ருபா துரத்திட்டு ஓடினான்? இப்ப இந்த அரண்மனையில் நாம தான் இருக்கோம். நமக்குள்ளே ஒத்துமையில்லைனா எல்லோருக்குமே கஷ்டம். புரிஞ்சுக்க.”

“அதெல்லாமிருக்கட்டும். நீங்க எப்படி கரெக்டா க்ருபா மயங்கின இடத்துக்கு வந்தீங்க?” – இம்முறை தீபா மடக்கினாள்.

“கோதை பண்ணின கலாட்டாவால எங்களுக்குத் தூக்கம் போயிடுச்சு. அதனால பிளான் பத்தி டிஸ்கஸ் பண்ணிருந்தோம். அப்பதான் பயங்கரமா சத்தம் கேட்டுச்சு. ஓடி வந்து பார்த்தா க்ருபா கீழே கிடந்தான். தலையிலேருந்து ரத்தம் வேற… அப்புறம் தான் தூக்கிட்டு போய் முதலுதவி பண்ணி டாக்டரைக் கூப்பிட்டோம். போதுமா? இப்பவாவது உண்மையை சொல்லுங்க.”

கோதை பயந்தபடியே க்ருபாவைப் பார்த்தாள்.

தீபாவோ கொஞ்சமும் கவலையின்றி “நாலு மணிக்கு கர்ணகடூரமா புல்லாங்குழல் வாசித்தது நீங்களா?” என்றாள்.

ஹரிணி ஒரு நிமிடம் திகைத்துப் பின் சுதாரித்தாள். “வாட் டூ யூ மீன்?” 

“நாலு மணி வாக்கில கேட்ட சத்தமா? அது ஏதோ மலைக்குருவி போல. தினம் கத்தி எழுப்பிவிட்டிடுது” சொல்லியபடியே வந்தார் எழில்மாறன். “க்ருபா எப்படி விழுந்தான்? ஏதாவது தெரிஞ்சதா?”

“நான் தான் சொன்னேனே! ஆத்தா கோபக்காரி. வாலை சுருட்டிட்டு ஒழுங்கா இருங்கனா இந்த பசங்க கேட்குதா? என்ன குத்தம் செஞ்சாங்களோ?” – கையில் ஜூஸோடு வந்தான் முத்துவேல்.




மெல்லக் கண்விழித்த க்ருபா, முத்துவேலைப் பார்த்து முகம் சுருக்கினான். “நீங்கதான் என் தலையில அடிச்சீங்களா முத்துவேல்?”

“ஐயோ சாமி! ஏன்? உங்களை நான் ஏன் அடிக்கப் போறேன்? என்னை வம்பில மாட்டி விடறீங்களே!” என்று அலறினான் முத்துவேல்.

“க்ருபா உங்களை அடிச்சது முத்துவேல்தானா? நீங்க பார்த்தீங்களா?” – ஹரிணி படபடக்க…

“இரண்டு பேர் இருட்டில ஒருத்தரையொருத்தர் துரத்திட்டிருந்தாங்க. நான் அவங்களை பின்தொடர நினைச்சேன். அப்பத்தான் பின்னந்தலையில் வேகமாக தாக்கிட்டாங்க.”

“க்ருபா! உங்களை அடிச்சது இவரானு பாருங்க” – ஹரி போர்வை சுற்றிய ஆளை கொத்தாகப் பற்றி நிறுத்தினான்.

“ஆ! இவன்… இருட்டில இன்னொருத்தரைத் துரத்தி கத்தியால குத்தினான்” – கிருபாவை முந்திக் கொண்டு கோதை அலறினாள்.

“ஐயையோ! நான் யாரையும் குத்தல. முத்துவேலைக் கேளுங்க!” – பதறியவனை எல்லோரும் வியப்போடு பார்த்தார்கள்.

“பாண்டி! உனக்கு அந்நேரத்தில என்ன வேலை? யாரைத் துரத்தின? உண்மையைச் சொல்லு. இல்லாட்டி போலீஸைக் கூப்பிடுவோம். என்னா தலை! இதுக்கெல்லாம் நீங்களும் உடந்தையா? நீங்க ரெண்டுபேரும்தானே போர்வை பார்ட்டி?” – ஹரி மிரட்டினான்.

முத்துவேல் பாண்டியை முறைத்தான். “அவன் உளர்றான் சார்.”

“கோதை, தீபா இருந்த ஜன்னலுக்கு பக்கத்தில உங்களுக்கு என்ன வேலைங்கறதை முதலில் சொல்லுங்க” என்றான் ஹரி மறுபடியும்.

“சார்! சார்! பொம்பளைப் புள்ளைங்க இருக்கு. ஒண்ணு கிடக்க ஒண்ணு பேசாதீங்க. என் கூட வாங்க” என்ற முத்துவேல் ஹரியை அழைத்துப் போய் ஏதோ பேசினான்.

ஹரி தலையிலடித்துக் கொண்டு உள்ளே வந்தான். “க்ருபா! இவனுங்க இரண்டுபேருந்தான் ரகளையடிச்சது.எல்லாம் சரக்குப் பாட்டிலுக்கான சண்டை. கோதை கத்தியதும் ஓடி ஒளிஞ்சிட்டானுங்க. எல்லோரும் செட்டிலானதும் திரும்ப வந்திருக்கானுக. அதுக்குள்ளே நீ வந்திட்ட. ஓடிட்டானுங்க” என்றான்.

“இல்லை ஹரி சார்… எதையோ இழுத்திட்டு போனாங்க. புல்லோரமெல்லாம் ரத்தத் துளியா இருந்திச்சு.”

“ஆமாம். காட்டுப் பன்றி ஒண்ணு காம்பவுண்டுக்கு உள்ள வந்திருச்சு. அடிச்சு வெளியே இழுத்திட்டுப் போயிருக்கானுங்க.”

“அதெல்லாம் சரிங்க. என் தலையில ஏன் அடிக்கணும்? அதான் எனக்குப் புரியல.”

“ஆனா எனக்குத் தெரிஞ்சிடுச்சே!” என்றார் அங்கே சம்மன் இல்லாமல் ஆஜராகியிருந்த சந்தானபாண்டியன்.

“என்ன சொல்றீங்க சார்?”

“க்ருபாவை யாரும் அடிக்கல. மேலே தொங்கவிட்டிருந்த பூந்தொட்டி விழுந்திருக்கு. இங்கே வந்து பாருங்க. தொட்டி உடைஞ்சு கிடக்கு.”

“அட… கடைசியில எல்லாமே மொக்கையா போயிடுச்சே. கோதை! சும்மா படைகலக்கிட்டே போ.”

தீபா கலாய்க்க…

மொத்தபேரும் சிரித்தாலும் அதில் சொல்ல முடியாத ஒரு நிம்மதி இருந்தது.

“ஏதோ ரணபத்ரகாளியம்மன் அருளால பெரிசா ஒண்ணும் நடக்கல. காலையில சிம்பிளா பூஜை முடிச்சேன். எல்லோரும் கற்கண்டு பிரசாதம் எடுத்துக்குங்க” மீனா தட்டை நீட்ட…

சந்தான பாண்டியன் இம்முறை எந்த எதிர்ப்புமில்லாமல் முதல் ஆளாகக் கற்கண்டை எடுத்துக் கொண்டார்.

*****

மறுநாள்.

“ஆதி சார், இதெல்லாம் நியாயமா? இங்கே இத்தனைப் பிரச்சனை இருக்கும்போது, எங்க எல்லாரையும் இங்கே வரவெச்சு, எல்லாரையும் ஆபத்தில் சிக்க வெச்சுட்டீங்களே” என்று அங்கலாய்த்தாள் கோதை.

“புரியாம உளறாத கோதை. இங்கே நடக்கறதுக்கு ஆதி சார் எப்படிக் காரணமாவார்? அவர் தன்னுடைய ரிஸார்ட்டை டெவெலப் பண்ணறதுக்காக நம்மை இங்கே தங்கச் சொன்னார். நாம செய்த தப்புகள் நிறைய இருக்கு. நான் இரவில் தனியா வெளியே போனது தப்பு. இந்தப் புரொபஸர் பழைய வீட்டில் தாறுமாறா கையை வெச்சது தப்பு. சந்தானபாண்டியன் ஏதோ பெண்ணைத் தேடிக்கிட்டு…” – க்ருபா கோபமாகப் பேச, சந்தானபாண்டியன் வெட்கமாய் இடைமறித்தார்.

“அதை விடமாட்டியா தம்பி? நாந்தான் செய்த தப்பை ஒத்துக்கிட்டு திருந்திட்டேனே.”

“க்ருபா, நீ சொல்றதை முழுசுமா ஒத்துக்க முடியலை. இங்கே மூணு மரணங்கள் நடந்திருக்கு! அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கற? அதோட… அந்தக் கைதி வேற…” கோதையின் குரல் நடுங்கியது.

“கைதிதான் இங்கே எங்கேயும் இல்லையே! இவ்வளவு ஆள் நடமாட்டமும் போலீஸ் நடமாட்டமும் இருக்கும் இடத்துக்கு சிறையிலிருந்து தப்பிச்ச கைதி வருவானா? அப்படியே வந்திருந்தாலும், இந்நேரத்துக்குள்ள அவன் இந்த இடத்தைவிட்டு வெளியேறியிருக்கணும்” என்றான் க்ருபா.

“நீங்க சொல்றது தப்பு தம்பி” என்றவாறே ஹாலுக்குள் நுழைந்தார் எழில்மாறன். “பத்ரி இங்கேதான் இருக்கணும், அதுதான் இந்தக் கொலைகளை விளக்க முடியும்!”

இதைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த ஹரி “சார், நீங்க என்ன சொல்றீங்க? இங்கே அமானுஷ்யம் எதுவும் இல்லைன்னா? இங்கே நடக்கிற அசம்பாவிதங்களை ஏற்படுத்தறது பத்ரின்னா சொல்றீங்க?” என்றான்.

“நான் என்ன சொல்றது? நீங்கதான் சொல்லணும். டிடெக்டிவ்ஸ்னு வேற சொல்லிக்கறீங்க!” என்றார் எழில்மாறன் கேலியாய்.

“இங்கே போலீஸ் தேடினபோது பத்ரி இங்கே இல்லையே” என்றாள் ஹரிணி.

“நீங்க அசட்டுத்தனமா பேசறீங்களா, இல்லை ஆழம் பார்க்கறீங்களான்னு எனக்குப் புரியலை” என்றார் எழில்மாறன். “போலீஸ் இந்தப் பகுதி பூரா தேடிட்டாங்க, பத்ரி கிடைக்கலை. ஆனா அவன் இங்கேதான் இருக்கான்! புரியலையா? நம்மிலே யாரோதான் பத்ரி!”

அத்தனைபேரும் அதிர்ந்தார்கள். 

“இங்கே எல்லோரும் ஆதித்யாவுக்குத் தெரிஞ்சவங்கதான், உங்களைத் தவிர! நீங்களும் வந்ததிலிருந்து ஏதேதோ சொல்றீங்க – சிவில் எஞ்சினியர், ஆர்க்கிடெக்ட், ஆக்கல்ட் மந்திரவாதிகள், இப்போ டிடெக்டிவ்ஸ்! கலர் கலரா ஃபிலிம் காட்டிக்கிட்டே இருக்கீங்க வந்ததிலிருந்து! உங்கமேல நாங்க ஏன் சந்தேகப்படக் கூடாது!”

“ஓ! தாராளமா சந்தேகப்படலாமே! அந்தச் சந்தேகத்தை மனசில் வெச்சுக்காம, அதோ நம்ம இன்ஸ்பெக்டர் வரார், அவர்கிட்டயே க்ளியர் பண்ணிக்கறது இன்னும் நல்லது!” என்றாள் ஹரிணி கேலியாக.




*****

“போலீஸ்க்குத் தெரிஞ்சவங்க போலிருக்கு” – கோதை கிசுகிசுத்தாள்.

இன்ஸ்பெக்டர் ஹரியிடமும் ஹரிணியிடமும் கலகலப்பாகப் பேசிவிட்டு ஹாலுக்குள் நுழைந்தபோது எழில்மாறனின் முகம் தொங்கிப் போயிருந்தது. ஆனால் இன்ஸ்பெக்டர் நேராக அவரை நோக்கி வந்தாலும் அவரின் ‘ஹரி=பத்ரி’ சந்தேகத்தைப் பற்றி அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

“மிஸ்டர் எழில்மாறன், உங்க யூனிட்ல பாண்டின்னு ஒருத்தர் இருக்காராமே, அவரைக் கூப்பிடுங்க!” என்றார்.

எழில்மாறன் குழம்பினார். ஆனாலும் வின்செண்ட்டைக் கூப்பிட்டு பாண்டியை அழைத்துவரச் சொன்னார்.

இதற்கிடையில் கிருபா இன்ஸ்பெக்டரிடம் “சந்தானபாண்டியனும் இவங்களும் பார்த்தாங்களே, ஏதோ அம்மன் உருவம் வந்து கொன்னதா சொன்ன ஆள் – அவன் யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா சார்?” என்று கேட்டான்.

“அவன் பத்ரியா என்பதுதான் உங்க கேள்வின்னு நினைக்கறேன். இல்லை! பத்ரி ஒல்லியானவன், நடுத்தர உயரமுள்ளவன், டீசண்ட் லுக். செத்துப் போனவன் யாருன்னு இன்னும் தெரியலை” என்றார் இன்ஸ்பெக்டர்.

அதற்குள் வின்செண்ட் உள்ளே வர, அவனுக்குப் பின்னால் அந்தப் பாண்டி பயந்து நடுங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். அவனை இப்போதுதான் அரண்மனையில் தங்கியிருந்தவர்கள் எல்லோரும் நன்றாகப் பார்த்தார்கள்.

ஒல்லி. நடுத்தர உயரம். கட்டியிருந்த லுங்கியையும் உதட்டில் அதக்கியிருந்த பீடியையும் மீறி ஒரு களை. இவனா முத்துவேலோடு சாராய பாட்டிலுக்காகச் சண்டை போட்டவன்?

“என்ன, மிஸ்டர் பத்ரி? உங்களுக்காக கவர்மெண்ட் ஆயிரம் அறைகொண்ட கோட்டையை ஒதுக்கியிருக்கு, நீங்க இந்த ஆறுகட்டு அரண்மனையில் வந்து பதுங்கிக்கிட்டீங்களே, இது நியாயமா?” என்றார் இன்ஸ்பெக்டர் கிண்டலாக.

அந்தப் பாண்டி (அலைஸ் பத்ரி)யின் முகத்தில் அபூர்வமான புன்னகை ஒன்று அரும்பிற்று. “ப்ராவோ, இன்ஸ்பெக்டர்! உங்க ஜாதி குணம் எங்கே போகும்? கரெக்டா மோப்பம் பிடிச்சு வந்துட்டீங்களே!” என்றான்.

“உங்களை மாதிரி தெருநாய்கள் இருக்கும்போது, எங்களை மாதிரி இராஜபாளையங்கள் தேவைதானே! ஆனாலும் உங்களைப் பிடிச்சு நாய்வண்டியில் அடைச்ச பெருமை எனக்கு இல்லை, இந்த ஹரி-ஹரிணி ஜோடிக்குத்தான்” என்றார் இன்ஸ்பெக்டர்.

ஹரி அருகில் வந்து பாண்டியை உற்றுப் பார்த்தான். “பத்ரி! நீ ஜெயிலிலிருந்து தப்பிச்ச, இங்கே எதுக்காக வந்த? இங்கே இருக்கற முத்துவேலுக்கும் உனக்கும் என்ன தகராறு? நீ ஏன் கிருபாவோட மண்டையில் அடிக்கணும்? இங்கே நடக்கிற மர்மச் சம்பவங்களுக்கும் உனக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?” என்று கேட்டான்.

“அதையெல்லாம் நான் ஏன் சொல்லணும்? நீங்களே கண்டுபிடிங்களேன் – துப்பறிஞ்சு, இல்லை மந்திரம் போட்டு! எங்க ஊர்ல வெத்திலையில் மையைத் தடவிப் பார்ப்பாங்க, மந்திரக்கோல் வெச்சுக் கைரேகை பார்த்துக் குறி சொல்லுவாங்க…” 

“உன் ஊர் எது பத்ரி?” – அவன் கேலியாகச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ஹரிணி இடைமறித்தாள்.

“திருச்செ…” என்று ஆரம்பித்த பத்ரி சட்டென்று நிறுத்தினான்.

ஹரி அவன் கன்னத்தில் தட்டினான். “நாங்க முட்டாள்களில்லைன்னு புரிஞ்சுக்கிட்டிருப்ப, பத்ரி! இப்போதைக்கு இன்ஸ்பெக்டரோடு போ! நாங்க உண்மைகளோடு வந்து உன்னை மறுபடி சந்திக்கறோம்” என்றான்.

பத்ரி பிரமித்தான். இன்ஸ்பெக்டர் அவனை இழுத்துக் கொண்டு ஹாலைவிட்டு வெளியேறும்வரை ஹரியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

*****

ஆதி நிம்மதிப் பெருமூச்செரிந்தான்.

“ரொம்ப தாங்க்ஸ் ஹரி. எல்லாத்திலேயும் ஸ்மார்ட்டா ஆக்ட் பண்ணி, உண்மையை வெளியே கொண்டுவந்து, பிரச்சினை இல்லாம பண்ணிட்டீங்க.”

“அட் ப்ரெசென்ட் பிரச்சினையை ஆறப் போட்டிருக்கோம், அவ்வளவு தான். உண்மை பொய் எதுனு தீர ஆராய்ச்சி செஞ்சாதான் தெரியும்.”

“என்ன ஹரி! குண்டைத் தூக்கிப் போடறீங்க?”

“ஆமாம் சார். க்ருபாவோட தலைக்காயத்தைக் கவனிச்சீங்களா? தொட்டி விழுந்த காயத்துக்கும் தடியால் தாக்கின காயத்துக்கும் நமக்கு வித்தியாசம் தெரியாதுன்னு நினைச்சிட்டாங்க. தற்போதைக்கு அந்த விளக்கத்தை நாம ஏத்துக்கிட்டு மத்தவங்களையும் ஏத்துக்க வெச்சிருக்கோம்” என்றாள் ஹரிணி.

“அப்போ அவனைத் தாக்கினது யாராயிருக்கும்? ஏன்?” என்று பதறினான் ஆதி.

“அந்த நேரத்தில் யார் காணப்படலையோ அவங்களா இருக்கும்.”

“என்ன சொல்றீங்க?”

“ஒரு விஷயம் கவனிச்சீங்களா? இந்தக் களேபரத்தில எல்லோரும் இங்கே ஆஜராயிட்டோம். ஒருத்தரை மட்டும் கண்ணிலே காணோம்.”

“யாரைச் சொல்றீங்க ஹரி?”

“நம்ம புரபஸர்.”

அட..ஆமாம்ல. எங்கே அவர்? விடிகாலைல வராட்டியும் இப்பவாவது வந்து என்ன ஏதுன்னு விசாரிக்கலாம்ல.”

“ஏதாவது ஆராய்ச்சியில் மூழ்கிக் கிடப்பாராயிருக்கும். இந்த சயிண்டிஸ்டுங்களே தனி உலகத்தில் சஞ்சரிக்கறவங்களாச்சே! எதுக்கும் நான் போய்ப் பார்க்கிறேன். அஞ்சாம் கட்டில இருக்கிறவருக்கு சத்தம் கூடவா கேட்கல?”




*****

அதேநேரம் புரபசர் தன்னுடைய ஃபைலிலிருந்த குறிப்புகளை வைத்து நிலவறையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தார்.

எத்தனை ஆண்டு கனவு? இப்போதுதான் காலம் கனிந்திருக்கிறது. இந்த மஞ்சள்காட்டில் ஆராய்ச்சி செய்யவும் வரலாற்றுச் சின்னங்களைத் தேடவும் அரசாங்கத்திடம் அனுமதி பெற நான் எவ்வளவு போராட வேண்டியிருந்தது. அது மட்டுமின்றி இங்கே கிடைக்கின்ற வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டு இங்கேயே ம்யூஸியம் நிறுவ உதவுவதாக வாக்களித்து, என்னுடைய ஆராய்ச்சிகள் எந்தவிதத்திலும் ரிசார்ட்டின் வணிக மதிப்பைக் குறைக்காது, மாறாகக் கூட்டவே செய்யும் என்று உத்தரவாதம் கொடுத்தபின் தானே ஆதி என்னை அரண்மனையில் தங்க அனுமதித்தான்.

உண்மையில் அவர் வரலாற்று ஆராய்ச்சியா செய்ய வந்தார்?

அவருடைய தாத்தா இங்கே கணக்கராக இருந்ததாகவும் ஏகப்பட்ட நவநிதியங்கள் ஒரு பேழைக்குள் வைத்து நிலவறைக்குள் பதுக்கப்பட்டிருப்பதாகவும் எழுதி வைத்திருந்த குறிப்பை நம்பியல்லவா இங்கு வந்திருக்கிறார்?

அவரைப் பொறுத்தவரை அந்தப் பொக்கிஷத்தில் அவருக்கும் பங்கிருக்கிறது. அரண்மனைக்காரர்கள் தாத்தாவுக்கு எந்தச் சம்பளமும் கொடுக்காததோடு அவரை ஊருக்கும் அனுப்பாமல் குடும்பத்தோடு வாழவிடாமல் செய்தவர்கள்.

அப்பாவை வைத்துக்கொண்டு கிராமத்தில் தான் அல்லாடியதைப் பாட்டி கதை கதையாய் சொல்லி வருந்தியிருக்கிறார். கடைசியில் தாத்தா அவர்களிடமிருந்து தப்பித்து கிராமத்துக்கு வந்திருக்கிறார். அவர்மீது திருட்டுப்பழி சுமத்தியது அரண்மனை. தன் குடும்பத்தோடு ஊர் ஊராக, பயத்திலும் பட்டினியிலும், அலைந்திருக்கிறார். 

இப்படி எத்தனையோ பேர் சாபத்தில் நிற்கும் மாளிகையிது. ஆனால் பெருஞ்செல்வம் அதன் நிலவறையில் பதுங்கியிருக்கிறது. அது தாத்தாவின் பத்து வருட ஊழியத்தின் சம்பளம். அதையெடுத்து வாழ்வாங்கு வாழ வேண்டும். இலக்கையடைய எதையும் செய்யலாம்.

அவருடைய தாத்தா தப்பித்து வந்தபோது, அவரிடம் சில பழைய காகிதங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் அரண்மனையின் முழுமையான வரைபடம். அந்த வரைபடத்தை வைத்துத் தேடித்தேடி அன்று கிட்டத்தட்ட அந்த நிலவறையைக் கண்டுபிடித்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

இரவில் அவர் தூங்கவில்லை. அவர் ஆராய்ச்சி தொடர்ந்தது. விடிகாலை கோதையின் அலறலைக் கேட்டு எல்லோரும் கூடிய நேரத்தில் அவர் நிலவறை இருக்கும் பகுதியில் இருந்தார்.

அதன் திறப்பு எங்கிருக்கும்? அதைக் கண்டுபிடிக்கப் பிரம்மபிரயத்தனம் செய்துகொண்டிருந்தார். அப்போது… 

ஐந்தாம் கட்டும் ஆறாங்கட்டும் இணையுமிடத்தில் உள்பக்கமாக பெரிய நிலைக்கண்ணாடி பதித்திருந்தார்கள். அந்தக்கால பெல்ஜியம் கண்ணாடி…

அதன் கீழே அழகுக்காகவோ என்னவோ பித்தளைக் குமிழ்களைப் பொருத்தியிருந்தார்கள். கையிலிருந்த வரைபடக்குறிப்பின் அம்புக்குறி அந்த இடத்தைத்தான் காட்டியது என்று புரிந்தது அவருக்கு.

“யுரேகா…” எனக் கத்தியபடி அவர் அந்தப் பித்தளைக் குமிழில் கைவைக்க, கையில் சுரீரென்று ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்த மாதிரி இருந்தது.

வீலென்று அலறியவர் அங்கிருந்து மெதுவாகத் தன் கொடுக்கைத் தூக்கியபடி நகர்ந்த கருந்தேளைக் கண்டு அரண்டு போனார்.

அந்தக் களேபரத்திலும் தன் பொக்கிஷக் குறிப்புகளை அவசரமாகப் பெட்டியில் வைத்து லாக் பண்ணியவர், அதற்கு மேல் தாங்க முடியாமல் மயங்க…

அதேநேரம் கதவில் கைவைத்தான் ஹரி.

வாயில் நுரை தள்ள கண்கள் செருகியபடி அவன் மேல் விழுந்தார் புரபசர். “தேள்… தேள்…” வாய் குழறியது.

“ஹரிணி க்விக்! ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்திட்டு வா” என்று கத்தினான் ஹரி. ஹரிணி ஓடினாள்.

“நாம வந்த வேலை என்ன? இப்ப செய்ற வேலை என்ன? பேசாம டாக்டராயிடுவோமா சிவாஜி?” அலுத்துக் கொண்டாலும்  விறுவிறுவென்று சுத்தமாகக் கட்டுப் போட்டுவிட்டு டாக்டரை அழைத்தாள்.

புதுப்பிக்கப்பட்ட வீடு. வேலையாட்கள் சுத்தம் செய்துகொண்டேயிருக்கிறார்கள். எங்கேயிருந்து தேள் வந்தது? இப்போது எங்கே போனது?

ஹரி யோசித்தவாறே இல்லாத தேளைத் தேடிக் கொண்டிருக்கையில்…

புரபசரின் பெட்டியருகில் அந்தப் பொருள்…

இது என்ன? வித்யாசமாய்….

******

தான் எடுத்த பொருளை பாக்கெட்டுக்குள் பதுக்கிக் கொண்டு, புரொபஸர் படுக்க வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றான் ஹரி.

ஹரிணியின் கேலியும் குறும்பும் மறைந்துவிட்டிருந்தது. புரொபஸரைக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். கை அவருடைய நாடித்துடிப்பைப் பரிசோதித்துக் கொண்டிருந்தது.

“பல்ஸ் ரொம்பத் தாறுமாறா இருக்கு, இறங்கிட்டும் வருது” என்று ஹரியிடம் கிசுகிசுத்தாள்.

ஹரி கவலையாய் நெற்றியைத் தேய்த்தான். அதற்குள் அறையின் வாயிலில் க்ருபா, ஆதி, சந்தானபாண்டியன் என்று சிலர் வந்து நின்றுவிட்டனர். ஆதி மட்டும் உள்ளே வந்து “அட்டாக்கா? டாக்டருக்குச் சொல்லிட்டீங்களா?” என்று மெதுவாகக் கேட்டான்.

ஹரிணி எழுந்தாள். “டாக்டருக்குச் சொல்லியாச்சு. ஆனா பிரயோஜனமில்லை. மூச்சு நின்னுடுச்சு” என்றாள் சோர்வான குரலில்.

ஹரி பரபரப்பாக புரொபஸரின் இதயத்துடிப்பைச் சோதித்தான். 

தேவையே இல்லை. மெடிகல் விஷயங்களில் ஹரிணி என்னைவிடக் கெட்டிக்காரி. அதோடு இந்த மாதிரி நேரத்தில் அவசரப்படுபவளே அல்ல.

ஹரி நொறுங்கியவனாக நிமிர்ந்தான். “ஐ அம் சாரி, மிஸ்டர் ஆதித்யராம்! இங்கே நடக்கிற அசம்பாவிதங்களை நிறுத்தத்தான் எங்களை இன்வால்வ் பண்ணினீங்க. ஆனா எங்களால் நடந்துட்ட பல சம்பவங்களைத் தடுக்க முடியலை. இந்தக் கேஸ்லேர்ந்து நாங்க விலகிக்கணும்னு நீங்க நினைச்சா, நாங்க விலகிக்கறோம்… பட், சப்போஸ் எங்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்கலாம்னு நீங்க நினைச்சா, உங்களுக்கு ரெண்டு அஷ்யுரன்ஸ் கொடுக்கறேன் – ஒன்று, இனி உயிரிழப்புகள் நடக்காது. இரண்டு, இதுவரை நடந்துட்ட சம்பவங்களுக்கு யார் காரணமோ அவங்களைச் சும்மா விடப் போறதில்லை நான்!” என்றான் முகம் சிவக்க.

ஆதித்யா அவனையும் இன்னும் புரொபஸரையே பார்த்துக் கொண்டிருந்த ஹரிணியையும் உற்றுப் பார்த்தவனாய்ச் சற்று யோசித்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஹரியுடன் கைகுலுக்கினான். “கோ அஹெட்” என்றான் சுருக்கமாக.




What’s your Reaction?
+1
8
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!