Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம் -4

(4)

ப்ராஜெக்ட் வேலை சிறிது இருந்ததால் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழந்துவிட்டாள் முகிலினி .பல் தேய்த்து முகம் கழுவி வந்தவள் ஹாலுக்கு வந்தபோது அப்பாவின் அலுவலக அறையில் விளக்கெறியக் கண்டு அங்கே சென்றாள் .அப்பா ஏதேதோ பைல்களை பரப்பி வைத்துக்கொண்டு லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்பாவுக்கும் சேர்த்து காபி கலந்து கொண்டு அங்கே சென்றாள் .

” அப்பா என்னப்பா இது …எப்போ எந்திரிச்சீங்க ? …ஏன்பா இப்படி வேலை செய்கிற அளவு அவ்வளவு வேலை இருக்கா …”, சிறு கவலையுடன் கேட்டாள் .

” ஆமடா முகி…இது ரொம்ப முக்கியமான வேலை .சிறு கவனக்குறைவும் , பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் .அதனால்தான் நேரங்காலம் கணக்கு பார்க்காமல் வேலை பார்க்கிறேன் “, என்பவரிடம் காபியை நீட்டினாள் .

“நன்றிடா …” என்றபடி டம்ளரை வாங்கியவர் ” ஏம்மா இன்னொரு கப் காபி கிடைக்குமா …? நந்தன் சாருக்கு …”, என மேலே கை காட்டினார் .

முடியாது என்றா சொல்லமுடியும் ? .உள்ளே சென்று இன்னொரு கப் கலந்து வந்து நீட்டினாள் முகிலினி .டம்ளரை வாங்கிக்கொண்டு தன் கையிலிருந்த பாதி காப்பியை குடித்தபடி மாடியேறினார் தமிழ்செல்வன்.அப்போது மாடியில் அந்த நந்தனும் வேலை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறானா ? தூங்கவில்லையா ? …ம் ….அப்படி என்னதான் வேலையோ ? தனக்குள் சலித்தபடி படிக்க உட்கார்ந்தாள் முகிலினி .

அன்று கல்லூரிக்கு கிளம்பி வாசல் வருகையில் வாசலில் இருந்த அந்த பைக்கை காணோம் .வெளியே கிளம்பிவிட்டான் போலும் .

பஸ்ஸில் வைஷ்ணவியின் தொணதொணப்பிற்கு காது கொடுத்தபடி சன்னல் வழியே பார்வையை போட்டாள் .அதோ …அந்த பைக் …அது ..அவனுடையது போல் இருக்கிறதே …? அவர்கள் போகும் பஸ்ஸிற்கு இணையாக அருகில் வந்து கொண்டிருந்தது அந்த பைக் .

தன் ஹெல்மெட்டின் கண்ணாடியை சிறிது உயர்த்தி அவளை பார்த்து கை காட்டினான் அந்த பைக் ஓட்டி. …அவன் …அவன்தான் ..யதுநந்தன் .சட்டென தலையை உள்ளே இழுத்துக்கொண்டாள் முகிலினி .மனது படபடத்தது .

என்ன இவன் ஏதோ ரொம்ப தெரிந்தவன் போல் ரோட்டில் வைத்தெல்லாம் கை காட்டுகிறானே .திடீரென முகிலினியின் இடுப்பு பக்கம் சுலீரென வலித்தது ….வைஷ்ணவிதான் ..தன் முழங்கையால் அவள் இடுப்பில் பலமாக இடித்திருந்தாள் .

“, ஏன்டி எருமை …இங்கே ஒருத்தி தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு இருக்கிறா ? நீ என்னன்னா அங்கிட்டு பராக்கு பார்த்துக்கிட்டு இருக்க . அப்படி யாரைடி பார்க்கிறாய் ? ” தானும் அதே சன்னல் வழியே எட்டிப்பார்க்க முனைந்தாள் .

அவசரமாக அவளை தடுத்து உட்புறம
திருப்பினாள் .” இல்லைடி வைஷு …ஒரு கண் தெரியாதவருக்கு  இன்னொருத்தர் ரோட்டை கடக்க உதவிக்கொண்டிருந்தார் .அதைத்தான்பா பார்த்தேன் ” என்றாள் .

சட்டென அடங்கிவிட்டாள் வைஷ்ணவி. இது போன்ற உதவிகளெல்லாம் வைஷ்ணவியை பொறுத்தவரை நேரத்தை வீணடிப்பவை .எனவேதான் முகிலினி அப்படி சொல்லி அவளை அடக்கினாள் .

அன்று அவர்கள் டிபார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தவுடனேயே தகவல் வந்துவிட்டது புது லெக்சரர் வரப்போவதாக .நளினி வேகமாக வந்து ,” ஏய் நம்ம டிபார்ட்மென்டுக்கு சி. ஜி ( computer graphics ) க்கு புது லெக்சரர் வர்றாரான்பா .நம்பத்தகுந்த இடத்திலிருந்து வந்த தகவல் ” என்றாள் .




” அது எந்த நம்பத்தகுந்த இடம்டி …? ”
வைஷ்ணவி கேட்டாள் .

“வேறு யார் நம் அனிதா மேம் தான் .
“, என்றவள் குரலை சிறிது குறைத்து “ஏய் ஆள் ரொம்ப ஹேண்ட்ஸ்சம்மாம் .அனிதா மேம் அன்றைக்கே பார்த்துட்டாங்களாம் ” என்னவோ உலக மகா தகவல் சொல்லிவிட்ட பாவனை காட்டினாள் அவள் .

” ஆஹா …என் வேண்டுதல் இவ்வளவு சீக்கிரமா நிறைவேறும் நினைக்கலையே …ஏய் எனக்கு அப்படியே புல்லரிக்குதுப்பா பாரு ” என்று தன்னை  நோக்கி நீட்டிய வைஷ்ணவியின் கைகளில் நறுக்கென்று கிள்ளினாள் முகிலினி .
” ஏன்டி இப்படி பறக்குற ? காணாததை கண்ட மாதிரி .நீ முன்ன பின்ன ஆம்பளையையே பார்த்ததில்லையா ? ” கண்டித்தாள் முகிலினி .

” அடிப்போடி ரசனை கெட்டவளே ! உனக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கி போ , என்னை கன்ட்ரோல் பண்ண நினைக்காதே .கண்ணில் தென்படும் அழகை ரசிப்பதில் என்ன தவறிருக்கப்போகிறது ? ” என்ற வைஷ்ணவி நளினி பக்கம் திரும்பி மேலே எதுவும் விவரம் கிடைக்குமா என அவளை நோண்டத்தொடங்கினாள் .

எப்படியும் போ என்று அவளை நினைத்த முகிலினியால் அந்த புது லெக்சரர் வரவும் அப்படி நினைக்க முடியவில்லை .ஏனென்றால் புதிதாக வந்த லெக்சரர் யதுநந்தன் .

கண்களை விரிய திறந்து வைத்தபடி நம்ப முடியாத ஆச்சரியத்துடன் அவனையே  பார்த்தபடி இருந்தாள் முகிலினி .அலட்டலில்லாத நேர் நடையுடன் உள்ளே வந்தவன் ” ஹாய் ஸ்டூடெண்ட்ஸ் …” என்றான் பளிச் சிரிப்புடன் .

ஒரு நிமிடம் வகுப்பறையே அமைதி போர்த்திக்கொண்டது போல் தோன்றியது .

” நான் யதுநந்தன் .உங்கள் புது லெக்சரர் .உங்களை  அறிமுகப்படுத்திக்கொள்கிறீர்களா ? முதலில் இங்கிருந்து …” என்றபடி மாணவர்கள் வரிசைக்கு சென்றான் .

நெஞ்சம் படபடத்தது முகிலினிக்கு .இதைத்தான் நேற்று சொன்னானா ? சே நான் கொஞ்சம் கூட யோசிக்கவில்லையே ? தனது முறைக்காக நகத்தை கடித்தபடி இருந்தாள் .

அவள் முறை வந்ததும் எழுந்து நின்றவளுக்கு அவன் முகம் பார்த்ததும் சொல்ல வந்தது மறந்துவிட்டது .

ஆயிரமாயிரம் வார்த்தைகள்
மனதிற்குள் முட்டி மோத
உன் விழி வீச்சில்
மறந்தே போனேன்
என் பெயரைக்கூட ….

” ம் ” ….என்று ஒரு புருவம் உயர்த்தலுடன் அவன் ஊக்க ,
“முகிலினி ” என்றாள் மெல்லிய குரலில் .ஒரு திருப்தியான பாவம் அவன் விழிகளில் தெரிந்தது .

தொடர்ந்த அவன் அறிமுகங்களும்  , பாடம் நடத்தியதும் ஏதோ வேற்று பூமியில் நடப்பது போன்ற ஒரு விதமான தோற்றம் அவள் மனதில் தோன்றியது  .மிகக் கடினமான அந்த சப்ஜெக்டை  எளிதாக அவன் நடத்திய விதம் ஆச்சரியம் கொள்ள வைத்தது .

சிறிது நேரம் கழித்துத்தான் முகிலினி அதைக்கவனித்தாள் .வகுப்பு முழுவதுமே ஒரு அமைதி பரவியிருப்பதை .மாணவர்கள் பக்கமிருந்து கூட சிறு சலசலப்புமில்லை .எல்லோரும் தூங்கி விட்டார்களா என்ன ? மெல்ல கண்களை சுழற்றி வகுப்பறையை கவனித்தாள் .

யாரும் தூங்கவோ , பாட்டு கேட்கவோ , கேம் விளையாடவோ இல்லை .அனைவரும் வைத்த விழி எடுக்காமல் யதுநந்தனை , பார்த்துக்கொண்டிருந்தனர்.அவனை பார்க்கிறார்களோ அல்லது அவன் பாடத்தை கேட்கிறார்களோ தெரியாது .ஆனால் எந்த சேஷ்டைகளுமின்றி அனைத்து மாணவர்களின் பார்வையும் அவனிடமே குவிந்திருந்தது .

பொதுவாக புதியதாக வரும் லெக்சரர்களை முதல் நாளே பாடம் எடுக்க மாணவர்கள் அனுமதிப்பதில்லை .நாளை பார்ப்போம் … மறுநாள் பார்ப்போம் என ஒரு வார காலமாவது தள்ளி தள்ளி போட்டுவிடுவார்கள் .சில இளம்வயது ஆசிரியைகளை அழக்கூட வைத்துவிடுவார்கள் .

அந்த கல்லூரி படிப்பை விட ஒழுக்கத்திற்கே முதலிடம் கொடுக்கும் .எனவே மனம் புண்படும் வகையில் மாணவர்களது கிண்டலோ , கேலியோ இருக்காது .இயல்பான மாணவப்பருவத்திற்குரிய சின்ன சின்ன விளையாட்டுக்கள்தான் .அதனை அக்கல்லூரி இயக்குநர் கண்டும் காணாமல் விட்டு விடுவதால் மாணவர்கள் அதனை தங்களுக்கான அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து வருகின்றனர் .

அப்படிப்பட்டவர்கள் இன்று ஏதோ மெஸ்மரிசம் செய்யப்பட்டவர்கள் போல யதுநந்தனை பார்த்துக்கொண்டிருப்பதை ஆச்சரியமாக கவனித்தாள் முகிலினி .அவர்களை சொல்வானேன் .நானே சிறிது நேரம் முன்பு வரை அந்த நிலையில்தானே இருந்தேன் .அன்று வீட்டில் வைத்து முதன் முதலில் அவனை பார்த்த போது கூட “ஆ ” வென வாயை பிளக்கவில்லை .என தன்னையே தனக்கு  நினைவறுத்திக்கொண்டாள் முகிலினி .




அந்த நினைவை தெடர்ந்து ஆளுக்கு ஒருபுறமாக கேட்டை பிடித்து இழுத்ததும் , அவன் கொசு விரட்டிய பாவனையும் நினைவு வர , ஒருவேளை இவன் வசியக்கலை கற்றவனோ என புன்னகையுடன் எண்ணிக்கொண்டவளுக்கு வைஷ்ணவியும் அவள் ஜொள்ளும் நினைவு வர படக்கென திரும்பி தன்னருகில் நோக்கினாள் .

அவள் ஊகித்தது போலவே வைஷ்ணவி கண்கள் சொருக ஒருவிதமான மயக்க நிலையில் இருந்தாள் .மெலிதாக வாய் திறந்தபடி யதுநந்தனை பார்த்தபடி இருந்தாள் .நெஞ்சம் மட்டும் ஏறியிறங்கவில்லையெனில் கண்டிப்பாக அவளை சிலையென்றே கூறிவிடலாம் .

சுட்டெறிக்கும் உச்சி வெயிலென கோபம் உச்சந்தலைக்கு ஏறியது முகிலினிக்கு .கழுதை …என்ன பார்வை பார்க்கிறாள் .சற்று முன் வரை தானும் அதுவேதான் செய்து கொண்டிருந்தோம் என மறந்து , தனது வலது காலால் அவளின் இடது  காலின் மேல் ஓங்கி மிதித்தாள் .

சற்றே தன் காலை நகர்த்திக்கொண்ட வைஷ்ணவி தன் பார்வையை சிறிதும் நகற்றாமல்  மீண்டும் தொடர , அட சொரணை கெட்டவளே என பொறுமியபடி , பாவமென சுழற்றிப்போட்டு விட்டு மிதித்த தன் செருப்பை மீண்டும் அணிந்து கொண்டு இந்த முறை இருமடங்கு பலத்தோடு அழுத்தி மிதித்தாள் முகிலினி .

” ஆ…ஆ…ஆ …”, அப்படியும் பார்வையை விலக்காமல் தன் கைகளை மட்டும் கீழே செலுத்தி லேசாக தேய்த்து விட்டு விட்டு தன் வேலையை செவ்வனே தொடர்ந்தாள் வைஷ்ணவி .

அடிப்பாவி கால் சுண்டு விரல் கழன்டு போற அளவு மிதிச்சிருக்கேன் என்னமோ கட்டெறும்பு ஊறுதுங்குற மாதிரி தேய்த்து விட்டுட்டு அவா பாட்டுக்கு கனா கண்டுட்டு இருக்காளே …? இவளை என்ன செய்ய …?

டிபன் பாக்ஸ்சை மேலே கவிழ்க்கலாமா ? தண்ணீர் பாட்டிலை தலையில் கொட்டலாமா ? இல்லை பேசாமல் இந்த பெஞ்சிலிருந்து கீழே உருட்டி விட்டு விடலாமா ? விதம்விதமாக முகிலினி யோசித்துக்கொண்டிருக்கையில் ,
” ஓ.கே பிறகு பார்க்கலாமா ? ” என அவளைப்பார்த்து கேட்டான் யதுநந்தன் .

திகைத்தாள் முகிலினி .என்ன இவன் இத்தனை பேரை சுற்றி வைத்துக்கொண்டு அவளிடம் இப்படி கேட்கிறான் .படபடப்புடன் கழுத்து வியர்வையை துடைத்துக்கொண்டாள் .ஆனால் ” ஓ…பார்க்கலாம் சார் ” என்ற கோரஸ் சுற்றி கேட்கவுந்தான் அவன் தன்னிடம் மட்டுமல்ல மொத்த வகுப்பிடமும் கேட்டிருக்கிறான் .

ஆனால் என்னைப் பார்த்து கேட்டது போல்தானே இருந்தது .ஒருவேளை எல்லோருக்குமே அப்படித்தான் தோன்றியதோ ? அதுதான் அந்த கோரஸோ ? முகிலினி சிந்தித்துக்கொண்டிருக்க

” பை “என்பது போன்ற சிநேக பாவ கையசைப்புடன் வெளியே சென்றுவிட்டான் யதுநந்தன் .
ஓ…வகுப்பு முடிந்து விட்டதா ? எப்படி இப்போதுதானே ஆரம்பித்தது ?.

” என்னடி என்ன …? அதற்குள்ளாகவா இந்த பீரியட் முடிந்து விட்டது ” வைஷ்ணவி .

” தப்பாக ஏதும் மணியடித்து விட்டார்களோ ?” நளினி .

” அடுத்த சி.ஜி ..பீரியட் எப்படி ? செல்வராணி .

கடைசி கேள்வியை கேட்டதும் அனைவரும் உடனேயே தங்கள் பீரியட் டைம் டேபிளை புரட்ட ஆரம்பித்து விட்டனர் .ஒருத்தி யதுந்நதனின் பாட வேளைகளை செல்போனில் பதிந்து வைக்க , இன்னொருத்தி அதனை மனப்பாடமே பண்ண ஆரம்பித்து விட்டாள் .இப்படியா அலைவாளுக ? நோகாமல் தலையிலடித்துக்கொண்டாள் முகிலினி .

அன்று உணவு இடைவேளையின் போது , அந்த காரிடாரின் மறு கோடியில் நின்று அனிதா மேமுடன் யதுநந்தன் பேசிக்கொண்டிருப்பதை கண்டாள் முகிலினி .முகம் முழுவதும் பற்கள் முளைத்திருந்தது அனிதா மேம்கு .

” ஏய் அங்கே பாத்தியாடி அந்த அனிதா மேம் விடுற ஜொள்ளை …” கிசுகிசுத்தாள் செல்வராணி .




திடீரென யதுநந்தனும் சிரித்து வைக்க , என்ன இப்போ இப்படி சிரிப்பு வேண்டிக்கிடக்கு ? எரிச்சல் வந்தது முகிலினிக்கு .

” என்னடி எப்போ பார்த்தாலும் வம்பு பேசிக்கிட்டு .வாங்கடி சாப்பிடலாம் ” என அவர்களை இழுத்துக்கொண்டு சென்றாள் .

உணவை மென்றார்களோ இல்லையோ ? யதுநந்தனை வாயில் போட்டு நன்கு மென்றார்கள் .அவன் யார் ? என்ன ? எங்கே தங்கியிருக்கிறான் ..? பாரேன் எவ்வளவு அழகு …எவ்வளவு கம்பீரம் …? இப்படி …

“ஏன்டி இவர் சினிமாவிலெல்லாம் நடிக்க போகலை ? ” ஒருத்தி கேட்க ,

” அப்புறம் இப்போ இருக்கிற எல்லா ஹீரோவுக்கும் சான்ஸ் போயிடுமே “, என ஒருத்தியும் …

” அப்புறம் இப்படி ஒரு லெக்சர்ர் நமக்கு கிடைப்பதேது ” என ஒருத்தியும் பதிலளித்தாள்

எல்லாவற்றையும் காதில் வாங்கியபடி அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் முகிலினி .அவளைப்போன்றே சத்தமின்றி உணவுண்டு கொண்டிருந்த வைஷ்ணவி திடீரென ” ஏன்டி அவருக்கு கல்யாணமாயிருக்குமா ? ” எனக்கேட்டாள் .

முகிலினிக்கு திக்கென்றது .இது ஏன் எனக்கு தோன்றவில்லை .யதுநநதன் திருமணம் ஆனவனா ? இல்லையா ? அப்பா அதைப்பற்றி ஏதாவது கூறினாரா ? மூளையை கசக்கி யோசித்தாள் .எங்கே அப்பாதான் கோழி முட்டையை அடைகாக்கிற மாதிரி அவனைப்பத்தின எல்லா விசயத்தையும் பூட்டி பூட்டி வைக்கிறாரே .

அப்பாவை விடு , யதுந்நதனாவது சொல்லியிருக்கலாமில்லையா ? நான்கு நாட்களாக என்னிடம் எவ்வளவு வாயடித்துக்கொண்டிருக்கிறான்.நினைக்கும்போதே அன்று காலை சம்பவம் நினைவு வந்தது .

காலை குளித்து விட்டு ஞாபகமாக தலைமுடியை சிக்கி விடாமலிருக்க லூசாக முடிந்து கொண்டு பூப்பறிக்க சென்றாள் முகிலினி .மிக சிரத்தையாக அவளுக்கு முன்பே வந்து பூக்களை பறித்து ஒரு பையில் நிரப்பிக்கொண்டிருந்தான் .

கண்களில் கேள்வியுடன் நிற்கும் அவளைக்கண்டு “தமிழ்செல்வன் சாருக்கு ரொம்ப வேலையில்ல அதுதான் நானே ….” என்றபடி உயரத்திலிருக்கும் இரண்டு பூக்களை எளிதாக பறித்தான் .ஒழுங்காக மடித்து சொருகியிருந்த அவள் கூந்தலை பார்த்து விட்டு ” குட் ” என மெச்சிக்கொண்டான் .

பின்பக்கம் ஏதோ வேலையாக வந்த சரஸ்வதி ” ஐயோ ஏன் சார் நீங்க இந்த வேலை பார்க்கிறீங்க ?  பாப்பா என்னம்மா இது ? “, என மகளை முறைத்தாள் .

” அவுங்க ஒண்ணும் சொல்லலை ஆன்ட்டி .எனக்கு பொழுது போகலை .அதான் நானே இதை செய்யலாம்னு வந்தேன் .வேண்டாம்னு அவுங்களும்
சொல்லிக்கிட்டே இருக்காங்க .நீங்களும் வந்துட்டீங்க ? ” என்றான் .

” நீங்க பையை குடுங்க சார் ” பிடுங்குவது போல் அவன் கை பையை வாங்கிக்கொண்டாள் சரஸ்வதி .

” பாப்பா நீ முடிச்சுட்டு வா …” என பையை  முகிலினியிடம் கொடுத்தாள் .

சுற்றும்முற்றும் தேடுவது போல் நடித்துவிட்டு ” எங்கே ஆன்ட்டி குட்டிப்பாப்பா…? ” என்றான் .

முகிலினி அவனை முறைத்தாள் .

” அது …என் பொண்ணை சும்மா அப்படி கூப்பிடுவோம் சார் ” சற்று தயங்கிவிட்டு கூறினாள் சரஸ்வதி .

” ஓ பாப்பாவா ….” என அவளை முழுவதும் ஒரு மாதிரி பார்வையிட்டான் .ஒரு விரலை அவனை நோக்கி ஆட்டி எச்சரித்தாள் முகிலினி .

” பார்த்தா பாப்பா மாதிரி தெரியலையே ” குரலை குறைத்து குழைவாக அவன் கூற  , முகிலினிக்கு கன்னங்கள் சிவந்தன .
கூடவே இவன் எப்படி என்னை இப்படி பேசலாம் என்ற கோபமும் சேர்ந்து கொள்ள இரு உன்னை என் அம்மாவிடம் சொல்கிறேன் என்ற பார்வையுடன் உள்ளே சென்று கொண்டிருந்த சரஸ்வதியை ” அம்மா ” என அழைத்தாள் .

அவளுக்கு முன்பே ” ஆன்ட்டி ” என அழைத்து விட்டிருந்தான் யதுநநதன் .
அங்கிருந்தபடி திரும்பி ” என்ன சார் ? ” என்றாள் அவள் .

” உங்கள் வீட்டில் ஏதாவது டியூப்லைட் மாட்ட வேண்டியிருக்கு …? ” என்றான் .ஓரவிழிப்பார்வை முகிலினி மீது .

திக்கென்றது முகிலினிக்கு .இவன் இப்போது நீ ஒட்டகம் போல் இப்படி உயரமாக இருக்கிறாயே என நேற்று நான் சொல்லாமல் சொன்னதை அம்மாவிடம் போட்டுக்கொடுக்க போகிறானா .

” என்னது எதற்கு கேட்கிறீர்கள் ? ” சரஸ்வதி திரும்ப வரத்துவங்கினாள் .முகிலினி அவசரமாக அவனைப்பார்த்து வேண்டாமென கெஞ்சுதல் பார்வை பார்த்தாள் .

” இல்லைங்க ஆன்ட்டி எனக்கு கொஞ்சம் வயரிங் வேலை தெரியும்.அதுதான் உங்களுக்கு எதுவும் உதவி வேணும்னா தயங்காமல் என்னிடம் கேளுங்கள் ” என்றான் .

“ஓ சரிங்க சார் …” உள்ளே சென்றாள் சரஸ்வதி .பெரு மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள் முகிலினி .

” என்ன பாப்பா பயந்துட்டியா ? ” கேலியாக கேட்டான் .

” உங்களுக்கென்ன கொழுப்பா ? ” கோபத்தில் என்ன சொல்கிறோமென அறியாமல் கேட்டாள் முகிலினி .




” இல்லையே என்னைப்பார்த்தால் அப்படியா தெரியுது ? ” என கைகளை முறுக்கிக்காட்டினான் .தன்னை மீறி அவனது வலிமையான புஜத்தில் பதிந்த பார்வையை வலுக்கட்டாயமாக பிரித்தபடி வேகமாக உள்ளே ஓடினாள் முகிலினி .

கடந்த நான்கு நாட்களாக இப்படி கிடைத்த நேரத்திலெல்லாம் என்னிடம் வம்பிழுத்துக்கொண்டிருந்தவன் ஒரு முறையாவது தனக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா ? என ஏன் கூறவில்லை .நானாவது கேட்டிருக்க வேண்டாமா ? சை எனக்கு அறிவேயில்லை நோகாமல் தன் தலையில் தானே திடீரென தட்டிக்கொண்டவளை விசித்திரமாக பார்த்தாள் பஸ்ஸில் அவளருகே அமர்ந்து வந்து கொண்டிருந்த வைஷ்ணவி .

” இல்லை அம்மா காலையில் ஒரு வேலை சொன்னார்கள் அது இப்போதான் நினைவு வந்தது .அதான் ….” என அவளிடம் அசடு வழிந்தாள் .

அவளோ ஏதோ ஞாபகத்திலேயே ” ஏன்டி நம்ம சாருக்கு கல்யாணமாயிருக்குமா ? ” எனக்கவலையோடு கேட்டு வைக்க பல்லை கடித்தாள் முகிலினி .

எல்லாம் அவனால்தான் இருக்கட்டும் இன்னைக்கு வச்சிக்கிறேன் .வீட்டிற்கு வந்து அவனை தனியாக சந்திக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள் .

அவள் நினைத்த நேரம் வந்ததும் ஆத்திரமும் , வேகமுமாக அவனை நோக்கி கேட்டாள் .

” அந்த அனிதா மேம் கூட அப்படி என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு …? “என்று .




What’s your Reaction?
+1
27
+1
16
+1
2
+1
7
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!