Serial Stories தீயினில் வளர்சோதியே

தீயினில் வளர்சோதியே-1

1

ஓம் ஜெய் கங்கே மாதா..ஸ்ரீ ஜெய் கங்கே மாதா

 

டி.வியில் புண்ணிய நதியாம் கங்கை அன்னையின் ஆரத்தி நிகழ்ச்சி ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது. என்ன ஒரு அற்புதமான , மெய் சிலிர்க்க வைக்கும் பரவசக் காட்சி.

கங்கை நதி, தான் கடலுக்குச் செல்லும் வழியில் உஷ்ணத்தால் பாதிக்கப் பட்ட ஜீவராசிகளுக்கு குளிர்ச்சியளித்து, புதுக் கிளர்ச்சியூட்டி பயிர்களுக்கும் மரங்களுக்கும் உயிரையளித்து பலரின் தாகத்தையும் தணிக்கிறது.  இதைப் போல பூமியில் அவதரித்திருக்கும் புண்ணியாத்மாக்கள் தங்கள் வாழ்நாளில் அனைவருக்கும் துயராற்றி ஆறுதல் நல்குகிறார்கள். நம் நாட்டில் உள்ளது போல நதிகளை தெய்வமாக வழிபடும் வழக்கம் பாரில் எங்குமே இல்லை.

புத்தகத்தில் நான் படித்த இந்த வரிகள் எனக்கு கங்கா அக்காவைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

இதோ கங்கா அக்காவின் கணீரென்ற குரலில் பாரதியாரின் பாடலையும் அக்காவின் நேற்றைய மேடைப் பேச்சையும் மொபைலில் பதிவு செய்ததை போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் பவானி,

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,
மாநிலங் காக்கும் மதியே சக்தி,
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,
சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி,
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணை யளக்கும் விரிவே சக்தி,
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத் தொளிரும் உயர்வே சக்தி.

பெண்களை பலவீனமானவர்கள்னு  சொல்லியே அவங்களை ஒடுக்கின காலம் மலையேறிப் போய் விட்டது. பெண்ணோட சக்திங்கறது  பெண்ணின் ஆன்ம ஆற்றல், அரசியல், சமுதாய மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் வலிமை ஆகியவற்றைக் குறிப்பதாகும். பெரும்பாலும், பெண் சக்தி என்பது அவர்களின் தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதையே சுட்டுகிறது எனலாம். ஆனால் அவர்களுக்குள்ளிருக்கும் சக்தியைப் பெரும்பாலான பெண்கள் உணர்வதில்லை.

 

எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைந்து விடுகிறதா? இல்லையே!

 

பெண்களுக்கான வாழ்க்கை சிக்கல்கள் அவர்கள் பிறக்கும் போதே   ஏன் அவர்கள் கருவில் உருவாகும்போதே ஆரம்பித்து விடுகிறது. அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் அவர்கள் பேதை, பெதும்பை,, மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம் பெண் என  ஏழு பருவங்களைக் கடந்து வருகிறார்கள்.   அதுவும் இந்த இன்டெர்னெட் யுகத்தில் பெண்களைக் குறி வைத்து எய்யப்படும் அம்புகள் ஏராளம்

ஒவ்வொரு பருவத்திலும் அவர்கள் எதிர்நோக்கும் மனச்சிக்கல்களில் இருந்து அவர்களின் அறிவுத்திறனாலும், மனோபலத்தாலும் அவர்களே மீண்டு வர முடியும். அதற்கு அவர்களது குடும்பத்தாரின் அன்பும், அனுசரணையும் பக்கபலமாக இருப்பது அவசியம். இல்லையேல் நட்பு வட்டத்திலாவது யாராவது அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். சிலருக்கு அவர்களுக்குள்ளிருக்கும் சக்தியைத் தூண்டிவிட  யாராவது இருக்க வேண்டும். அப்படி யாரும் இல்லாத போதுதான் அவர்களின் குழம்பிப் போன மனது கோழைத்தனமாகத் தற்கொலையை நாடுகிறது.

 

 

ஆஹா..! அக்கா சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.  உதாரணத்துக்கு என்னையே சொல்லலாமே!. எனக்குள் இருந்த சக்தியை , தன்னம்பிக்கையை நான் உணர   கங்கா என்னும் தூண்டுகோல் எனக்குக் கிடைச்சது என் பாக்கியம். எனக்கு மட்டுமல்ல  என்னைப் போல இன்னும் பல பெண்கள் பேதைப் பருவம் முதல் பேரிளம் பெண்கள் வரை கங்கா அக்காவால் புத்துயிர் பெற்று மறு பிறவி எடுத்திருக்காங்க. அவங்களுக்குள்ள ஊறிப் போன பயத்தைத் தெளிவிச்சு, தற்கொலைங்கிற கோழைத்தனமான முடிவிலிருந்து அவங்களை மீட்டு..ஒரு நல்ல எதிர்காலத்தை அமைச்சுக் குடுத்திருக்காங்க.




கங்கா அக்கா பாரதியார் பாடின..தேடின புதுமைப் பெண்களில் ஒருத்தர்.

என்னடா இது?  ஒரே பாரதியார் புராணமா இருக்கேன்னு நீங்க நினைக்கிறது சரிதான். உடம்பாலும், மனசாலும் ஒடுக்கபட்டு, அடக்கப்பட்டு அனாதரவா நிக்கிற பெண்களுக்கு அவங்களோட எதிர்காலத்துக்கு ஒரு வழியையும்..அவங்க மனசுல ஒரு எழுச்சியையும் உண்டாக்க பாரதியாரோட கவிதைகளைத் தவிர வேறு மார்க்கம் ஏதாவது உண்டா? கங்கா அக்காதான் எங்களுக்குப் பாரதியாரை அறிமுகப்படுத்தினாங்க. பாரதியார் கவிதைகளுக்குத் தன்னையே அர்ப்பணம் செய்தவங்க.

கங்கா அக்கா ஒரு வக்கீல்.  பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதோடு அவங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையில் விடாமல் போராடும் ஒரு போராளி.  கங்கா அக்காவுக்கு இப்படி ஒரு சமூக அக்கறை எப்படி வந்தது? ஏன் வந்தது? நர்மதா, கோமதி, சரயு,காவேரி, பவானி அப்புறம்..நான் (பொன்னி) .எங்களைப் போல அனாதரவான பெண்களுக்கு  அடைக்கலம் தந்து அவங்க  எதிர் காலத்தை ஒளிமயமாக வடிவமைத்து தருவது எதுக்காகங்கிறதை நேரம் கிடைக்கிறப்ப அவங்களே சொல்வாங்க.

ஏன்னா ..  ஒரு கான்ஃஃப்ரென்ஸுக்காக மும்பைக்குப் போன கங்கா அக்கா இன்னைக்குத்தான் சென்னைக்குத் திரும்பறாங்க. அவங்கள ரிசீவ் பண்றதுக்காக நானும், நர்மதாவும் ஏர்போர்ட்டுக்கு போய்கிட்டிருக்கோம்

அக்காவுக்கும்,எங்களுக்கும் எப்பவும் உறுதுணையா இருக்கறதே  ட்ரைவர் சின்ராசு அண்ணன்தான்.  காரோட்டிகிட்டிருந்த அண்ணன்

“அம்மிணி….ஏர் போர்ட் வந்துருச்சு.. இப்பவே உள்ற   போலாமா …இல்ல இதோ இந்த அடையார் ஆனந்தபவன்-ல காப்பி குடிச்சுட்டு

சித்தநேரங் கழிச்சு போலாமா?” ன்னு கேக்க,

  ” காப்பி என்ன….சாப்பாடே சாப்ட்டுட்டு போலாமேண்ணே..  அதான் ஃப்ளைட் வர இன்னும் ஒண்ணரை மணி நேரமிருக்கே” னு  நான் முறைச்சேன்,.

 “கோவுச்சுக்காதீங்கம்மிணி….நம்ம சென்னையோட

ட்ராபிக் பத்தி உங்களுக்குத் தெரியாதா?  நம்ம வூட்லருந்து  இங்க வர்றதுக்குள்ள எத்தினி சிக்னல்.. எத்தினி ட்ராபிக்..? என்னிக்குமில்லாத அதிசியமா இன்னிக்கு ட்ராபிக் கம்மியா இருக்கவும் நாம சீக்கிரமா வந்துட்டோம். இதுவே நெரிசல்ல மாட்டி நாம வர்றதுக்கு லேட்டாகி..” .னு பேசிட்டே போனவரை இடைமறிச்ச நான்…

“கோமதி அக்கா சூப்பரா அடையும்,அவியலும் செஞ்சிருந்தாங்கண்ணே.!  நீங்க கால்ல சுடுதண்ணிய ஊத்திகிட்ட கணக்கா ரவுசு பண்ணவும் நான் சாப்புடாமயே கெளம்பி வந்துட்டேன். ஐயோ அடை போச்சே”ன்னு நான் புலம்பினதை காதுலயே வாங்கிக்கலையே மனுஷன்!

நர்மதாவை எப்படியாவது ஏமாத்தி வீட்லயே விட்டுட்டு ஏர்போர்ட் கிளம்பலாம் னு பாத்தா..ம்ஹும் முடியல.

 அவளை ரெடி பண்ணி நான் கூட்டிகிட்டு வர்றதுக்குள்ள இந்த சின்ராசு அண்ணன் பண்ணின அலப்பறை இருக்கே..யப்பா!

“சுருக்கா கெளம்பி வாங்கம்மிணி. லேட்டாச்சுன்னா ஃப்ளைட் வந்துடும்.  அப்பறம் கங்காம்மாகிட்ட திட்டு வாங்கணும். ட்ராஃபிக் ல மாட்டிகிட்டோம்னு சொன்னா, தெரிஞ்ச விஷயம்தானே..சீக்கிரமா கிளம்பறதுக்கென்னனு கோவிச்சுக்குவாங்க. அம்மாதான் பஞ்சுவாலிடி..பஞ்சுவாலிடினு சொல்லிகிட்டே இருப்பாங்களே”




“அது பஞ்சுவாலிடி இல்லண்ணே…பங்ச்சுவாலிடி”

“ஏதோ ஒண்ணு…இப்ப கார்ல ஏறப்போறீங்களா இல்லையா”

“அண்ணே..உங்க கடமையுணர்ச்சிக்கு நான் தல வணங்கறேன்” னு  நான் பொய்யாய் ஒரு கும்பிடு போட..அதை நிஜம் னு நெனச்சுகிட்டு

 “அட என்னங்கம்மிணி, எனக்கெல்லாம் வணக்கம் வெச்சுகிட்டு” னு

சங்கோஜப்பட்டு நெளியற இந்த வெள்ளந்தி மனுஷன்தான்  சின்ராசு அண்ணன். கங்கா அக்காவோட  கார் ட்ரைவரா  சென்னைக்கு வந்து பதினைஞ்சு வருஷமானாலும் சொந்த மொழியான கொங்கு மொழியை மறக்காத மனுஷன். தன்னை விட வயசுல சின்னவங்களா இருந்தாலும் மரியாதையாதான் கூப்புடுவாரு.

“சரிங்கம்மிணி..  வாங்க நாம போய் ஆளுக்கொரு சாம்பார் வடையும்,காப்பியும் சாப்ட்டு போட்டு உள்ற போலாம் ..நாங்கூட காலைலருந்து ஒண்ணுஞ் சாப்புடல..கண்ணு மசமசங்குது” னு சொல்லவும்தான்..

அடப்பாவமே!   நாம நம்மளப்பத்தி மட்டுமே நெனச்சுகிட்டு இருந்துட்டமேனு எம்மனசுக்கு ரொம்பவே கஷ்டமா போயிடுச்சு.

“நீங்க ஏண்ணே இவ்வளவு நேரம் சாப்புடாம இருந்தீங்க? நீங்க ப்ரஷர்க்கு மாத்திரை போடணுமே..!”

“வருஷத்துல ஒரு நாள, .ஒரு பொழுது எம்மகளுக்காக.! இது ஒண்ணைத் தவிர அவளுக்காக நான் வேறென்ன செய்ய முடியும் அம்மிணி.”

குரல் கம்ம சின்ராசு அண்ணன் சொன்னதைக் கேட்டதும் தான் இன்னிக்கு அவர் மகளோட நினைவு நாள்ங்கிறது புத்திக்கு ஒறைச்சுது.

காலேஜ் பொண்ணுகளைக் குறி வெச்சு அவங்க பெண்மையைச் சூறையாடினாங்களே பொள்ளாச்சி பக்கம் ஒரு வக்கிரம் புடிச்ச போக்கிரிக் கும்பல். அதுல சிக்கிச் சீரழிஞ்ச ஒரு பொண்ணுதான் சின்ராசு அண்ணனோட மகள். கோயமுத்தூர்ல ஹாஸ்டல்ல தங்கி படிச்சுகிட்டிருந்தவளை அவளோட சினேகிதி தன்னோட பிறந்த நாள் விழாவுக்குன்னு கூப்ட்டு..அந்த மனித மிருகங்களுக்கு அறிமுகப்படுத்தி வெச்சிருக்கா.

வெறி பிடிச்ச மிருகங்ககிட்ட மாட்டின இளமானோட கதி என்ன ஆகும்? “தன்மானத்தில் மானுடன் உறவு கொண்ட பெண்மையாச்சே? நடந்த விஷயங்களை அப்பாவுக்கு மெசேஜ் செஞ்சுட்டு தூக்குல தொங்கிட்டா. கங்கா அக்கா அப்ப ஊர்ல இல்லாததால் சின்ராசு அண்ணனுக்கு கையும் ஓடலை,காலும் ஓடல.. கொஞ்சமே கொஞ்சம் அந்தப் பொண்ணு யோசிச்சிருந்தா நடந்த தப்புக்கு தான் எந்த விதத்திலயும் காரணமில்லனு புரிஞ்சிருக்கும். புரிஞ்சிருந்தா அந்தக் கயவர்களைப் பத்தி போலீஸ்ல புகார் குடுக்கலாம்னு தோணியிருக்கும்.

ஆனா யோசிக்காம அதும்பாட்டுக்கு பொசுக்குன்னு ஒரு நிமிசத்துல உசுரை விட்டுருச்சு ஆனா தினம் தினம் மகளோட நினைவுல செத்துப் பொழைக்கிற பெத்தவங்களோட கதி? வாழவும் பிடிக்காம..சாகவும் முடியாம..சே..என்ன வாழ்க்கை இது? நினைக்கிறப்பவே எனக்கு கண்ணுலருந்து தண்ணி கொட்ட ஆரம்பிச்சிருச்சு. சமாளிச்சுகிட்டு..

“அண்ணே.. நீங்க மொதல்ல போய் சாப்டுட்டு வாங்க..அப்புறமா நான் போறேன்.. நர்மதா தூங்கிட்டிருக்கா..அவளை எழுப்பிக் கூட்டிகிட்டுப் போனா அப்புறம் ஏக களேபரமாயிடும்.”

“அதுவுஞ் சரிதான் ..”னு சின்ராசண்ணன் சாப்பிடப் போக..

நான் வெளியே வேடிக்கை பாக்க ஆரம்பிச்சேன்.

கார்,பஸ், ரெண்டு சக்கர வாகனங்கள்னு வாகன நெரிசலும்…ஊடால நடந்து போற ஜனங்களும்…அப்பப்பா..!

.தினந்தோறும் வெளியூர்கள்ல இருந்து வாழ்வாதாரம் தேடி பல்லாயிரக்கணக்கான ஜனங்க சென்னைக்கு வாராங்களாம். வந்தோரை வாழ வைக்கும் சென்னை! அத்தனை பேருக்கும் அவங்க விரும்பிய வாழ்க்கை அமைஞ்சிடுதா? இல்ல கெடச்ச வாழ்க்கைய ஏத்துக்கிறாங்களா?  இல்லே என்ன மாதிரி,கோமதி அக்கா மாதிரி நிர்க்கதியா..!  நினைவலைகளில் என்னை முழுக விடாம கார் சன்னல் கதவு டொக்…டொக்னு தட்ற சத்தம். சின்ராசு அண்ணன் தான். வடையையும் ,டீயையும் கொண்டு வந்து…

“சூடா இருக்கு..ஆறிப்போறதுக்குள்ள வெரசா சாப்புடுங்கம்மிணி .. நானும் சாப்ட்டு வாரேன்”

திரும்ப ஏ2பிக்குள்ள ஓடினாரு. இதென்ன இப்படி ஒரு பாசம் ?  கோமதி அக்கா சொல்றாப்புல நாம அண்ணன் னு கூப்ட்டாலும் தகப்பனுக்கு சமானம் இந்த மனுஷன்.

அட..! என்ன இது! தகப்பன்னதுமே அப்பாரு மொகம் கண்ணு முன்னாடி நிக்குதே! அம்மையப்பன்ங்கிற பேருக்கேத்தாப்புல தாயில்லாக்குறை தெரியாம வளத்த மனுசனுக்கு நான் செஞ்ச கைம்மாறுதான் என்ன?  நெனைக்க நெனைக்க மனசு ஆறவே மாட்டேங்குது.

“க்கா..க்கா…”  தூங்கிகிட்டிருந்த நர்மதா முழிச்சுகிட்டு என் தோளைப் பிடிச்சு உலுக்க..அவசர அவசரமா டீயை குடிச்சேன்.

” க்கா.. எனக்கும் பதிக்குது..”

அண்ணே.. ! நர்மதாக்கும் பசிக்குதாம்.. அவளுக்கு போர்ன்விடா வாங்கிட்டு வந்துருங்க.” சின்ராசு அண்ணனுக்குப் ஃபோன் பண்ணி சொல்லியாச்சு.

அவர்  வர்றதுக்குள்ள நர்மதாவைப் பத்தி சொல்லிடறேன்.




What’s your Reaction?
+1
10
+1
6
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!