Serial Stories தீரா…நிலதீரா…!

தீரா…நிலதீரா…!-8 ( நிறைவு)

8.நிலமங்கையின் வீரம்

*******************************

பழனிமலை அடிவாரத்துக்கு முன்பே அடர்வனம் துவங்கி விடும். ஊருக்குள்ளே வீடுகள் கடைவீதிகள் என்றிருக்க முருகனை தரிசிக்க பாதயாத்திரை வரும் கூட்டமும் வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் கூட்டமும் “அரோகரா முருகனுக்கு அரோகரா “என்று  பக்தியாலும்  அழைக்கிற குரலிலும் மலையாண்டி மனமிறங்கி மயிலில் பறந்தோடி வந்திடுவானோ என்று மலைக்க வைத்தது பெருகியோடிய பக்தி பிரவாகம். 

அடவியினுள்ளே வெள்ளைப்புரவியின் மீது அமர்ந்திருந்தவனிடம் கீழே நின்றபடி கூழைக் கும்பிடு போட்டபடி இளித்தான் ஒருவன். 

“நல்லப்பா. நான் சொன்னது செய்தியா? விசயம் சக்ஸஸ் தானே “

“ஆமாங்க துரை “

லகானை ஒரு கை பிடித்திருக்க மறுகையில் பித்தளைப்பூண் போட்ட கைத்தடி இருந்தது. அதை இரு விரல்களுக்கிடையே வைத்து சுழற்றியபடியே  

“எதுலே மிக்ஸ்?  குக் பண்ண”

“இனிப்பு பாயசத்துலே தொரை “

“குட்! ! .இந்தா உனிக்கி நான் தரேன் கிப்ஃட்”

என்று சிறு சுருக்குப்பையை தூக்கிப் போட்டான். அது கீழே விழுந்து விடாமல் லாகவமாகப் பற்றிக் கொண்டான் நல்லப்பன் என்பவன்.

“கண்டிப்பா சாப்பிடுவாங்க தானே! எதும் ப்ராப்ளம் இல்லியே “

“இல்லைங்க எசமான்.தீரனும் கூட்டாளிகளும் பயிற்சி முடித்து விட்டு சாப்பிட்டு விடுவார்கள் .சூரியன் நடு உச்சியிலிருக்கும் பொழுது உணவருந்திய பின்பு சற்று நேரம் ஓய்வு எடுப்பார்கள் அப்போது நீங்கள் வரலாம். “

 “சரி! நீ போகட்டும். .நான் போவேன்”

கும்பினிக்காரனின் தமிழ் நல்லப்பனுக்கு சிரிப்பைத் தந்தது. ஆனால் சிரித்து விட முடியுமா?




நல்லப்பன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் செவிகளில் குளம்பொலி ஓசை கேட்டது. புரவியைத் திருப்பிக் கொண்டு நோக்க கருப்பு நிறக் குதிரை ஒன்றில் ஒரு மனிதன் போவது தெரிந்தது. தாழ்ந்து கிடந்த கிளைகளை கையால் தடுத்துக் கொண்டே வேகமாக செல்வது கண்ணில் பட்டதும் ஒருவேளை தான் பேசியதைக் கேட்டிருப்பானோ என்ற ஐயம் எழவே ஒரே நொடி யோசித்தவன் மறு வினாடி யோசிக்காமலே குறுவாளொன்றை வேகமாய் அந்த உருவத்தை நோக்கி வீசினான். 

சரியாக விலாவில் தைத்துக் கொண்டு நின்றது. “ஆ” என்ற சப்தமும் கேட்டது. 

குறுவாளை வீசியவன் நீலநிறக்கண்களை இடுக்கிக் கொண்டு கூர்ந்து பார்த்தான். குத்து பட்ட உருவம் முன்னால் சாய்ந்ததோ?  வலியில் முனகியதோ.?

சருகு மிதிபடும் ஒலியும் குளம்படியோசையும் கேட்க அந்தக் கும்பினியான் அங்கேயே நின்று கவனித்து விட்டு அந்த உருவத்தை நோக்கி தன் புரவியைச் செலுத்தலுற்றான். 

குத்து பட்டவன் இருந்த குதிரை திரும்பி இவனை வழி மறைப்பது போல் எதிரிலேயே நின்றது. ஆங்கிலேயன் யோசித்துக் கொண்டே லகானையிழுத்து நிறுத்த 

எதிரே யிருந்தவன் கையை வளைத்து இடதுபுற இடையருகே விலாவில் பதிந்திருந்த குறுவாளை முரட்டுத்தனமாய்ப் பிடுங்கி  இவன் மேலே எறிந்திருந்தது.கண்ணிமைக்கும் நேரம் தான் .பிடுங்கியதும் வீசியதும் க்ஷண நேரம் தான் அத்தனை வேகம்.

காற்றைப்போல் கடுகி வந்த குத்துவாள் மிகச்சரியாக ஆழமாய் அவனுடைய இதயப் பகுதியில் பச்சக் கென குத்திட்டு நின்றது.

“இந்த இண்டியன் டாக்ஸ் இதிலெல்லாம் கெட்டி”அவன் முணுமுணுப்பு பாதியிலேயே நின்றது. புரவியின் மீதே குப்புற படுத்தான். புரவியோ ஒன்றும் புரியாமல் கால் மாற்றி நின்று ஒரு சுற்று சுற்றிக் கொண்டு வந்தவழியே ஓடியது.

குத்துவாளை உருவியெடுத்ததில் வலி உயிர் போனது. குதிரையின் மீதிருந்த வண்ணமே தலைமீது கட்டியிருந்த உருமாலை உருவியது அந்த உருவம்.. குத்தியவன் வீழ்ந்தது கண்டு இதழோரம் ஏளனமாய் வளைந்தது……

நீண்ட அங்கியும்  தார்ப்பாய்ச்சு வேட்டிக்கட்டும்  இருக்க அவிழ்த்த உருமால் துணியை  காயத்தில் அழுத்தி இடையில் வயிற்றோடு சேர்த்து  இறுகக் கட்டிக் கொண்டு புரவியின் காலை உரச அது வேகமெடுத்தது.

கட்டுக்கட்டியிருந்தபோதும் அசுவத்தின்  அசைவுக்கு ஒவ்வொரு முறையும் குருதி கொப்பளித்து வெளியேறி இடையை நனைத்தது….

“ஏ! புள்ளே! இங்கே பாரு”

“ஏதய்யா? இவ்வளவு பணம்?”

“எல்லாம் உம் புருஷன் சம்பாதனை தான்”

“என்னய்யா சொல்கிறாய்”

“உண்மையைத்தான் சொல்கிறேன். “

“எனக்கென்னவோ இது அடாத செயலுக்காய் வந்த கூலியோ என்று தோன்றுகிறது”

“நாய் விற்ற காசு குரைப்பதுண்டா “

“அப்படியெனில் இது ஏதோ வில்லங்கத்துக்கான காசு. அப்படித்தானே “

“அதிகம் பேசுகிறாய் பொன்னம்மா.  பெண்கள் இத்தனை பேசுதல் நல்லதல்ல. பொங்கிப் போட்டோமா புருஷனை சந்தோஷமாக வைத்துக் கொண்டோமா? பிள்ளையைப் பெற்று வளர்த்தோமா என்று இருக்க வேண்டும். அதை விடுத்து எதிர் கேள்விகள் கேட்பதும் சரிக்கு சரியாகப் பேசுவதும் பெண்ணுக்கு அழகல்ல. “

“கணவன் தவறிழைக்கையில் துணை போகாமல் இடித்துரைத்து நல் ஆலோசனை கூறி நல்வழி படுத்த வேண்டியது மனைவியின் கடமை. அதைத்தான் நான் இப்போது கேட்கிறேன்.”

“என்னைவிட எல்லாம் அறிந்தவளோ நீ? “

“அப்படிச் சொல்லவில்லை. ஆனால் போகிற வழி ஆகா வழி என்று கூற கடமை பட்டவள் என்கிறேன்.யாரிடமிருந்து பெற்றீர்.!?எதற்காகப் பெற்றீர்.?உண்மையை பேசுங்கள் நம்முடைய செல்வனின் மீதும் என் மீதும்  ஆணை! “என்றவள் அவனுடைய வலது கையைத் தூக்கி தன் சிரசின் மீது வைத்துக் கொண்டாள்

“எதற்காக பெரியபெரிய வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறாய்?”என்றவன் “இந்தப்பணம்  ஒரு…ஒரு.  துரை அவர் பேரு கிங்ஸ்டன் துரை அவர் தந்தார்”

“வெள்ளைக்காரனிடமிருந்தா வாங்கினீர்”

அவள் திடுக்கிட்டு கையை உதறினாள்.

“ஆமாம். “”

“எதற்காக கொடுத்தான் அவன்.?அது நல்ல செயலாக இருக்க முடியாது அவர்களுக்குத்தான் சதிவேலை செய்வது மூச்சு விடுவது போலாயிற்றே”

“அது வந்து ஒன்றுமில்லை. அவர்களால் தீரனை பிடிக்க …. அது வெறும் மயக்க மருந்து தான். நான் தானே தீரன் கூட்டத்துக்கு சமையலர் அதனால்….”

“ச்சீ…நீர் மனுஷனா? கேவலமாயில்லை”

“என்னடி மரியாதையில்லாமல் பேசுகிறாய்”

“மரியாதையா? உமக்கா? ச்சீ…என்ன மானங்கெட்ட பிழைப்பைய்யா.? தீரனை போரிட்டுப் பிடிக்க வேண்டும் போரில் வெல்ல முடியாமல் இப்படி சதி வேலை செய்துதானே திப்பு சுல்தானைக் கொன்றார்கள் இப்போதும் கோவைக் கோட்டைப்புரட்சியிலும் உம்போன்ற புல்லுருவிகளால் தானே தோற்றோடிப் போனார் தீரன் சின்னமலை.  இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? வெட்கமாயில்லை உமக்கு த்தூ. “

“பொன்னம்மா…. “

“ஓ…கையை ஓங்கிக் கொண்டு வருவீரோ? “

“அதல்ல பொன்னம்மா அவன் உன்னையும் நம் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினான் அதனால் தான். அதிலும் மயக்க மருந்து தானே! உயிருக்கு கெடுதல் இல்லையென்று”

“மயங்கவைத்து நம்ம சனங்களை அள்ளிக் கொண்டு போ என்று வழி செய்து கொடுத்தீராக்கும். மயங்கிக் கிடக்கும் தீரனை ஆங்கிலேயன் வெறுமனே விட்டு விடுவானா…?”

“……….”

“அய்யோ…அய்யோ…நான் என்ன செய்வேன்.? அந்தக்கும்பினிக்காரன் எங்களைக் கொன்றிருந்தால் கூட பரவாயில்லையே. இப்போது நீர் செய்துள்ள இந்த துரோகம். அம்மம்மா…நெஞ்சு பதறுகிறதே. நாளைக்கு இந்த ஊரும் உலகமும் எங்களைப்பார்த்து துரோகியின் மனைவி துரோகியின் பிள்ளை என்று மண்ணை வாரித் தூற்றுமே! நாங்களும் இறந்து நீருமே இந்தக் காரியத்தை செய்ய மறுத்து உயிரை விட்டிருந்தாலுமே தியாகி என்று சொல்லும். அய்யோ ……. பழனிமலை முருகா உனக்கென்னய்யா கெடுதல் செய்தேன். இப்படியோர் பேர் வாங்க வைத்தாயே முருகா…  இனி நான் வாழ்ந்து பயனேயில்லை என்னால் முடியாது. துரோகியின் மனைவி என்ற சொல்லைத் தாங்க முடியாது ” என்று அலறியவள்  தூளியிலிருந்த குழந்தையை வாரி யெடுத்துக் கொண்டு புழக்கடைப்பக்கம் ஓடினாள்.




“பொன்னம்மா பொன்னம்மா”என்று பின்னாலேயே நல்லப்பன் வர அவன் கண் முன்பாகவே கேணியில் குதித்து விட்டாள்.

“பொன்னம்மா “என்ற அவனுடைய அலறல்  அந்த பிராந்தியம்  முழுமையும் எதிரொலித்தது..

 செம்பா லேசாகக் கனைத்தது. “என்னடா செம்பா யாரும் வருகிறார்களா என்ன”

அது தலையை ஆட்டியது.

“இங்கே யார் வரப்போகிறார்கள்? “

“அது மீண்டும் தலையைசைத்து கால்மாறி நின்றது.

அதேசமயம் 

குதிரை ஒன்று வரும் சப்தம் கேட்க சன்னமாய் இதழ் குவித்து ஒலியெழுப்பினான் மற்றவர்களை எச்சரிக்கும் விதமாக.

பிறகு மேட்டின் மீதேறிப் பார்க்க யாரோ வருவது தெரிந்தது. 

செம்பா ஒரு தினுசாகக் கனைத்தது.

” செம்பா…பொம்மாயியா வருகிறாள்”

செம்பா செல்லக் கனைப்புடன் முன்னங்கால்களைத் தூக்கியது. 

புரவியின் மீது வருபவர் தன்னிலை மறந்து கீழே சாய்வது போல் வர தீரன் முன்னே ஓடினான். 

கருப்புக்குதிரையின் லகானைப் பிடிக்கவும் அந்த உருவம் நழுவவும் சரியாக இருந்தது. 

சட்டென்று கைகளில் தாங்கி ஏந்திக் கொண்டான்

“பொம்மாயி..”

இதழ்கள் முணுமுணுத்தன.

 தாங்கிப் பிடித்த கை பிசுபிசுத்தது. 

ரத்தம்! …

தீரனுக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டது.  இதே நெஞ்சிலும் தோளிலும் எத்தனை தழும்புகள். அதை விளையாட்டாகவும் விருதாகவும் ஏற்றவனுக்கு காதலியின்  காயம்  அளவிடமுடியா துயரைத் தந்தது.எத்தனையெத்தனை களத்தை கண்டவன். எத்தனையோ  பேரை வாளால் வெட்டி வீழ்த்தியவன் இப்போதோ அவன் பொம்மாயியின் குருதி கண்டு உடல் நடுங்க சித்தம் கலங்கினான். காதல் கொண்ட மனது தள்ளாட்டம் கண்டது

“பொம்மாயி..”

“அத்…அத்..அத்தான் ..உங்க…உங்களிடம் வந்து விட்டேனா..?நீங்கள் உண….உணவு அருந்தவில்லை …தா…தானே “

தீரன் குழம்பினான்.

“பொம்மாயி…என்ன நடந்தது? யார் இதைச் செய்தது. கருப்பா…”

அவன் முடிக்கு முன்னே அவன் தோழர்கள் ஓடி வந்தனர். 

சுபேதார் வேலப்பன் பச்சிலை மருந்துக் குழம்பையும் களிம்பையும் ஓடிப்போய் எடுத்து வந்தான். 




“அத்…தான்.. உணவு உண்ணாதீர்….கள். விஷம் அதில்.”

அவள் திக்கித் திணறி கூறுவதைக் கேட்டவர்கள் திகைத்தனர்.

“மங்கை..நிலமங்கை ..என்னம்மா சொல்கிறாய்”

“காதால் கே…கே..ட்”

“காதால் கேட்டாயா? சரி ..நீ எப்படித் தனியாக…”

அவள் மயக்கத்திற்குப் போயிருந்தாள்.

தீரன் அவளைத் திருப்பி காயத்தை பரிசோதித்தான்.

காயமடைந்த பின்னே அந்த வாளையோ குத்து வாளையோ கண்டபடி இழுத்து உருவியுள்ளனர் உள்ளே ஆழமாய் காயம் தசையை எசகுபிசகாய் கிழித்துக்கொண்டு சதையைத் துணுக்குகளாய் துண்டாடி யிருந்தது. ரத்தஇழப்பு அதிகம் என்பது இடைமுழுதும் நனைந்திருப்பதிலேயே தெரிந்தது.

தீரனுக்கு எதுவுமே ஓடவில்லை.அதற்குள்ளாக நல்லப்பன் வந்து சேர்ந்தான். அழுத கண்ணோடும் தலையொரு கோலமுமாய் வந்தவன்

“ஐயா..ஐயா..மன்னித்து விடுங்கள் மன்னித்து விடுங்கள்” என்று அலற கருப்ப சேர்வை வெஞ்சினத்தோடு கழுத்தைப்பிடித்து உயரத் தூக்கினான்.

“என்ன நடந்தது.”

“தப்பு..தப்பு செய்து விட்டேன். அதற்கு தண்டனையாக என் மனைவி மகனை காவு கொடுத்து விட்டேன்”

“என்ன சொல்கிறாய்?”

நல்லப்பன் கதறிக் கொண்டே நடந்ததை சொல்ல தீரனின் கை ஓங்கி அறைந்தது. சுருண்டு கீழே விழுந்தான் நல்லப்பன்.

தீரன் கோபம் அடங்காமல் அங்குமிங்குமாய் நடை போட்டான்.

கைகளை பிசைந்து கொண்டான்.

‘நிலமங்கை யாருடன் வந்தாள்? ஏன் வந்தாள்? யாருக்கும் பிரச்சினையா? யார் இவளை படுகாயப் படுத்தியது.’

வினாக்கள் வினாக்கள். விடை சொல்ல வேண்டியவளோ துவண்டு கிடந்தாள். 

வேலப்பன் மூலிகைவேர் ஒன்றை தணலில் காட்டி அந்தப்புகையை அவளின் நாசியருகில் வைத்து சுவாசிக்க வைத்தான். 

மூன்றாம் முறை புகையை இழுத்ததுமே இருமினாள் நிலமங்கை.

கருப்பசேர்வை மூலம் தீரனின் கூட்டம் மலையடிவாரத்திலிருப்பதை அறிந்தவள் மேலப்பாளையத்தினின்றும் யாருமறியாமல் புறப்பட்டு விட்டாள். கடைவீதியில் உடையையும் குதிரையையும் சம்பாதித்தவள்  கூந்தலையடக்கி முண்டாசு கட்டிக் கொண்டு ஆண் வேடமிட்டு பிரயாணித்தாள்.

பழனிமலைக்காட்டை அடையும் வேளையில்தான் நல்லப்பனையும் அந்த ஆங்கிலேயனையும் கண்டது.

தொடர் பயணத்தால் கசகசத்துப் போன உடலை அடவிக்குன்றின் வழியே ஓடிவந்த சுனைநீரில் அலுப்பு தீர நீராடி புத்துணர்வேற்றிக் கொண்டு ஆடையை கொடிகளில் காயவைத்து மரவேரின் மீது விச்ராந்தியாய் படுத்திருந்தாள். அப்போதுதான் இருவர் பேசும் குரல் கேட்டு முதலில் கவனியாமலிருந்தவள் பின்பே அவதானித்தாள்.

தீரனைப் பற்றியல்லவா பேச்சு.?

அவர்கள் நகர்ந்து போகும் வரை மூச்சடக்கி காத்திருந்தவள் உடனேயே புரவியை விரட்டினாள்.. அங்கேதான் தவறி விட்டாள். அவர்களின் குரல் கேட்க வில்லையென்றானதும் போய் விட்டார்கள் என்று நினைத்து விட்டாள். 

ஆனால் விதி கிங்ஸ்டனின் குத்துவாளால் அவள் கதையை முடிக்க நினைத்ததோ என்னவோ…

ஆனால்

கிங்ஸ்டனின் முடிவு இவளால் எழுதப் பட்டது. 

சிறுவயது முதலே கவண்கல் அடித்து ஊரிலுள்ள தோப்புகளை தன் கூட்டாளிகளோடு வதம் செய்பவளின் குறியும் தப்புமா என்ன?

அவன் எறிந்த குறுவாளையே உருவியெடுத்ததில் உயிரின் அடியாழம் வரை வலி திருகியெடுத்தது. ஆனாலும் குறி பார்த்து  வீசி உயிர் குடித்து விட்டாளே. 

முகம் தெளிவு கண்டிருந்தது. எல்லோரையுமே அடையாளம் கண்டு கொண்டவளின் நயனங்கள் அவள் அத்தானின் முகத்தில் நிலைத்தது.  மந்திரப்புன்னகையொன்று உலர்ந்திருந்த இதழோரம் வெடித்தது. 

“அத்தான்”

“உங்களைப் பார்க்கும் ஆசையோடு வந்தேன்.உங்…உங்கள் நிலை அறியாமல் மனசெல்லாம்  பா…பாரம் அத்தான். அதுதான் யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டு வந்து… வந்து விட்டேன்.சதியை ..அ…அறி…அறிந்தேன் உங்கள் உயிரைக் காப்பாற்றியும் விட்டேன். . இது போதும் அத்தான். அடுத்த பி…பி.. பிறவியிலும் இதே அன்பை பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டு உங்களையே க…க.. கரம் பிடிப்பேன். ஏழேழு ஜென்மமும்  நான் தான் உங்கள்  மனை…மனைவி.. அழக்கூடாது. என் கணவர் தீரர். ஆங்கிலேயனுக்கு சிம்ம சொப்பனம். வேங்கைப் புலி.. …எ..எனக்கு விடை கொடுங்கள். உங்கள் மடியிலேயே உயிர் பிரியும் பாக்யத்தை …..விட பொம்மாயிக்கு வேறென்ன…வேண்டும்”

“பொம்மாயி…பேசாதே..பேசியே கொல்கிறாய். நீ சாக மாட்டாய். இதோ பச்சிலை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. என்னோடு நூறு வருஷம் வாழ்வாய்.நம்பிக்கை வை கண்ணே”

“இது அணையப் …போ…போகும் ஜோதி. ஒளிரத் தான் செய்யும்.  அத்தா… உங்கள் மனைவியைக் காய……படுத்..யவனை கொன்று பழி   வாங்ட்டேன்.நான் …நான் உயிரால்….உங்..உங்க… உங்களை தொடர்ந்து கொண்டேயிருப்பேன் அத்….தான்.”

எல்லோரையும் பார்த்து கை கூப்பியவளின் தலை தொய்ந்தது.

கூடி நின்ற அனைவரின் விழிகளும் நீர்ப்பூக்களை காணிக்கையாக்கின.

தீரன் அழவில்லை கதறவில்லை. அவள் தலையைத் தன் நெஞ்சோடு புதைத்து  இறுக்கிக் கொண்டான்….

ஒரு காதல் கண்ணீர் காவியமாக முடிந்து விட்டது.

தீரனின் வாழ்வு முழுக்க சமர்க்களமாயிருக்க அதில் மென்சாரலாய் வந்தவள் கண்மூடிப்போனாள். 

அவனுடைய பொம்மாயி அவள்.

நிலமங்கையின் தீரன் அவன்! 

வீறு கொண்ட வேங்கைதான். பின்னாளில் சிறுநரிக்கூட்டத்திடையே வேங்கை சின்னபின்னம்தான் ஆயிற்றுதான்.

ஆனாலும் வேங்கை எப்போதுமே வேங்கை தான்! இன்றும் வரலாற்றின் ஏடுகளிலே போற்றப்பட்டு வருகிறது  தீரன் சின்ன மலையின் தீரம்.

                  சுபம்.




பின்னர் நடந்தவையாக கூறப்படும் வரலாற்று குறிப்புகள்

********************************************

ஆங்கிலேயரை எதிர்த்த தீர்த்தகிரி எனும் தீரன் சின்னமலை  கோவைக் கோட்டையை கைப்பற்ற செய்த செயல்கள் சிலருடைய சூழ்ச்சியினால் பலனற்றுப் போயிற்று. கொங்குப்படை ஊடுவல் சிறப்பாக முடிந்தும் சரியான நேரத்தில் சரியானத் தகவல் பறிமாற்றமின்றி சிலருடைய சுயநலத்தால் குழப்பமடைந்து படு தோல்வியடைந்தது. 

தீரனின் தளபதி சுபேதார் வேலப்பன் ஆலோசனைப்படி பழனிமலை அடிவாரத்தில் அடர் கானகத்தினுள்ளே தலைமறைவானவர்களை ஆங்கிலேயரின் சதி காரணமாக சமையலர் நல்லப்பன் மூலம் தீரனின் வீரக் கூட்டம் அகப்பட்டது. 

போலி விசாரணை நடத்தி சங்ககிரி கோட்டையில் தீரன் சின்னமலையை தூக்கிலிட்டனர். மேலும் அவனுடைய உயிர் நண்பன் கருப்பசேர்வை மற்றும் சகோதரர்கள் மறவர்கூட்டத்தையே கொன்று குவித்து ஆட்டம் போட்டு மகிழ்ந்தது கும்பெனியாரின் கிழக்கிந்தியக் கம்பெனி.

இந்த தியாகங்களுக்குப் பின்னாக 1947 நள்ளிரவில் அடிமைத் தளையினின்றும் மீண்டோம்.

வாழ்க சுதந்திரம்!

வாழ்க பாரதம்.!




What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!